Tuesday, April 04, 2006

துடித்து எழு வேங்கை இளைஞனே

இந்தியாவை பற்றி எனக்கு 3 கனவுகள் உள்ளன.நமது 3000 வருட வரலாற்றில் உலகின் அனைத்து பகுதியிலிருந்தும் படையெடுப்பாளர்கள் வந்து நம்மை நம்மை,நமது நிலத்தை,நம் மனதை,அடிமைபடுத்தியிருக்கின்றனர்.அலெக்சாந்தரில் துவங்கி,கிரேக்கர்கள்,பிரிடிஷார்,பிரெஞ்சுகாரர்கள்,டச்சு என பல நாட்டவர் இதை செய்துள்ளனர்.ஆனாலும் நமக்கு அவர்கள் செய்ததை நாம் வேறு எந்த நாட்டுக்கும் செய்ததில்லை.நாம் வேறு எந்த நாட்டையும் பிடித்து நம் வாழ்க்கை முறையை,நம் கலாச்சாரத்தை அவர்கள் மீது திணித்ததில்லை.ஏன்?நாம் அடுத்தவர்களின் சுதந்திரத்தை மதிப்பவர்கள்.அதனால் தான் சொல்கிறேன்..என் முதல் கனவு சுதந்திரம்.சுதந்திரம் தான் நம்மை காப்பாற்றும்.சுதந்திரம் தான் நம்மை முன்னேற்றும்.நாம் சுதந்திரமாக இல்லை என்றால் நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள். என்னுடைய அடுத்த கனவு வளர்ச்சி.கடந்த 50 வருடமாக நாம் வளரும் நாடாகவே இருக்கிறோம்.வளர்ந்த நாடாக நாம் ஆக வேண்டியது முக்கியம்.ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தில் நாம் உலகின் ஐந்தாவது நாடாக இருக்கிறோம்.கிட்டத்தட்ட 10 சதவிகித அளவில் நாம் வளர்கிறோம்.வறுமை ஒழிந்து கொண்டே வருகிறது.நம்மை உலக நாடுகளில் வியப்புடன் உற்று நோக்குகிறார்கள்.ஆனாலும் நாம் நம்மை வளர்ச்சி அடைந்த நாடாக பார்க்கத் தயங்குகிறோம்.வல்லரசாக, சுயசார்பு பெற்ற, சுய தைரியம் பெற்ற நாடாக நாம் நம்மை பார்க்கத் தயங்குகிறோம்.இது தவறில்லையா? எனது மூன்றாவது கனவு இந்தியா உலக அரசியலில் தனக்கான பங்கை பெற வேண்டும் என்பது.அப்படி நாம் செய்யாவிட்டால் நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள்.வலிமை இன்னொரு வலிமையை தான் மதிக்கும்.நாம் ராணுவ வல்லரசாக மட்டுமின்றி பொருளாதார வல்லரசாகவும் இருக்க வேண்டியது அவசியம்.இரண்டும் ஒரே சமயத்தில் நிகழவேண்டியது அவசியம். ஏன் இங்கே நமது பத்திரிக்கை துறை இத்தனை நெகட்டிவாக இருக்கிறது?ஏன் நாம் நமது பெருமைகளை,வளர்ச்சியை,சாதனைகளை சொல்ல தயங்குகிறோம்?இந்தியா ஒரு மாபெரும் தேசம்.நாம் மிகப்பெரும் சரித்திர சாதனைகளை செய்தவர்கள்.ஏன் நாம் அதை ஒத்துக்கொள்வதில்லை?பால் உற்பத்தியில் உலகில் முதலிடம் நமக்குத்தான்.உலகின் இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தியாளர்கள் நாம் தான்.இதுபோல் இன்னும் எண்ணற்ற சாதனைகள் நம்மிடம் உண்டு.ஏன் நமது மீடியா தோல்விகளையும்,அழிவுகளையுமே எழுதுகிறது? நான் டெல் அவிவுக்கு சென்றிருந்தேன்.அங்கு நான் சென்ற போது ஒரு பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்திருந்தது.ஆனால் அன்றைய பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தி என்ன தெரியுமா?தன்னுடைய பாலைவன விளைநிலத்தை சோலைவனமாக்கிய ஒரு யூதரின் கதை தான் அங்கு பிரசுரமாகியிருந்தது.காலையில் எழுந்ததும் மக்கள் இந்த உற்சாகம் தரும் தன்னம்பிக்கை தரும் செய்தியை தான் படித்தனர்.கொலைகள்,தீவிரவாதங்கள்,கொள்லைகள்,குண்டுவெடிப்புகள்,கலவரங்கள் போன்ற கேவலமான செய்திகள் செய்தித்தாளின் உள்ளே மறைந்திருக்கின்றன.முதல் பக்கத்தில் அவை வருவதில்லை. நாம் ஏன் எப்படி வெளிநாட்டு மோகம் பிடித்து அலைகிறோம்?வெளிநாஅட்டு டீவி,வெளிநாட்டு கார் என அனைத்தும் நமக்கு வெளிநாட்டு பொருட்கள் தான் வேண்டும்.சுயமரியாதை என்பது சுயசார்பில்லாமல் வராது என்பது நமக்கு தெரியாதா? நான் ஐதராபாத்தில் பேசியபோது ஒரு சிறு குழந்தை என்னிடம் ஆட்டொகிராப் கேட்டாள்.அவளிடம் நீ என்னவாக விரும்புகிறாய் என கேட்டேன்.நான் வலர்ச்சி அடைந்த இந்தியாவில் வசிக்க விரும்புகிறேன் என அவள் சொன்னாள்.அந்த சிறு பெண்ணுக்காக நாம் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டாமா?அவளுக்காக நாம் ஒரு புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும்.நெஞ்சு நிமிர்த்தி சொல்லுங்கள் "இந்தியா வளர்ச்சி அடைந்த நாடு" என்று."உரக்க சொல்லுங்கள் "இந்தியா வளரும் நாடல்ல" என்று உங்களிடம் 10 நிமிடம் உள்ளதா?இந்தியா வளர எனக்காக இன்னும் பத்து நிமிடத்தை ஒதுக்கி என் பேச்சை கேட்பீர்களா?அப்படி என்றால் மேலே கேளுங்கள். நீங்கள் சொல்கிறீர்கள் அரசு மோசம்,சட்டம் சரியில்லை,சாலை சரியில்லை என்று.போன் வேலை செய்வதில்லை என்கிறீர்கள்.முனிசிபாலிடி குப்பை அள்ளுவதில்லை என்கிறீர்கள்.நமது ரயில்கள் ஒரு ஜோக் என்கிறீர்கள்.நமது நாடு குப்பைக்கு போய்விட்டது என்கிறீர்கள்.இதை சொல்லும் நீங்கள் இந்திய எல்லை தாண்டி சிங்கப்பூரில் கால் வைத்தால் எப்படி நடந்து கொள்கிறீர்கள்? எல்லை தாண்டிய அடுத்த வினாடி நீங்கள் சர்வதேச குடிமகனாகிவிடுகிறீர்கள்.சிங்கப்பூரில் நீங்கள் சிகரட் துண்டுகளை சாலையில் போட மாட்டீர்கள்.ஆர்ச்சர்ட் சாலையில் 60 டாலர் தந்து பெருமையாக போவீர்கள்.சாலைகள் சுத்தமாக இருக்கிறது என்பீர்கள். சிங்கப்பூரில் நீங்கள் வாய் திறக்க மாட்டீர்கள்.லண்டனில் அரசு ஊழியனுக்கு 50 பவுண்டு லஞ்சம் தர முன்வரமாட்டீர்கள்."என் எஸ்.டிடி பில்லை குறை" என பேரம் பேச துணிய மாட்டீர்கள்.வாஷிங்க்டனில் மணிக்கு 80 மைல் வேகத்தில் கார் ஓட்டி விட்டு பிடிக்க வரும் கான்ஸ்டபிளிடம் நான் மந்திரிக்கு வேண்டியவன் என சொல்ல துணிய மாட்டீர்கள். டோக்கியோவில் தெருவில் வெற்றிலை எச்சிலை துப்ப வேண்டியதுதானே?பாஸ்டனில் டூப்ளிகேட் சர்டிபிகேட் தந்து வேலை தேட வேண்டியது தானே?இந்தியாவில் இதை எல்லாம் செய்யும் நீங்கள் ஏன் இதை எல்லாம் வெளிநாட்டில் செய்வதில்லை? வெளிநாட்டில் இப்படி வசிக்கும் நீங்கள் இந்தியா வந்ததும் ரோட்டில் சிகரெட்டை வீசுகிறீர்கள்.வெளிநாட்டில் நல்ல குடிமகனாக வாழும் நீங்கள் இந்தியா வந்ததும் பழைய மாதிரி ஆகிவிடுகிறீர்கள். தெருவில் குப்பையை நீங்கள் போட்டுவிட்டு அதை ஏன் சுத்தம் செய்யவில்லை என அரசை கேள்வி கேட்கிறீர்கள்.அமெரிக்காவில் தெருவில் குப்பை போடும் ஒவ்வொரு குடிமகனும் அதை சுத்தம் செய்கிறான்.இந்தியாவில் ஏன் அதை நாம் செய்வதில்லை? நாடு சரியில்லை என்றால் யார் இதை மாற்றுவது?அதை யாரோ செய்யட்டும்.பக்கத்து வீட்டுக்காரன்,அரசியல்வாதி யாரோ செய்யட்டும்.எனக்கென்ன?சேவை என வரும்போது நமதுவீடு குடும்பம் என கூட்டுக்குள் புகுந்து விடுகிறோம்.தேவன் வந்து மந்திரம் போட்டு நமது பிரச்சனைகளை தீர்ப்பான் என கனவுகண்டுகொண்டிருக்கிறோம். இந்தியா சரீல்லை என்று சொல்லிவிட்டு கோழைகளை போல் அமெரிக்காவுக்கு ஓடிப்போய் அதன் புகழ் பாடுகிறோம்.அமெரிக்காவில் பிரச்சனை என்றால் இங்கிலாந்துக்கு ஓடுகிறோம்.இங்கிலாந்தில் வேலைஇல்லா திண்டாட்டம் என்றால் வளைகுடாவுக்கு ஓடுகிறோம்.அங்கே பிரச்சனை என்றால் நமது அரசு நம்மை காப்பாற்ற வேண்டும் என கூச்சல் போடுகிறோம்.அனைவரும் நாட்டை தவறாக பயன்படுத்துவதிலும் பலாத்காரம் செய்வதிலும் முண்ணணியில் நிற்கிறோம். ஜான் கென்னடியின் வார்த்தைகளை சொல்லி என் உரையை முடிக்கிறேன். "நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே.நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என உன்னை நீயே கேட்டுக்கொள்" அமெரிக்காவும் ஐரொப்பாவும் இன்று எப்படி இருக்கின்றனவோ அதுபோல் இந்தியாவையும் நாம் ஆக்க வேண்டும்.இந்தியா நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறதோ அதை நாம் செய்ய வேண்டும். வணக்கம் அப்துல் கலாம் (குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் உரையின் தமிழாக்கம்)
Post a Comment