Thursday, July 13, 2006

124.anjchel enatha anmai

"அப்பா" என தேன்மொழி தமிழில் முணுமுணுத்தது லீ ஒஷாராவுக்கு புரியவில்லை."உனக்கு தெரிந்தவர்களா?" என கேட்டார். "ஆம்.எனது தந்தை" என்றாள் தேன்மொழி. "மிக்க மகிழ்ச்சி.அப்போது நீ போக வேண்டாம்.வேறு யாரையாவது அனுப்புகிறேன்.நீண்ட நாள் கழித்து சந்திக்கிறீர்கள்.பேசுங்கள்.பிறகு வருகிறேன்" என சொல்லி விட்டு ஒஷாரா வெளியே போனார். "தேனு.." என ஓடிப்போய் கட்டிப்பிடித்தார் இளங்கோ.அவர் கண்களில் கண்ணீர்.ஒரே மகள்,சன்யாசினியாய் நின்றால் எந்த தகப்பனால் தாங்க முடியும்? "அம்மா எப்படி இருக்கிறார்?" என கேட்டாள் தேன்மொழி.ஏனோ அவள் அழவே இல்லை.அவள் மனம் துறவியின் பக்குவத்தை அடைந்திருந்தது. 'அம்மா இன்னும் சாகவில்லை.அது நடந்தால் தான் அவளுக்கு நல்லது.அரை பைத்தியமாய் தேனு,தேனு என புலம்புவதை விட செத்தால் நல்லதுதானே?" என்றார் இளங்கோ. "நீங்கள் வந்தீர்கள் சரி.இந்த நீசர்களை ஏன் கூட அழைத்து வந்தீர்கள்?இவர்கள் இருக்கும் அறையில் இருப்பதே அருவருப்பாய் இருக்கிறது" என்றாள் தேன்மொழி. "யாரை சொல்கிறாய்?" என கேட்டார் இளங்கோ.அந்த அறையில் அவர்கள் நால்வர் மட்டுமே இருந்தனர். "உங்கள் நண்பர்கள் இருவரையும் தான்" என்றாள் தேன்மொழி. அரவிந்தின் முகம் இருண்டது.தலை கவிழ்ந்து நின்றான். "உனக்கு நடந்தது எதுவும் தெரியாது தேன்மொழி.சந்துரு தன் மனைவியை தேடி பைத்தியமாகவே ஆகிவிட்டான்.அதனால் தான் கூட்டி வந்தேன்" என்றார் இளங்கோ. "சந்துரு மனைவியை தேடி வந்தான் சரி.இந்த மாபாதகன் எதற்கு வந்தான்?இவனால் தான் மகேசு(சந்துருவின் மனைவி, உமாமகேஸ்வரி) இந்த நிலைக்கு ஆளானாள்.பாவி,சண்டாளா,செய்த துரோகம் போதாதா?இங்கேயும் வந்து விட்டாயா?" என கேட்டாள் தேனு. "உனக்கு விவரம் தெரியவில்லை.இவர் உளவுத்துறையை சேர்ந்தவர்" என்றார் இளங்கோ. "இவனா உளவுத்துறையை சேர்ந்தவன்?இவன் உருப்படாத துறையை சேர்ந்தவன்.கொலைகாரன்.அயோக்கியன்" என ஆவேசத்துடன் கத்தினாள் தேனு.அரவிந்த் மீது பாய்ந்தாள்.இளங்கோ குறுக்கிட்டு தடுத்தார். "சந்துரு விழித்துக் கொள்ளப் போகிறான்.வெளியே போய் பேசலாம்" என மெல்லிய குரலில் சொன்னார் அரவிந்த். "விழித்து கொள்ளட்டுமே?நீ செய்த சினேகித துரோகம் அப்போதாவது தெரியட்டும்.உன்னை அவன் வெட்டி கொன்றால் கூட நீ செய்த பாவம் தீராது" என்றாள் தேனு. "என் கதை எப்படியோ ஆகட்டும்.மகேசுவின் வாழ்க்கையாவது மிஞ்சட்டும்.சந்துருவுக்கு எதுவும் தெரிய வேண்டாம்." என்றார் அரவிந்த். 'அவனுக்கு தெரிந்தாலும் பெரிதாக ஒன்றும் குடிமுழுகாது.மகேசை இனி யாரும் காப்பாற்ற முடியாது.நீங்கள் இருவரும் இந்தியா போய் இனி வேறு பெண்களின் வாழ்வை கெடுங்கள்" என்றாள் தேனு. "எனக்கு தலையும் புரியவில்லை,வாலும் புரியவில்லை.என்ன நடந்தது என சொல்லிவிட்டு திட்டிக்கொள்ளுங்கள்" என்றார் இளங்கோ. "உங்கள் பெண்ணுக்கு பாதி விவரம் தான் தெரியும்.அதை வைத்துக்கொண்டு என்னை இந்த வாங்கு வாங்குகிறாள்.இவள் கூச்சல் போட்டு சந்துரு எழுந்தால் அப்புறம் மகேசுவின் வாழ்க்கை நாசமாய்விடும்.வெளியே போய் பேசலாம்" என்றார் அரவிந்த். "நீ என்று அவளை பலாத்காரம் செய்தாயோ அன்றே அவள் வாழ்வு அழிந்துவிட்டது.இனி எங்கே புதிதாக அழிய?பாவி,கிராதகா,உன்னை கழுவில் ஏற்றவேண்டும்" என்றாள் தேன்மொழி. --------------------------------- "என்ன சொல்கிறாய்?" என அதிர்ச்சி அடைந்தார் இளங்கோ."சரி எதுவாக இருந்தாலும் இங்கே வேண்டாம்,வெளியே போய் பேசலாம்" என்றார். "ஆ.." என சந்துரு முனகும் சத்தம் கேட்டது.சந்துரு மயக்கம் தெளிந்து எழுந்தான்.இளங்கோ ஓடிப்போய் பார்த்தார்.சந்துருவின் முதுகில் சரியான அடி.வீங்கியிருந்தது.எழ முடியவில்லை. "உனக்கு ஒன்றும் இல்லை.தோள்பட்டை விலகி இருக்கிறது.எலும்பு முறிவு இருக்கலாம்.எக்ஸ்ரே இந்த ஊரில் எங்கே இருக்கிறது? பெயின்கில்லர் வந்தால் வலி நின்றுவிடும்.அசையாது இரு" என்றார் இளங்கோ. அரவிந்தை பார்த்தான் சந்துரு.அவன் முகம் மாறியது. "நீ எதற்கு இங்கே வந்தாய்?உன்னால் தான் எனக்கு இந்த நிலைமை" என்றான் சந்துரு. "உன் வாழ்க்கையையே அழித்தவன் இந்த மாபாவி தான்" என்றாள் தேனு. அப்போதுதான் அவளை சந்துரு பார்த்தான்.இளங்கோவின் மகள் என்று உடனடியாக கண்டுபிடித்து விட்டான்.போட்டோவில் பார்த்ததுபோக இளங்கோவின் ஜாடை அப்படியே முகத்தில் எழுதி ஒட்டி இருந்தது. "அரவிந்த்சாமி,நீ வெளியே போ.சந்துரு சொல்கிறானில்லை.?அவனுக்கு ஓய்வு தேவை" என்றார் இளங்கோ. "என்னது?இவன் பெயர் அரவிந்த்சாமியா?ஓகோ.புனை பெயர் வேறு வைத்துக்கொண்டானா?இவன் நிஜ பெயர் வெங்கடாசலம்.ஸ்டைல் பெயர் வேறு இவனுக்கு கேட்கிறதா?" என்றாள் தேனு. "உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்களேன்" என்றார் இளங்கோ. "சந்துருவுக்கு எப்படியும் தெரியவேண்டியது தானே?சந்துரு மட்டும் சாதாரணமானவன் என நினைக்க வேண்டாம்.இவனும் கடைந்தெடுத்த அயோக்கியன்" என்றாள் தேனு. 'நான் என்ன தப்பு செய்தேன்?" என குழம்பினான் சந்துரு. "அம்மா தாயே,உன் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன்,வெளியே வந்து நம் சண்டையை வைத்துக்கொள்ளலாம்" என கெஞ்சினான் அரவிந்த். "இது மறைக்க வேண்டிய விஷயமில்லை.இவன் வாழ்வை கெடுத்தது போதும்.நீ சொல்கிறாயா அல்லது நானே சொல்லட்டுமா?" என கேட்டாள் தேனு. "நானே சொல்கிரேன்.என்றோ சொல்லி இருக்கவேண்டிய விஷயம்.நேற்று லேசாக அதை பற்றி பேச்செடுத்தேன்.இந்த மடையன் கோபித்துக்கொண்டு போய் விட்டான்" என்றான் அரவிந்த். "சந்துரு,அதிர்ச்சி அடையாமல் கேள்.மகேசும் நானும் சிறுவயது முதல் காதலித்தோம்.ஒரே பள்ளி,பக்கத்து பக்கத்து வீடு.அவளை தவிர வேறு தோழி எனக்கு இல்லை.என்னை விட்டால் அவளுக்கு வேறு யாரும் விளையாட்டு தோழன் கூட இல்லை.மெதுவாக வளர்ந்த இந்த நட்பு எப்படி தெய்வீக காதலானது என்றே எனக்கு தெரியவில்லை" என்றான் அரவிந்த். அதிர்ச்சியில் வாயடைத்து நின்றான் சந்துரு. "தெய்வீக காதலன் செய்யும் வேலையா நீ செய்தாய்?" என கேட்டாள் தேனு. "நீ ஒரு உலக அனுபவம் இல்லாத ஜடம்.ஆள்தான் வளர்ந்திருக்கிறாயே தவிர அறிவு சுத்தமாக இல்லை.ஏன் இப்படி எண்ணையில் விழுந்த கடுகு போல் குதிக்கிறாய்?நான் தான் சொல்கிறேன் என்றேனே" என்றான் அரவிந்த்.சந்துரு பக்கம் திரும்பினான்.மிடறு விழுங்கினான். "அந்த வாங்கு வாங்கினாய்.வாயய் திறந்து சொல்லவேண்டியதுதானே உன் லட்சணத்தை" என்றாள் தேனு."சந்துரு இவனால் அதை சொல்ல முடியாது.நானே சொல்கிறேன்.இந்த சண்டாளன் மகேசை ஒரு நாள் பலாத்காரம் செய்து விட்டான்" என்றாள் தேனு. பேச்சிழந்து நின்றான் சந்துரு.அதிர்ச்சியில் அவனுக்கு பேச்சே வரவில்லை. "இவன் அந்த காரியத்தை செய்ததும் மகேசு பைத்தியம் பிடித்தவள் மாதிரி ஆகிவிட்டாள்.அப்போது அவளுக்கு வயது 17 தான்.அன்றிலிருந்து ஆரம்பித்தது அவள் வேதனைகள்" என்றாள் தேனு. "நான் செய்தது தப்புதான்.தனியாய் வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது அந்த மாதிரி நடந்துவிட்டது.அதன்பின் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டேன்.காலில் விழுந்தேன்.உடனடியாக கல்யாணம் செய்து கொள்வதாக சொன்னேன்.என்ன சொல்லியும் அவள் கேட்கவில்லை.என்னை கத்தியால் குத்த வந்துவிட்டாள்" என்றான் அரவிந்த். "உன்னை மட்டுமா குத்த வந்தாள்?அட பாதகா,இப்போது புரிகிறது எல்லாமும்" என்றான் சந்துரு. "சந்துரு என்னை கோபித்து ஒன்றும் ஆகபோவதில்லை.தப்பு செய்தேன்.இல்லை எனவில்லை.ஆனால் அதற்கு பரிகாரம் செய்ய முயன்றேன்.அவள் ஒத்துக்கொள்ளவில்லை.கல்யாணத்துக்கு பின்னும் அவள் சந்தோஷமாக இருக்க மாட்டாள் என்பது எனக்கு தெரியும்.அவள் மனதை என்னை போல் அறிந்தவன் வேறு யாருமில்லை.அந்த மாதிரி நடந்ததும் அவளுக்கு இந்த விஷயம் என்றாலே அலர்ஜி மாதிரி ஆகிவிட்டது." என்றான் அரவிந்த். "என்னால் எழ முடிந்தால் உன்னை விட்டு வைத்திருக்க மாட்டேன்." என உறுமினான் சந்துரு."அட பாவி,அவள் மேல் எத்தனை அன்பு வைத்திருந்தேன்.அவளாவது சொல்லியிருந்தால் உன்னிடமே அனுப்பியிருப்பேனே.ஒன்றுமே வாயை திறக்காமல் இருந்துவிட்டாளே" என அழுதான் சந்துரு. "இவன் அதன்பின் என்ன செய்தான் என கேள்" என்று சொன்னாள் தேனு (நாளை தொடரும்)
Post a Comment