Friday, March 17, 2006

65.சீமைக்கு போன கதை

ஹீத்ரோ விமான நிலயத்தில் நானும் என் நண்பர் ஜானும் இறங்கியபோது மணி 7.30. 9 மணிக்கு கருத்தரங்கம் தொடங்குகிறது.ஓட்டல் போய் குளித்து போக நேரமில்லை என்பதால் நேரடியாக பல்கலை கழக வளாகத்துக்கு செல்வது என முடிவெடுத்தோம். 12 மணிநேர விமான பயண அலுப்பு + ஜெட் லாக் என வாட்டி வதைத்தது.நேராக ரெஸ்ட் ரூம் சென்று உடை மட்டும் மாற்றிக்கொண்டு, சென்ட் நிறைய அடித்துகொண்டு(குளிக்கவில்லை அல்லவா..:--) ஹீத்ரோ விமான நிலயத்தில் திக்கு தெரியாமல் நடந்தோம்.முன்பின் லண்டன் இருவரும் வந்ததில்லை. லண்டன் டியூப் ரயிலில் பாடிங்க்டன் என்ற மத்திய ரயில் நிலயத்துக்கு போய் அங்கிருந்து இணைப்பு ரயிலை பிடிக்க வேண்டும் என சொல்லியிருந்தனர்.ஹீத்ரோ எக்ஸ்பிரஸ் என்ற சூப்பர் ரயிலை பிடித்தால் வழியில் எங்கும் நிற்காது என சொன்னார்கள்.14 பவுண்ட் தண்டம் அழுது ஹீத்ரோ எக்ஸ்பிரஸ் டிக்கட் வாங்கினோம்.(வழியில் நின்று நின்று போகும் ஹீத்ரோ கனக்ட் ரயில் 3 பவுண்ட் தான்) ரயில் போக போக திடீரென்று அந்த ஹீத்ரோ எக்ஸ்பிரஸ் ரயில் ஹீத்ரோ கன்னக்ட் ஆக மாற்றப்பட்டது என அறிவித்து வயிற்றில் புளியை கரைத்தனர்.இன்று கான்பரன்ஸ் காலி என முடிவு செய்து சோகமாக இருந்தோம். மெட்ரோ ரயில் ஒரு ஸ்டாப்பில் நின்றது தான் பாக்கி.திமு திமு என கூட்டம் ஏறியது.சென்னை மெட்ரோ ரயில் போலவே இருந்தது.வெளியே எட்டி பார்த்தால் சுவற்றில் graffiti கூட இருந்தது.கூட்டத்தை பார்த்தால் ஒருவர் முகத்திலும் சிரிப்பில்லை.வேலைக்கு போகும் அவசரம்.பாவமாக இருந்தது.சென்னையில் இதே அவசரத்திலும் மெட்ரோ ரயிலில் வரும் கூட்டம் அரட்டை அடித்துக்கொண்டு,கதை பேசிக்கொண்டு வரும்.இங்கு..ம் கூம்... வழி எங்கும் நிறைய பேர் ஏறி இறங்கினர்.டிக்கட் வாங்கினரா இல்லையா என்பதே சந்தேகம் தான்.செக்கிங் செய்ய ஆள் வருவார்,வருவார் என மைக்கில் சொல்லிக்கொண்டே இருந்தனர்.கடைசி வரை வரவில்லை. சிறு வயதில் படித்த நாவல்களில் பிரிடிஷார் டியூப் ரயில்களில் டெய்லி டெலெக்ராப் தினசரியில் வெளிவரும் (நம்மூர் தினத்தந்திக்கு இந்த பெயர் தான் வைத்தார்கள்) குறுக்கெழுத்து புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பார்கள் என படித்திருக்கிறேன்.அப்படி யாராவது செய்கிறார்களா என பார்த்தால்...ம் கூம்..ஏமாந்தது தான் மிச்சம் "ரயிலில் நடுவே நிறைய இடம் இருக்கிரது.உள்ளே வாருங்கள்.." என நம்மூர் பஸ் கண்டக்டர் ரேஞ்சுக்கு மைக்கில் ரயிலில் அறிவித்துக்கொண்டே இருந்தனர்.ஒருவர் நகர வேண்டுமே??கண்டுகொள்ளாமல் நின்றிருந்தனர்."வீட்டுக்கு வீடு வாசப்படி" என நினைத்து சிரிப்பு வந்து விட்டது. நைசாக ஒருவர் விட்டுப்போன செய்தித்தாளை எடுத்து படித்து பார்த்தேன்.நம்மூர் த இந்து போலவே அந்த பத்திரிக்கையிலும் லெட்டர் டூ த எடிட்டர் பகுதியில் எடிட்டரை "சார்" என விளித்து கடிதம் போட்டிருந்தனர்."த இந்து" போலவே கடைசி பக்கம் ஸ்போர்ட்ஸ் பக்கம்.அதில் மும்பை டெஸ்ட் பற்றிய செய்திகள்,,யூகங்கள்..விமர்சனங்கள் சவுத்ஹால் என்ற நிலையத்தில் ஏகப்பட்ட இந்தியர்கள்(சீக்கியர்கள்).அங்கே சவுத்ஹால் என்பதை ஆங்கிலத்திலும் அதன் கீழ் இந்தி(அல்லது பஞ்சாபி..என்ன மொழி என தெரியவில்லை)யிலும் சவுத்ஹால் என எழுதியுருந்தனர்.இங்கிலாந்திலும் இந்தியில் பெயர்ப்பலகையா என அதிசயமாக இருந்தது. பாடிங்கட்ன் என்பது நம்மூர் சென்னை சென்ட்ரல் போல் தான்.தேர்க்கூட்டம்..இங்கும் யாரும் யாருடனும் பேசிக்கொள்வதில்லை.சாவி கொடுக்கப்பட்ட ரோபாட் போல் அனைவரும் வேலைக்கு ஓடுகின்றனர்.முட்டிக்கொண்டால் சாரி சொல்ல முட்டியவருக்கும் நேரமில்லை.அதை கேட்க முட்டு வாங்கியவருக்கும் நேரமில்லை.ஓட்டம் தான். இன்னும் 30 நிமிடம் மட்டுமே இருந்தது.மிகுந்த தயக்கதுக்கு பின் ஒரு வயதான பெரியவரை நிறுத்தி வழி கேட்டோம்.மிகுந்த கனிவுடன்,பிரிடிஷாருக்கே உரித்தான அழகான ஆங்கிலத்தில் விளக்கி,மேப் ஒன்றை கொடுத்து,எங்களை கூட்டி போய் டிக்கட் வாங்கிக்கொடுத்து அதன் பிறகு அவசரமாக அவர் ரயிலை பிடிக்க ஓடினார்.இங்கிலாந்து மக்கள் தம் ஜென்டில்மன் பெருங்குணத்தை இந்த அவசர யுகத்திலும் மறக்கவில்லை என்பதை நினைக்கையில் பெருமையாக இருந்தது. பாடிங்க்டன் ரயில் நிலையத்தை மாதிரியாக கொண்டு தான் சென்னை சென்ட்ரல் கட்டப்பட்டதோ என கூட தோன்றியது.பிரிடீஷ் ரயில் நிலயங்கள் அனைத்தும் இந்திய ரயில் நிலயங்கள் போலவே இருந்தன. பல்கலைகழகத்துக்கு சரியான நேரத்தில் போய் சேர்ந்து விட்டோம்.ஆனால் போய் சேர்ந்த பிறகு ஜெட்லாக் வாட்டி வதைத்தது.பிரிடீஷ் பல்கலைகழகங்களில் பேசுவதென்றால் கோட்,சூட்,கறுப்பு ஷூ சகிதம் போக வேண்டும் என சொல்லியிருந்தனர்.நான் கோட் கொண்டு போயிருந்தும் அவசரத்தில் வேறு கலர் பான்ட் எடுத்துப்போயிருந்தேன்.அதனால் அதை அணியாமல் டீ ஷர்ட்,ஜீன்ஸ் மட்டும் போட்டுக்கொண்டு ஒரு தினுசாக தான் போனேன். கருத்தரங்கில் அனைவரும் விலையுயர்ந்த கோட்,சூட்,டை,கண்ணாடி போல் பாலிஷ் செய்யப்பட்ட ஷூ என அணிந்து பார்த்தாலே ஜென்டில்மேன் என சொல்லும் உடையோடு உட்கார்ந்திருந்தனர்.ஜீன்ஸ்,ட ீஷர்ட் அணிந்த சிலரும் இருந்தனர்.அதை பார்த்ததும் தான் மூச்சே வந்தது. அனைவரும் அறிமுகப்படுத்திக் கொண்டோம்.எங்கள் இருவருக்கும் ஜெட்லாக்.(அமெரிக்க நேரம் அப்போது இரவு 3 மணி.விமானத்தில் தூங்கவே இல்லை.)அறிமுக படலத்தில் ஒன்றை கவனித்து சொன்னதும் பக்கத்திலிருந்த பாகிஸ்தான்காரருக்கு சிரிப்பு தாங்கவில்லை.அதாவது கோட் சூட் அணிந்து கம்பீரமாக இருந்தவர் அனைவரும் பிரிடிஷார்.ஜீன்ஸ் அணிந்திருந்தவர் அனைவரும் அமெரிக்கர்கள் எனது கட்டுரையை அரங்கேற்றும் நேரம் வந்தபோது நான் கிட்டத்தட்ட தூங்கியே இருந்தேன்.எனது பெயரை படிக்கும் போது என்னால் எழவே முடியவில்லை.அப்போது அமெரிக்க நேரம் காலை 9,இங்கிலாந்து நேரம் பகல் 3 மணி.30 நிமிடம் பேசி பிறகு கேள்விகளை வேறு சமாளிக்க வேண்டும்.எப்படியோ சமாளித்து பேசி முடித்து விட்டு வந்து உட்கார்ந்தேன்... ("எப்படியோ பேசினேன் என்றால் என்ன அர்த்தம்?என்ன பேசினீர்கள்..(இது குமரன்) "எழுத்தாளன் நாட்டின் முதுகெலும்பு" என ஒரு போடு போட்டேன்....தட்டினான் பாரு..."(இது நான்) "தட்டினானா..எங்கே உங்க முதுகுலயா..."(இது பார்ட்னர் தருமி..) "முதுகுலயா..அங்கே ஏன் தட்றான்..அவன் கைய தட்டினான்..."(இது மீண்டும் நான்.கல்யாண பரிசு தங்கவேலு ஸ்டைல் :--) கான்பரன்ஸ் முடிந்து இரவு விருந்து முடிந்தபோது லண்டன் நேரம் இரவு 10.அடித்து போட்டது போல் களைப்பு.நேராக ஓட்டல் சென்று பெட்டில் விழுந்தது தான் தெரியும்.பல்கலைகழகத்தில் இருந்து இருவரும் ஓட்டல் போனதே தூங்கிக்கொண்டு தான்.வழியெங்கும் ரயிலில் இந்தியர்கள்,இந்தியர்கள்..ஏகப்பட்ட இந்தியர்கள் என்பது தான் ஞாபகம் இருக்கிறது. நாங்கள் போக திட்டமிட்டிருந்த விம்பிள்டன்,வெஸ்ட்மினிஸ்டர் ஆகிய இடங்களை மெட்ரோ ரயில் மேப்பில் மட்டுமே பார்க்க முடிந்தது காலை 5 மணிக்கு வேக் அப் கால் மூலம் எழுந்து 7 மணிக்கு விமானத்தை பிடித்து மான்செஸ்டர் போய் அங்கிருந்து சிகாகோ வந்து சேரும் வரை தூக்கம்,தூக்கம்,தூக்கம் தான்.", செல்வன் சீமைக்கு போன சோக கதை இதுதான்.கோடை விடுமுறையில் அடுத்து போகும் போது தான் ஊரை சுற்றி பார்க்க வேண்டும்.

3 comments:

Unknown said...

Hi ashlyn,

Ya...I am seemai thurai ha ha.....

Hopefully I am going again in summer.Will know for sure by end of april

Sam said...

வாங்க, வாங்க,
அன்புடன் சாம்

Unknown said...

thank you sam,

Missed you and all thamizmanam friends for the past week.Am happy to be here with you all again

selvan