Thursday, October 06, 2011

லார்ட் ஆஃப் வார் - திரை விமர்சனம்

ஆயுத வியாபாரியின் கதையை சொல்லும் படம்.

ஆபிரிக்காவில்,லெபனானில்,ஆப்கானிஸ்தானில் போராடும் "விடுதலை படைகள்" அவர்களை ஒழிக்க முயலும் அரசுகள் அனைத்துக்கும் ஆயுத சப்ளை செய்கிறார் யூரி ஆர்லொவ் (நிக்கலஸ் கேஜ்).கூட உதவிக்கு அவரது தம்பி.ஆயுதம் வாங்கும் குழுக்கள் அவருக்கு பிளட் டயமண்ட் எனப்படும் ரத்த வைரங்களை அளிக்கின்றன.சில சமயம் கொக்கெயினை அளிக்கின்றன.காரணம் அந்த நாடுகளில் பணம் இல்லை.

 

lord of war

ஆயுத விற்பனை மூலம் கணக்குவழக்கற்ற பணத்தை சம்பாதிக்கிறார் யூரி. நடிகை ஒருவரை மணக்கிறார்.திரையுலகில் வெற்றி காணமுடியாத நடிகை யூரியை மணந்து இல்லத்தரசியாக இருந்து மனநிறைவு காண்கிறார். அவர் நடித்து சம்பாதிக்க ஆசைப்பட்டதை விட பணம்,வைரம்,உடைகள்,வீடு, என அனைத்தும் யூரியிடம் இருக்கிறது. அதனால் யூரியின் தொழிலை பற்றி அவர் அதிகம் கேள்வி கேட்பதில்லை. யூரி ஆயுதம் விற்கபோன இடங்களில் அப்படி, இப்படி இருந்தாலும் மனைவிக்கு படுக்கையில் எந்த குறையும் வைப்பதில்லை.மனைவிக்கு பகிரங்கமாக தெரியும் வகையில் தவறும் செய்வதில்லை.அதனால் அவரது மனைவி இந்த வாழ்க்கைக்கு தன்னை அட்ஜஸ்ட் செய்துகொள்கிறார்.அதில் மகிழ்ச்சியும் காண்கிறார்.

யூரியை துரத்தும் இன்டெர்போல் ஏஜென்ட் வாலைன்டைனை யூரி அனாசயமாக சமாளிக்கிறார்.விமானம் நிறைய ஆயுதம் ஏந்திபோகும் யூரியை நடுவானில் ஜெட் விமானம் மூலம் மறிக்கிறார் ஏஜென்ட் வாலன்டைன்.விமானத்தை ஆபிரிக்க சாலை ஒன்றில் இறக்கும் யூரி இன்டெர்போல் வருவதற்குள் அனைத்து ஆயுதங்களையும் அங்கிருந்த கிராம மக்களுக்கு கொடுத்து விடுகிறார்.

இறுதியில் வாலன்டைன் சென்டிமென்ட் அஸ்திரத்தை கையில் எடுக்கிறார்.யூரியின் மனைவியிடம் ஆயுதம் கடத்தும் ரகசியத்தை போட்டு உடைக்கிறார்.கணவன் மேல் உள்ல விசுவாசத்தால் வாலன்டைனுக்கு உதவ மறுக்கும் நடிகை கணவனை தொழிலை நிறுத்த சொல்லி நிர்ப்பந்திக்கிரார்.யூரியும் ஒப்புகொண்டு நேர்மையான தொழிலுக்கு செல்கிறார்.

ஆனால் பழைய குருடி கதவை திறடி கதையாக மீண்டும் தொழிலில் இறங்குகிறார்.அவரது மனைவி அவரை பின் தொடர்ந்து போய் அவர் ஆயுதம் பதுக்கி வைத்திருக்கும் கிடங்குகளை கண்டுபிடிக்கிறார்.அவரது மனைவியை பின் தொடர்ந்த இன்டெர்போல் ஆயுத கிடங்கை பிடித்துவிடுகிறது.

யூரி கைது செய்யபடுகிறார்.

"உன் ஆயுள் முழுவதும் இனி சிறையில் தான் கழிக்கவேண்டும்" என்கிறார் ஏஜென்ட் வாலன்டைன்

"உனக்கு புரியவில்லை" என்கிறார் யூரி."நான் ஆயுதம் விற்பது உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களுக்கு.உலகின் பல நாடுகளின் ஜனாதிபதிகளை நான் பெயர் சொல்லி அழைப்பது வழக்கம்.என்னை ஒரே ஒரு செகண்டு கூட உன்னால் ஜெயிலில் வைக்க முடியாது"

சொன்னதுபோலவே ஒரு செகண்டு கூட ஜெயிலில் இருக்காமல் வெளியே வருகிறார்.அவரது மனைவியும்,குழந்தையும் அவரை விட்டு பிரிகிறார்கள்.யூரி தன் தொழிலை தொடர்கிறார்

(கதையில் வரும் சம்பவங்கள் உண்மை என்ற டைட்டிலுடன் படம் முடிவடைகிறது)

படம் முழுக்க நம்மை கவர்வது நிக்கலஸ் கேஜின் ஆர்ப்பாட்டமில்லாத,மென்மையான நடிப்பு.

இது முழுக்க நெகடிவான கதாபத்திரம்.ஆனால் அந்த கதாபாத்திரத்தின் கண்ணோட்டத்தையும் படம் நம் முன் நிறுத்துகிறது.நிக்கலஸ் கேஜின் கண்முன் அவர் அளித்த ஆயுதங்களை வைத்து இனபடுகொலை நடக்கிறது.ஆனால் அது தன் தவறு இல்லை என நிக்கலஸ் கேஜ் நம்புகிறார்.அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியதால் ஆயுதம் வேண்டாம் என சொல்லும் வாடிக்கையாளரை நிக்கலஸ் கேஜ் திட்டுகிறார்."என்ன அமைதி ஒப்பந்தமா?யுத்தம் செய்யுங்கப்பா...நான் தான் ஆயுதம் சப்ளை செய்யறேன்னு சொல்றேனில்ல?"

இறுதியில் அவர் வாலன்டைனுக்கு தன் தரப்பு நியாயத்தை விரிவாக எடுத்துரைக்கிறார்.."உலகிலேயே மிக பெரிய ஆயுத விற்பனையாளர் அமெரிக்க ஜனாதிபதிதான்....உலகின் டாப் ஐந்து ஆயுத விற்பனையாளர்கள் அமெரிக்கா,ரஷ்யா,சீனா,இங்கிலாந்து,பிரான்ஸ்..இவை ஐந்தும் ஐநா சபையின் நிரந்தர உறுப்பினர்கள்.நீ என்னை பிடிக்க வருகிறாய்..நான் செய்வது கடத்தல் இல்லை.சேவை.மக்களுக்கு தம்மை பாதுகாத்துகொள்ள ஆயுதம் தேவை.அதை தான் நான் தருகிறேன்"





No comments: