Tuesday, November 14, 2006

214.கீதையை காதலிக்கும் அமெரிக்கா

வணிக மேலாண்மையில் மிகப்பிரபலமான ஆசிய புத்தகமாக சட் ட்சூவின் "ஆர்ட் ஆப் வார்" இருந்து வந்தது."ஆர்ட் ஆப் வார்" தொன்மையான நூல் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பகவத் கீதை ஆர்ட் ஆப் வாரின் இடத்தை பிடிக்கப் போகிறது என பிஸினஸ் வீக் பத்திரிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்க கம்பனிகள் கீதையின் மேல் காதல் கொள்ள துவங்கியிருப்பதாக தெரிவிக்கும் பிஸினஸ் வீக் அதை பற்றி ஒரு சிறப்பு கட்டுரை எழுதியுள்ளது. கீதையில் உள்ள நிர்வாக மற்றும் சுயமுன்னேற்ற கோட்பாடுகள் அமெரிக்க கம்பனிகளை பெரிதும் கவர்வதாக பிஸினஸ் வீக் குறிப்பிட்டுள்ளது.

ஸ்வாமி பார்த்தசாரதி எனும் வேதாந்த உபன்யாசகர் உலகின் மிகப்புகழ் பெற்ற பிஸினஸ் பல்கலைக்கழகமான வார்ட்டனில் கீதையை பயன்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பது எப்படி என மாணவர்களுக்கு வகுப்பெடுத்தாராம். அமெரிக்காவின் நிதி மற்றும் முதலீட்டு வணிகர்கள்(வென்சர் கேபிடலீஸ்டஸ்) நிரந்தரமாக மன அழுத்தத்தில் சிக்கியிருப்பவர்கள். அவர்களுக்கு ரை, நியூயார்க்கில் ஸ்வாமி பார்த்தசாரதி நடத்திய வகுப்பில் பொருளை தேடி உள்மன அமைதியை தொலைப்பதை பற்றி கீதை சொல்லியிருப்பதை குறிப்பிட்டு பேசினார் என்கிறது பிஸினஸ் வீக்.

லீமன் பிரதர்ஸ் எனும் கம்பனியில் பார்த்தசாரதியிடம் ஒரு இன்வஸ்ட்மண்ட் பாங்கர் தனது சகபணியாளர்கள் உருவாக்கும் அவஸ்தையை பற்றி குறிப்பிட்டுள்ளார். அதற்கு பார்த்தசாரதி "அவர்களை உன் மனதிலிருந்து அகற்றிவிடு" "உன் வாழ்வை நீ தான் உருவாக்குகிறாய்" என்று பதில் சொன்னதை குறிப்பிட்டு சிலாகிக்கிறது பிஸினஸ் வீக்.

ஸ்வாமி பார்த்தசாரதியின் உரைகள் ஒரு சாம்பிள் தான் என்கிறது பிஸினஸ் வீக். அமெரிக்க கம்பனிகள் இந்திய தத்துவத்திலும் நூல்களாலும் கவரப்படுகின்றன என்கிறது பிஸினஸ் வீக். அமெரிக்க கம்பனிகள் இந்திய தத்துவத்தை தழுவுகின்றன (American firms embrace Indian philosophy) என்றே சொல்லி சிலாகிக்கிறது பிஸினஸ் வீக்.

பகவதகீதை என்றில்லை, பல இந்திய தொன்மையான நூல்கள் அமெரிக்க கார்ப்பரேட்களாலும் கன்சல்டன்ட்களாலும் பயன்படுத்தப்படுகின்றனவாம். அமெரிக்காவின் மிகப் பிரபலமான பிஸினஸ் பல்கலைகழகங்கள் மாணவர்களுக்கு "தன்னை அறிதல்" மற்றும் "உள்மன அமைதி" ஆகிய இந்திய தத்துவங்களை போதித்து மானேஜர்களுக்கு தலைமை தாங்கும் பண்புகளை கற்பிக்கின்றன என்கிறது பிஸினஸ் வீக்.

இந்திய நூல்கள் போதாது என்று இந்தியர்கள் புகழ் பெற்ற மானேஜ்மன்ட் குருக்களாகவும் புகழ் பெறுகின்றனராம். சி.கே பிரஹலாத், ராம்சரண், விஜய் கோவிந்தராஜன் போன்ற கன்சல்டன்ட்கள் உலகின் புகழ் பெற்ர பிஸினஸ் குருக்களாக இருக்கின்றனர் என்கிறது பிஸினஸ் வீக்.

"கெல்லாக், வார்ட்டன், ஹார்வர்ட், டார்மவுத் ஆகிய புகழ் பெற்ற ஐவி லீக் பிஸினஸ் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் இந்திய கலாச்சாரத்தையும், அதன் சிறப்பியல்புகளையும் அறிந்து கொள்கின்றனர்" என கெல்லாக் பிஸினஸ் ஸ்கூலின் டீனான தீபக் ஜெயின் தெரிவிக்கிறார்.

வணிகம் என்பது லாபத்தை மட்டும் குறிக்கோளாக கொள்ளக்கூடாது எனும் இந்திய கொள்கை வெகுவாக வரவேற்பு பெறுவதாக சொல்கிறது பிஸினஸ் வீக். வணிகம் சமூக நலனை தான் முக்கியமாக கருதவேண்டும் எனும் இந்திய கலாச்சார கோட்பாடு வணிக நிர்வாக உலகில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தும் என்றும் பிஸினஸ் வீக் கணிக்கிறது.

கீதை வழி நிர்வாகத்தை "இன்க்ளூசிவ் கேபிடலிசம்(Inclusive capitalism)" என்கிறார் சி.கே பிரஹலாத். சமூகநலனையும், லாபத்தையும் கம்பனிகள் ஒருங்கே உருவாக்க வேண்டும் என்பதே இக்கோட்பாட்டின் அடிப்படை.

கீதை வழி நிர்வாகத்தை "கர்மா கேபிடலிஸம்" என்றே அழைக்கிறது பிஸினஸ் வீக். என்ரான், டெக்னாலஜி பப்பிள் என வெறுத்து போயிருக்கும் அமெரிக்கர்கள் கீதையை மனதார காதலிக்கின்றனராம். அமெரிக்காவின் தற்போதைய புகழ் பெற்ற கிழக்கின் மானேஜ்மெண்ட் நூல் கீதைதான் என சொல்லுகிறது பிஸினஸ் வீக். ஸ்ப்ரிண்ட் நெக்ஸ்டெல் கார்ப்பரேஷனின் மானேஜர் ஒருவர் எழுதிய "Bhagavad Gita on Effective Leadership" என்ற நூல் விற்பனையில் சக்கைபோடு போட்டதாம்.

ஜெனெரல் எலக்ட்ரிக்கின் தலைமை நிர்வாகி ஜெஃப்ரி எம்மெல்டுக்கு பயிற்சி அளிக்கும் ராம்சரண் "கடமையை சுயநலத்தை விட பெரிதாக வலியுறுத்தும் கீதை கார்ப்பர்ரெட் நிர்வாகத்துக்கு அளப்பரிய பொருத்தம் வாய்ந்தது" என்கிறார்.

இந்திய தத்துவமரபு அமெரிக்க கம்பனிகளுக்குக்கு மிகப் பொருத்தமானது என புகழாரம் சூட்டுகிறது பிஸினஸ் வீக். சந்தையியல் துறைக்கும் கீதை பொருத்தமானது, சிறப்பு வாய்ந்தது என சொல்கிறது பிஸினஸ் வீக்.

"எவன் என்னை பிறப்பற்றவன் என்றும் அநாதியானவன் என்றும் உலகங்களுக்கெல்லாம் தலைவன் என்றும் அறிகிறானோ அவனே தன்னை அறிந்தவன். என்னை நன்றாக அறிந்த மனிதனே தன்னை நன்றாக அறிந்தவனாகிறான்.அவனே மனச்சாந்தி அடைகிறான்" - கீதையில் கண்ணன்.

(நன்றி பிஸினஸ் வீக்)

Post a Comment