Friday, April 07, 2006

74.பலனை ஏற்ற கண்ணன

மகாபாரதத்தில் பாத்திர வடிவமைப்பு மிகவும் அற்புதமான முறையில் கையாளப்பட்டுள்ளது.ஒரே பக்கத்தில் சொல்லப்படும் சில கதாபாத்திரங்கள் பூதாகரமாகி நம் மனதை கொள்ளை கொள்வது வியாசபாரதத்தில் நடக்கும்.கதையின் இறுதிக்கட்டத்தில் ஒரிரு பக்கங்களே வரும் சில பாத்திரங்கள் (பூரிச்ரவஸ், பகதத்தன்) போன்றோர் என் மனதில் எற்படுத்திய பிரமிப்பு அளவிடற்கரியது.இந்த கதாபாத்திரங்கள் வரும் ஒரிரு பக்கங்களிலும் இவர்கள் கதையின் நாயகனான அர்ஜுனன்,கண்னன் ஆகியோரை விஞ்சி நம் கைதட்டலை பெற்றுச்செல்கின்றனர்.ரஜினி படத்தில் கவுரவ வேடத்தில் வரும் பாத்திரம் அந்த ஒரிரு சீன்களில் ரஜினியை மிஞ்சி கைதட்டல் பெறுவது போல் இந்த கதாபாத்திரங்கள் பாரதத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. பூரிச்ரவசும் சாத்யகியும் ஜென்மவிரோதிகள்.இருவரும் அண்டை தேசத்து அரசர்கள்.சாத்யகி கண்ணனின் நண்பன்.பூரிச்ரவஸ் எதிருக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் கவுரவர் படையில் சேர்கிறான்.கத்தி சண்டையில் பூரிச்ரவஸை மிஞ்ச புவியில் யாரும் கிடையாது என புகழ் பெற்றவன்.கதாயுதத்தில் பீமனும்,வில்லுக்கு அர்ஜுனன் என்பது போல் கத்தி சண்டைக்கு பூரிச்ரவஸ் என்று பெயர். 12ம் நாள் யுத்தத்தில் அபிமன்யு கொல்லப்படுகிறான்.13ம் நாள் சூரியன் மறைவதற்குள் அபிமன்யு மரணத்துக்கு காரணமான ஜெயத்ரதனை கொல்வேன் இல்லையெனில் தீக்குளித்து உயிர் துறப்பேன் என அர்ஜுனன் சத்யம் செய்கிறான். மிகப்பெரும் காவல் வியூகம் ஜெயத்ரதனுக்கு உருவாக்கப்படுகிறது.துரோணர் படை முன் நிற்கிறார்.அவரை வென்று தான் கவுரவர் வியூகத்திற்குள் நுழையவே முடியும் என்ற நிலை.உள்ளே நுழைந்தால் அடுத்து கர்ணன்.இவர்கள் இருவரையும் வெல்லும் திறன் படைத்தவர்கள் பாண்டவர் தரப்பில் அர்ஜுனனும் பீமனுமே. இவர்கள் இருவரையும் தோற்கடித்து அர்ஜுனன் உள் நுழைகிறான்.உள்ளே கவுரவர் படையின் முழு ஆற்றலும் அவனை நோக்கி திருப்பி விடப்படுகிறது.முழு படையையும் அர்ஜுனன் ஒருவனே சமாளிக்கிறான். கவலை அடைந்த தருமர் பீமனை உதவிக்கு அனுப்புகிறார்.கர்ணனையும் துரோணரையும் தோற்கடித்து விட்டு பீமனும் உள்ளே நுழைகிறான்.உள்ளே போன பீமன் துரியோதனன் தம்பிகளை பார்த்ததும் போன காரியத்தை மறந்துவிட்டு அவர்களை வேட்டையாட துவங்குகிறான். இப்போது இந்த வியூகத்திற்குள் நுழையும் சக்தி பாண்டவர் தரப்பில் யாருக்கும் இல்லை.ஆனால் துணிந்து சாத்யகி அர்ஜுனனுக்கு உதவியாக வியூகத்திற்குள் நுழைகிறான்.பிரமிக்கத்தக்க பெரும்போர் புரிந்து தூரோனாச்சாரியாரையும் கர்னனையும் வென்று உள்ளே நுழைகிறான். உள்ளே கவுரவர் படைகளை தனி ஒருவனாக எதிர்க்கும் அர்ஜுனனுக்கு ஆதரவாக சாத்யகி கடும்போர் புரிகிறான்.அர்ஜுனன் ஜெயத்ரதனை தேடி செல்கிறான்.சாத்யகியை பூரிச்ரவஸ் எதிர்க்கொள்கிறான். மாவீரர்களை எதிர்த்து களைப்படைந்த சாத்யகி பூரிச்ரவசுடன் கடும்போர் புரிகிறான்.முதலில் விற்போர் நடக்கிறது. பூரிச்ரவஸ் கடும் அடி வாங்குகிறான்.ஆனால் எதிர்பாராவிதமாக சாத்யகியின் சாரதி கொல்லப்பட சாத்யகி திணருகிறான்.சாரதியை இழந்த சாத்யகியின் தேர் பூரிச்ரவசால் அழிக்கப்படுகிறது. கீழே நிற்கும் ஒருவனுடன் ரதத்தில் இருந்து போர் புரிதல் தகாது என்பதால் பூரிச்ரவஸ் கத்தியை எடுத்து கீழிறங்குகிறான்.சாத்யகியும் கத்தியை எடுக்கிறான்.கத்தி சண்டையில் நிகரற்ற பூரிச்ரவஸுக்கு சாத்யகி பொருட்டே அல்ல.சாத்யகியை அடித்து வீழ்த்தி அவன் நெஞ்சில் காலை வைத்து அவன் தலையை துண்டிக்க கத்தியை ஓங்குகிறான். சாத்யகியின் நண்பனான பரந்தாமன் இதை பார்த்துக்கொண்டே இருக்கிறான்."சாத்யகி தோற்றுவிடுவான் அர்ஜுனா.நீ பூரிச்ரவசை கொல்,கொல்" என சொல்லிக்கொண்டே இருக்கிறான்."தன்னுடன் சண்டை பிடிக்காத இன்னொருவனுடன் சண்டை பிடிப்பது யுத்த தருமமமல்ல" என அர்ஜுனன் தயங்குகிறான். சாத்யகியின் தலை துண்டிக்கப்டப்போகும் வினாடியில் பரந்தாமன் பொறுமை இழக்கிறான்.கண்னெதிரே தன் பக்தன் தலை துண்டிக்கப்பட பரந்தாமன் விடுவானா?ஆயுதம் ஏந்துவதில்லை என தான் செய்த சத்தியத்தையும் மீறுகிறான்.விஷ்ணு சக்கரத்தை ஏந்தி நரசிம்ம அவதாரமாக பார்த்தசாரதி தரையில் குதிக்கிறான். கண்னன் ஆயுதம் ஏந்தியதும் அர்ஜுனனின் தயக்கம் விடை பெறுகிறது.அம்பை எடுக்கிறான்.யுத்த தருமம்,வேதம்,சாத்திரம் அத்தனையயும் மீறி பூரிச்ரவஸின் பின்புறமிருந்து அவன் மீது அம்பை ஏவுகிறான். "நன்மை தீமை அனைத்தும் என்னை சார்ந்தது.உன் கடமையை செய்.அதன் பலன் எனக்கே" என்ற கீதையின் மந்திரம் அர்ஜுனனை செலுத்துகிறது.அந்த அடாத செயலை அர்ஜுனன் செய்கிறான். அர்ஜுன பாணம் பூரிச்ரவஸின் கையை துணிக்கிறது.கத்தியோடு பூரிச்ரவசின் வலது கரம் பின்புறமிருந்து துண்டிக்கப்படுகிறது.போர்க்களமெங்கும் "ஆகா" எனும் அதிர்ச்சிக்குரல் எழுகிறது.குலகுரு துரோணர்,கர்ணன்,பீமன் ஆகிய மாபெரும் வீரர்கள் அர்ஜுனனின் இந்த செயலை கண்டு அதிர்கின்றனர். எவன் இத்தகைய கடைந்தெடுத்த கோழைத்தனமான காரியத்தை செய்தான் என்று அதிர்ச்சியுடன் பூரிச்ரவஸ் திரும்பிப்பார்க்கிறான்.பார்த்தன் தான் அதை செய்தது என்பதை அறிந்ததும் அதிர்கிறான். பூரிச்ரவஸ் சுத்த வீரன்.பெரும் பக்திமான்.அர்ஜுனன் இதை செய்தான் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை."அர்ஜுனா..ஏன் இப்படி செய்தாய்" என்று கேட்கிறான்.பார்த்தன் எந்த பதிலும் சொல்லவில்லை.தலைகுனிந்து நிற்கிறான்.பூரிச்ரவஸ் சக்ராயுதத்தோடு தன் எதிரெ நிற்கும் கண்ணனை கண்டதும் உண்மையை உணர்கிறான். சோதிவடிவான பரம்பொருளை பூரிச்ரவஸ் தரிசிக்கிறான்.தன் முடிவு நெருங்கிவிட்டது என்பதையும் தான் ஐக்கியமாகப்போகும் பரம்பொருள் தன் எதிரே நிற்கிறது என்பதையும் அறிகிறான்.மண்டியிட்டு அந்த அச்சோதியின் முன் தலைகுனிந்து வணங்குகிறான்.அவன் தலை பூமியை தொடுகிறது. ஆவேசத்தோடு சாத்யகி எழுகிறான்.கத்தியை எடுக்கிறான்."வேண்டாம்,வேண்டாம்" என கண்னனும் அர்ஜுனனும் கூவ கூவ கேட்காமல் ஒரே சீவு.பூரிச்ரவசின் தலை துண்டாகிறது.மீண்டும் போர்க்களமெங்கும் 'ஆகா'காரம் எழுகிறது. கண்னனும் அர்ஜுனனும் பீமனும் பாண்டவரும் தலைகுனிந்து நிற்க பூரிச்ரவசின் ஆத்மா சோதிவடிவில் மேலெழும்பி வீர சொர்க்கத்தை அடைந்தது என வியாசர் எழுதுகிறார். பூரிச்ரவஸ் கதையில் நமக்கு தெரிய வேண்டிய நீதி என்ன? கண்ணன் துடித்த துடிப்புதான்.சாத்யகியின் உயிர் போகப்போகும் அத்தருணத்தில் விஷ்ணு சக்கரத்தோடு நாராயணனாய் தரையில் குதித்தானே..அது தான் நமக்கு பாடமாக இருக்கும் தருணம். போர் துவங்குமுன் ஆயுதம் ஏந்தமாட்டேன் என்று துரியாதனனுக்கு சத்தியம் செய்து கொடுத்தான்.அதை ஏன் இத்தருணத்தில் மீறத் துணிந்தான்? பக்தனின் அபயக்குரல் தான் காரணம். இதற்கு முன்னும் இதே போன்ற நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.கஜேந்திரனை முதலை பிடித்தபோது தன்னால் முடியாத சூழ்நிலை வந்ததும் "ஆதிமூலமே" என்று பெயர் சொல்லி கஜராஜன் கதறினான்.அந்த கதறல் வந்தபோது நாராயணன் பாம்புப்படுக்கையில் தன் மனைவியரான பூதேவியும் லட்சுமிதேவியும் காலை அமுக்க வீற்றிருந்தானாம். பக்தனின் கதறல் கேட்டதும் துள்ளி எழுந்தானாம்.தேவியரிடமிருந்து காலை உதறி எடுத்து கஜராஜனுக்கு உதவியாக ஓடிவந்தானாம்.வழக்கமாக ஏறும் கருடன் மீது கூட ஏறவில்லை.மகுடம் மாலை ஆபரணம் ஏதும் தரித்து ஓடி வரவில்லை.குரல் கேட்டபோது இருந்த நிலையிலேயே ஓடிவந்தானாம். "கஜராஜனுக்கு நீ உதவிக்கு வந்ததற்கு ஒரு நமஸ்காரம் உதவி செய்ய நீ ஓடி வந்த வேகத்துக்கு ஒரு நமஸ்காரம்" என்ற பொருளில் ஒரு தெலுங்கு கீர்த்தனையே இருக்கிறது. சாத்யகி கதையில் நடந்ததும் இதுதான். பக்தன் கொல்லப்படப்போகிறான்.அதை தடுக்க வேண்டுமா அல்லது தான் செய்த சத்தியத்தை காக்க வேண்டுமா? முடிவெடுக்க அவனுக்கு நொடிப்பொழுது தான் தேவைப்பட்டது. அவதார காரியம்,ஷத்திரிய தர்மம் இது அத்தனையும் மீறி பாகவத தருமம் தான் அவனுக்கு முக்கியமாக போனது. அவதார காரியத்தை அவன் முன்பொருமுறை மீறி இருக்கிறான். ஜடாயு உயிர் நீத்தபோது அவன் ராமனாக இருந்தான்.ஜடாயு உயிர் நீத்தபோது அந்த இடத்திலேயே அந்த வினாடியிலேயே ராமாவதாரத்தை துறந்து,சீதையை மறந்து விஷ்ணுவாக மாறி ஜடாயுவுக்கு முக்தி அளித்தான்.ஜடாயுவின் ஆத்மாவை காக்க வைப்பதில் அவனுக்கு விருப்பமே இல்லை.முக்தி அளித்த பிறகு மீண்டும் ராமனாக மாறி அழுதுகொண்டு சீதையை தேடிச்செல்கிறான். வீடனன் சரணடைய வரும்போது சுக்ரீவன் தடுக்கிறான்.அப்போது சுக்க்ரீவனின் வாதங்களை கேட்டு முடித்த பிறகு ராமன் ஒரு சத்தியத்தை செய்கிறான். "ராமா நான் உன் அபயம்" என்று ஒருமுறை யாராவது பக்தியோடு சொன்னாலும் அவர்களை காக்க வேண்டிய கடமை என்னை வந்தடைகிறது.இந்த கடமையிலிருந்து என்னால் என்னாளும் மீள முடியாது.இது என் விரதம்,என் வாக்குறுதி" என்கிறான். இப்படி சொன்னவன் தன் கண்முன் தன் பக்தன் சாக விடுவானா?அவதார நோக்கமாவது,ஷத்திரிய தர்மமாவது?அவை எல்லாம் இரண்டாம் பட்சமல்லவா? தன் புகழை விட தன் அடியாரது உயிர் தான் அவனுக்கு முக்கியம்.ஆனால் பகவானின் புகழ் குறைய அர்ஜுனன் விடவில்லை.பூரிச்ரவசை தான் தாக்கி அந்த பழியை அவன் ஏற்றுக்கொண்டான்.அதற்கான வெகுமதியும் அர்ஜுனனுக்கு கிடைத்தது.காந்தாரி சாபம் தந்தபோது பாண்டவர்களுக்கு தரவில்லை."இது எல்லாவற்ரையும் செய்தது நீ.வம்சவிருத்தி இன்றி உன் இனம் அழியும்" என்று கண்னனுக்கு தான் சாபம் தருகிறாள். கடமையை செய்தது அர்ஜுனன்.அதற்கான பலனை சொன்னபடி பகவான் ஏற்றுக்கொண்டான்.இறைவன் சொன்னதை செய்த அர்ஜுனனும் பாண்டவர்களும் குறை இன்றி வாழ்ந்தனர்....
Post a Comment