Thursday, January 26, 2006

தோல் வியாபாரிகளும் கசாப்பு கடைக்காரர்களும்

ஜனக மகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது.அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல் கனவு.கனவில் அவர் படாத துன்பம் பட்டார்.அப்போது அது கனவு போலவே அவருக்கு தெரியவில்லை.நிஜம் போலவே இருந்தது.திடுக்கிட்டு "நாராயணா" என்று அலறினார்.கண்விழித்தார். கண்விழித்து பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது.சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார். இது தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது.அவர் தினசரி இரவு தூங்கும்போது கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.பகலில் எழுந்தால் மன்னனாக சகல சம்போகங்களுடன் இருப்பார். ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது."நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா?அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா?" என சந்தேகம் வந்துவிட்டது.மந்திரி,ராஜகுரு என பலரிடம் கேட்டுப் பார்த்தார்.யாருக்கும் பதில் தெரியவில்லை.அந்த சந்தேகம் அவர் மனதை அரித்துக்கொண்டே இருந்தது."நான் பிச்சைக்காரனா,மன்னனா" என்று அவர் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார். பிறகு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.தமது சந்தேகத்தை தீர்த்து வைப்பவர்களுக்கு பெரும்பரிசை அளிப்பதாக சொன்னார்.நாட்டிலிருந்த வித்வான்கள் எல்லாரும் வந்தனர்.தூரதேசத்திலிருந்து பண்டிதர்கள்,முனிவர்கள்,வேத விற்பன்னர்கள் எல்லாரும் வந்தனர்.யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. வெளியூரிலிருந்து விதேக நாட்டுக்கு ஒரு முனிவர் வந்தார்.அவர் பெயர் அஷ்டாவக்கிர மகரிஷி.அவர் உடல் 8 கோணலாக வளைந்திருக்கும்.அது ஏனென்றால் அவர் தம் அன்னையின் வயிற்றிலிருந்தபோது கத்துக்குட்டியான அவர் தகப்பனார் வேதத்தை தப்பு தப்பாக படிப்பாராம்.அப்போது வயிற்றிலிருந்த மகா ஞானியான குழந்தை அதை கேட்க சகிக்காமல் உடம்பை திருப்புமாம்.அப்படி 8 தடவை திருப்பி உடல் அஷ்ட கோணலாக வளைந்து அஷ்டா வக்கிரன் என்ற பெயரும் ஏற்பட்டது. ஜனகரின் கேள்வியை அறிந்த அஷ்டாவக்கிர மகரிஷி ஜனகரின் அவைக்கு சென்றார்.பண்டிதர்களின் பெருங்கூட்டம் அவையில் இருந்தது.யாருக்கும் பதில் தெரியவில்லை." என் கேள்விக்கு பதில் சொல்ல ஆளே இல்லையா?" என ஜனகர் வேதனையுடன் கேட்டார். "நான் சொல்கிறேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.அரசவை முழுக்க அவரை திரும்பிப் பார்த்தது.அவரை பார்த்த மறுவினாடியே பண்டிதர்கள் சிரிக்க துவங்கி விட்டனர்.குள்ளமாக,கறுப்பாக,எண் கோணலாக வளைந்த உடலை வைத்துக்கொண்டு ஒருவர் சபைக்கு வந்தால் எப்படி இருக்கும்?அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். சிரிப்பொலி அடங்கும் வரை அஷ்டாவக்கிரர் மவுனமாக நின்றார். "என் கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்" என்று ஜனகர் ஆவலுடன் கேட்டார். "சொல்கிறேன்.அதற்கு முன் சபையில் இருக்கும் தோல் வியாபாரிகளையும்,கசாப்பு கடைகாரர்களையும் வெளியே அனுப்புங்கள்" என்றார் அஷ்டா வக்கிரர். "என்ன சொல்கிறீர்கள்?இது பண்டிதர்களின் சபை.இங்கு எந்த கசாப்பு கடைக்காரனும் தோல் வியாபாரியும் இல்லை" என்றார் ஜனகர். "இங்கு பண்டிதன் என யாரும் இல்லை.இங்கிருப்போர் அனைவரும் கசாப்பு கடைக்காரர்களும் தோல் வியபாரிகளும் தான்" என்றார் அஷ்டாவக்கிரர். சபை முழுக்க கொதித்தெழுந்தது."என்ன திமிர் இந்த குரங்கனுக்கு?" என்று சப்தமிட்டார் ராஜகுரு."வேதம் கற்ற பண்டிதர்களை இழிவுபடுத்திய இவனை கழுவிலேற்றுங்கள்" என்று அனைவரும் கூச்சலிட்டனர். "ஏன் அப்படி சொன்னிர்கள்?" என்று பரிவுடன் கேட்டார் ஜனகர்."கற்றறிந்த பண்டிதர்களை கசாப்பு கடைக்காரன் என்று சொல்லலாமா?" என்று கேட்டார். உரத்த குரலில் அஷ்டாவக்கிரர் பதில் சொன்னார். "ஓ மன்னா! உன் கேள்விக்கு பதில் நான் சொல்கிறேன் என்று சொன்னேன்.சபை முழுக்க என்னை பார்த்து சிரித்தது.ஏன் சிரித்தார்கள்?என் குறைவான ஞானத்தை கண்டு சிரித்தார்களா?நான் தவறாக சொன்ன விளக்கத்தை கண்டு சிரித்தார்களா?இல்லை.இது எதை கண்டும் அவர்கள் சிரிக்கவில்லை.என் உருவத்தை பார்த்து சிரித்தார்கள்.என் தோலின் நிறத்தை வைத்து,என் உடலின் உருவத்தை வைத்து இவர்கள் என்னை, என் அறிவை மதிப்பிட்டார்கள். என் தோலை வைத்து என் மதிப்பை நிர்ணயிக்கும் இவர்கள் தோல் வியாபாரிகள் தானே?தோல் வியாபாரிதான் தோலின் நிறத்தை வைத்து ஆட்டு தோலுக்கு விலை போடுவான்.கசாப்பு கடைக்காரன் தான் ஆட்டின் உருவத்தை வைத்து ஆட்டுக்கு மதிப்பு போடுவான். இவர்களும் என்னை அப்படித்தான் மதிப்பிட்டார்கள்.அதனால் தான் இவர்களை தோல் வியாபாரி என்றேன்.பண்டிதர்கள் இருக்க வேண்டிய சபையில் தோல் வியாபாரிகளுக்கு என்ன வேலை?அதனால் தான் இவர்களை வெளியே போக சொன்னேன்" என்றார் அஷ்டாவக்கிரர். அவமானமடைந்த பண்டிதர்கள் தலை குனிந்து சபையை விட்டு வெளியேறினார்கள்.வந்தவர் மகா ஞானி என ஜனகரும் அறிந்தார்.மகா பணிவுடன் அவர் காலடியில் அமர்ந்து தன் சந்தேகத்துக்கு விடை கேட்டு தெரிந்துகொண்டார். ஜனகருக்கு அஷ்டாவக்கிரர் சொன்ன அந்த உபதேசம் அஷ்டாவக்கிர கீதை என்ற பெயருடன் விளங்குகிறது.அந்த உபதேசத்தை பெற்ற ஜனகர் அன்று முதல் மகா ஞானியாகி விட்டார்.

7 comments:

rv said...

செல்வன்,
தோல் வியாபாரி கசாப்புக்கடைக்காரன் கருத்து நல்லா இருக்கு.

ஆனா, ஜனகரின் சந்தேகத்துக்கு என்ன பதில் கொடுத்தார்னு சுருக்கமாவது சொல்லியிருக்கலாமே. ஜனகரும் நீங்களும் மட்டும் ஞானம் பெற்றால் போறுமா? :)

Unknown said...

நன்றி ராமநாதன்,

"தூங்கினப்போ கண்டதும் கனவுதான்.இப்போ நீ வாழும் வாழ்வும் கனவுதான்.உன்னோட ராஜவாழ்வும்,பிச்சைக்கார வாழ்வும் ரெண்டும் உண்மையில்லை.ராஜாவா இருக்கறப்ப சந்தோஷப்படாதே.தூங்கறப்ப அந்த சந்தோஷம் போயிடும்.பிச்சைக்காரனா இருக்கறப்ப வருத்தப்படதே.முழிச்சா அந்த வருத்தம் மறைஞ்சுடும்.

ரெண்டு நிலையிலும் ஒரே மாதிரி இருக்க கத்துக்க......"

இந்த மாதிரிதான் அந்த உபதேசம் போகும்.படிச்சு ரொம்பநாள் ஆச்சு.மறந்துடுச்சு.

சனத்குமாரர் கதை ஒண்ணு இதே மாதிரி இருக்கும்.சீக்கிரம் எழுதறேன்.

பங்கு சந்தை பற்றி சனிகிழமை எழுதறேன்.7வது பகுதியில் கொஞ்சம் கணக்கு வரும்.அதை வார விடுமுறையில் நிதானமா உக்காந்து எழுதறேன்

Unknown said...

thanks ashlyn,

I will post it tomorrow.

thanks
selvan

ranjit kalidasan said...

Good one selvan... Expecting eagerly warren buffet series next part.

ranjit kalidasan said...

Good one selvan.

Unknown said...

Thanks ranjith

I will post buffet -7 tomorrow.

One friend sent me an invitation to join his blog.Since that invitation came from blogger and no email id of that friend was given there I am posting my reply here.

My heartiest thanks go to you for the invitation.But I dont specalize in the field you invited me to write about.Its only one area of my interest and dont follow up with events in that field regularly.So I dont know how much value I can bring to you.Hence I am not in a position to take up the offer.

I am very thankful for the trust you showed towards me.Thanks a lot my friend.

regards
selvan

cheena (சீனா) said...

அன்பின் செல்வன் கோவை - ஜனகருக்கு முனிவர் கொடுத்த விளக்கம் அருமை - மேலும் அவரின் கேள்விக்கும் பதில் கூறி விட்டார் - பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா