Monday, December 17, 2012

சந்திரமவுலியின் மகன்

சந்திரமவுலி மெதுவாக கண்களை திறந்தார்.

எதிரே இருந்தவருக்கு ஐம்பது வயது இருக்கும். வசதியானவர் என்பதை கையில் இருந்த மோதிரங்களும், வெளியே நின்ற காரும் காட்டியது.

"சார் சொந்த ஊர் டெல்லி. இப்ப அமெரிக்கால இருக்கார். ஒரு கோயில் கட்டிகிட்டு இருக்கார். அதுக்கு தமிழ் தெரிஞ்ச  பூசாரி வேணும்னு அவங்க கமிட்டி தீர்மானம் போட்டு உங்களை பத்தி கேள்விபட்டு வந்து இருக்கார். உங்க பசங்க ரெண்டு பேர்ல யாரையாச்சும் அனுப்பினால் சரி என்கிறார்" என உடன் வந்த பள்ளி ஆசிரியர் கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.

"கூட்டிகிட்டு போகட்டும்" என சந்திரமவுலி கூறினார். ஆனால் பக்கவாதத்தால் பாதிக்கபட்ட அவர் வாயில் இருந்து வார்த்தைகள் சரியாக வெளியே வரவில்லை.

இரு மகன்களையும் கல்யாணசுந்தரம் அழைத்தார். வந்து நின்றார்கள்.

"அமெரிக்கால பூசாரி வேலை. யாருக்கு போக விருப்பம்? அப்பா ஓக்கேன்னு சொல்லிட்டார்."

"போதும் இந்த தொழில்" என்றான் சின்னவன். "தலைமுறை தலைமுறையாக வறுமை. இதோ பரம்பரையா இந்த கோயிலில் பூஜை செய்து இப்ப பக்கவாதம் வந்து படுத்து கிடக்கறார். தருமகர்த்தா ஒருத்தராவது எட்டிபார்த்தார்களா? உதவி செய்தார்களா? வேதமந்திரமா உச்சரித்த வாய் இப்ப பேச முடியாம அடங்கி கிடக்கு. அந்த சாமியாச்சும் கேட்டுதா? எனக்கு வேண்டாம் இந்த தொழில். நான் பிகாம் வரை படிச்சிருக்கேன். கணக்கு எழுதி பிழைச்சுக்கறேன்"

"நான் தயார்" என்றார் பெரியவன். "இது காசு பணத்துக்கு செய்யும் தொழில் அல்ல. இது ஒரு சேவை. நாம் நன்றாக இருப்பதும், இல்லாததும் அவன் பார்த்துகொள்வான்"

சந்திரமவுலி முகத்தில் கலவையாக உணர்ச்சிகள். அனைவரையும் வெளியே போக சொன்னார். வாத்தியாரையும் போக சொன்னார். கூட்டி போக வந்த டெல்லிகாரர் மட்டும் இருந்தார்.

அதன்பின் தட்டுதடுமாறி இந்தியில் பேச துவங்கினார் சந்திரமவுலி.

"இது எனக்கு முக்கியமான விஷயம் இல்லை. ஆனால் பின்னாளில் உங்களுக்கு தெரிஞ்சு வருத்தபடகூடாது. என் பெரியமகன் ராஜு என் சொந்த மகன் இல்லை. என்ன ஜாதி, குலம், கோத்திரம் என்பது கூட தெரியாது. அவன் என்னிடம் வந்தது பெரிய கதை. நாங்க காசிக்கு டூர் போன பஸ்ஸில் இவனை பெற்றுவிட்டு அப்போதே இறந்துவிட்டாள் அவனை பெற்றவள். குழந்தைவரம் வேண்டி காசிக்கு போன நானும் என் மனைவியும் தூக்கி வந்து வளர்த்தோம். அந்த புண்ணியமோ என்னவோ  எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.இருவருக்கும் எல்லா வேதமும், ஸ்லோகமும் சொல்லிகொடுத்துதான் வளர்த்தோம். இருவரும் கோயிலில் பூஜை செய்வார்கள். ஊரில் யாருக்கும் இவன் பின்புலம் சொல்லவில்லை. அவனுக்கு கூட தெரியாது. எனக்கு அது எல்லாம் ஒரு பொருட்டு இல்லை. ஆனால் உங்களுக்கு.."

"என்க்கும் தான்" என்றார் டெல்லிகாரர் சுரேஷ் ஷர்மா. "ராஜுவை கூட்டிகொண்டு போகிறேன். நல்லபடியாக என் மகனை போல கவனித்து கொள்கிறேன்"

__

"சுரேஷ்..நம் மகள் லவ் பண்ன ஆரம்பித்துவிட்டாள் என நினைக்கிறேன்" என்றார் ஸ்வேதா.

"அதுக்குள்ளா, அவள் இன்னும் சின்ன பெண் தானே?"

"சின்ன பெண்ணா? வயசு 20 ஆகுது. பையன் கூட நீங்கள் கூட்டிவந்த பூசாரி தான். நல்லவனா இருக்கான். ஆனால் ரொம்ப அப்பாவி. இவனை எப்படி இவ லவ் பண்ண ஆரம்பித்தாள் என்பது இன்னும் புரியலை" சொல்லிவிட்டு ஸ்வேதா அகன்றார்.

---

"ராஜு.."

"சார்" ராஜு ஓடிவந்தான்.

"உன் கிட்ட கொஞ்சம் பேசணும்" சுரேஷ் அவனை கோயிலில் இருந்த புக்ஸ்டாலுக்கு அழைத்து சென்றார்.

"என் மகளுடன் உன்னை காபி ஷாப்பில் பார்த்ததாக சிலர் சொன்னார்கள். லுக், நீ என் மகளுடன் சுற்றுவது எனக்கு பிடிக்கவில்லை.  உன்னை பிலடெல்பியாவில் இருக்கும் இன்னொரு கோயிலுக்கு அனுப்பி வைக்கிறேன். என் நண்பர் தான் அங்கே தருமகர்த்தா. இத்துடன் இந்த மேட்டரை நீ முழுக்க மறந்துவிடவேண்டும் என விரும்புகிறேன்"

ராஜு சிலையாக நின்றான்.

"நீங்கள் முற்போக்குவாதி என நினைத்தேன். வழக்கமான இந்திய தகப்பன் மாதிரிதான் இருக்கிறீர்கள்."

சுரேஷ் தடுமாறினார்.அப்புறம் சுதாரித்தார்.

" உன்னிடம் சொல்லவேண்டாம் என உன் அப்பா சொன்னார், ஆனால் வேறு வழியில்லை. நான் ஷர்மா. பிராமணன். உன் ஜாதி என்னனு யாருக்கும் தெரியாது. நீ ஒரு தத்து எடுக்கபட்ட அனாதை. ஜாதி முக்கியம் இல்லைனு பலரும் நினைக்கலாம். ஆனால் பல விஷயங்களில் அது அப்படி இல்லை.."

ராஜு பேசவில்லை.

"நீ போகலாம், பிலடெல்பியாவுக்கு.."

"நான் இந்தியா போகிறேன்" என்றான் ராஜு.

"அதுதான் உன் விருப்பம் என்றால் அனுப்பி வைக்கிறேன்" என்றார் சுரேஷ். "உன்னை நல்லபடியாக பார்த்துகொள்வதாக உன் தந்தையிடம் சொன்னேன். முடியவில்லை. வாக்கு கொடுப்பது எளிது. நிறைவேற்றுவது?..?"

"கஷ்டம் தான்" என்றான் ராஜு. "ஆனால் சில சமயங்களில் கஷ்டமான விஷயத்தையும் செய்யதான் வேன்டி உள்ளது. இப்ப கூட பாருங்கள்..நீங்கள் தான் என் அப்பா, என் அம்மாவை காதலித்து கைவிட்டுவிட்டு இங்கே வந்து இன்னொருத்தியை கல்யாணம் செய்துகொண்டீர்கள், அப்புறம் மனசாட்சி உறுத்தி என்னை பூசாரி வேலைக்கு கூட்டி வருவது போல இங்கே கூட்டி வந்து வளர்த்து வருகிறீர்கள் என்ற உண்மையை சொல்வதை விட ஜாதிவெறியராக வேஷம் போட்டு தங்கையை காதலிப்பதில் இருந்து என்னை தடுப்பது உங்களுக்கு கஷ்ட்டமாக தான் இருந்து இருக்கும். ஆனால் அதை நீங்கள் செய்யவில்லையா?"

சுரேஷுக்கு வாயே வரவில்லை.

" உங்கள் மகளை நான் லவ் செய்தேன். ஆனால் காதலனாக அல்ல, சகோதரனாக. என்னிடம் இதை சொன்னதே அவள்தான். அவளுக்கு சொன்னது நீங்கள். அதுவும் நீங்கள் குடிபோதையில் இருந்தபோது . அதை பகிரங்கபடுத்தி உங்கள் குடும்ப வாழ்க்கையை கெடுக்கவேன்டாம் என நான் தான் அவளிடம் சொல்லி இருந்தேன். ஆனால் நான் அவளை காதலிப்பதாக நீங்கள் நினைத்து இப்படி ஜாதிபற்று வேஷம் போட்டு ஒரு பெரிய டிராமா ஆடிவிட்டீர்கள்."

"மகனே.."

"மகன்? என் அப்பா பெயர் சந்திரமவுலி...நான் போகிறேன். போய் கடைசி காலத்தில் அவருக்கு பணிவிடை செய்தாவது உங்களுக்கு பிறந்த பாவத்தை தீர்த்துகொள்கிறேன்.நீங்கள் எனக்கு எதாவது செய்ய நினைத்தால் அதுக்கு பதில் தங்கையையும், சித்தியையும் நன்றாக பார்த்து கொள்ளுங்கள். இதை உளறிகொட்டி உங்கள் வாழ்க்கையை கெடுத்துகொள்ள வேண்டாம்.கன்சர்வேடிவ் பிராமணன் வேஷமும் புதிதாக போடவேன்டாம். அது உங்களுக்கு பொருந்தவில்லை"

சொல்லிவிட்டு வெளியேறினான் ராஜு

No comments: