Tuesday, July 18, 2006

126.anjchel enatha aanmai

"உனக்கு மருந்து வாங்கியாகிவிட்டது சந்துரு" என கனிவுடன் சொன்னார் ஒஷாரா."இளங்கோ சிகிச்சை ஆரம்பிக்கட்டும்.மற்றவர்கள் வெளியே போய் பேசலாமே" என்றார். "ஐயா..எனக்கு மருந்து கூட வேண்டாம்.என் மனைவி எங்கே?அவளுக்கு என்ன ஆனது?" என கேட்டான் சந்துரு "உமாவா?" என கேட்டார் ஒஷாரா.அவர் முகம் தாங்க இயலாத வேதனையை காட்டியது. "என்னவென்று சொல்ல அதை?நினைக்கவே வேதனையாய் இருக்கிறது" என்றார் அவர்."இந்த நாட்டை பற்றித்தான் உனக்கு தெரியுமே சந்துரு.சபிக்கப்பட்ட தேசம்.படித்தவர்கள் யாரும் இங்கு கிடையாது.உமா இங்கு வந்தபோது அவள் கணினி தேர்ச்சி பெற்றவள் என அறிந்தேன்.ஒரு நாள் திடீரென்று எங்கள் நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து கணிப்பொறி தெரிந்த யாராவது சில நாட்கள் கிடைப்பார்களா என கேட்டார்கள்.அப்போது இவள் மட்டுமே கணிப்பொறி தேர்ச்சி பெற்றவள்.அனுப்பினேன்.சில நாட்கள் போனபின் மேலும் சில நாட்கள் அவலை அனுப்ப சொல்லி கேட்டனர்.சரி என்றேன்.அவளும் சந்தோஷமாக போய் வந்தாள்.திடீரென்று ஒரு நாள் அவளை தேசத்துரோக குற்றத்தின் கீழ் கைது செய்ததாக சொன்னார்கள்.அந்த குற்றத்தின் கீழ் கைது செய்தால் எந்த விளக்கமும் தர வேண்டியதில்லை. எனக்கு அபரிமிதமான செல்வாக்கு இந்த அரசாங்கத்தில் இருக்கிறது என்கிறார்கள்.இந்த விஷயத்தில் மட்டும் அது வேலை செய்யவில்லை.இந்த நாட்டு ஜனாதிபதி தவிர மற்ற அனைவரிடமும் பேசிப்பார்த்து விட்டேன்.ஒரு விவரமும் பெயரவில்லை.அவள் ஏதோ அதி ரகசியமான பைலை டவுன்லோட் செய்து பிடிபட்டாள் என்கின்றனர்.அவளை பார்க்கவும் அனுமதிக்கவில்லை.புரியாத புதிராக இருக்கிறது" என்றார். "ஜனாதிபதியிடம் பேச இவரால் முடியாது.அவன் இவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வான்.ஏற்கனவே ஒரு முறை சங்கத்தை உளவுப்பணிக்கு பயன்படுத்த அனுமதி கேட்டு இவர் மறுத்து விட்டார்.அதிலிருந்து மறைமுகமாக இவருக்கு தொந்தரவு கொடுக்கின்றனர்.இப்போது கூட சங்கத்தை வெளிநாடுகளில் உளவுப்பணிக்கு பயன்படுத்துகிறேன் என இவர் ஒரு வார்த்தை சொன்னால் இவருக்கு தரும் எல்லா தொல்லையும் போய்விடும்.உமாவை விடுவித்து விடுவார்கள்.இவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் என்பதால் இப்படி குறுக்கு வழியில் தொல்லை தருகின்றனர்" என்றாள் தேனு. "அட பாவிகளா,உங்கள் அரசியலுக்கு என் மனைவி தான் பலி ஆடா?" என ஆவேசத்துடன் கேட்டான் சந்துரு. "பிறகு பேசலாம்,முதலில் இவனுக்கு சிகிச்சை அளியுங்கள்" என்றார் ஒஷாரா. ------- "ஐயா உமாவை விடுவிக்க முடியுமா?" என கேட்டார் இளங்கோ. சந்துரு மயக்க மருந்தின் ஆளுமையில் உள்ளே தூங்கிக்கொண்டிருந்தான்.இவர்கள் அனைவரும் அந்த மடத்தின் தோட்டத்தில் அமர்ந்திருந்தனர். "சங்கத்தை முடக்க அவர்கள் சில ரகசிய திட்டம் போட்டுள்ளனர்.உமா கையில் அந்த பைல் கிடைத்துள்ளது.அதில் உள்ள விவரங்கள் எனக்கு தெரியக்கூடாது என்று தான் அவளை கைது செய்துள்ளனர்.