Saturday, January 24, 2015

இராமர் பட்டாபிஷேகத்தன்று அழுத சிலந்தி

இராமர் 14 வருடம் வனவாசம் இருந்து நாடு திரும்பி முடிசூடுகையில் கூனியும், கைகேயியும் கூட மனமகிழ்ச்சியுடன் இருந்தார்களாம். ஆனால் அந்த சூழலிலும் வருத்தபட்டு அழுத ஒரே உயிரினம் சிலந்தி என்பார்கள். காரணம் மக்கள் வீடுகளுக்கு ஒட்டடை அடித்ததால் சிலந்திகூடுகள் அடிபட்டுபோயினவாம்.

இப்படி உலகுக்கே நல்லது விளைவிக்கும் பெட்ரோல் விலைக்குறைப்பு பெட்ரோலை நம்பியிருக்கும் சில நாடுகளின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்தள்ளியுள்ளது. அதில் ஒன்று இரான், இன்னொன்று வெனிஸ்வேலா, இன்னொன்று ரஷ்யா

மத்தியகிழக்கு நாடுகளில் நடைபெறும் இஸ்லாமிய காலிபேட் இயக்கத்தீவிரவாதத்தால் சிரியா, இராக் முதலிய நாடுகள் சின்னாபின்னமாகியுள்ளன. அடுத்தது நாம் தான் என சொல்லி ஜோர்டான், லெபனான் நாடுகள் எச்சரிக்கையாகவுள்ளன. இந்தச்சூழலில் இரான் சிரியாவின் ஜனாதிபதி அசாத்துக்கு உதவி அவரைத்தன் முழுக்கட்டுபாட்டில் கொண்டுவந்துள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லாவையும் தன் கட்டுபாட்டில் வைத்துள்ளது. இவ்வாரம் யேமன் நாடும் இரானிய அரசின் ஆதரவு பெற்ற இயக்கத்தின் கட்டுபாட்டில் வந்துள்ளது. இராக்கின் ஷியா அரசும், இரானின் ஷியா அரசும் மதத்தால் ஏற்கனவே ஒன்றுபட்டுள்ளன.

இந்த சூழலில் அரேபியாவின் வடக்கு, மேற்கு, தெற்கு என முப்புறமும் இரானின் ஆதிக்கம் வலுவடைவதால் அரேபிய அரசு தன்னால் முடிந்த ஒரே விதத்தில் அதை எதிர்கொண்டது. பெட்ரோலின் விலையை அதலபாதாளத்துக்கு குறைத்தது. ஒரு பீப்பாய் பெட்ரோல் $136க்கு கீழே விழுந்தால் இரானின் பட்ஜெட்டில் கடும் துண்டுவிழும் என்ற நிலையில் தற்போது ஒரு பீப்பாய் எண்ணெய் ஐம்பது டாலருக்கு விற்க்கபடுகிறது. இது இன்னமும் இருபது டாலருக்கு குறையும் என வல்லுனர்கள் கூறிவருவதால் இரானில் கடும் பொருளாதார நெருக்கடி உருவாகி வருகிறது.

இதேபோல எண்ணெய்ப்பொருளாதாரத்தை நம்பியிருக்கும் இன்னொரு நாடு வெனிஸ்வேலா. எண்ணெய் இருக்கும் தைரியத்தில் பன்னாட்டு எண்ணெய்க்கம்பனிகளை தேசியமயமாக்கி நாட்டை விட்டு விரட்டினார் சாவேஸ். எண்ணெய் விலை அதிகரித்த காலக்ட்டத்தில் அக்காசை வைத்து மக்களுக்கு பல நலத்திட்டங்களை நிறைவேற்றி மக்கள் ஆதரவைப்பெற்றார். அவர் மறைவுக்கு பின் அதிபரான அவர் கட்சியை சேர்ந்த மதுரோவுக்கு இப்போது எண்ணெய் விலை குறைந்தது கடும் சோதனையாக விடிந்துள்ளது. 64% விலையேற்றத்தால் கடைகளில் பொருட்களுக்கு விலைக்கடுப்பாடு விதித்தார். அதனால் கடைகளில் பொர்டுகளை நட்டத்துக்கு விற்க வணிகர்கள் தயாராக இல்லாமல் கடைகளின் ஷெல்புகளை காலியாக விட்டுவிட்டார்கள்.

வெனிஸ்வேலாவில் இன்று துவைக்கும் சோப்புக்கு பஞ்சம் என்பதால் மக்கள் பலநாளாக துவைக்காத துணிகளையே அணியும் நிலை. பால், காய்கறி எதுவும் கண்ணில் படுவதில்லை. கடைகளில் ஆயிரகணக்கான பேர் வரிசையில் நின்று பொருட்களை வாங்கும் நிலை. வரிசையில் நின்றாலும் பொருட்கள் கிடைப்பது உறுதியில்லை.கடைகளில் நிகழும் அடிதடி, கலவரத்தைக்கட்டுபடுத்த இயந்திரத்துப்பாக்கியேந்திய காவலர்கள் அரிசிமூட்டைகளுக்கு காவலுக்கு நிற்கும் நிலை.

ஆக உலகமக்களுக்கு நன்மையை ஏற்படுத்திய பெட்ரோல் விலைக்குறைப்பு இந்த நாடுகளின் பொருளாதாரத்தில் பெரிய ஓட்டையைப்போட்டுவிட்டது வருத்தமான விஷயமே



No comments: