Tuesday, November 14, 2006

212A.சாதுவுடன் ஒரு சந்திப்பு

ஆன்மிகத்தை தன் உயிர் மூச்சாக கொண்ட வலைபதிவர்கள் மற்றும் முத்தமிழ் குழும உறுப்பினர்கள் கீதா சாம்பசிவத்தையும், காழியூராரையும் நம்பிக்கை குழுமத்தின் உரிமையாளரும் வலைபதிவருமான நம்பிக்கை ராமரும் நடேசன் ஐயாவும் சந்தித்த உருக்கமூட்டும் சந்திப்பின் தொகுப்பு. முத்தமிழ் மற்றும் நம்பிக்கை குழுமத்தில் இதை எழுதியவர் நம்பிக்கை ராமர் நம்பிக்கை/முத்தமிழ் அன்பர்களே ! எனக்கு இதை எழுத கர்வமாகத்தான் இருக்கிறது. ஏனெனில் இப்படிப்பட்ட சந்திப்புகளை எனக்காக இறைவன் அளிக்கின்றானே என்ற சந்தோஷம்தான். முகத்தை கூட அறிந்திரா நாம், எழுத்துக்களால்தான் இங்கு ஒருவரை ஒருவரால் ஈர்க்கப்படுகிறோம். எந்த ஒரு உள்நோக்கமும் இன்றி கருத்துக்களால்தான் கவரப்படுகிறோம். "உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாத உறவு" இணைய நட்பினால் நிறைய எனக்கு கிடைக்கிறது என்ற நினைப்பு எனக்கு அதிக ஆனந்தத்தை தருகிறது. ஞாயிறு இரவு 8 மணி அளவில் எனக்கு வந்த தொலைபேசி அழைப்பில் இனிய தெளிவான குரல் ஒலித்தது , ஆம! அவர் இனிய நண்பர், இணைய நண்பர், தன் ஆன்மீகக் கருத்தால் இதயம் தொட்ட நண்பர் " நாளை சந்திக்கலாம்" என்றார். இடம் முடிவு செய்யப்பட்டது. திங்கள் காலை 6.45 மணி அளவில் அசோக் பில்லர் ஆஞ்சநேயர் சந்நிதியில் என்று, எங்கள் சந்திப்பை முடிவு செய்தோம். வழமைபோல் எழுந்து சந்திப்பிற்கு தயார் ஆனேன். என் குருநாதரை/ஆஞ்சநேயரை சந்திக்கச் செல்லும் போது கையில் எலுமிச்சம் பழத்தோடுதான் போவேன். அன்று கூடுதலாய் இரண்டு பழங்கள் வாங்கிக் கொண்டேன். இது அன்னிச்சையாய் அமைந்தது. ஆஞ்சநேயரை மூன்று முறை வலம் வரவும் செல்போன் (வைபிரேட் மோடில்) குதித்தது . ' தான் வந்து விட்டதாகவும் எங்கே இருக்கின்றீர்கள் ' என்றும் குரல் கேட்க. "மஞ்சள் உடை அணிந்த கருப்பான உருவம் நான்" என்று பதில் சொன்னபடி கோயில் வாயிலில் என் கண்கள் அவரைத்தேட " மலர்ந்த முகத்தோடு ஒரு சிவந்த மனிதர் தன் நண்பரோடு வர , அவரிடம் "நான் ராமா" என்க .. அவர் சொன்னார் " ஆமாம்! காழியூரன்" என்றார். எனது கையில் இருந்த எலுமிச்சம் பழம் அவருடைய மற்றும் அவரின் நண்பரின் கரங்களைப் பற்றியது. "தரிசனம் செய்து வருகிறேன்" என்று இறைவனை நமஸ்காரம் செய்துவிட்டு மூவருமாய் கோயில் வளாகத்தில் அமர்ந்தோம். ஆஞ்சநேயரின் பிரசாதத்தை சுவைத்தப்டி அவர் பேச்சை சுவைக்கலானேன். ஆம்! அன்பர்களே அவர் வேறு யாரும் அல்லர். நமது இணையத்தில் தன் ஆன்மீகக் கருத்துக்களை தீர்க்கமாய் சொல்லும் காழியூரான் சம்பந்தன் தான் அவர். என்னைப்போன்ற ஒரு சராசரி மனிதரைத்தான் எதிர்நோக்கி சென்று இருந்தேன். ஆனால் அவர் அப்படி இல்லை. தன்னைப்பற்றி தகவல்கள் வெளியிட வேண்டாம் என்று என்னை அவர் கண்டிப்பாய் கேட்டாலும் என்னால் அப்படி இருக்கமுடியவில்லை. (காழியூராரே என்னை மன்னிக்க ) . என் மனதிற்கு உண்டான மகிழ்ச்சியை உங்கள் மத்தியில் பகிர்ந்திடாமல் நான் வேறு எங்கு போய் சொல்ல முடியும். சாதாரண மனிதன் போன்று உடை அணிந்து இருந்தாலும். அவரது கண்களில், அவரது முகத்தில் ஜொலிக்கும் அந்த பிரகாசம் அவர் எத்தகைய மனிதர் எனபதை பார்ப்பவருக்கு அடையாளம் காட்டிவிடும். திங்களன்று என் முன் வந்த ஞாயிறு அவர்! திகட்டாமல் பேசுகின்ற அன்பர் அவர்! பேச்சும் மூச்சும் இறையே என்று வாழ்பவர்! பிரம்மச்சரியத்தில் இளைமை முதல் ஒழுகுபவர் ! இளமையானவர்! பல கோடிகளுக்கு அதிபதியாய் இருப்பினும் இறையின்பம் நாடி தினம் அலைபவர் அவருக்கென்று நிரந்தர இடம் இல்லை ஆன்மீகத் தேடலில் அலைந்து வரும் அவர் அவர் சாதாரண மனிதன் இல்லை அவர் ஒரு "சாது" அவரது நணபரும் ஒரு சாதுவே! அவரது ஆன்மீகக் கருத்துக்களில் கரைந்து போய் இருந்தநான். அவரது தேஜஸ் கண்டு அசந்து போய் இருந்தேன். எந்த அளவிற்கு அவர் தியானம்/யோகம் கடை பிடித்து இருந்தால் இப்படி ஒரு பிரகாசம் (விவேகானந்தர் முகம் போல் ஜொலிப்பாய்) இருக்கும். ஒரு மணி நேரம் பேசினோம். இல்லறத்தில் கடைபிடிக்கவேண்டிய பிரம்மச்சரியங்களைப் பற்றி எனக்கு அறிவூட்டினார். நம்பிக்கையில் ஜெயமே ஜெயத்தில் "சபலம்" பற்றி நான் எழுதிய கட்டுரை அவருக்கு என்மீதான ஈடுபாட்டை ஏற்படுத்தியதாகவும். முத்தமிழில் "தேடல்" என்ற பகுதியில் நான் எழுதியிருந்த "கண்ணீர்" என்ற ஒற்றை வார்த்தை இன்று என்னை சந்திக்கச் செய்தது என்றும் குறிப்பிட்டார். நதி மூலம் ரிஷி மூலம் அறிதல் கூடாது என்பர். அதனால் அவரைபற்றி துருவுவதை விட்டுவிட்டு அவரது கருத்துக்களில் ஆழ்ந்து இருந்தேன். அனபர்களே! இத்தகைய பெருஅன்பர் நம்முடன் இத்துணை நாட்கள் ஒரு சாதாரண சகமனிதன் போல் பேசியிருக்கிறாரே என்பதை நினைக்கையில் மிகப் பெருமையாக இருக்கிறது. நமது நம்பிக்கை/முத்தமிழ் குழும நண்பர்களைப் பற்றி மிகப்பெருமையாக பேசினார். "அனைவரும் எப்படி நண்பர்கள் ஆனீர்கள்? ஒருவர் மீது ஒருவர் அன்பை பொழிகிறீர்கள்? மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது? உங்களால் இந்த சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது. அதனால்தான் இப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிட்டியுள்ளது. அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். எனக்கும் உங்களோடெல்லாம் கருத்துக்களை பகிர்ந்தது மகிழ்ச்சி அளித்தது " என்றார். "ராமா , இனி எப்போது சென்னை வருவேன் என்று தெரியாது ? மீண்டும் சந்திப்போம் " என்றார். அவர் பேசும்போது வந்த ஒவ்வொரு சொற்களும் அப்பழுக்கற்ற சொற்கள். எழுத்து போல் கருத்தும் பேச்சும் சுத்தம். "சாது தரிசனம்" என்று நான் தேடிப்போனதில்லை. தானாகவே அமைகிறது. அது என் பாக்கியம். விடை பெறும் போது , எனது குருநாதருக்கு தனது நமஸ்காரங்களை தெரிவிக்கச் சொன்னார். Part II சில்லென்ற நேற்றைய(ஞாயிறு) காலைப் பொழுதில் வழமைபோல் எழுந்து பிரார்த்தனைகளை முடித்துவிட்டு வீட்டு வேலைகளில் கவனம் செலுத்தலானேன். திடீரென்று நமது ஆன்மீக அன்பு நண்பர் காழியூரனின் அழைப்பு அலைபேசியில் அழைக்க.. மிக்க ஆனந்தம் அடைந்தேன். சென்ற முறை சந்திக்கையில் .. இனி 40 வயது ஆகும் போது சந்திக்கலாம் என்று சொல்லி இருந்தார்.. அடேயப்பா இன்னும் 11 வருஷம் கழித்தா என்று 'ஆ' என்று வாயைப் பிளந்தேன்.. உடனே அவர் சிரித்தபடி தனக்கு 40 ஆனதும் என்று சொன்னதும் சிரிப்பலையில் கலந்தோம். ஆனால்! அதற்கு முன்னதாகவே சந்திப்பு நிகழ்ந்து விட்டது. சரி, இந்த ஞாயிறு அதியசமாக ஓய்வு கிடைத்துள்ளது! இதை தக்கபடி பயன் படுத்த வேண்டும் என்று நான் நினைக்கவும். 'திருமதி. கீதாசாம்பசிவம் அவர்களை சந்திப்போமா?' என்று கேட்டார் அவர். ஓ! தாராளமாக சந்திப்போம்! கைலாஸ் யாத்திரை சென்று வந்தவர்களின் காலடி தொழுதால் அவர்கள் கொண்ட புண்ணியத்தில் அணுவளவேனும் நமக்கு கிடைக்குமே என்ற சுயநலத்தில் :) உடனே ஒத்துக் கொண்டேன். கீதாம்மாவிற்கு போன் செய்து நாங்கள் வருவதை அறிவித்தோம். அவர்கள் அன்போடு அழைத்தார்கள். அன்பு நடேசன் சாருடன் சேர்ந்து கீதாம்மாவை சந்திக்கலாம் என்று நினைத்திருந்தேன். அதற்கு முன்னதாகவே சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. மதியம் 3 மணி அளவில் எனது வசிப்பிடத்தில் இருந்து அம்பத்தூர் நோக்கி பயணித்தேன். காழியூரனும் அம்பத்தூர் எஸ்டேட் வந்து விடுவதாயும் அங்கிருந்து இருவரும் சேர்ந்து செல்லலாம் என்றும் திட்டமிட்டு இருந்தோம். தொடர்மழையால் அம்பத்தூர் சாலையில் நம் முகம் காணா முடிந்தது. சாம்பா சாகுபடிக்கு ஏற்ற நிலமாக அரசாங்கம் அப்பகுதி சாலையை அறிவிக்கலாம் :) சுற்றுல்லாத்துறை படகுசவாரி விட்டு வசூல் பார்க்கலாம் :)) நீண்ண்ண்ட பயணத்திற்குப் பின் அம்பத்தூர் எஸ்டேட் வந்து சேர்ந்தேன். அங்கிருக்கும் பணிமனையை ஒட்டிய வினைதீர்த்த விநாயகர் கோயில் உள் நுழைந்து தரிசனம் செய்து பிரகாரம் சுற்றவும் நம் தலைவர் பகவான் ஸ்ரீஆஞ்சநேயர் அழகாய் " வாடா மவனே" என்றபடி காட்சி அளித்தபடி இருந்தார் . அவரையும் தரிசித்து விட்டு வெளியில் வரவும் சிறிது நேரத்தில் காழியூரன் வந்துவிட்டார். இருவருன் சேர்ந்து கீதாம்மா வீடு நோக்கி பயணித்தோம். நாங்கள் சென்ற ஆட்டோ மேளம் இன்றியே அழகாய் ஆட்டம் போட்டபடி இந்தியன் பாங்க் காலனியை அடைந்தது. வீட்டை அடையாளம் காணும் பொருட்டு கீதாம்மாவிற்கு போன் செய்தேன். நாங்கள் வரும் பல்லக்கை :) அவர்கள் கண்டு கொண்டதாயும் .. அப்படியே வருமாறு சொல்லி வெளியில் காத்து நின்றார்கள். கீதாம்மாவும் ஐயா திரு. சாம்பசிவம்(ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, சும்மா ரகுவரன் மாதிரி செம உயரம் ) அன்போடு வரவேற்றனர். உற்சாகத்தோடு.. அவர்களது புனிதப் பயணம் குறித்து கேட்டு மகிழ்ந்தோம். கீதாம்மா பேச்சின் நடுவே திடீரென்று காணவில்லை.. உள்ளே போனவர்கள் ஆளையே காணலையே என்று நான் யோசிக்க .. ஒரு தட்டு நிறைய பச்சி , கேசரி என்று அடுக்கி கொண்டு வந்து விட்டார்கள். காழியூரன்ஜி சாதனைகள் இடையே உணவு உண்பதில்லை என்பதை பணிவோடு தெரிவிக்க , அவர்களும் வற்புறுத்தாமல் அவர் போக்கில் விட்டு விட்டார்கள். பரவாயில்லை.. அவர் பங்கையும் சேர்த்து நான் கவனித்துக் கொள்கிறேன் என்று நான் பிஸியானேன்.(மனதில் விழியனை/சிவாவை நினைத்துக் கொண்டேன்) நல்ல ருசியாகச் செய்து இருந்தார்கள். செவிக்கும்/நாவிற்கும் நல் விருந்து கிட்டியது. சம்பிரதாயத்திற்காக இரண்டே இரண்டு பச்சியை தட்டில் விட்டு வைத்தேன் :( அதையெல்லாம் பார்த்தும் கீதாம்மா " சாப்பிடுங்க ராமா, சாப்பிடுங்க ராமா, சாப்பிடாமா இருக்கீங்களே" என்றபடி இருந்தார்கள். எனக்கு அவர்கள் 'சாப்பிடுங்க ராமா'ன்னு சொன்னது 'சாப்பாட்டு ராமா' என்று ஒலித்தது :)) 'காபி, டீ என்ன சாப்பிடுகிறீர்கள்?' என்று அவர்கள் என்னை கேட்க.. நான் 'எதுவும் வேணாம் , வெறும் தீர்த்தம் போதும்" என்று சொல்ல.. "அவர் பால் மட்டும்தான் சாப்பிடுவார் " என்று காழியூரன் என்னை மாட்டிவிட பின் அதையும் சாப்பிடும்படி ஆகிவிட்டது :) நன்றாக உபசரித்தார்கள். கீதாம்மாவின் கணவர் ஐயா சாம்பசிவம் அவர்கள் என்னை ரொம்ப ரொம்ப கவர்ந்து விட்டார். மனிதருக்கு குழந்தை உள்ளம். தான் கண்ட யாத்திரைக் காட்சிகளை ஒரு குழந்தை போன்று உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார். இருவரும் நல்ல தம்பதிகள். காழியூரன்ஜியும் நானும் அவர்களது காலில் விழுந்து நமஸ்காரம் செய்து .. மானோஸோவர் ஏரி புண்ணிய தீர்த்தத்தையும் , மூர்த்தத்தையும் (ஏரியில் இருந்து எடுக்கப்படும் கற்கள்) பெற்றுக் கொண்டோம். மீண்டும் ஒருமுறை, நடேசன் சாருடன் சேர்ந்து வருகிறேன் என்று சொல்லி விடை பெற்றேன். அங்கிருந்த இரண்டு பச்சிகள் "ஏன்டா ராமா எங்க இரண்டு பேரையும் எடுத்திட்டு போகக் கூடாதா " என்று ஏக்கத்துடன் கேட்டது போன்ற ஒரு பிரமை. ஐம்புலன்களையும் அடக்கினால்தான் முக்தி கிட்டும் என்று சற்றே என் நாவை அடக்கிக் கொண்டேன். :))

7 comments:

Unknown said...

பத்திகளாக இட முடியவில்லை. அனைத்தும் ஒரே பத்தியாக வந்துவிடுகிறது. சற்று நேரம் கழித்து மீண்டும் முயல்கிறேன்.சிரமத்துக்கு மன்னிக்கவும்

செல்வன்

Sivabalan said...

செல்வன் சார்,

சுவாரசியாமான சந்திப்பு தான்..
நன்றாக எழுதியுள்ளீர்கள்..

எந்த தேதியில் சந்தித்தீர்கள் என்று குறிப்பிடவில்லை..?!


// அசோக் பில்லர் ஆஞ்சநேயர் சந்நிதியில் என்று, எங்கள் சந்திப்பை முடிவு செய்தோம் //

அசோக் நகர்தானே?! பக்கத்தில் தான் நம்ம வீடும்..

Amar said...

குளிர் செல்வன்!!!

Translate ;)

Unknown said...

சிவபாலன்

வருகைக்கு நன்றி. சந்தித்தது நான் அல்ல. நம்பிக்கை ராமர் எனும் பதிவர். நான் சென்னைக்கு ஓரிருமுறை மட்டுமே வந்துள்ளேன். இது முத்தமிழ் குழுமத்தில் இருந்து சுடப்பட்ட இடுகை:-)

தலை சமுத்ரா

புரியுது தலை.புரியுது. ஆனா இங்க ஏற்கனவே ஸ்னோ தட்டி எடுக்குது. குளிர் தாங்க முடியலை. "warm" என்று வேண்டுமானால் சொல்லுங்கள், cool வேண்டாம்:-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று!

கீதாம்மா,காழியூரார் சந்திப்பை ரசித்துப் படித்தேன்!
//மானோஸோவர் ஏரி புண்ணிய தீர்த்தத்தையும் , மூர்த்தத்தையும் (ஏரியில் இருந்து எடுக்கப்படும் கற்கள்) பெற்றுக் கொண்டோம்//

நாங்களும் தான்!
நன்றி நடேசன் ஐயா, நம்பிக்கை ராமரே!

Unknown said...

நன்றி கண்ணபிரான்,

கட்டுரை நன்றாக இருந்தும் பத்தியமைப்பில் ஏற்பட்ட கோளாறால் நிறைய பேரை சென்று சேராமல் போய்விட்டது.

நீங்கள் சொன்னமாதிரி //நலமிக்க
நல்லார்// தான் காழியூராரும், கீதா அக்காவும். அவர்களை நேரில் சந்தித்ததில்லை. இந்தியா செல்லும்போதுதான் சந்திக்க வேண்டும். ராமர் சொன்னமாதிரி அவர்களை சந்திப்பது வெறும் சந்திப்பல்ல, தரிசனம்

அன்புடன்
செல்வன்

Anonymous said...

hi selvan
sorry to ask this question.Who is "kaliyuurar"?I am really impressed by this essay.It is very nice.
different anonymous