Wednesday, April 05, 2006

72.இந்திய நாய்களும் அமெரிக்க நாய்களும்

இந்த வார தமிழோவியத்தில் வெளியான என் படைப்பு மறுபிரசுரம் இங்கே என் நெருங்கிய நண்பன் வீட்டுக்கு போயிருந்தேன். முதல் முதலில் அவன் வீட்டுக்கு போனபோது பயந்துவிட்டேன். மிகப்பெரும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்றை வளர்த்துவந்தான். பில் என்று நாய்க்கு பெயர். இங்கே நாய்களுக்கு அனாதை விடுதி ஒன்று உள்ளது. அங்கிருந்து எடுத்து வந்து வளர்க்கிறானாம். இந்தியாவில் இருந்தபோது எங்கள் வீட்டருகே தெரு நாய் ஒன்று குட்டி போட்டிருந்தது. அதில் அழகான குட்டி ஒன்றை தூக்கிகொண்டு வந்து ஆசையாய் டோரி என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தோம். பில் மிகவும் சூட்டிகையான நாய். அதை வீட்டுக்குளேயே வளர்க்கிறார்கள். சோபாவில் ஏறி உட்காரும், பெட்டில் ஏறி படுக்கும். ஒண்ணுக்கு, ரெண்டுக்கு வீட்டுக்குள் போவதில்லை. ஒண்ணுக்கு வந்தால் வீட்டுக்கு வெளியே ஓடி அதற்கென தனி டாய்லட் கட்டியிருக்கிறார்கள். அங்கே தான் போகும்." எப்படி பழக்கினாய்" என என் நண்பனிடம் கேட்டேன். 2000$ செலவில் நாய் ட்ரெய்னரை வீட்டுக்கு கூட்டி வந்து பழக்கினானாம். டோரி வந்த புதிதில் வீட்டுக்குளே ஒளித்து வைத்து வளர்த்தோம். எங்கள் பாட்டிக்கும், அப்பாவுக்கும் தெரிந்தால் திட்டுவார்கள் என பயம். டோரி கொஞ்சம் பெரிதானதும் குட்டு உடைந்து திட்டு வாங்கினோம். அதன் பின்னும் வீட்டுக்குள்ளேயே வளர்த்தோம். ஆனால் சில நாட்கள் கழித்து மூச்சா, பீச்சா எல்லாம் வீட்டுக்குளேயே போக ஆரம்பித்தது. கன்னா பின்னவென்று திட்டு கிடைத்ததும் அதை வெளியே தோட்டத்துகுள்ளேயே வளர்த்தோம். அதன் பின் டோரி வெளியே தான் இருந்தது. விருந்தாளிகள் வந்தால் பில் அவர்கள் மீது பாய்வதில்லை. நேராக ஓடிப் போய் சோபாவின் மீது ஏறி நின்று கொள்ளும். விருந்தாளிகள் அதை தடவி கொடுக்க வேண்டும். அதன் பின் அது நண்பனாகிவிடும். விருந்தாளிகள் வந்தால் டோரியை கட்டித்தான் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பாய்ந்து விடும். இதற்கு பயந்தே விருந்தாளிகள் வந்தால் டோரியை வெளியே அனுப்பிவிடுவோம். கதவை திறந்து விட்டால் அது ஓடிப்போய் விடும். பில் சாப்பிட மாட்டுக்கறியும்,சிக்கனும் பெட்கோவில். பில்லுக்கு சீஸ் மிகவும் பிடிக்கும். ஐஸ் கியூப்ஸ் என்றால் அதற்கு உயிர். நாய்க்கு தனியாக இங்கு desserts உண்டு. அதை அடிக்கடி வாங்கி கொடுப்பான் என் நண்பன். அதற்கு விளையாட நாய் பொம்மைகள் கூட நிறைய வாங்கி வைத்திருந்தான். அது தூங்க தனி பெட்.