Saturday, December 22, 2012

ட்ரெய்ன் டு நோவேர் (Train to nowhere)

ட்ரெய்ன் டு நோவேர் (Train to nowhere)

புவிவெப்பமயவாதிகளுக்கு பிடிக்காத விஷயம் கார். அதனால் அவர்கள் காரில் போவது இல்லை என நினைக்கவேண்டாம். அவர்கள் எல்லாம் பிரைவேட் ஜெட்டில் தான் பறப்பார்கள். ஆனால் அமெரிக்கர்கள் சகட்டுமேனிக்கு கார்களில் போவதும், ஐரோப்பியர்கள், ஆசியர்களை போல பொதுபோக்குவரத்தை பயன்படுத்தாதும் பசுமைவாதிகளுக்கு கடும் கோபத்தை வரவழைத்தது.


ஐரோப்பியர்கள் ஏன் பொதுபோக்குவரத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர்?அவர்களுக்கு கார்களில் போவது விருப்பம் இல்லையா?

ஐரோப்பாவில் பெட்ரோல் விலை காலனுக்கு எட்டு முதல் 11 டாலர். அமெரிக்காவில் காலனுக்கு மூன்று முதல் நான்கு டாலர். இப்படி வரிவிதிப்பால் ஐரோப்பாவில் எல்லாம் சின்ன, சின்ன கார்களாக ஓடுகின்றன. அதுபோக டீசல் கார்களும் அதிகம் ஓட்டுகின்றன. பெட்ரோலில் விதிக்க்படும் வரிகளை கொண்டு ஐரோப்பிய அரசுகள் தம் நலன்புரி திட்டங்களை பைனான்ஸ் செய்து வருகின்றன.

பெட்ரோல் விலை குறைவால் அமெரிக்காவில் எல்லாமே பெரிய கார்களாகவும், எஸ்யுவியாகவும் ஓடுகின்றன. இதனால் புவிஎப்பமயம் என்னாகும் என யோசித்த புவிவெப்பமயவாதிகள் கடும் கோபம் கொன்டு ஐரொப்பா,ஆசியாவில் இருப்பதுபோல் அதிக்வேக புல்லட் ரயில்களை அமெரிக்காவிலும் அறிமுகபடுத்தினால் மக்கள் கார்களையும், விமானங்களையும் கைவிட்டுவிடுவார்கள் என்ற கனவில் ஹைஸ்பீடு ரயில் திட்டத்தை அறிமுகபடுத்தினார்கள்.

ரயில்வே என்பது பல நாடுகளிலும் வெள்ளையானை. அதற்கு மானியம் கொடுத்து கட்டுபடி ஆகாது. மானியம் இல்லையென்றால் மக்கள் ரயிலில் ஏறமாட்டார்கள். உதாரணமாக ஏற்கனவே ஆம்டிராக் என்ற ரயில் சர்வீஸ் அமெரிக்காவில் உள்ளது. அவர்கள் விற்கும் பர்கர் ஒன்றுக்கு அரசுக்கு $19 நஷ்டம் ஆகிறது. ஆனால் அதே மெக்டானல்ட்ஸ் ஐந்து ரூபாய்க்கு பர்கர் விற்று லாபம் ஈட்டுகிறது.

அதுபோக ஹைஸ்பீடு ரயிலுக்கு பல மாநிலங்களையும் காசு கொடுக்க சொல்லவும் கூட்டி கழித்து பார்த்த ஒஹையோ, விஸ்கான்ஸின், ப்ளாரிடா போன்ற மாநிலங்கள் ஆளை விடுங்க சாமிகளா என பின்வனக்கி விட்டன. நாடு முழுவதையும் இணைக்கும் திட்டம் தோல்வியில் முடிந்தாலும் பசுமைவாதிகளின் கோட்டையான கலிபோர்னியாவிலாவது இதை வெற்றிகரமாக நடத்தி காட்டுவோம் என சொல்லி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சான்டியாகோ நகர் வரை ஹைப்ஸ்பீடு ரயில் விடுவதாக சொல்லி மக்களிடம் ஒன்பது பில்லியன் டாலரை அதற்கு நிதி ஒதுக்க சொல்லி ரெபெரென்டம் வைத்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.

அப்புறம் மறுபடி கூட்டி,கழித்து கணக்கு போட்டு பார்த்ததில் 33 பில்லியன் ஆகும் என சொல்லப்பட்ட பட்ஜெட் நூறு பில்லியன் ஆகும் என தெரிந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்த வெள்லையானையை கட்டி மேய்க்கும் நிதி கலிபோர்னியாவில் இல்லை. கலிபோர்னியா அரசு திவால். இதனால் திட்டத்துக்கு மக்கள் ஆதரவு பெருமளவில் குறைந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பசுமைவாதிகள் இன்னொரு திட்டம் தீட்டினார்கள். ஏற்கனவே அனுமதித்த பணம் முழுவதையும் பயன்படுத்தி ஏதோ ரென்டு ஊருக்கு நடுவே ரயிலை விடுவோம் என பிளான். பாதியில் ரயில்பாதை போட்ட பின்னர் மீதி ரயில் பாதையை போடமாட்டோம் எனவா மக்கள் சொல்லபோகிறார்கள் என்ற நம்பிக்கையில் பேக்கர்ஸ்பீல்டு, மதேரா ஆகிய இரு ஊர்களுக்கு இடையா ஹைஸ்பீடு ரயில் பாதை கட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

இதில் ஒரே பிரச்சனை என்னவெனில் இந்த இரு ஊர்களில் ஈ,காக்காய்,குஞ்சு,குளுவான் குட்டி இல்லை. ரயில் போகும் பாதையில் கலிபோர்னியா ஜனதொகையில் 3% தான் வசிக்கிறது. இரு ஊர்களுக்கு இடையே காரில் போனால் இரன்டுமணிநேரத்தில் போய்விடலாம். இப்படி ஆன்டிபட்டி டு அத்திபட்டிக்கு புல்லட் ரயில் விடுவதை "ட்ரெய்ன் டு நோவேர்" என பத்திரிக்கைகள் பலவும் கிண்டல் செய்து வந்தாலும் புவிவெப்பமயவாதிகள் தம் கனவு திட்டத்தை நிறுத்துவதாக இல்லை.

2033ல் மதேரா பக்கம் வந்தால் மறக்காமல் புல்லட் ரயிலில் ஏறி பயணம் செய்யுங்கள்.

1 comment:

manjoorraja said...

அட அங்கும் இப்படியெல்லாம் நடக்கிறதா?