அவளை விடுவிக்க நான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அவளை நேர்மறையாக பாதிக்கிறது.ஏன் அவள் மீது இவ்வளவு அக்கறை,அவள் உளவாளியா என கேட்கின்றனர்.இன்னொரு அதிகாரி பெருந்தொகை ஒன்றை அரசுக்கு வரியாக செலுத்துங்கள் விட்டுவிடுகிறோம் என்கிறார்.மந்திரி ஐரோப்பிய நாடுகளில் உளவாளிகளை அனுப்ப சங்கத்தின் உதவியை கேட்கிறார்.நான் என்ன செய்ய என்று புரியவில்லை" என்றார் ஒஷாரா. "உமாவுக்கு ஜெயிலில் எதுவும் சித்ரவதை நடக்காதே" என கேட்டான் அரவிந்த். "இங்குள்ள ஜெயில்களை பற்றி உனக்கு தெரியாதா?" என வேதனையுடன் கேட்டார் ஒஷாரா."இருந்தாலும் நான் ராணுவ மந்திரியிடம் உறுதிமொழி வாங்கியிருக்கிறேன்.அவளை நன்றாக கவனித்துக்கொள்வதாக சொல்லியிருக்கிறார்" என்றார். 1 வாரம் கழித்து............ சந்துரு மெதுவாக நொண்டி,நொண்டி நடந்தான்.அரவிந்த் அவனை தாங்கியபடி நடைபயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தான். "இனி நமக்குள் எந்த ரகசியமும் வேண்டாம் சந்துரு.நாம் இணைந்து உமாவை மீட்போம்" என்றான் அரவிந்த். "மீட்டு என்ன செய்வதாக உத்தேசம்?" என கேட்டான் சந்துரு. "மீட்டு என்ன செய்வதா?அவளை மீட்டு கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காகத் தானே நான் இத்தனை பாடு படுகிறேன்" என்றான் அரவிந்த். "யாரோடு கல்யாணம்?" என கேட்டான் சந்துரு. "இதென்ன கேள்வி?என்னோடுதான்" என்றான் அரவிந்த். "அப்போது என் நிலை என்ன?" என கேட்டான் சந்துரு. "ஷென்ரிக்கியோ சங்கத்தில் உண்மையாகவே சேர்ந்து துறவறம் மேற்கொள்ளலாம்,அல்லது இதோ வருகிறாளே இந்த பத்ரகாளியை கல்யாணம் செய்து குடும்பம் நடத்தலாம்.இந்த இரு முடிவுகளில் நீ எதை எடுத்தாலும் என் முழு ஆதரவு உண்டு" என்றான் அரவிந்த். "நானா பத்ரகாளி?பாவி.நீ தான் அயோக்கியன்,கொலைகாரன்" என சத்தம் போட்டாள் தேனு.சந்துருவுக்கு பேன்டேஜ் மாற்ற துணியை எடுத்து வந்திருந்தாள்."இவன் என்னவோ உளறட்டும்.நீங்கள் உட்காருங்கள்.பேண்டேஜ் மாற்ற வேண்டும்" என்றாள். "உன்னை கட்டி வைத்திருந்தபோதே ஏன் கொல்லாமல் போனேன் என இப்போது வருத்தமாக இருக்கிறது" என்றான் சந்துரு. "உன்னை ஒரிசாவில் பிட்சுகள் கொல்ல இருந்தபோது வந்து காப்பாற்றினேனே.அதை நினைத்தால் எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது" என்றான் அரவிந்த். "ஆனாலும் உன்னைப்போல் அயோக்கியனை என் ஆயுளில் நான் பார்த்ததில்லை" என்றாள் தேனு. "உன்னைப்போல் ரவுடியை நானும் என் ஆயுளில் பார்த்ததில்லை.எண்ணையில் விழுந்த கடுகு போல் எப்போதும் பொரிகிறாய்" என்றான் அரவிந்த். "காதலியை கற்பழித்த கயவனை நான் கதையில் கூட கேள்விப்பட்டதில்லை" என்றாள் தேனு. "எனக்கு அந்த சாமர்த்தியமாவது இருந்தது.இவனைப்போல் 7 கழுதை வயதாகியும் கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி என்று இருக்க சொல்கிறாயா?" என கேட்டான் அரவிந்த். "நான் அவள் உணர்வுகளை மதித்தேன்.நீ அரக்கன் போல் நடந்துகொண்டாய்.செய்வதை செய்து விட்டு வேதாந்தம் வேறா பேசுகிறாய்?" என்றான் சந்துரு. "நீ ரொம்ப யோக்கியன் மாதிரி நடந்து கொண்டாயாக்கும்?நான் என்ன செய்தேனோ அதையே தான் நீயும் செய்ய முயற்சித்தாய்.கத்திகுத்து வாங்கித்தானே அடங்கினாய்" என்றான் அரவிந்த். "இதை நான் என் அம்மா,அப்பாவிடம் கூட சொல்லவில்லை.உனக்கு தெரிந்திருக்கிறது" என்றான் சந்துரு.அவன் முகத்தில் வேதனை படர்ந்தது."நான் ஒன்றும் உன்னைப்போல் மோசமாக நடந்துகொள்ளவில்லை.எங்கள் பரம்பரையில் யாருக்கும் அப்படி ஒரு புத்தி இருந்தது கிடையாது.அன்றைக்கு நன்றாகத்தான் பேசிக்கொண்டிருந்தாள்.கையை பிடித்து உன்னை பார்த்தால் மகாலட்சுமி போல் இருக்கிறது என கண்ணில் ஒற்ற போனேன்.கையை விடு என்று கத்தி கத்தியால் கீறிவிட்டாள்" என்றான். "நீ கையை பிடித்து இழுத்தாய் என்றல்லவா சொன்னாள்" என்றான் அரவிந்த். "ஏன் சொல்லமாட்டாள்?விட்டால் கொலை செய்யவந்தேன் என்று கூட சொல்வாள்.அவள் சங்காத்தமே இனி எனக்கு வேண்டாம்.அடுத்த விமானத்தில் ஊர் திரும்புகிறேன்" என்றான் சந்துரு. "இவன் சொல்வது எதையும் நம்பவேண்டாம் என சொல்லியிருக்கிறேனா இல்லையா" என கோபத்துடன் சொன்னாள் தேனு."இதை உமா எனக்கு சொன்னாள்.நான் இவனிடம் சொன்னேன்.அதை வைத்து கதை கட்டி உங்களை பிரிக்க பார்க்கிறான்.இவனை போல் அயோக்கியனை இந்த 7 உலகிலும் பார்க்க முடியாது" என்றாள். "உன்னிடம் சொல்வதற்கு முன்னாடியே என்னிடம் சொல்லிவிட்டாள்" என்றான் அரவிந்த். "இதுவும் பொய்.இவன் வாயை திறந்தாலே வருவது முழுக்க முழுக்க பொய்தான்" என்றாள் தேனு. "நீ இப்படியே சொல்லி சொல்லி இவன் மனதில் இன்னும் அவள் மீது ஆசையை தூண்டி விட்டுக்கொண்டிரு.அவள் வந்ததும் இவனை ஏறெடுத்தும் பாராமல் என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளபோகிறாள்.அப்போது இவன் நிலைமை என்ன என யோசித்து பார்த்தாயா?" என கேட்டான் அரவிந்த். "கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிக்கும்.பூமி உருண்டை என்பது பொய்யாகும்.ஆனால் அவள் மேல் நான் வைத்த காதல் தோற்காது.பொய்யாகாது" என்றான் சந்துரு."நீ என்ன வேண்டுமானலும் சொல்.நான் எதையும் நம்ப தயாராக இல்லை.அவள் என் மனைவி.என் உயிர்.அவள் எனக்குத்தான்.நீ இல்லை.கடவுளே வந்து அவள் எதிரில் நின்றாலும் தூக்கி வீசிவிட்டு என்னைத்தான் தேர்ந்தெடுப்பாள்" என சொன்னான். "இப்படி சிவாஜி கால டயலாக்கையே நீ அடிக்கடி பேசுகிறாய் என்பதும் அவள் உன்னை பற்றி சொன்ன புகாரில் ஒன்று" என்றான் அரவிந்த்."இந்த மாதிரி டயலாக்கை ஆர்.எஸ்.மனோகர் நாடகத்தில் வைத்தால் கூட இப்போதெல்லாம் யாரும் கேட்பதில்லை.நீ இன்னும் வஞ்சிகோட்டை வாலிபன் ஜெமினி கணேசன் போல் 'கடல் வற்றும்,உலகம் நிற்கும்' என பேசிக்கொண்டிருக்கிறாய்.இப்படி இருந்தால் நீ எப்படி உருப்படுவாய்" என்றான். "சற்றே என் காலருகே வா.உன்னை காலால் எட்டி உதைக்க வேண்டும்" என்றான் சந்துரு. "இதுகூட பாரதியார் காலத்திய டயலாக்.பார்த்தாயா?இவன் திருந்த வாய்ப்பே இல்லை என நான் சொன்னது உண்மைதானே" என்றான் அரவிந்த். கல கல என சிரித்தாள் தேனு.சந்துருவும் சேர்ந்து சிரித்தான். (thodarum)
Post a Comment