Monday, March 10, 2014

பரிணாம அனாதைகள்

உயிர்தளிப்பு கோட்பாட்டில் இரு உயிரினங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொள்வதும், தம் பார்ட்னருக்கு ஏற்ற வகையில் அவை பரிணாம வளர்ச்சியில் மாறுதல் அடைவதும் வழக்கம். மனிதனுக்கும், நாய்,பூனை, கோழி, மாடு முதலானவற்றுக்கும் இடையே ஏற்பட்ட பார்ட்ன்சர்ஷிப் ஒரு உதாரணம்.

சில நாட்களுக்கு முன்பு கலபகோஸ் தீவு உயிரினங்களுக்கிடையே இருக்கும் இம்மாதிரி பார்ட்னர்ஷிப்பை நேஷனல் ஜியாக்ரபிக் டாக்குமெண்டரி ஒன்றில் கண்டேன். அங்கே மிகபெரிய சைஸில் (200 கிலோ) ஆமைகள் உண்டு. அவற்றின் உடலில் பூச்சிகள் ஏராளமாக குடியேறிவிடும். ஆமைகளால் பூச்சிகளை எதுவும் செய்ய முடியாது. அதனால் அவை கலபகோஸ் தீவில் இருக்கும் பின்ச் (finch) எனப்படும் குருவிகளுடன் ஒரு பார்ட்னர்ஷிப் அமைத்துகொண்டன. அதன்படி ஆமைகள் நிமிர்ந்து அசையாமல் நிற்க ஆமைகள் உடலெங்கும் உள்ள பூச்சிகளை குருவிகள் உண்டுவிடும். இந்த டீல் ஆமைகளுக்கும் நல்லது, குருவிகளுக்கும் நல்லது.

இப்படி பார்ட்னர்ஷிப் போட்டு வளர்வதில் சிக்கல் என்னவெனில் பார்ட்னருக்கு ஏதேனும் சிக்கல் வந்தால் நாமும் பாதிக்கபடுவோம். அப்படி பாதிக்கபட்டு அனாதையான சில பழங்கள் தான் அவகாடோ, பப்பாளி, மாம்பழம், துரியன் பழம் முதலானவை.

சந்ததி பெருக்க அவகாடோ ஒரு பார்ட்னர்ஷிப்பை மேற்கொள்ளும் அவசியம் உருவானது. அவகடோ விதைகள் மரத்துகடியில் விழுந்தால் அந்த விதை வளராது. சந்ததி பெருக்க அவகாடோ விதைகள் தாய்மரத்துக்கு வெகு தொலைவு தாண்டி விழவேண்டியது அவசியம். ஆக அவகாடோ 13 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வழித்த கொமொபோதெரே (gomphothere ) எனும் வகை யானை மாதிரி பெரிய மிருகத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி கொம்போதெரே அவகாடோ பழத்தை அப்படியே விழுங்கும். அதன் மிகப்பெரிய விதை அதன் உடலுக்குள் சென்று ஜீரணம் ஆகாமல் கழிவில் அழகாக வெளியே வந்துவிடும். கழிவு அதற்கு உரமும் கூட.

இன்று பூமியில் வசிக்கும் எந்த உயிரினத்துக்கும் பெரிய சைஸில் இருக்கும் அவகடோ விதையை அப்படியே விழுங்கி கழிவில் வெளியேற்றும் ஆற்றல் இல்லை. கொம்போதிரேவுக்கு மட்டுமே அந்த ஆற்றல் உண்டு. 13 மில்லியன் ஆண்டு நீடித்த இந்த பார்ட்னர்ஷிப் சுமார் 13,000 ஆண்டுக்கு முன்பு கொம்போதிரே இனம் அழிந்ததால் முடிவுக்கு வந்தது. தான் பரிணாமவியல் அனாதையான விவரம் இன்னும் தெரியாமல் அவகடோ இன்னமும் கொம்போதிரேவுக்கு ஏற்ற வண்ணம் தான் பழங்களையும், விதைகளையும் உற்பத்தி செய்கிறது. அதன் அதிர்ஷ்டம் 10,000 ஆண்டுக்கு முன்பு விவசாயத்தை மனிதன் கண்டுபிடித்து அவகாடோவை பழமரமாக மாற்றி பயிரிட்டு வருகிறான். மாம்பழம், பப்பாளி, துரியன், பலா முதலான பரிணாம அனாதைகள் தப்பிபிழைத்த கதையும் இதுவே. ஆனால் தாம் அனாதையானதே இன்னமும் அவற்றுக்கு தெரியாது.
கீழிருக்கும் இருக்கும் யுடியுப் விடியோவில் இந்த பரிணாம அனாதைகள் கதை சுவாரசியமாக விவரிக்க படுகிறது. 

No comments: