Monday, July 17, 2006

125.Fear Not I'm there

"சில விஷயங்களை சொல்ல வேண்டாமென்று நினைத்தேன்.ஆனால் இப்போது வேறு வழியில்லை.இந்த பிரச்சனையில் முக்கால்வாசி குழப்பம் வந்தது என்னால் தான்" என்றான் அரவிந்த். "அதுதான் தெரியுமே,முக்கால்வாசி குழப்பம் அல்ல,முழு குழப்பமும் உன்னால் தான்.நீ மேலே சொல்லு" என்றாள் தேனு. "சந்துரு,உன் மனைவியை பற்றி உனக்கு தெரியாத பல விஷயங்கள் எனக்கு தெரியும்.போட்டோவை பார்த்து அழகாக இருந்தாள் என்றதும் கல்யாணத்துக்கு ஓக்கே சொன்னவன் நீ.ஆனால் அவளோடு சிறுவயதிலிருந்து பழகியவன் நான்.நீ ஒரு நல்ல கணவனாக இருக்கவில்லை என்பதை உறுதியாக சொல்லுவேன்.என்னை நீ இதற்கு கோபித்துக்கொண்டாலும் சரி.கவலை இல்லை.ஒரு உண்மையை சொல்லுகிறேன்.உமா உன்னை விஷம் போல் வெறுத்தாள்" என்றான் அரவிந்த். பனிக்காற்று முகத்தில் அடித்தது போல் உறைந்தான் சந்துரு. "இந்த விஷயம் உண்மை" என்றாள் தேனு."என்னிடம் பல முறை உன்னை வெறுப்பதாக சொல்லியிருக்கிறாள்.உன்னை அவளுக்கு கட்டோடு பிடிக்கவில்லை" என்றாள் தேனு. "போதும்ங்க.."என்றான் சந்துரு."இனி மேல் எதையும் நான் கேட்க விரும்பவில்லை.இதற்கு மேல் ஒரு கணவனுக்கு எந்த அவமானமும் இருக்க முடியாது.கணவனை பிடிக்கவில்லை என்று முன்னாள் காதலன் மூலம் அறியும் துர்பாக்கியம் என் எதிரிக்கு கூட வரவேண்டாம்.நான் என்ன தப்பு செய்தேன்?அவள் மேல் எத்தனை உயிராக இருந்திருந்தால் இத்தனை கஷ்டப்பட்டு புரியாத தேசத்துக்கு வந்து,உயிரை பணயம் வைத்து,10 பேரை கொன்று,வேலையை தொலைத்து..சே..சே.." என்றான். அவன் கண்ணில் நீர் முட்டியது."என் காதல் உண்மை.அவள் மேல் பைத்தியமாக இருந்தது உண்மை.அதுக்கு இதுதான் பரிசா?ஆண்டவா.." என அழுதான். "உன் தப்பு என்னவென்று உனக்கு இன்னமும் தெரியவில்லை" என்றான் அரவிந்த்."பெண் மனதை புரிந்து கொள்வது மிக சிரமம்.நீ பிரியம் வைத்திருந்தேன் என்றாய்.ஆனால் அவளை துளி கூட புரிந்து கொள்ளவில்லை.பெயரில் துவங்கி நீ அவளை துன்புறுத்தியிருக்கிறாய்.உமா என நாங்கள் அழைப்போம்.நீ ஏதோ பையனை அழைப்பது போல் மகேஸு என கூப்பிட்டிருக்கிறாய்.அப்படி கூப்பிட்டதே அவளுக்கு கட்டோடு பிடிக்கவில்லை" என்றான் அரவிந்த். "இது ஒரு தப்பாய்யா?அட கலிகாலமே" என்றான் சந்துரு. "மனைவிக்கு எது பிடிக்கும் என்பது கூட தெரியாமல் ஒரு கணவன் இருப்பது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று உனக்கு இன்னும் தெரியவில்லை.சரி அவள் நெருங்கிய தோழிகள் மூவர் பெயரை சொல் பார்ப்போம்" என்றான் அரவிந்த். "தெரியாது" என்றான் சந்துரு. "அவளுக்கு பிடித்த நடிகர் யார்?" -- தெரியாது "அவளுக்கு பிடித்த டூரிஸ்ட் ஸ்பாட் எது/" -- தெரியாது இப்படி பல கேள்விகளை கேட்டுக்கொண்டே போனான் அரவிந்த்.