Tuesday, April 09, 2013

Fwd: நாகரிக வியாதிகளும், காட்டுமிராண்டி உணவுமுறையும்- 5



பாகம் 5 சற்றுமுன் வல்லமையில் வெளியானது http://www.vallamai.com/?p=34336


நாகரிக மனிதனின் வியாதிகளும், காட்டுமிராண்டி உணவுமுறையும்- 5

இன்றைய மருத்துவர்களால் பரிந்துரைக்கபடும் உடல்நல குறிப்புக்களை ஆதிமனிதன் பின்பற்றி இருந்தால் மனித இனமே பரிணாம வளர்ச்சியில் பின் தங்கி இருக்கும். அந்த அளவு மோசமான அறிவுரைகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கபடுகின்றன. உதாரணம் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் உண்ணச் சொல்லி இவர்கள் கொடுக்கும் அறிவுரை. முட்டையில் உள்ள மினரல்கள், வைட்டமின்கள் எல்லாமே மஞ்சள் கருவில் தான் உள்ளன. முட்டையின் மஞ்சள் கரு என்பது ஒரு உயிருக்குத் தேவையான அனைத்து மூலப்பொருளையும் கொண்டது. அத்தகைய சத்தான மஞ்சள் கருவை தூக்கி எறிந்து வெள்ளைக் கரு ஆம்லட்களை உண்டு பலரும் உடல்நலனை கெடுத்து கொண்டார்கள். முட்டைக்கு பதில் கடைகளில் விற்பனைக்கு வந்த எக் ஒயிட்டில் பல கெமிக்கல்கள், பிரசர்வேடிவ்கள் கலக்கப்பட்டு இருந்தன.

இதே மாதிரி பாலைக் குடிக்க வேண்டாம் எனச் சொல்லி கொழுப்பு நீக்கிய ஸ்கிம் மில்க்கை குடி என இவர்கள் கூறிய அறிவுரையையும் சேர்த்துக் கொள்ளலாம். கொழுப்பு எடுத்த பாலை கொட்டிய பால் என தமிழகத்தில் அழைப்பார்கள். அதில் புரதம், கால்ஷியம் தவிர்த்து எதுவும் கிடையாது. பாலில் இருக்கும் கொழுப்பை நீக்கியவுடன் அதில் உள்ள வைட்ட்மின் ஏ, வைடமின் டி எல்லாம் அகன்றுவிடும். அதனால் செயற்கையாக வைட்டமின் ஏவையும், வைட்டமின் டியையும் கொட்டிய பாலில் கலந்து வந்தார்கள். ஆனால் வைட்டமின் ஏவும், வைட்டமின் டியும் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள். பாலில் உள்ள கொழுப்பு இன்றி அவை உடலில் சேருவது இல்லை. கழிவில் அப்படியே அந்த வைட்டமின்கள் வந்துவிடும். கொட்டிய பாலில் செயற்கையாக சேர்க்கப்பட்ட அந்த வைட்டமின்கள் நம் உடலில் சேரவேண்டும் எனில் கொட்டிய பாலை உண்கையில் பாலுடன் வெண்ணையை உண்ண வேண்டும்!!!!

கொட்டிய பால் உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைத்ததும் பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். அதற்கு முன் கொட்டியபாலை அவர்கள் விற்காமல் கொட்டித்தான் வந்தார்கள். அதற்கு இப்படி ஒரு சந்தை கிடைத்ததும் அவர்களுக்கு மகிழ்ச்சி.

2 வயது முதல் குழந்தைகளுக்கு கொட்டியபாலை கொடுக்கச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சமீபத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் உங்கள் வயது ஐம்பதை தாண்டி உங்களுக்கு ரத்த அழுத்தம் இருந்தால் உங்களுக்கு ஸ்டாடினை பரிந்துரைக்கலாம் என எப்.டி.ஏ ஒரு விதியை அறிமுகபடுத்தியது. இதனால் கொலஸ்டிரால், இதய அடைப்பு பிரச்சனை எதுவும் இல்லாத  65 லட்சம் அமெரிக்கர்கள் ஸ்டாடினை உட்கொள்ளக்கூடிய நிலைக்கு ஆளானார்கள்.

ஆனால் ஆய்வுகள் இதுகுறித்து என்ன கூறுகின்றன? மந்காட்டன், நியூயார்க் பகுதியில் வாழ்ந்த முதியவர்கள் 2277  பேரைப் பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ந்ததில் கிடைத்த புள்ளிவிவரங்கள் கொல்ஸ்டிராலும், எல்டிஎல்லும் மோசமானவை எனக் காட்டவில்லை. மாறாக எத்தனைக்கெத்தனை கொலஸ்டிராலும், எல்டிஎல் விகிதமும் அதிகமாக இருந்ததோ அத்தனைக்கு அத்தனை அவர்கள் அதிகமாக உயிர்வாழ்ந்தார்கள்.


இந்த ஆய்வின்படி மொத்த கொலஸ்டிரால் அளவு 175க்கு கீழ் இருந்தவர்களில் 16.7% 10 ஆண்டுகளில் உயிர் இழந்தார்கள்.

கொலஸ்டிரால் 176ல் இருந்து 200 வரை இருந்தவர்களில் 13.6% பேர் 10 ஆண்டுகளில் உயிர் இழந்தார்கள்.

கொலஸ்டிரால் 200 தாண்டியதும் மரணங்கள் கிட்டத்தட்ட சரிபாதியாக (10%) குறைந்தன.

அதேபோல் கெட்ட கொலஸ்டிரால் எனப்படும் எல்டிஎல் கொலஸ்டிரால் 97க்கு கீழ் இருந்தவர்களில் 15.7% பேர் 10 ஆண்டுகளில் உயிர் இழந்தார்கள். ஒப்பீட்டளவில் மருத்துவர்கள் ஸ்டாடின் கொடுக்கும் அளவு "மோசமாக" கருதப்படும் 144 என்ற அளவைத் தாண்டி எல்.டி.எல் இருப்பவர்களில்9.4% பேர் 10 ஆன்டுகளில் மரணம் அடைந்தார்கள்.

இன்றைய மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அதிகபட்ச எல்.டி.எல், மொத்த கொலஸ்டிரால் அளவு என்ன?எல்.டி.எல் 130.மொத்த கொலஸ்டிரால் 200. நீங்கள் வயதானவராக இருந்து, மருத்துவர் சொல்லும் அளவுகளுக்கு உங்கள் கொலஸ்டிராலை குறைத்தால் என்ன ஆகும்?

முட்டையை குறித்து நடத்தபட்ட்ட ஆய்வுகள் மருத்துவ அறிவுரைகள் எவ்வளவு தவறானவை எனக் காட்டின.

கிட்டத்தட்ட 10 லட்சம் பேரை வைத்து சீனாவில் நடத்தபட்ட இந்த மெகா அனாலிசிஸ் ஆய்வு முட்டை உண்பதற்கும், ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவுக்கும், இதயநோய்களுக்கும் ஸ்னானபிராப்தி இல்லை என்றது. உங்களுக்கு சக்கரை இருந்தால் முட்டை உங்களுக்கு இதய்நோயை வரவழைக்கும் (ஆனால் அது இந்த நிலையில் கூட ஒரு சந்தேகத்துக்கு உரிய கருதுகோள் தான்). டயபடிஸ் இல்லாதவர்கள் முட்டையை உண்டால் அது அவர்கள் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவை எந்த விதத்திலும் பாதிப்பது இல்லை, இதயநோயும் வருவது இல்லை என்கிறது பேராசிரியர் லியூவின் ஆய்வு.

முட்டையின் வெள்ளைக் கருவை உண்டு, கொழுப்பு எடுத்த பாலை குடித்துத் தான் நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக இருந்தார்களா என்ன?


No comments: