Wednesday, March 29, 2006

70.கடவுளின் மரணம்

"கடவுள் இறந்து விட்டார்.நேற்று மாலை தூக்கு போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.அன்னாரது ஈமக்கிரியைகள் வரும் 16ம் தேதி கண்ணம்மா பேட்டை சுடுகாட்டில் நடைபெறும்" இடி இறங்குவது போல் அந்த செய்தி மக்களிடையே இறங்கியது.ஆரம்பத்தில் யாரும் அதை நம்பவில்லை.ஆனால் கடவுளின் உடலை மக்களின் பார்வைக்கு வைத்ததும் தான் அதை அனைவரும் நம்பினர்."ஓ"வென அனைவரும் அழுது புலம்பினர்.அவரது உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல பெரும் கூட்டம் கூடியது.அவரது உடலை தகனம் செய்து முடித்ததும் பெருத்த விவாதம் மூண்டது. "உலகம் இதோடு அழிந்தது" என அலறினார்கள் பலர்."நியாயம்,தர்மம்,நேர்மை,நீதி எல்லாம் கடவுளோடு புதைபட்டு விட்டது" என ஆருடம் சொன்னார்கள் பலர்.ஆள்வோர் கூட இதை நினைத்து கவலை கொண்டனர்.கடவுளுக்கு 16ம் நாள் காரியம் முடிந்த பிறகு பெரிய கலவரம் வரலாம் என அரசு எதிர்பார்த்தது.அதற்குள் புதிய கடவுளை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஆள்வோர் முடிவு செய்தனர்.புதிய கடவுளையும் புதிய மதத்தையும் தீர்மானிக்க ஒரு சர்வதேச கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. கடவுளை தேர்ந்தெடுக்கும் முன் புனித நூல் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டுமல்லவா?கமிட்டியின் முன்பு இது தான் பெரிய பிரச்சனையாக இருந்தது.இறுதியில் கமிட்டி மெம்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜனநாயக அரசியல் சட்டமே உலகின் புதிய வேதநூலாக இருக்கும் என முடிவு செய்தனர்.பெண்ணுரிமை,பேச்சுரிமை,சமத்துவம்,சுதந்திரம் ஆகியவை இந்த புதிய மதத்தின் கோட்பாடுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன. "அவனவன் வேலையை அவனவன் பார்ப்பது" என்பது இந்த புதிய மதத்தின் முக்கிய கோட்பாடாக எற்கப்பட்டது.அடுத்தவனின் தனிமனித சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பது மிகப்பெரும் பாவமாக இந்த புதிய மதத்தில் கருதப்பட்டது. கடவுளாக யாரை நியமிக்கலாம் என மிகப்பெரும் குழப்பம் ஏற்பட்டது.இறுதியில் தனிமனித சுதந்திரத்தை கடவுளாக ஏற்கலாம் என ஒருமித்த கருத்து உருவானது.ஒரே கடவுள் வழிபாடு இருந்தால் பிரச்சனை உருவாகலாம் என்பதால் சுதந்திரத்தோடு சமத்துவமும் சகோதரத்துவமும் கடவுளாக சேர்க்கப்பட்டு 3 கடவுள்கள் - ஒருவருக்கொருவர் சமமானவர்களாக உருவாக்கப்பட்டனர். கடவுளின் வழிபாட்டு ஸ்தலங்களாக பள்ளிகளும் கல்லூரிகளும் இருக்கும் என கமிட்டியினர் முடிவு செய்தனர்.புதிய மதத்தை அனைவருக்கும் இந்த பள்ளியில் கற்றுத்தரலாம் என முடிவு செய்யப்பட்டது.புதிய மதத்தை கட்டாயமாக்கலாமா என பெருத்த விவாதம் நடந்து இறுதியில் அதை கட்டாயமாக்குவதில்லை என முடிவு செய்தனர்.தன்னை கட்டாயாமாக அனைவரும் வணங்குவதை தான் விரும்பவில்லை என புதிய கடவுளான தனிமனித சுதந்திரம் கூறிவிட்டார்.மற்ற கடவுள்களான சமத்துவமும்,சகோதரத்துவமும் இதையே சொன்னார்கள். 16ம் நாள் காரியம் முடிந்ததும் மக்கள் பெரும்திரளாக கூடினார்கள்.வன்முறையில் அவர்கள் ஈடுபடுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர்.ஆனால் அவர்கள் அப்படி வன்முறையில் ஈடுபடவில்லை.கட்டித் தழுவிக் கொண்டனர்.மதம்,ஜாதி,இனம் முதலிய அத்தனை வேறுபாடுகளயும் மறந்து அனைவரும் ஒருவரை ஒருவர் தழுவி மன்னிப்பு கேட்டுக்கொண்டார்கள்.இனிமேல் ஜாதி மத சண்டைகளே பிடிப்பதில்லை என அனைவரும் சத்தியம் செய்து கொண்டார்கள். திடிரென்று பார்த்தால் உலகின் அனைத்து பிரச்சனைகளும் மிக சுலபமாக தீர்ந்து விட்டன.ஜாதி சண்டை,மத சண்டை முதலிய அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விட்டன.