Tuesday, February 05, 2013

சென்று வாருங்கள் டோண்டு

மனித வாழ்க்கை அநித்தியமானது. வலைபதிவில் நம் அனைவர் மனதையும் கவர்ந்த என் இனிய நண்பர் டோண்டு ராகவன் தன் உள்ளம் கவர் கள்வனான மகர நெடுங்குழைக்காதன் திருவடியை சேர்ந்து விட்டார்.

டோண்டுவை பற்றி தேன்கூடு எழுதியிருந்த விமர்சன உரையை இங்கே பதிகிறேன். இதை விட சிறப்பாக யாரும் அவரை புரிந்துகொண்டிருக்க முடியாது.

சென்று வாருங்கள் நண்பரே. வி வில் மிஸ் யு


Inline image 1


தேன் கூட்டிற்கு மனமார்ந்த நன்றி

இப்போது சென்னையில் காலை 05.40. கண்விழித்ததும் வழக்கம்போல கணினியை ஆன் செய்து, இணைய இணைப்பைத் தர, கூகள் டாக்கில் ஜிவ்வென்று மேல் எழும்பியது மின்னஞ்சல் என் அருமை நண்பர் செல்வம்$ அவர்களிடமிருந்து. தேன் கூட்டில் இன்றைய வலைப்பதிவராக என்னை குறிப்பிட்டுள்ளார்கள் என்ற செய்தியை தெரிவிக்கிறார் அவர்.

தேன்கூட்டில் வந்த write up-ஐ கீழே கொடுத்துள்ளேன். நடு நடுவில் எனது கமெண்டுகளையும் இடாலிக்ஸ், தடித்த எழுத்தில் இட்டுள்ளேன். 

சென்னையை சேர்ந்த டோண்டு என்ற நரசிம்மன் ராகவன் அவர்களை அறியாதவர்களே வலைபதிவு உலகில் இல்லை எனலாம். (இது ரொம்ப ஓவர்)

தமிழ்நாட்டின் புகழ் பெற்ற மொழி பெயர்ப்பாளராக இருக்கும் டோண்டு மொழிபெயர்ப்பு துறையில் 30 ஆண்டு அனுபவம் பெற்றவர். பொதுத்துறையில் எஞ்சினியராக வேலை செய்து விருப்ப ஓய்வு பெற்ற டோண்டு 2004 முதல் வலைபதிவு செய்து வருகிறார். 

நேர்மைக்காக குரல் தர தயங்காத டோண்டு நகைச்சுவையுடன், அதே சமயம் வலிமையாக தன் கருத்தை சொல்வதிலும் தன் ஆதர்ச பத்திரிக்கையாளரான சோ அவர்களை போலவே இருக்கிறார்.(சோ அவர்களுடன் என்னை ஒப்பிட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்)

இதுவரை டோண்டு பின்னூட்டமிடாத வலைபதிவுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.(ஆகவே போலி டோண்டு ஒவ்வொரு பதிவாகப் போய் என் பெயரில் தவறாக பின்னூட்டம் இட்ட போது வேலை பளு அதிகமானாலும், பின்னூட்டங்களே இடாது இருப்போம் என ஒரு நாளும் யோசிக்கக் கூட இல்லை)

தமிழ்மணத்தில் இரு முறை நட்சத்திரமானவர் என்ற பெருமையும் டோண்டுவுக்கு உண்டு. (காசி மற்றும் மதி அவர்களுக்கு மிக்க நன்றி).

தமது பிளாக்கர் எண்ணை கூட நினைவு வைத்திராத வலை பதிவர்கள் இவரது பிளாக்கர் எண்ணை தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் சொல்லுவார்கள். (இந்த ஐடியாவைக் கொடுத்த மதி அவர்களுக்கு மீண்டும் என் நன்றி

முற்போக்கு கருத்துக்களை கொண்ட சிறந்த பெண்ணியவாதியான டோண்டு சமூகத்தால் அடக்கப்பட்ட தலித்களுக்கும்,பெண்களுக்கும் குரல் தர தயங்கியதே இல்லை. இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க இவர் போட்ட பதிவுகள் அனைவராலும் விரும்பி வாசிக்கப்பட்டன.தலித் ஆபிசர்களை கட்டாய காத்திருப்பில் வைப்பதை கண்டித்து இவர் எழுதிய பதிவுகள் மிகவும் புகழ் பெற்றவை. கற்புநிலை பற்றி இவர் எழுதிய பதிவுகள் வலைபதிவு உலகையே அதிசயத்துடன் திரும்பி பார்க்க வைத்தவை. 

பின்னூட்ட சூப்பர்ஸ்டார் என்றே இவரை வேடிக்கையாக சொல்லுவார்கள்.பிரையன் லாரா போல் சர்வசாதாரணமாக 400, 500 என்று பின்னூட்டம் வாங்குவார். இஸ்ரேல் ஆதரவு, (பூர்வ ஜன்ம பந்தம்) சோ ஆதரவு, ராஜாஜி மீது மாறாத அன்பு,மகரநெடுங்குழைகாதன் மீது எல்லை தாண்டிய பக்தி (அவன் அருளின்றி டோண்டு ஏது?), தலித்கள் மீது அன்பு,பெண்ணியம், வணிக ஞானம் என தம் கருத்தை துணிந்து வல்லமையோடும்,நெஞ்சு துணிவோடும் உரத்து சொல்லும் டோண்டுவை வலைபதிவு உலகின் சச்சின் டெண்டுல்கர் என்று அழைத்தால் மிகையல்ல. (மறுபடியும் ரொம்ப ஓவர்)

நன்றி: #வாசகர் பரிந்துரை (19/06/06)

தேன்கூட்டிற்கும், என்னை பரிந்துரை செய்த வாசகருக்கும் மிக்க நன்றி. 

அன்புடன்,
டோண்டு ராகவன்


2 comments:

Cinema Virumbi said...

திரு டோண்டு ராகவன் அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

சினிமா விரும்பி

http://cinemavirumbi.blogspot.in

K.R.அதியமான் said...

நேற்று மதியம் 2 மணி அளவில் தான் அவர் வீட்டிற்கு செல்ல முடிந்தது. அதற்க்குள் சுடுக்காட்டுக்கு கொண்டு சென்று விட்டார்கள். அங்கு சென்று இறுதி மரியாதை செய்ய முடிந்தது.

ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டோம்.
கடந்த வருடம் அவரிடம் பேசாமல் விட்டுவிட்டேன் என்று மிக வருத்தம்.