Monday, November 13, 2006

212.அஞ்சேல் எனாத ஆண்மை

முன்கதை சுருக்கம்: சந்துருவின் மனைவி உமா கொரியாவில் உள்ள ஒரு மதசங்கத்தில் சேர்ந்து இப்போது சிறையில் அடைபட்டு இருக்கிறாள். அவளை காப்பாற்ற நண்பர் இளங்கோவுடன் கொரியாவுக்கு வந்த சந்துரு, அவளுக்கு ஒரு முன்னாள் காதலன்(வெங்கடாச்சலம் என்ற அரவிந்த்சாமி) இருப்பதை அறிகிறான். இருவரும் சேர்ந்து உமாவை மீட்க முயல்கின்றனர். அதிபாதுகாப்பு சிறையை உடைக்க வழிதெரியாத சந்துரு பெண்ணாக மாறும் ஆபரேஷன் செய்துகொண்டு உமா இருக்கும் அதே அறைக்குள் அடைபடுகிறான். கதாபாத்திரங்கள் தேனு: இளங்கோவின் மகள். பிட்சுணி சுதர்சன்: ஏதோ ஒரு உளவு அமைப்பின் தலைவர். உமாவும், தேனுவும் உறுப்பினர்களாக இருக்கும் ஷென்ரிக்கியோ சங்கத்தை வேவு பார்க்க வந்தவர். லீ ஒஷாரா: ஷென்ரிக்கியோ சங்கத்தின் தலைவர். ---- உமா நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள்.நிலவொளி சிறைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து அவள் முகத்தை பாலாமணிக்கு போட்டியாக ரசித்துக்கொண்டிருந்தது. கண்கொட்டாமல் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் பாலாமணி. இப்படியும் அப்பாவியாக ஒரு பெண் இருக்க முடியுமா எனத்தான் முதலில் அவளுக்கு தோன்றியது.அதன்பின் பழைய நினைவுகள் மனதில் எழுந்ததும் இவள் அப்பாவியா என கேள்வி மனதில் எழுந்தது. அவனோடு அவள் வாழ்ந்தபோது இதேபோல்தான் இரவில் அவளுக்கு தெரியாமல் அவள் முகத்தை கண்கொட்டாமல் பார்த்து ரசிப்பான்.பகலில் அப்படி பார்த்தால் அவள் முகத்தில் சீற்றம் பொங்கும்.அதனால் அவளுக்கு தெரியாமல் இரவில் அவள் முகத்தை பார்த்துகொண்டே இருப்பான். ஒருநாள் அப்படி பார்க்கும்போது திடீரென அவள் கண்விழித்து,அவன் திருட்டுத்தனத்தை கண்டுபிடித்து...என்ன கேள்வி கேட்டாள்? "பழசை நினைக்காதே.."என சொல்லிக் கொண்டாள் பாலாமணி.மெதுவாக பாயில் படுத்தாள்.எதையாவது நினைக்காதே என்று சொன்னால் இந்த பொல்லாத மனசு கேட்குமா என்ன?அலைபாய்ந்தது. கஷ்டப்பட்டு கண்ணை மூடினாள் பாலாமணி.தூங்க முயன்றாள். கொஞ்சநேரம் தான் தூங்கியிருப்பான்.அவன் முகத்தின் மேல் உமாவின் கரம் தூக்கக்கலக்கத்தில் விழுந்தது. அவ்வளவுதான்....விண்ணெங்கும் தேவர்களும், கின்னரர்களும் கூடி நின்று பாலாமணியின் மேல் மலர் தூவினார்கள். உமா கையை எடுத்தபின்னும் அகல மறுத்தார்கள். மறுநாள் காலையில் பாலாமணி அசந்து தூங்கிக் கொண்டிருந்தபோது உமாவின் கரம் மீன்டும் அவன் மேல் விழுந்தது. ஆனால் இப்போது சுயநினைவோடு பாலாமணியை அது தட்டி எழுப்பியது. "சாப்பாடு வந்தாச்சு. எழுந்திரு" என்றாள் உமா. ஒரு தட்டு நிறைய அரிசியும்(பாப்), ஜோரிமும்(சோயா எண்ணையில் வறுத்த மீனும்) இருந்தன. "இந்த மாதிரி சாப்பாட்டை சாப்பிட கொடுத்த வைத்த வெகுசில கைதிகளில் நாமும் அடங்குவோம்" என்றாள் உமா, மீனை கடித்தபடி. "இன் மின் போ ஆன் சியோங்க் ஆபிசர்களுக்கும் இதே மாதிரி தான் உணவு கிடைக்கும்." என்றாள் பாலாமணி. "இன்மின்போவா..? அப்படி என்றால் என்ன?" என குழப்பத்துடன் கேட்டாள் உமா. "இந்த சிறையை நடத்தும் மக்கள் பாதுகாப்பு படையின் பெயர்.நாம் இருக்கும் சிறைசாலையை க்வான் லிஸோ என்பார்கள். மிகவும் கட்டுப்பாடான சிறை இது. இந்த அறையை தாண்டி நீ வெளியே போனதில்லையா?" என கேட்டாள் பாலாமணி. "இந்த அறைக்குள் வந்ததிலிருந்து என்னை யாரும் வெளியே கூட்டிப்போனதில்லை. யாருடனும் பேச அனுமதிக்கவில்லை. சாப்பாடு மட்டும் அவ்வப்போது வந்துவிடுகிறது. முதல்முதலாக உன்னைத்தான் இங்கே கொண்டு வந்து அடைத்திருக்கிறார்கள்" என்றாள் உமா. "அதற்கு காரணம், மற்ற கைதிகளோடு உன்னை அடைத்தால் உனக்கு தெரிந்த ரகசியத்தை வெளியே சொல்லிவிடுவாய் என்பதாகத்தான் இருக்கும்" என்றாள் பாலாமணி. "சரி..நாம் தான் நண்பர்களாகிவிட்டோமல்லவா?அந்த ரகசியத்தை எனக்கும் சொல்லக்கூடாதா?" -------------- "உமாவை மீட்டதும் அந்த ரகசியத்தை எங்களுக்கு சொல்லிவிடுவாளல்லவா?அதற்காகத்தான் உனக்கு இவ்வளவு உதவி செய்கிறோம். அதுசரி..அந்த ரகசியம் என்னவாக இருக்கும் என்பதைப்பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?" என ஆவலுடன் கேட்டார் சுதர்சன். ஐந்து மணிநேரமாக குழி தோண்டியதால் அவருக்கு உடம்பெல்லாம் வலித்தது. "காரைக்குடி நியூடவுனில் நூறடி ரோட்டில் பராசன் என்றொரு ஜோசியர் இருக்கிறார்" என்றான் அரவிந்சாமி. "இருக்கட்டும். அதற்கென்ன?" என குழப்பத்துடன் கேட்டார் சுதர்சன். "அவரிடம் போய் ஜோசியம் கேட்டால் ஒருவேளை அவருக்கு ஏதாவது தெரியலாம்" என்றான் அரவிந்சாமி. சுதர்சன் கோபத்துடன் முறைப்பதை ரசித்தபடி மண்ணை எடுத்துக்கொண்டு அருகுலிருந்த லாரிக்கு போனான். "உளவாளிகள் என்று இவர்களுக்கு பெயர் வைத்திருக்கக்கூடாது.உளவெலிகள் என்று வைத்திருக்க வேண்டும்" என முனகினான். "10X10 அளவில் ஒரு குழியை தோண்ட இத்தனை கஷ்டப்படுகிறார்கள்" அரவிந்த் மண்ணை எடுத்து அங்கிருந்த லாரியில் கொட்டினான்."இனி முடியாது" என சலித்து உட்கார்ந்தான். "சாருக்கு களைப்பாக இருக்கா?உட்கார்ந்துவிட்டீர்கள்?ஆப்பிள் ஜூஸ் வேணுமா?' என்று தேனுவின் குரல் கேட்டது."வந்துவிட்டாள் ரவுடி" என முணுமுணுத்தான் அரவிந்த். "உமாவை காப்பாற்ற கஷ்டப்பட்டு அவர்கள் வேலை செய்கிறார்கள்.நீ என்னடா என்றால் ஜாலியாக உட்கார்ந்திருக்கிறாய்" என்றாள் தேனு. "எனக்கு ஒன்றும் புரியவில்லை" என்றான் சந்துரு."இந்த அடர்ந்த காட்டில் இப்படி ஒரு குழி எதற்கு?அதில் குடோன் மாதிரி ஒரு ரூம் எதுக்கு?சந்துரு அப்போது சொன்னான் என்று தலை ஆட்டினேன்.பாவம் ஆப்பரேஷன் செய்துகொண்டு இருக்கும்போது சிரமம் தரவேண்டாம் என நினைத்தேன்.ஆனால் இப்போது ஒன்றும் புரியவில்லை" "இதில் என்ன குழப்பம்?உமாவும்,சந்துருவும் இருக்கும் ஜெயில் இங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.இந்த ஸ்பாட்டை தேர்ந்தெடுத்து குழிதோண்டி பங்கர் மாதிரி ஒரு ரூம் கட்டி,காத்திரு என சொல்லிவிட்டு சந்துரு போயிருக்கிறான்.அதை செய்ய உனக்கு இத்தனை கஷ்டமா?"என்றாள் தேனு. "இந்த நடுக்காட்டில்,மொட்டை வெயிலில் குழிதோண்டிப்பார்.கஷ்டம் தெரியும்" என்றான் அரவிந்த். "சந்துரு படும் கஷ்டத்தை நினைத்துப்பார்.உன் கையாலாகத்தனம் தெரிய வரும்" என்றாள் தேனு. "எனக்கு நம்பிக்கை இல்லை" என்று பெருமூச்சு விட்டான் அரவிந்த்."அந்த ஜெயிலை உடைப்பது சாத்தியமே இல்லாத வேலை.சுதர்சன் சொன்னதை கேட்டாயா?கிட்டத்தட்ட 5000 வீரர்களும்,10 டாங்கிகளும் அந்த சிறையை கண்காணித்தபடி இருக்கின்றன.சந்துருவுக்கு வேறு உடல் நலம் பயங்கரமாக குன்றிவிட்டது.நடக்கவே சிரமப்படுகிறான்.இவன் எப்படி சிறையை உடைத்து அவளை மீட்டு...ம்ஹூம் எனக்கு நம்பிக்கை இல்லை..." "சந்துரு என்ன திட்டம் தீட்டியிருக்கிறான் என்பது தெரியவேண்டுமா?" என மண்கூடையை எடுத்துவந்த சுதர்சன் கேட்டார். "ஆம்.உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்களேன்" என ஆவலுடன் கேட்டான் அரவிந்சாமி. "எனக்கும் தெரியாது. ஆனால் காரைக்குடி நியூடவுனில் நூறடி ரோட்டில் பராசன் என்றொரு ஜோசியர் இருக்கிறார். அவரிடம் போய் ஜோசியம் கேட்டால் ஒருவேளை அவருக்கு ஏதாவது தெரியலாம்" என்றார் சுதர்சன். திரு, திரு என முழித்தான் அரவிந்த். கல, கல என சிரித்தாள் தேனு (தொடரும்)

6 comments:

இலவசக்கொத்தனார் said...

கடைசியா இவங்க பக்கம் திரும்பினீங்களா. இப்பவாவது நிறுத்தாம கடைசி வர எழுதுங்கப்பா.

Unknown said...

கொத்தனார்

இனி இந்த தொடர்கதையை முடிச்சுட்டுத்தான் வேற வேலை. அனேகமா இன்னும் 7 அல்லது 8 எபிசோடில் முடிஞ்சிடும்.

நாமக்கல் சிபி said...

வாவ்!!! கடைசியா எழுத ஆரம்பிச்சிட்டீங்க தலைவா!!!

எத்தனை முறை இந்த கதைக்கு முதல் ஆளா கமெண்ட் போட்டிருப்பேன்... அப்ப ப்ளாக் கூட இல்லை :-)

பாருங்க மலரும் நினைவுகளை கொண்டு வந்துட்டீங்க...

Unknown said...

நன்றி பாலாஜி,

கான்சன்ட்ரேட் பண்ணி எழுதணும்னு தான் பரிட்சை சமயத்தில் இந்த தொடர்கதையை எழுதலை. இப்ப எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடுச்சு. ஒரே மூச்சா எழுதி முடிச்சிடணும்னு களத்தில் இறங்கிட்டேன்:-).அடுத்த தொடர்கதைக்கான ஐடியாவும் மனசில் இருக்கு. இது முடிஞ்சதும் கொஞ்சம் கேப் விட்டு அதை எழுதலாம்னு இருக்கேன்.

//எத்தனை முறை இந்த கதைக்கு முதல் ஆளா கமெண்ட் போட்டிருப்பேன்... அப்ப ப்ளாக் கூட இல்லை :-)//

நீங்க அப்பல்லாம் பாலாஜிங்கிற பேரில் அதர் ஆப்ஷனை பயன்படுத்தி பின்னூட்டமிடுவீர்கள். அதெல்லாம் நல்லா நினைவில் இருக்கு

Anonymous said...

செல்வன்

மூத்தமிழ் குழுமம் முத்தமிழ் குழுமம் அப்படீங்கறீங்களே அது அந்த பலான பார்ட்டி நடத்துற அதே குழுமமா ?அப்படி இருந்தா உங்க கிட்ட இருந்தும் விலகி இருந்துக்கலாம் அப்பன்னுதான் :)) கொஞ்சம் விளக்கிப் போடுங்க

Unknown said...

அனானிமஸ்,

என்ன சொல்கிறீர்கள் என புரியவில்லை.

முத்தமிழ் குழுமம் என்பது தமிழின் பெருமையை வளர்க்க நடத்தப்படும் கூகிள் குழுமம். அதில் பலான செய்திகள் எதுவும் இடம் பெறாது. அதை நடத்துபவர் தமிழறிஞர் மஞ்சூர் ராசா. நீலகிரி மாவட்டம் மஞ்சூரை சேர்ந்த அவர் அவர் வசிப்பது குவைத்தில்.

முத்தமிழ் குழும வலைமுகவரி

www.groups.google.com/group/muththamiz

மஞ்சூர் அண்ணனின் வலைபதிவு முகவரி

www.manjoorraja.blogspot.com