நாடுகளுக்கிடையே இருந்த பல பிரச்சனைகள் விநாடி நேரத்தில் ஒழிந்து விட்டன.வலதுசாரி இடதுசாரி அரசியல் கட்சிகள் அனைத்தும் காணாமல் போய் விட்டன. ஆள்வோர் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.கலவரம் வருவதற்கு பதில் உலகம் அமைதியான பூங்காவாக மாறிவிட்டது.காதல் திருமணங்கள் செழித்து வளர்ந்தன.ஆண்கள் பெண்களுக்கு சம உரிமை தந்தனர்.ஜாதி கொடுமைகள் ஒழிந்து மேல் ஜாதியினரும் கீழ் ஜாதியினரும் பெண்கொடுத்து பெண் எடுத்து சம்மந்திகளானார்கள்.மத வேறுபாடுகள் மறைந்து மனிதர்கள் அனைவரும் ஒன்றே குலம் என வாழத்துவங்கினர்.பெண்கள் சுதந்திரம் பெற்று சம உரிமை பெற்ற மனைவிகளானார்கள்.பிற்போக்கு சட்டங்கள் அனைத்தும் ஒழிந்து அவர்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலையும் கிடைத்தது. புதிய கடவுள்களை அறிமுகப்படுத்த இதுவே சரியான சந்தர்ப்பம் என ஆள்வோர் முடிவு செய்தனர்.பெரும் கூட்டம் ஒன்றை கூட்டினர்."இதோ புதிய மதம்,இதோ புதிய கடவுளர்" என சமத்துவம்,சுதந்திரம்,சகோதரத்துவம் மூவரையும் அறிமுகப்படுத்தினர்."இது தான் இவர்களை வணங்கும் முறை" என சமதர்ம ஜனநாயக சட்டபுத்தகத்தை அறிமுகப்படுத்தினர். மக்கள் அனைவரும் புதிய கடவுளரை வணங்க முற்பட்டனர்."வேண்டாம்" என சமத்துவ கடவுள் அலறினார்."நான் உங்களை விட உயர்ந்தவனல்ல.உங்களில் ஒருவன்." என கூறினார்.மேடையிலிருந்து இறங்கி மக்களிடையே குதித்து அவர்களை கட்டித்தழுவினார்."நான் உங்கள் சகோதரன்.உங்களில் ஒருவன்.என் பெயர் சமத்துவம்" என கூறினார்.மக்கள் ஆர்பரித்து அவரை தழுவினர்.ஆரவாரம் செய்து அவரை ஏற்றுக்கொண்டனர். அடுத்ததாக சகோதரத்துவத்தை வணங்க முற்பட்ட போது அவரும் அதை ஏற்காமல் மக்களிடையே குதித்தார்."நான் உங்கள் சகோதரன்.என்னை ஏன் வணங்குகிறீர்கள்?" என செல்லமாக கோபித்தார்."நான் உங்களில் ஒருவன்.என் பெயர் சகோதரத்துவம்" என கூறினார்.மக்கள் ஆர்ப்பரித்து அவரை தழுவினர்.ஆரவாரம் செய்து அவரை ஏற்றுக்கொண்டனர். சுதந்திரமும் மக்களிடையே கலந்தார்."நான் சுதந்திரம்.என்னை ஏற்றுக்கொண்டால் நீங்களும் சுதந்திரம் பெற்றவர்களாவிர்கள்" என கூறினார்.மக்களிடையே மக்களாக இந்த மூன்று கடவுளர்களும் ஒன்று கலந்தனர்.தம் வேதநூலை மக்களுக்கு படிக்க கொடுத்தனர்.கோடிக்கணக்கில் மக்கள் இப்புதிய மதங்களால் ஈர்க்கப்பட்டனர்.இதை தழுவினர். இந்த கூத்தை எல்லாம் விண்ணில் இருந்தபடி கடவுள் ரசித்து சிரித்துக்கொண்டிருந்தார்.இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று தானே அவர் தற்கொலை செய்தது போல் நாடகமாடினார்.மனிதன் தன் பிரச்சனைகளை தானே தீர்த்துக்கொள்ள வேண்டும்,உலகின் புதிய கடவுளாக அவன் உருவெடுக்க வேண்டும்,சாதி,மத சண்டையை அவன் நிறுத்த வேண்டும்,எதற்கெடுத்தாலும் கடவுளிடம் ஓடி அவருக்கு ஜால்ரா தட்டுவதை அவன் நிறுத்த வேண்டும் என அவர் நினைத்தார்.அதை செய்ய சிறந்த வழி இதுதான் என அவருக்கு பட்டது.அதனால் தான் இந்த தற்கொலை டிராமாவை அவர் ஆடினார். மக்கள் சிரித்து சந்தோஷமாக இருப்பதை கண்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார்.அவருக்கும் இனி உலகின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டிய தொல்லை விட்டுப்போனது. ரிமோட்டை எடுத்து செய்திகளை பார்க்கத் துவங்கினார்.மதக்கலவரம்,போர்,சண ்டை என எதுவும் இல்லாத மானிட இனத்தின் முன்னேற்றத்தை,பெண்ணின் முன்னேற்றத்தை,சமத்துவத்தை,சுதந்திரத்தை மட்டுமே செய்திகளில் பார்த்த கடவுள் ஆனந்த கண்ணீர் விட்டார். சிட்டுக்குருவிகள் போல் தன் குழந்தைகள் சிறகடித்து பறப்பதை கண்ட கடவுள் ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாயின் மனநிலையை அடைந்து சாந்தி பெற்றார். (இது தமிழோவியத்தில் வெளியான என் படைப்பு.பிரசுரித்த தமிழோவியத்துக்கு என் நன்றி)

23 comments:

G.Ragavan said...

அருமையா கற்பனை. இது நனவாகும் நாளும் வருமா! ஏக்கமாகத்தான் இருக்கிறது. வரும். நிச்சயம் வரும். என்றாவது ஒருநாள் சாதி மத இன மொழி பேதங்கள் மறைந்து மக்கள் இன்புற்று வாழ்வர்.

VSK said...

அருமையான கற்பனை!
நடக்கக் கூடிய சாத்தியமே!
ஆனால், நடக்க விடுவார்களா?
இதைச் சொன்னவன் 'பார்ப்பான்', 'வந்தேறிக் கூட்டம்' என்று ஒரு சிலர் ஓலமிடத் துடிப்பதும்,
உடனே, அவர்களை மறுதலித்து மாற்றுக்கூட்டம் பதிலிறுப்பதுமாக,
ஒரு தோற்ற மயக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை!

இப்படி சிந்திக்கும், நீங்களும் ஒரு 'தீர்க்கதரிசி' தான்!
வாழ்த்துக்கள்!

Sam said...

ரொம்ப நல்லா இருந்துதுங்க, இருக்குதுங்க. நல்ல எழுத்து, நல்ல சிந்தனை
அன்புடன்
சாம்

Unknown said...

அன்பின் எஸ்.கே,

சும்மா இருக்கறவங்களுக்கு நீங்களே பாயின்ட் எடுத்து குடுத்துடுவீங்க போலிருக்கு?சரியான குறும்பு உங்களுக்கு...:-)))

மற்றபடி உங்கள் கருத்துக்கு என் அன்பான நன்றி.

Unknown said...

நன்றி ராகவன்,

நிச்சயம் ஜாதி மத வேற்றுமை ஒழிந்து நாம் சகோதரர்களாக வாழ்வோம்.நம்பிக்கையே வாழ்க்கை.நம்புவோம்.நல்லது நடக்கும்.

நன்றி சாம்,

உங்கள் இரண்டாவது வளையம் மிகவும் நன்றாக இருந்தது.3, 4 விரைவில் வரும் என எதிர்பார்க்கிறேன்

Unknown said...

Selvan,
Good imagination. Sounds good in paper, but will never work out this smooth even if the God wishes. Interesting reading though =)
///

thanks ashlyn...whether it happens or not...it was just my utopic world..I shared it with all here.

நாமக்கல் சிபி said...

வேறு வழியில்லை கடவுளுக்கு! இப்படி ஏதாவது நாடகமாடினால்தான் உண்டு உலகில் அமைதியை தோற்றுவிக்க!

உங்கள் கற்பனை அருமை. அப்படியே
கடவுளுக்கும் இதை மின்னஞ்சல் செய்யுங்கள். முயற்சி செய்யட்டும்.

மின்னஞ்சல் முகவரி:
அட்மின்@கடவுள்.காம்


(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

Suka said...

நல்ல படைப்பு செல்வன்.

ஒருவேளை முன்பே இந்த தனித்தன்மைகளோடு கடவுளும் மதமும் இருந்திருக்கலாம்.. ஆனால் மோனோபொலியாக இருக்க விடாமல் வேறு மதங்களும் தோன்றி ..யார் பெரியவர் போட்டி வந்து அடிப்படைக் குணங்கள் மாறியிருக்கலாம்..

இந்த புது கடவுளையும் திரும்ப அனுப்பி "நமக்கிருப்பது நாம் மட்டுமே" (All we have is each other) என வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் ..

என் இரண்டு நையா பைசா.. :)

வாழ்த்துக்கள்
சுகா

Unknown said...

அன்பு சிபி,

கடவுளுக்கு .com முகவரியா?அவர் என்ன வியாபாரமா செய்கிறார்?. .org or .gov முகவரியாவது கொடுக்கக்கூடாதா?

Unknown said...

வாங்க சுகா,
நட்சத்திரம் பதிவுக்கு வந்து பின்னூட்டம் போட்டாச்சு.அடுத்து கடவுளே வந்து பின்னூட்டம் போட்டாலும் போடலாம்.:-))))

புதுகடவுள்கள் சுதந்திரம்,சமத்டுவம் ஆகியோர் ஏதோ ஒரு மூலையில் இருந்துட்டு போகட்டுமே?என்ன சொல்றீங்க?

Anonymous said...

Great story selvan.

Muthu said...

இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை..

உட்டோப்பியா வகையாகவா இல்லை நேரடியாக என்று தெரியவில்லை...ஆனால் விளக்கங்கள் (such as சமத்துவம், சகோதரத்துவம்) எல்லாம் நன்றாக உள்ளது...

Unknown said...

அன்பின் முத்து,

இது உடோபியா வகையறாதான்....நிஜத்தில் நடக்காதது கனவிலாவது நடக்கட்டுமே..:-))

Unknown said...

Thanks Bharathi

தருமி said...

பார்ட்னர்,
ரேஞ்சே மாறியிருக்கு. நல்லா இருந்திச்சு.

ஆனால், ஒரு ட்விஸ்ட் கொடுத்துருவீங்கன்னு நினச்சேன் - அதாவது கடவுளின் மரணத்திற்குப் பிறகு அந்த 16-ம் நாளுக்குள் உலக மக்கள் எல்லோரும் வேற்றுமையில்லாமல் இருந்து, பிறகு கடவுள் "அப்பாயிண்ட்மெண்ட்" முடிஞ்சதும் அந்தக் கடவுளை வச்சே சண்டை வந்து - பழைய குருடி கதவைத் திறடின்னு - பழைய நிலைக்கே வந்திருவாங்கன்னு முடிப்பீங்களோ என்று நினச்சேன் :-)

Thekkikattan|தெகா said...

கட(ந்துவுள்ளே)வுளை உணர்ந்தவர்க்கு எங்கும் எதிலும் கடவுளே நிரம்பியுள்ளான்.

Don't try to name it, let us keep it as an entity of all, even beyond the Singular momentum of the Universe whichever sets it on the move, we will call it as SOURCE (or god). Having known that, if we are all created from that very Source (god), however the gravity holds the matter invisibly by binding together from falling away into the Unknown.

Even so, I believe the very(Source) gravity works as an invincible force deep within us, thereby creating a pull in every Individual to seek out toward that Source to go and merge in as One (there comes the theroy of evolution of re-incarnation in play__for soul growth), the more intense the pull in you the higher you are on the evolutionary scale with your individual bit of that source trying to merge in, again the Source could be anything, you name whatever you wanted. And that is my understanding about the realization of Universal Truth.

"எங்கே மதம் முடிவுறுகிறதோ, அங்கிருந்துதான் ஆன்மீகம் தொடங்குவதாக (Where Religion Ends, the Spirituality Begins)," தன்னையுணர்ந்த ஞானி ஒருவர் கூறியதை எங்கோ படித்ததாக ஞாபகம்.

தெகா.

Unknown said...

எங்கே மதம் முடிவுறுகிறதோ, அங்கிருந்துதான் ஆன்மீகம் தொடங்குவதாக (Where Religion Ends, the Spirituality Begins)," தன்னையுணர்ந்த ஞானி ஒருவர் கூறியதை எங்கோ படித்ததாக ஞாபகம்//

நன்றி தெக்கிட்டான்

மதம் என்பது கடவுளை தேடியவர்களின் அனுபவங்களின் தொகுப்பு (நன்றி சிரில் அலெக்ஸ்) என எடுத்துக்கொண்டால் பிரச்சனை இல்லை என தோன்றுகிறது.

Unknown said...

பார்ட்னர் தருமி.

நிஜத்தில் தான் கஷ்டப்படறோம்.கனவிலாவது நல்லது நடப்பது போல் எழுதலாம் என தான் எழுதினேன்...

ஆனா நீங்க சொன்ன மாதிரி புதுமதம் வந்துச்சுன்னா கொஞ்ச நாள் கழிச்சு அதுலயும் பிரச்சனை வரத்தான் செய்யும்.ஒட்டு மொத்தமாக கடவுளையே ஒழித்துக்கட்டி மனிதன் உலகின் புதிய கடவுளாக(நன்றி நீட்சே) பொறுப்பேற்றால் பிரச்சனை வராது என தோன்றுகிறது

Unknown said...

அஷ்லின்,
நாளை ஒரு நாய்கதை பற்றிய பதிவுடன் வருகிறேன்.போனவாரம் வேலை சற்று அதிகம்

பொன்ஸ்~~Poorna said...

நல்லா இருந்துச்சுங்க.. ஆனா, இப்படித் தானே ஒவ்வொரு புது மதமும் வந்தது.. புத்தரும் மஹாவீரரும் தோற்றுவித்த புது மதங்களால் மட்டும் மனிதர்கள் மாறினார்களா.. இல்லையே.. நான் pessimist-ஆ யோசிக்கலை ஆனால், புதிய மதம்னு ஏன் சொல்லணும்னு தான் கேட்கறேன்..

//ஆள்வோர் கூட இதை நினைத்து கவலை கொண்டனர்.கடவுளுக்கு 16ம் நாள் காரியம் முடிந்த பிறகு பெரிய கலவரம் வரலாம் என அரசு எதிர்பார்த்தது.அதற்குள் புதிய கடவுளை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஆள்வோர் முடிவு செய்தனர்.//

இப்படி கவலைப்படும் ஆள்வோர் இருந்தாலே பாதி கஷ்டங்கள் தீர்ந்து விடும்..
இந்தப் பதிவுல எனக்குப் பிடிச்ச concept இதுதான்..

Unknown said...

நன்றி பொன்ஸ்,

விஷத்தை விஷத்தால் முறிக்க வேண்டும் என்பதுபோல் பழைய கடவுளை கொன்றுவிட்டு புதுகடவுள் வந்து மக்களுடன் மக்களாக கலந்து வாழ்வதுபோல் கற்பனை செய்திருந்தேன்.சும்மா தோன்றியது என்பதை தவிர வேறெந்த வலுத்த காரணமும் இல்லை.

ஆம்,பவுத்தமும், இந்துமதமும் இப்படி தான் தோன்றியிருக்கும்.அனைத்து மதங்களும்,கோட்பாடுகளும் இப்படி ஒரு பொன்னுலகை முன்வைத்து தான் உருவாகின்றன.என்னுடையது வெறும் கற்பனை மதம்.அவ்வளவுதான்.

Sivabalan said...

செல்வன்,

மிக அருமையான பதிவு!!


//தனிமனித சுதந்திரத்தை கடவுளாக ஏற்கலாம் // கலக்கல்.

கனவு நனவாகும் நாள், மிக விரைவில்

Unknown said...

மிக்க நன்றி சிவபாலன்
கனவு நனவாகும் விரைவில் என நம்புவோம்.

அன்புடன்
செல்வன்