ஒன்றுக்கும் பதில் தெரியவில்லை சந்துருவுக்கு. "கட்டின மனைவியை துளி கூட புரிந்துகொள்ளாத உன் போன்ற கணவனை,மனைவி என்றால் பிள்ளை பெறும் பொம்மை,தன் உடமை என்ற நினைப்பில் இருந்த உன்னை அவளுக்கு சுத்தமாக பிடிக்காததில் ஆச்சரியமென்ன?இந்த லட்சணத்தில் தினமும் ராத்திரியானால் அவளோடு சண்டை போட்டு அவள் உன்னை கண்டாலே மிரளும் நிலைக்கு கொண்டுவந்து விட்டாய்.அவள் உன்னோடு குடும்ப வாழ்வு நடத்த மனதளவில் தயாராகவே இல்லை.நீ அதை உணரவே இல்லை.அவள் வலி என்ன,வேதனை என்ன என்பதை உணராமல் அந்த நினைப்பிலேயே இருந்திருக்கிறாய்.எத்தனை நாள் ஒரு பெண் மனவேதனையை பொறுப்பாள்?" என்று கேட்டாள் தேனு. "இதில் என்ன தமாஷ் என்றால் இதெல்லாம் மூணாவது மனிதர்கள் சொல்லி நான் தெரிந்துகொள்வதுதான்" என்றான் சந்துரு."என் குடும்ப கதை சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்துவிட்டது.சரி..நான் மோசம்,அயோக்கியன்,கொலைகாரன்.அதன் பின் என்ன நடந்தது" என கேட்டான் சந்துரு. "நீ வெளியூர் போனபின் அவளை தேடி நான் போனேன்.என்னை பார்த்ததும் உடைந்து போய் விட்டாள்.அவள் என்னை மறக்கவே இல்லை என்பது தெரிந்தது.புகுந்த வீட்டில் அவள் சந்தோஷமாக இல்லை.என்னால் பொறுக்க முடியவில்லை.இது அத்தனைக்கும் காரணம் நான் தான் என தோன்றியது.என்னோடு வந்துவிடு என சொன்னேன்." என சொல்லி தயங்கினான் அரவிந்த். "ஏன் நிறுத்துகிறாய்?எத்தனையோ இடி தலையில் விழுந்துவிட்டது.இதுவும் விழட்டும்.உன்னோடு ஓடிப்போய்விட்டாள் என சொல்லு" என சொன்னான் சந்துரு. "அப்படி சொன்னால் அது தப்பு.அவள் நரக வேதனையில் இருந்தாள்.சாக முடிவெடித்திருந்தாள்.உனக்கு அதெல்லாம் தெரியாது.நான் அவளை அவள் காதலனாக அழைக்கவில்லை.அவளை சந்தித்தபோது நான் இந்த சங்கத்தில் சேர்ந்து துறவறம் வாங்கியிருந்தேன்.இந்த சங்கத்தில் சேர்ந்து மக்கள் பணி செய்யலாம்,கவலையை மறக்கலாம் என சொன்னேன்.எங்கள் மடத்துக்கு அழைத்துப்போனேன்.மக்கள்பணி அவள் காயத்துக்கு நல்ல மருந்தாக இருந்தது.துறவறம் வாங்கி பிட்சுணியாகிவிட்டாள்" என்றான் அரவிந்த். "அடே பாதகா..பொய் சொல்வதில் உன்னை மிஞ்ச இனி ஒருவர் தான் பிறந்து வர வேண்டும்.என்னிடம் ஆரம்பம் முதல் ஏதாவது உண்மையை நீ சொல்லியிருக்கிறாயா?முதலில் நீ ஒரு பிட்சு என்றாய்.அடுத்ததாக உளவாளி என்றாய்.அடுத்ததாக என் மனைவியின் காதலன் என்றாய்.இப்போது மறுபடி பிட்சு என்கிறாய்.எத்தனை நாடகம் தான் என்னிடம் ஆடுவாய்?உன்னோடு வந்த அந்த 10 பேர் யார்?நீ எப்போது இந்த சங்கத்தில் சேர்ந்தாய்?எப்படி சங்கத்தில் அவவளவு பெரிய பொறுப்புக்கு உயர்ந்தாய்?எதற்கு மகேசை..சே..உமாவை கொரியா அனுப்பினாய்?அனுப்பிவிட்டு எதற்கு இங்கு வந்து அவளை தேடுகிறாய்?என்னை எதற்கு இங்கே கூட்டிவந்தாய்?சேட்டு மகள் எங்கே?சொல்லு பாதகா..சொல்லு" என்றான் சந்துரு. ------------------ "நான் இந்த சங்கத்தில் பள்ளியில் படிக்கும் போதே சேர்ந்திருந்தேன்" என்றான் அரவிந்த்."என் நண்பன் இதில் என்னை சேர்த்துவிட்டான்.ஓய்வு நேரத்தில் சேவைப்பணியை விளையாட்டாக செய்து வந்தேன்.சங்க உறுப்பினர்கள் பலரோடு நல்ல அறிமுகம் இருந்தது.உமாவுக்கு கல்யாணம் ஆனதும் வாழ்க்கை வெறுத்துப்போய் இதில் சேர்ந்து முழு நேர பிட்சுவாகிவிட்டேன்.தமிழ்நாட்டிலேயே இருக்க பிடிக்காமல் மும்பைக்கு அனுப்ப சொல்லி கேட்டேன்.அங்கே போனபின்னும் உமாவை மறக்க முடியவில்லை.போன் மூலம் தொடர்பு கொண்டேன்.நன்றாக இருக்கிறாயா என கேட்கத்தான் கூப்பிட்டேன்.அவள் நன்றாக இல்லை என்பது தெரிந்ததும் மனசு கேட்கவில்லை. அவள் வாழ்க்கையை கெடுத்தது நான் என்ற குற்ற உணர்ச்சி இருந்து கொண்டே இருந்தது.ஆனால் அவளுக்கு என் மீதான பழைய கோபம் போய் விட்டது என்பது தெரிந்தது.துறவு வாழ்க்கையை அவளுக்காக தூக்கி வீச தயாராக இருந்தேன்.ஆனால் அதை வெளியே சொல்ல பயம்.முதலில் உன்னிடம் இருந்து அவளை பிரிக்க வேண்டும் என நினைத்தேன்.அதில் முழு வெற்றி கிடைத்தது. அவளை கொரியா அனுப்பி விட்டால் அதன் பின் நானும் அங்கே போயி அவள் சிறிது மனது தேறியவுடன் அவளை திருமணம் செய்துகொண்டு பழையதை எல்லாம் மறந்து வாழலாம் என இருந்தேன்.அதனாலேயே கொரியா அனுப்பி வைத்தேன்" என்றான் அரவிந்த். சந்துருவின் முகம் வெளிறியது. "நான் எதையும் இட்டு கட்டி சொல்லவில்லை.உண்மையை தான் சொல்லுகிறேன்.இது என் திட்டம் தானே தவிர அவளிடம் இதை நான் சொல்லவில்லை.அவளுக்கு இதை பற்றி லேசாக சொன்னேன்.எதிர்ப்பும் சொல்லவில்லை,சரி என்றும் சொல்லவில்லை.கொஞ்ச நாள் கழித்து பேசலாம் என இருந்தேன்.அதற்குள் நடுவே நீ புகுந்து என்னை கடத்திக்கொண்டு வந்துவிட்டாய்" என்றான் அரவிந்த். "நானா நடுவில் புகுந்தேன்?சரி..நீ இதுவும் பேசுவாய்,இதற்கு மேலும் பேசுவாய்" என்றான் சந்துரு."இதற்கு மேல் எதுவும் கேட்க விரும்பவில்லை.என்னால் தாள முடியவில்லை.அவளை வெட்டுவேன் என்று சொன்னேன்.அதை எல்லாம் மறந்துவிட்டேன்.எங்கோ நன்றாக இருந்தால் சரி.நான் ஊர் போகிறேன்,ஆளை விடுங்கள்" என்றான். "உளவாளிகள் எல்லாம் இதில் எங்கு வந்தார்கள்?" என கேட்டார் இளங்கோ. "அவர்கள் உண்மையிலேயே உளவாளிகள் தான்.வடகொரியாவில் இப்படி ஒரு மதம் இயங்குகிறது,உலகெங்கும் கிளைகள் பரப்புகிறது என்பதை அறிந்ததும் ஒரு உளவு நிறுவனம் - அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது கூட தெரியவில்லை - இந்த சங்கத்தை வேவு பார்க்க தொடங்கினர்.என்னை அணுகி பணத்தாசை காட்டினர்.நான் மறுத்துவிட்டேன்.ஆனால் அதன் பின் சில அதிர்ச்சி தரும் தகவல்களை சொன்னார்கள்.உமாவுக்கு இங்கே ஏதோ ஆபத்து என்றார்கள்.நான் அவளை தொலைபேசியில் அழைத்தேன்.பலரை அழைத்தேன்.அவளோடு பேச முடியவில்லை.குழம்பிய மனநிலையில் இருந்தபோது இவர்கள் மேலும்,மேலும் உமாவுக்கு சங்கத்தால் ஆபத்து என்றே சொல்லிக்கொண்டிருந்தனர். அப்போதுதான் சந்துரு புகுந்து என்ன கடத்தினான்.இவர்கள் அவனை எப்படி மோப்பம் பிடித்து வந்தார்கள் என தெரியவில்லை.கோயிலுக்குள் சந்துருவை பிட்சுகள் கொன்றுவிடுவார்கள் என நினைத்துக்கொண்டு காரில் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தேன்.இவர்கள் வந்து என்னை விடுவித்தனர்.கொரியா போக இது நல்ல வாய்ப்பு என சொன்னார்கள்.நான் உதவ மறுத்தேன்.அவர்கள் அடையாள அட்டையை காட்டியதும் தான் அவர்கள் நம்பகமானவர்கள் என தெரிந்தது.அதன் பின்னரே கோயிலுக்கு வந்தோம்.எங்கும் பிணக்குவியல்கள்.நல்லவேளையாக உங்களை காப்பாற்றினோம்.உமாவை காப்பாற்ர அடுத்து கொரியா வந்தோம்.அவர்களுக்கு உதவினால் அவர்களும் பதிலுக்கு உதவுவதாக சொன்னார்கள்" என்றான் அரவிந்த். "உமாவுக்கு என்ன ஆச்சு?" என பதற்றத்துடன் கேட்டான் சந்துரு. "லீ ஒஷாராவுக்கு தான் முழு விவரமும் தெரியும்.அவர் வந்ததும் சொல்வார்" என்றாள் தேன்மொழி. "அவர் நல்லவரா கெட்டவரா?இந்த சங்கம் பற்றி எதுவும் தெரிய மாட்டேன் என்கிரதே?நல்லவர்கள் என்றால் ஏன் இத்தனை மூடுமந்திரம்?துப்பாகிகளோடு பிட்சுகள் காவல் இருப்பது எதற்கு?" என்றான் சந்துரு. "அது தற்பாதுகாப்புக்கு.ஒரிசாவில் நக்சலைட் தொல்லை அதிகம்.அதனால் அனைவரும் அங்கு துப்பாக்கி வைத்துக்கொள்வது வழக்கம்.நாம் வந்தபின் நக்சலை கும்பல் ஒன்று வந்து அந்த கோயிலுக்கு தீ வைத்தது தெரியுமா?அது உண்மையில் இந்த உளவுப்படையினர் செய்த வேலை.இவர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் நக்சலைட் கும்பலை கோயிலை எரிக்க சொல்லி விட்டனர்.அப்போதுதான் அந்த 20 பிணங்கள் மறைக்கப்படும் என்ற திட்டம்.மற்றபடி சேட்டு மகளும் மற்றவர்களும் பத்திரமாக உளவுத்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்றனர்.விரைவில் அவர்கள் சொந்தக்காரர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள்" என்றான் அரவிந்த். "லீ ஒஷாரா நல்லவரா,கெட்டவரா?' என்றான் சந்துரு "தெரியலையே" என சொன்னான் அரவிந்த். "உமாவுக்கு என்ன ஆச்சு என அவரிடம் கேள்" என சொன்னான் சந்துரு. கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார் ஒஷாரா. 100 ஆயுசு என யாரும் சொல்லவில்லை. (தொடரும்)
Post a Comment