Sunday, March 19, 2006

சாமின் முதல் வளையம்

என் அன்பு நண்பர் சாம் அனுப்பிய 4 பதிவு.சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அவரின் வலைபதிவில் பதிப்பிக்க முடியவில்லை என அனுப்பியிருந்தார்.இவ்வளவு அழகான எழுத்தை பின்னூட்டமாக இட மனம் இடம் தரவில்லை. அவர் பதிவுக்கு சென்று பார்த்ததில் அவர் தமிழ்மணத்துக்கு பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யவில்லை என தெரிந்தது.அவர் தமிழ்மணத்துக்கு ஒரு இமெயில் அனுப்பினாரென்றால் அது உடனடியாக நடந்து விடும்.மேலும் அவர் இந்த பதிவை தமிழ்மணத்துக்கு இணைக்கவில்லை என்பதும் தெரிந்தது.அதை நானே செய்து விட்டேன். இப்போது தமிழ்மணத்தில் இந்த பதிவு பதிவாகிவிட்டது.சாமின் பின்னூட்டம் மட்டும் திரட்டப்படாது என நினைக்கிறேன்.அதனால் சாமின் அந்த பதிவை இங்கு இடுகிறேன். இதோ சாமின் முதல் வளையம் தாத்தா ஒரு கதை சொல்லேன். நான் உடனே ‘அந்த காலத்தில தமிழ்மணத்திலேன்னு’ ஆரம்பிப்பேன். உடனே அவங்க தமிழ்மணம்னா என்னான்னு கேப்பாங்க. தாத்தா சின்ன வயசிலநண்பன் வீட்டில ஒரு புத்தகத்த பார்த்தேன். அதுல எல்லாமே கையில எழுதியிருந்துச்சு. அந்த நண்பன் சொன்னாரு, அது முதல காலி புத்தகமா இருந்துச்சாம், ஒருத்தர், தனக்குபிடிச்சதை, அதுல எழுதிட்டு இன்னொரு நண்பர் கிட்ட கொடுத்தாராம். அவரும் அத மாறியே செஞ்சாராம். அப்படியே அந்த புத்தகம் முழுதும் தமிழால நிறைஞ்சு போச்சாம். அதுக்குப் பேரு கையெழுத்துப் புத்தகம்னு சொன்னாரு. கணினி வந்த பிறகு, இதே மாதிரியே தமிழ்மணம்ங்கிற இணயதளத்தில, உலகத்தில எல்லா மூலையிலுருந்தும், தமிழ்ல எழுதணும்னு, நிறையப் பேர்வந்து ஆர்வமா கலந்துக்குவாங்க. அதுல வந்து சேருங்கன்னு செல்வன்ன்னு ஒருத்தர் வந்து கூப்பிட்டாரு. சங்கிலிப் பதிவுன்னு ஒன்னுல சேர்த்து விட்டேன்னு சொன்னாரு. நானும் ஆர்வமாப் போனேன்னு, தொடருவேன். அப்பெல்லாம், வாரம் ஒரு நட்சத்திரம்ன்னு, அறிமுகப்படுத்திட்டிருந்தாங்க.இப்பப் பார்த்தீங்கன்னா தமிழ்மணமே ஒரு நட்சத்திர மண்டலமா இருக்குன்னு தொடருவேன். ம் ம் ம்..... இதெல்லாம் எதிர்காலத்திலே. இதுக்கு இன்னும் இருபத்தைந்து வருடமாவது காத்திருக்கணும்.சரி நிகழ்காலத்துக்கு வாரேன். என்னோட சங்கிலியில நாலு வளையம் இருக்கு. இது முதல் வளையம்.ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வந்து மத்த வளையங்களயும் உங்க பார்வைக்கு வைக்கிறேன். நானும் தமிழ்மணத்தில எழுதுறேன்னு எனக்குப் பெருமையா இருக்கு. நான் பிறந்து முத மூணு வயசு வரைக்கும் சென்னயில இருந்தேனாம். அதுக்கப்புறம், நான் பதிமூணு வயசு வரைக்கும் இன்னொரு ஊர்ல இருந்தேன். இந்த ஊரைப் பத்தி நிறைய எழுத ஆசை. அப்பா ஊர்ன்னா அது அம்பாசமுத்திரம். மேல ரத வீதியில அவ்ங்க வீடு இருந்துச்சு. ஆனா தாத்தா பிழைப்புக்காக 1927ழிலேயே பட்டணம் போயிட்டாங்க. என்ன யாரவது உன்னோட சொந்த ஊர் எதுன்னா கொஞ்சம் குழம்பிப் போயிடுவேன்.என்ன நேர்ல பார்த்தீங்கன்னா என்னடா இவன் பேசவே மாட்டேங்கிறான்னு நினைப்பீங்க. நான் கொஞ்சம் அதிகம் பேசாத வகை ஆளு. எழுத்த என் மனசுல நிறைஞ்ச்சு நிக்கிற எண்ணங்களுக்கு ஒரு வடிகாலா நினைக்கிறேன். நான், என்னோட பேர், ஊர் சொல்லாத வரைக்கும், கொஞ்சம் வேகமா மனம் திறந்து எழுத முடியும்னு நினைக்கிறேன். பெரிய மனசு பண்ணி மன்னிச்சுக்கங்க. நான் சின்னப் பிள்ளையா இருந்தப்போ தொலைக் காட்சி, கணினி எல்லாம் கிடையாது. பொழுது போக்கிறதுன்னா, புத்தகம் படிக்கிறது, விளையாடறது, வானொலி கேக்கிறது, சினிமா பாக்கிறது. ஹோட்டலுக்குப் போறது, பார்ட்டிக்குப் போற பழக்கமெல்லாம் அப்ப கிடையாது. ஒரு மாசத்துக்கு ஒரு தடவையாவது சினிமாவுக்குப் போயிடுவோம். சின்ன வயசில எங்க போறோம்ன்னு கேட்டதுக்கு, கசி, கனி, கமான்னு என்ன சீண்டினதெல்லாம் நினைவுக்கு வருது. அப்பாவுக்கு, எம்ஜியார் படம்னா, அம்மாவுக்கு சிவாஜி படம். மத்த படங்களுக்கும் பொழுது போகும்னு நினைச்சாங்கன்னா கூட்டிக்கிட்டுப் போவாங்க. தெலுங்கு ட்ப்பிங் படங்கள், கர்ணன் படங்கள், ரிவால்வர் ரீட்டா மாதிரி படங்களுக்கெல்லாம் கண்டிப்பா கூட்டிட்டுப் போக மாட்டாங்க. எஸ்,எஸ்.எல்.சி படிப்பு முடியிற வரைக்கும், நண்பர்களோட சினிமாவுக்கு போனதில்ல. கேட்டாலும்விட்டிருக்கமாட்டாங்க. நான் பார்த்த நாலு படங்களைப் பத்தி கொஞ்சம் புதிர் போடட்டுமா? நாலுல மூணு எனக்கு பிடிச்ச படங்கள்.எத்தனை பேர் என் வயசுக்காரங்கன்னு தெரிங்சுக்கத்தான். என் வயசு இல்லாட்டியும் இந்த படங்கள் இரண்டாவது முறை வந்தப்போ நீங்க பார்த்திருக்கலாம். 1. அம்மனோ சாமியோ, அத்தையோ மாமியோ, கம்பனூர் நீலியோ, கல்யாண தேவியோ! பாட்டு முடியிறப்போ மலை ஏறப் போறியா, மலை ஏறப் போறேன்னு முடியும். நல்ல பொழுது போக்குப்படம். ஏழு எட்டு வயசில பார்த்தேன். படத்தோட உச்சக் கட்ட காட்சியில, நல்லவங்களையல்லாம் வில்லன்ஒரு ரூம்ல அடைச்சு, கலர் கலரா புகை விட்டு நல்லா கொல்லப் பார்ப்பான். இவங்களும் கொடுத்த காசுக்கு நல்லா இருமுவாங்க. ஞாபகம் வருதா? 2. ஒரு அப்பாவிப் பொண்ண எம்.என். ராஜமும் சி.கே. சரஸ்வதியும் படாத பாடு படுத்துவாங்க. அந்த பொண்ணை காப்பாத்த அந்த அப்பாவிப் பொண்ணா நடித்தவரே, ரெட்டை வேஷம் போட்டு அட்டகாசமா வருவாங்க. அந்த படத்துல சோவும் வருவாரு. நிச வாழ்க்கைல சி.கே. சரஸ்வதி மாதிரி கண்ணை உருட்டி முழிச்சவங்களயெல்லாம் என்க்குத் தெரியும். தமிழ்ல இரட்டை வேடம் போட நடிகையர்ல வாய்ப்புஇரண்டு பேருக்குத்தான் கிடைச்சுது. அதுல இவங்கதான் டாப்.ஞாபகம் வருதா? 3. பெரிய பெரிய நடிகரெல்லாம் நடிச்ச படம் இது. இது ராசா காலத்து படமுமில்ல, இந்த காலத்து படமுமில்ல. படத்தோட ஆரம்பத்தில, நம்ம ஹீரோ உலகத்தில நீதி இல்ல, ஞாயம் இல்லைன்னு பாடிட்டே வருவாரு.ஒரு சீன்ல, வில்லன் ஆட்கள் துரத்தும் போது, நம்ம ஹீரோயின் இருக்கிற இட்த்துக்கு வந்திடுவாரு. அவங்க ஒரு ஐடியாப் பண்ணுவாங்க அவரை காப்பாத்த. நம்ம வில்லன் ஆள் வந்து கதவைத் திறக்கிறப்ப அவங்க குளியலறைல, ஒரு தொட்டியில தண்ணி நிரப்பி, சோப்பு குமிழ்களுக்கு நடுவில இருப்பாங்க. குய்யோ முறையோன்னு, சத்தம் போட்டு, பொம்பளை குளிக்கிற இடத்துல உனக்கு என்ன வேலைன்னு விரட்டிடுவாங்க.அவனும் மரியாதை கொடுக்கணும்னு அந்த இடத்த விட்டுப் போயிடுவான். உச்சக் கட்ட காட்சியில, ஹீரோவும் வில்லனும் கத்திச் சண்டை போது, நம்ம ஹீரோயின் ஒரு கயத்த பிடிச்சுட்டு, பாதாளக்கிணறுல தொங்குவாங்க. கீழ பாம்பெல்லாம் நிறைய இருக்கும். ஹாலிவுட் படம் எதாவது நினைவு வருதா? சத்தியம்மா அந்த டைரக்டர் இந்த படத்த பார்த்திருக்கணும். நல்ல பொழுது போக்குப் படம். 4. இந்த படம் ரொம்பவே அறுவை. படம் அறுவைன்னா எங்க குடும்பம் மட்டுமில்லை, யாருமே தியேட்டரிலிருந்து எந்திருச்சு போக மாட்டாங்க. கொடுத்த காசுக்கு கடைசி வரைக்கும் இருந்துபார்ப்பாங்க. நான் கடைசி வரைக்கும் சீட்ல நெளிஞ்சுகிட்டே இருப்பேன். அஞ்சு பெண் பெத்தா அரசனும் ஆண்டியாவான். இதுதான் கதை சுருக்கம். கே. ஆர் . விஜயாவுக்காக இந்தப் படத்தப் பார்க்க அம்மா முடிவு பண்ணியிருக்கணும். ராசாத்தி பெற்றெடுப்பாள் ராசகுமாரன்ன்னு பாட்டெல்லாம்பாடியிருபாங்க. எல்லாமே பொண்ணாப் பிறந்திடும். இந்த மாதிரி படத்த பார்த்திட்டு வீட்டுக்கு வந்தா, அம்மாகிட்ட கண்டிப்பா ஒரு அரை நோவால்ஜீன் வாங்கிக்குவேன். இந்த படம் பேர் என்க்குநினைவுக்கு வர மாட்டேன்குது. இதல்லாம் நினைவிலெயிருந்து சொல்றேன். எல்லாமே தப்புன்னா வயசாயிடுச்சுன்னு வச்சுக்கோங்க.எல்லாமே ரைட்டுன்னா, கண்ட கண்ட உருப்பிடாத விஷயமெல்லாம் மறக்காத என் மூளையை சலவைக்குப் போடணும்நான் இந்த சங்கிலியைத் தொடர இவங்க நாலு பேர அழைக்கிறேன் 1.மழலை - மழலை நீங்க கண்டிப்பா வாங்க. முன்ன பின்ன தெரியாதவங்க கூப்பிட்டா பேசக்கூடாது, போகக்கூடாதுன்னு உங்க அப்பா அம்மா சொல்லியிருப்பாங்க. எங்க வீட்டிலேயும் அப்ப்டித்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறோம். மழலை உங்க அப்பா அம்மா கிட்டேயே நேரடியா அனுமதிகேட்கிறேன். கண்டிப்பா வாங்க. வந்து உங்களுக்குப் பிடிச்சதெல்லாம் நாலு நாலா சொல்லுங்க. 2. ஜெர்மன் முத்து - இவரை உங்க எல்லாருக்கும் தெரியும். உங்கள மாதிரியே நானும் இவரோட ரசிகன். இவரும் கண்டிப்பா வந்திடுவாரு. 3. கானா பிரபா - சினிமாவையும் வாழ்க்கையும் பத்தியும் அழகாக எழுதுறாரு. இவருக்கு மயில் அனுப்பி என் தொடர்ல சேர்ந்துக்கச் சொன்னேன். வருகிறேன்னு உடனே பதில் அனுப்பினாரு. 4. கார்த்திக் - புதுசா வந்திருக்கிறாரு. எல்லா விசயத்தையும் நல்லா கவனிக்கிறாரு. இவரும் கண்டிப்பா வந்திடுவாரு.இவங்க நாலு பேரையும் ம்கிழ்ச்சியா வாழ்த்தி வரவேற்கிறேன்இரண்டாயிரம் வ்ருசத்துக்கு மேல செழிப்பா வளர்ந்த நம்ம தமிழ், வருங்காலத்திலேயும் செழிப்பா வளரணும்னு, உங்க எல்லாரோட ஆசையும் மாதிரிதான் என் ஆசையும். நாளைக்கு எங்க வீட்டுப் பிள்ளைங்களும், தமிழ்மணத்தில எழுத வரும் போது, 2006யில எங்க அப்பாவும் இன்னொரு உறவினரும் தமிழ்மணத்தில எழுத வந்தாங்கன்னு ஆரம்பிக்கலாம். உங்க வீட்டுப் பிள்ளைங்களும் இந்த மாதிரி மலரும் நினைவுகளை கண்டிப்பா கொண்டு வருவாங்க. அவங்க நட்பெல்லாம் தொடரட்டுமே!!!!!!!!! என்னை எழுத அழைத்த அன்பர் செல்வனுக்கும் படிக்க வந்த அனைவருக்கும் என் நன்றியைதெரிவிக்கிறேன்.மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம். அன்புடன் சாம்

7 comments:

Unknown said...

சாம்,

முதல் படம் "நான்".ரவிச்சந்திரன்,முத்துராமன் நடித்த மிகப்பெரும் வெற்றிப்படம்.எனக்கு ரவிச்சந்திரன் படங்கள் மிகவும் பிடிக்கும்.இதில் நாகேஷ் பெண் வேடமிட்டு வருவார்.அசத்தலாக இருக்கும்

இரண்டாம் படம் வாணி,ராணி.

3,4 தெரியவில்லை

Sam said...

அன்பு செல்வன்

இந்த நாளை நான் என்றும் மறக்கப் போவதில்லை. உங்கள் உதவிக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்
நாளை விரிவாகக் கடிதம் எழுதுகிறேன்.
விடைகளை மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்துவிட்டு மெதுவாகச் சொல்கிறேனே!

அன்புடன்
சாம்

Unknown said...

அன்பு சாம்,

நண்பர்களுக்குள் 'நன்றி' 'சாரி' போன்றவை தடை செய்யப்பட்ட வார்த்தைகள்.

anything at anytime for you my friend..

Anonymous said...

4. Pengal Veetin Kangal ???

Sam said...

Ashlyn,
நான் படத்தில் நடித்த நடிகைதான் இரண்டு, மூன்று படத்தில் நடித்திருந்தார்.
இரண்டாவது படத்தின் பெயர் 'வந்தாளே மகராசி' கறுப்பு வெள்ளைப் படம்
மூன்றாவது படத்தின் பெயர் 'தர்மம் எங்கே' இதில் கதாநாயகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
வில்லன் எம். என். நம்பியார்.
நாலாவது படம் தீர்க்க சுமங்கலி இல்லை. தீர்க்க சுமங்கலியில் படத்தின் தலைப்பைக் காப்பாற்ற
கே. ஆர். விஜயா இறந்து போய் விடுவார்.
நாலாவது படத்தின் ஹீரோ ஜெமினி கணேசன். எனக்கும் படத்தின் தலைப்பு மறந்து போய் விட்டது.
'எங்க வீட்டுப் பிள்ளை' படம் ஏனோ நாங்கள் பார்க்கவில்லை.
சாம்

Sam said...

//4. Pengal Veetin Kangal ???//

கூகிளில் தேடினேன் கிடைக்கவில்லை. பத்து நாட்கள் கழித்து மெதுவாக நினைவுக்கு வரும்.
எப்பவுமே இப்படித்தான்

அன்புடன்
சாம்
உங்கள் புகைப்படங்கள் நன்றாக இருக்கிறது. இந்த ஊரில், படம் எடுக்கும் முன் காய்கறிகளுக்கு
மெழுகு பூசுவார்கள் என்று கேள்விப்ப்ட்டிருக்கிறேன்

Unknown said...

பெண்கள் வீட்டின் கண்கள் விசு படம் என நினைக்கிறேன்.ஜெமினி படம் என்று சாம் சொன்னார்.அதில் ஜெமினி இல்லை.ஆக அது வேறு ஏதோ படம்.