டீவி பார்க்கும்போது ஓடி வந்து மடியில் ஏறி படுத்துக்கொள்ளும். நாங்கள் டோரிக்கு போட்டது சாதம் தான். எங்கள் வீட்டில் அசைவம் மூச்ச். அதனால் டோரியை சைவமாகத் தான் வளர்த்தோம். நாங்கள் என்ன சாப்பிடுகிறோமோ அதே சாப்பாடு தான் டோரிக்கும். அது எங்களுடன் அதற்கு சின்ன வயதாக இருக்கும்போது விளையாடியது. அது வளர்ந்த பின் பகலில் வெளியே ஓடிவிடும். சாப்பாட்டு வேளைக்கு திரும்ப வந்து சாப்பிட்டு விட்டு பிறகு மீண்டும் ஓடிவிடும். இப்படி இரண்டு நாய்களையும் ஒப்பிட்டு பார்த்தபின் எனக்கு "என்னடா நாய் வளர்த்தோம்?" என்று ஆகிவிட்டது. "இங்கே நாயை பிள்ளை மாதிரி வளர்க்கிறார்கள். நாம் நாயை நாய் மாதிரி வளர்த்தோமே" என தோன்றியது. டோரி செத்தது கூட எங்கள் அலட்சியத்தால் தான். ஒரு நாள் நாய் வண்டி வந்து அதை பிடித்துக்கொண்டு போய்விட்டது.50 ரூபாய் கொடுத்திருந்தால் விட்டிருப்பார்கள். எங்கள் பாட்டி நாய்க்கு 50 ரூபாயா என யோசித்து நாய் வண்டிக்காரனிடம் 10 ரூபாய் தருகிறேன் என பேரம் பேச அவன் கோபித்துக்கொண்டு போய்விட்டான். சாயந்திரம் வீட்டுக்கு வந்து விஷயம் தெரிந்து கன்னா பின்னாவென்று பாட்டியை திட்டத்தான் முடிந்தது. அதன்பின் இரண்டு மாதம் மிகவும் சோகமாக இருந்தேன். அதன் பின் நாயே வளர்க்கவில்லை. பில்லை பார்க்கும்போது இதெல்லாம் நினைவுக்கு வந்தது. நாய் வளர்த்தால் இப்படித்தானே வளர்க்க வேண்டும் என தோன்றியது. அதன் பின் திடிரென்று ஒரு முக்கிய சந்தேகம் தோன்றியது. டோரி மிகவும் ரொமான்டிக்கான நாய். அதற்கு எங்கள் தெருவிலிருந்த பெண் நாயுடன் மிக நெருங்கிய லவ்ஸ் உண்டு. அந்த நாயிடம் வேறு எந்த நாயையும் நெருங்க டோரி விடாது. பில் வீட்டுக்குளே இருக்கிறதே...இதற்கு என்ன செய்யும் என தோன்றியது. நண்பனிடம் கேட்டேன். அந்த பிரச்சனையே பில்லுக்கு இல்லை என்று சொல்லிவிட்டான். அது பிறந்து சில நாட்களில் ஆபரேஷன் செய்து விட்டார்களாம். அதற்கு இனக்கவர்ச்சியே எப்போதும் தோன்றாதாம். கேட்டதும் மனசு நொந்து விட்டது....பில்லை பார்த்ததும் அதன் பின் பொறாமை தோன்றவில்லை. டோரியை நாங்கள் வளர்த்தவிதம் ஆயிரம் மடங்கு தேவலை என்று தோன்றியது. நாயை நாய் மாதிரி வளர்த்தோம். சந்தோஷமாக இருந்து செத்துவிட்டது. இப்படி பில் மாதிரி பொம்மையாக வாழ்ந்து என்ன பயன் என்று தோன்றியது. இந்திய நாய்கள் கல்லடி வாங்கும்,சரியாக சோறு கிடைக்காது, நாய் வண்டி பிடித்து போகும்...ஆனால் இத்தனை கஷ்டங்கள் இருந்தும் தம் இனத்தோடு வாழ்ந்து முழுமையாக ஒரு நாயின் வாழ்வின் அனைத்து சுக-துக்கங்களையும் அனுபவித்து சாகின்றன. அமெரிக்க நாய்கள் மனிதனின் விளையாட்டு பொம்மைகளாக பிறந்து, வளர்ந்து இறக்கின்றன. அதிக துன்பமில்லாத,ரோபோ போன்ற ஒரு வாழ்க்கை. கொடுத்து வைத்த நாய் எந்த நாய் ? எனக்கு தெரியவில்லை...

15 comments:

துளசி கோபால் said...

இது சரியில்லை. நாயோ, பூனையோ அதோட 'வாழ்க்கையை முழுசா ஒரு தடவை வாழ்ந்த பிறகுதான் ஃபிக்ஸ்
செய்யணும்'னு இங்கே எங்க ஊர் வெட்டினரி டாக்டர்ஸ் சொல்றாங்க. நம்ம பூனைகளும் வாழ்வின் 'சுவை'யை அறிந்தபிறகே
ஃபிக்ஸ் செய்யப்பட்டன.

Unknown said...

துளசி அக்கா,

இது இன்னும் கொடுமை இல்லையா?அது என்னன்னு தெரியாதப்பவே ஆபரேஷன் பண்ணிட்டா பிரச்சனை இல்லை.ஆனா இப்படி ஆசை காட்டிட்டு அதுக்கப்புறம் ஆபரேஷன் பண்றது தப்பு தானே?

Unknown said...

Selvan,
Really good observation. I loved to read about Dori (very funny name..did it just have one eye?) /

No..it was a very healthy dog.It had dark & lovely eyes which were full of love and mischief

Sam said...

அன்பு செல்வன்

அமெரிக்காவில் நாய் வளர்ப்பைப் பற்றி இன்னும் சொல்ல விருப்பம்.

1. நாய்களால் கல்லீரல் புற்று நோயை மோப்பம் பிடித்துச் சொல்ல முடியும் என்று சொல்கிறார்கள்.
http://www.cbsnews.com/
stories/2005/01/06/60minutes
/main665263.shtml

2. நாய்களால் ஒருவருக்கு வலிப்பு நோய் இருந்தால் அது வருவதற்கு முன்னே தெரிவிக்க முடியும் என்று சொல்கிறார்கள்.
http://www.epilepsyfoundation
.org/
epilepsyusa/
aboutseizuredogs.cfm
I have seen these dogs in action in
a t.v. documentary

3. பார்வையற்றேர்க்கு உதவ என்று பழக்கப்பட்ட நாய்கள் பாரட்டுக்குரியவை.

4. சக்கர நாற்காலியில் நகரும் மனிதர்களுக்கு உதவ என்று பழக்கப்பட்ட நாய்கள் பாரட்டுக்குரியவை.

நீங்கள் சொன்ன விசயங்கள் நாய்களுக்காக வருத்தப் பட வைப்பவை. வேறு வழி கிடையாதே?
ஒரு தடவை நாய் வளர்த்தது போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்

அன்புடன்
சாம்

rnatesan said...

நம்ம முத்தமிழ் செல்வனா!! சொல்லவே இல்லையே!! கட்டுரை ச்சூப்பரோ சூப்பர்!!

Unknown said...

நீங்கள் சொன்ன விசயங்கள் நாய்களுக்காக வருத்தப் பட வைப்பவை. வேறு வழி கிடையாதே?//

Dear Sam,

I agree that doing this to dogs is beneficial to men.But I was saying that we have made animals as our slaves.Another example of man ruthlessly exploitating earth's resources for his selfishness.

Unknown said...

rnateshan. has left a new comment on your post "72.இந்திய நாய்களும் அமெரிக்க நாய்களும்":

நம்ம முத்தமிழ் செல்வனா!! சொல்லவே இல்லையே!! கட்டுரை ச்சூப்பரோ சூப்பர்!!

(Because of blogger problems am copying and pasting this.soon will publish with natesan sir's id)

Sam said...

Dear Selvan
The campaign should be for adoption
and not for breeding. We cannot reverse anything now. Man can claim
dog as their best friend but dogs
cannot claim man as their best
friend. I agree.
Sam

Unknown said...

நன்றி நடேசன் ஐயா,

நான் உங்கள் அன்பு செல்வனே தான்.தங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி

அன்புடன்
செல்வன்

Unknown said...

//Man can claim
dog as their best friend but dogs
cannot claim man as their best
friend//

100ல் ஒரு வார்த்தை சாம்.
டால்பினை மனிதனின் நண்பன் என்று சொல்லிக்கொண்டு அதை கொல்கிறோம்.நன்றி கெட்டவன் மனிதன் தான்.மிருகங்கள் அல்ல..

Muthu said...

நாய் கூட பழகி அதோட பாசத்தை உணர்ந்தா மனுசன் கூட பழகவே முடியாது என்பது உண்மை..

G.Ragavan said...

இதென்ன கொடுமை....ஒரு உயிர் தன்னுடைய விருப்பங்களைக் கூட அறிந்த கொள்ளாத வகைக்கு ஒரு கொடுமையா...சீச்சீ...மனிதர்களா நீங்கள்....

Unknown said...

ராகவன்,
இங்க நாய் பூனை எல்லாம் மனிதனுக்கான பொம்மைகள்.அவ்வளவுதான்.
பெட்கோவில் மிருகங்களை அடைத்து வைத்திருப்பதை பார்த்தால் அங்கு வளர்ப்பு மிருகங்களை வாங்கவே தோன்றாது.பெடா அமைப்பினர் பெட்கோவுக்கு எதிராக பெரிய ஆர்ப்பாட்டமே செய்தனர்.
அன்பை இங்கு விற்கிறார்கள்.அவ்வளவுதான் விஷயம்

Unknown said...

நாய் கூட பழகி அதோட பாசத்தை உணர்ந்தா மனுசன் கூட பழகவே முடியாது என்பது உண்மை.. //

அன்பின் முத்து
உண்மைதான் நீங்கள் சொன்னது.நாங்கள் அதன் பிறகு நாயே வளர்க்கவில்லை.அத்தனை பாசத்தையும் அந்த 1 நாய் மீதே கொட்டிவிட்டோம்.இன்னும் அதை மறக்க முடியவில்லை.

நரியா said...

வணக்கம் செல்வன்,
எனது சிறு வயதில், என் அப்பாவின் நண்பர் எங்கள் வீட்டிற்கு அவருடைய நாய் டோனியுடன் வந்திருந்தார். டோனி எங்களிடம் மிகவும் அன்பாக இருந்தது. எங்களை விடவே இல்லை. என் அப்பாவின் நண்பர் கிளம்பும் போது எத்தனை முறை கூப்பிட்டும், டோனி போகவில்லை. எங்களிடமே தங்கிவிட்டது. டோனிக்கு உணவு கொடுத்தோம், இருக்க இடம் கொடுத்தோம். ஆனால் நாய் வளர்ப்பு பற்றி சரியாக தெரியவில்லை. டோனியுடன் விளையடவில்லை, கொஞ்சவில்லை.

இரண்டு முறை எங்கள் வீட்டிற்கு வந்தவர்களை கடித்துவிட்டது. டோனியின் செய்கை பிடிக்காமல் என் அப்பா டோனியை ஒரு நாள் ஸ்கூட்டரில் அமர்த்தி சென்று, பக்கத்தில் உள்ள கிராமத்தில் விட்டு விட்டார்.

எங்களை நம்பி வந்த நாயை நாங்கள் கைவிட்டுவிடோம் என்ற குற்ற உணர்ச்சி இன்னும் என்னிடம் இருக்கிறது :(

நன்றி,
நரியா