Sunday, February 12, 2012

பசுமைவாதம் இந்தியாவுக்கு கட்டுபடியாகாத லக்சுரி

பசுமைவாதம் இந்தியாவுக்கு கட்டுபடியாகாத லக்சுரி

koodankulam3.jpg

"அழகிய வனபகுதியில் வீடு கட்டினால் அடுத்த நிமிடம் முதல் நீங்களும் பசுமைவாதியே" என ஒரு பழமொழி உண்டு. காரணம் மற்றவர்கள் அங்கே வீடு கட்டினால் நம் வ்யூ கெட்டுவிடும்.அதனால் நம் வீடு மட்டும் அங்கே இருப்பதையே நாம் விரும்புவோம்.

பசுமைவாதம் என்பது மேட்டுகுடி வர்க்கத்தின் அழகியலின் வெளிப்பாடு. நகரத்தில் சம்பாதித்து பழகிய அந்த வர்க்கத்துக்கு வார விடுமுறையையும், கோடை விடுமுறையையும் கழிக்க அழகிய பசுமை குன்றாத கிராமபகுதிகள் தேவை.அங்கே வளைந்து ஓடும் நதிகள் தேவை.அதனால் கூவத்தை குப்பைமேடாக்கிய கோமான்கள் பிளிச்சிமடாவில் கோக் ஆலை வந்தால் அதை எதிர்க்க துவங்குகிறார்கள்.

பசுமைவாதம் பெரும்பான்மை சமூகத்துக்கு முரண்பட்ட வாதமல்ல. பெரும்பான்மை சமூகத்துக்கு எதிரான வாதம். அது சராசரிகளின் அற்பத்தனத்துக்கு எதிரான அறிவுஜீவிகளின் கலகக்குரல். நிர்வாண மனிதர்களின் உலகில் ரேம்ப் வாக் செல்லும் ரெமோக்களின் கேட்வாக். அதனால் அது பொதுநீரோட்டத்துக்கு எதிரானதாக இருப்பது மட்டுமல்ல, அப்படி எதிராக இருப்பதை ஒரு தனிதகுதியாக அது கருதுகிறது.

ஆப்ரகாம் மாஸ்லோவின் நான்கு நிலை மோடிவேட்டர்களையும் அடைந்தவர்கள் ஐந்தாம் நிலையில் பசுமைவாதிகளாக மாறுகிறார்கள்.அந்த நிலையில் அவர்கள் வேண்டுவது உலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவது மட்டுமே.அந்த நிலையில் இவர்களுடன் கூட்டு சேர்வது இவர்களது பயோட்டேட்டாவால் இம்ப்ரஸ் ஆன மீடியா மற்றும் இவர்கள் ஊட்டும் பொருளற்ற அச்சத்தால் சேரும் மக்களின் கூட்டமும். 

நல்ல செய்திகளை மட்டுமே சொல்லவேண்டியிருந்தால் மீடியா என்பதே தேவையில்லை.மீடியா என்பது கெட்டதை கண்டுபிடிக்க அல்லது உருவாக்க மட்டுமே இயங்குகிறது.மீடியா லாபத்தில் இயங்க அதற்கு -புரட்சிவீரர்கள் தேவைபடுகின்றனர். இந்த கூட்டணிக்கு இயல்பான நண்பர்களாக எதிர்கட்சியினரும், உதிரிகட்சியினரும் இணைந்துவிடுகிறார்கள்.பெரும்பான்மை மக்களின் பிரதிநிதியான ஆளும்கட்சி இவர்களுக்கு இயல்பான விப்பிங் பாயாக ஆகிவிடுகிறது.

இப்படி உலகை மாற்ற கிளம்பிய மேல்தட்டு, பயத்தால் உந்தப்பட்ட அடித்தட்டின் ஒரு பகுதி, ஊடகம், எதிர்கட்சி, உதிரிகட்சி அனைத்தும் இணைந்து சமூகத்தின் மேல் தொடுக்கும் யுத்தமே புரட்சியாகிறது.இதன் நோக்கம் சமூகத்தை அழிப்பதல்ல. அதை மாற்றுவது.இந்த யுத்தத்தில் வெற்றி இறுதியில் சமூகத்தின் மைய நீரோட்டத்துக்கே கிடைக்கும்.காரணம் சமூகம் மிகவும் பிராக்டிகலானது என்பதே. யதார்த்தவாதத்துக்கு எதிரான வாதம் வித்தியாசமாக இருப்பதால் அது பிரபலமானாலும் இறுதியில் யதார்த்தவாதமே வெல்லும்.ஆனால் அது நீண்ட நெடிய யுத்தத்துக்கு பிறகே சாத்தியமாகிறது.

இந்த யுத்தத்தின் விலையை முழுவதும் ஏற்பது ஒட்டுமொத்த சமூகமுமே. உதாரணமாக நர்மதா அணை விவகாரத்தில் மேலே எழுதப்பட்ட அனைத்து சம்பிரதாயங்களும் நடந்து முடிந்தன.10 ஆண்டுகளுக்கும் மேல் நடந்த இந்த யுத்தத்தில் சமூகம் பல்லாயிரம் கோடிகளையும், கணக்கற்ற மனித சக்தியையும் இழந்தது.டன் கணக்கில் பத்திரிக்கைகள் விற்றன. புதிய புரட்சிவீரர்கள் உருவானார்கள்.அந்த களத்தில் தோல்வி கண்டதும் வெகு எளிதில் அவர்கள் அடுத்தடுத்த களங்களுக்கு நகர்ந்து விட்டார்கள்.ஊடகங்களும் அவர்களை பின் தொடர்ந்து சென்றுவிட்டன.நர்மதா அணை மட்டும் அந்த யுத்தத்தின் நினைவுசின்னமாக நின்று கொண்டிருக்கிறது.

இதே பேட்டர்ன் இன்று கூடங்குளத்திலும் ரிபீட் ஆகிறது. 12 மணிநேர மின்வெட்டுடன், பசுமைவாதம் மோதினால் எது ஜெயிக்கும் என்பது தெரியவேண்டியதில்லை.யதார்த்தவாதமும், சித்தாந்தமும் மோதும்போது யதார்த்தவாதமே இறுதியில் வெல்லும்.
வரலாற்றின் மிகப்பெரிய பாடம் மக்கள் வரலாற்றிலிருந்து பாடம் கற்பதில்லை என்பதே.

1 comment:

கிருஷ்ண மூர்த்தி S said...

//ஆப்ரகாம் மாஸ்லோவின் நான்கு நிலை மோடிவேட்டர்களையும் அடைந்தவர்கள் ஐந்தாம் நிலையில் பசுமைவாதிகளாக மாறுகிறார்கள்.அந்த நிலையில் அவர்கள் வேண்டுவது உலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவது மட்டுமே//

இங்கே இந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழகத்தில் கையாலாகாத அரசியல்வாதிகள் மட்டுமில்லை, அரசியல் சார்பு உள்ளவர்கள் கூட,தங்களால் செய்ய முடியாததை எல்லாம் ஊருக்கு உபதேசமாகவும், அடுத்தவர்களைக் களங்கப்படுத்தும் பிரசாரமாகவும் செய்வதைப் பார்க்கும் போது ரொம்ப வேடிக்கையாகத்தானிருக்கிறது.

ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகிற அபாயத்தை ஊதி ஊதிப் புதிய ரக பிரிட்ஜ், குளிர்சாதனப் பெட்டிகள் விற்பனையைப் பெருக்க ஆரம்பித்தகதை நினைவுக்கு வருகிறது. அல் கோரே மாதிரியானவர்கள் இதையே ஒரு பிரசாரமாகவும் பிழைப்பாகவும் செய்துவந்தது அம்பலப்பட்டுப் போன பிறகும் கூட அவர்கள் ஆரம்பித்து வைத்த அதோ வர்றான் பூச்சாண்டி ரகப் பீதியில் உறைந்து கிடக்கிற ஜனங்கள் மாறாத வரை

//வரலாற்றின் மிகப்பெரிய பாடம் மக்கள் வரலாற்றிலிருந்து பாடம் கற்பதில்லை என்பதே!//

நன்றாகச் சொன்னீர்கள் செல்வன்!