Monday, April 24, 2017

லைட்மேன்




லைட்மேன் என ஒரு படம் பார்த்தேன். படமா, டாக்குமெண்டரியா என தெரியவில்லை. ஏன் என்றால் படம் மாதிரி ஆரம்பிச்சு, பேட்டிகளாக நீண்டுவிட்டது. பேட்டியில் சொன்ன விசயங்களை படமாக எடுத்திருந்தால் நல்ல கதையாக அமைந்திருக்குமோ, என்னவோ?

ஆனால் அது சொன்ன விசயங்கள் நெஞ்சை உலுக்கின.

சினிமா லைட்மேன்கள் காலை ஐந்து மணிக்கு எழுந்து, ஆறு மணிக்கு அவுட்டோர் ஆபிஸ் போய்விடவேண்டும். அங்கிருந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிபோவார்கள். எட்டு, ஒன்பது மணிக்கு ஷூட்டிங் என்றால் காலை ஏழு மணி முதலே லைட்டிங் விளக்குகள், போஸ்டுகளை எல்லாம் ஒழுங்குபடுத்தி வைக்கவேண்டும். 

10 மாடி கட்டிடத்தின் உச்சியில் ஷூட்டிங் என்றாலும் 50 கிலோ எடையுள்ள லைட்டுகளை இவர்கள் தான் தூக்கிகொண்டு படி ஏறி, இறங்கவேண்டும்.

மாலை ஆறுமணிக்கு ஷூட்டிங் முடிந்து எல்லாவற்றையும் மறுபடி வேனில் ஏற்றி, ஆபிஸ் வந்து வீடு திரும்ப ஒன்பது அல்லது 10 மணிஆகிவிடும். மறுபடி காலை ஐந்து மணிக்கு எழவேன்டும். ஷூட்டிங் நாட்களில் பிள்ளைகள் முகத்தை தூங்குகையில் பார்ப்பதுடன் சரி. உடல்வலி பின்னி எடுக்கும்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் உயிரை விட்டால் ஒன்றரை லட்சம் ரூபாய். அடிபட்டால் அதுவும் கிடையாது. ஒரு நாளைக்கு உடம்பு சரியில்லாமல் வேலைக்கு போகமுடியவில்லை என்றால் அன்றைய வருமானம் கட்.

இத்தனை கஷ்டபட்டு செய்யும் வேலைக்கு ஒரு நாள் ஊதியம் 550 ரூபாய். அத்துடன் மூன்று வேளை ஷூட்டிங் ஸ்பாட்டில் உணவு கொடுத்துவிடுவார்கள்.

கணக்குபோட்டால் மாதம் 25 நாள் ஷூட்டிங் என்றால் 13,570 ரூபாய் மாதவருமானம். அதில் ஒரு லைட்மேன் வாடகையே 5000 ரூபாய் என்றார். மீதகாசில் தான் குழந்தைகளை படிக்க வைப்பது, உணவு,துணிமணி, வைத்திய செலவு எல்லாமே.

லைட்மேன்களுக்கு ஒரு அளவு உதவியவர் என்றால் எம்ஜிஆர் தானாம். ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் லைட்மேன்களுக்கு வெறும் சாம்பார் சாதம் மட்டும் கொடுக்க, அதைகண்டு கோபித்து ஷூட்டிங்கையே கான்சல் செய்துவிட்டாராம்.

அதன்பின் அஜீத்தும் ஜெயலலிதாவும் 1996ல் நடந்த ஸ்ட்ரைக்கின்போது அரிசி, பருப்பு தந்து உதவியதை நெகிழ்ச்சியாக சொல்கிறார்கள்.

பிறநடிகர்கள் இவர்கள் மேல் அன்பு, அக்கறை காட்டினாலும் ஏதோ அவ்வப்போது கொஞ்சம் பணம், துணி என்பதை தாண்டி பெரிதாக எதுவும் செய்யமாட்டார்கள். செய்யவும் முடியாது என இவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அவர்கள் எத்தனைபேருக்கு தான் உதவமுடியும்?

பொழுதுபோக்கு என பார்த்தால் படத்தில் ஒன்றுமில்லை. சோகபடமும் இல்லை. வாழ்க்கை யதார்த்தத்தை கூறும் ஒரு முயற்சி இது. நாம் அதிகம் அறியாத ஒரு துறையை பற்றிய படம்.

அதில் (டிராஜி) காமடி கூட வந்துபோகிறது

"நாம் இருவர்" என்ற பழைய சிவாஜி- பிரபு பட லைட்மேன் ஒரு சம்பவத்தை கூறினார். இவர்கள் ஒரு காட்டில் ஷூட்டிங் சென்ற சமயம் இவர்கள் போன லாரியை யானை கவிழ்த்துவிட்டு இவர்கள் மயிரிழையில் உயிர்தப்பினார்களாம்.

அடுத்த நாள் பத்திரிக்கை செய்தியில் "ஷூட்டிங் ஸ்பாட்டில் யானைகள் அட்டகாசம். சிவாஜி உயிர்தப்பினார்" என செய்திகள் வந்தனவாம். சிவாஜி அன்று ஷூட்டிங் வரவே இல்லையாம். பரபரப்புக்கு அந்த லைட்மேன்கள் வந்த வேன் படத்தை சிவாஜி வேனாக சித்தரித்து தயாரிப்பாளர்கள் அப்படி செய்தி வரும்படி செய்துவிட்டார்கள்.

அரசு ஏன் சினிமாக்களுக்கு வரும் வரியில் இருந்து வரும் வருமானத்தில் இவர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் கொடுக்ககூடாது என மனதில் தோன்றியது.

சினிமா மட்டுமல்ல, வேறு ஆபத்தான துறைகளில் இருக்கும் அடித்தட்டு தொழிலாளருக்கும் இப்படி அந்தந்த துறை வருமானத்தில் எதாவது செய்யலாமே?

செலவு செய்ய ஒருமணிநேரமும், பேட்டிகளை பொறுமையாக உட்கார்ந்து பார்க்கும் மனநிலையும் இருப்பவர்கள் லைட்மேன் பார்க்கலாம்.

பொழுதுபோக்குக்கு பார்ப்பவர்கள் பார்த்தால் ஏமாந்துவிடுவீர்கள்









No comments: