Tuesday, September 27, 2011

மடாதிபதிகள், ஞானிகள் ஏன் சமூகத்தின் தீமைகளை ஒழிக்கவில்லை?


கண்ணனை நேருக்கு நேர் சந்தித்து அவன் கடவுள் என்பதை அறிந்தும், விசுவரூப தரிசனத்தை கண்டும் திருந்தாமல் கவுரவர்கள் போரில் உயிரை விட்டனர்

பீஷ்ம,துரோணாதிகள் பெரிய ஞானிகள். சிறந்த ஆன்மிகவாதிகள்.ஆனால் கடவுள் தரிசனத்தை கண்டபின்னரும் செஞ்சோற்றுகடன், தனிமனித வெறுப்பு ஆகிய குனாதிசயங்களை கொண்டிருந்தனர்.

பாண்டவர்கள் மிகபெரும் பக்திமான்கள்.தனிப்பட்ட அளவில் நல்லவர்கள்.ஆனால் அவர்களிடமும் பிழைகள் இருந்தன.கர்ணனை தேரோட்டி மகன் என்பதால் வெறுத்தார்கள்.மனைவியை வைத்து சூதாடினார்கள்.இந்த காலத்தில் இப்படி ஒருவன் செய்தால் அவனை கடுமையாக வைவோம்.ஆனால் இதை காரணமாக வைத்து கண்ணன் அவர்களை வெறுக்கவில்லை,அவர்கள் ஆபத்தில் இருந்தபோது உதவ தயங்கவில்லை.

வில்லன், ஹீரோ, கவுரவ வேஷம் என எந்த ரோலில் உள்ளவர்களாக இருந்தாலும் குற்றம்,குறை உள்ள மனிதர்களாக தான் உள்ளனர்.பக்தியை வைத்து அவர்களில் நல்லவர்கள் தம்மை செப்பனிட்டு கொள்ள முயல்கின்றனர்.தீயவர்கள் முனைவதில்லை.அதே சமயம் என்ன முயன்றாலும் யாராலும் எந்த குற்றமும் இல்லாத மனிதனாக மாற இயலுவதில்லை.

ஆழ்வார்கள்,ஆச்சாரியார்கள் ஆகியோரை நாம் "இத்தனை நல்லவர்கள் ஏன் சமூக குற்றங்களை கண்டுகொள்லாமல் இருந்தார்கள்/" என வியக்கிறோம்.

ஆனால் அவர்களோ தம்மை உத்தமர்களாக கருதுவதில்லை.கடைந்தெடுத்த பாவியாக தான் கருதுகின்றனர்.தம் பாவங்களில் இருந்து தம்மை விடுவிக்க இறைவனை வேண்டி அழுகின்றனர்

மணவாள மாமுனிகள் சொல்வதை பாருங்கள்

இராமானுசா! உயர்ந்த உத்தமமான ஆசார்யர்களான ஆளவந்தார், கூரத்தாழ்வான், பராசர பட்டர் போன்றோர் வெளிப்படுத்திய சுய கண்டன உணர்வுகள் அனைத்தையும் முழுமையாக நான் சொந்தமாகக் கொண்டிருக்கிறேன். ஆகையால், யதிராசனே! உம்முடைய கருணைக்கு நானே பொருத்தமானவன்.

இராமானுசா, ஆசாரியனே! இந்த உலகிலே தண்டனைக்குரிய, குற்றமுடைய, உபயோகமற்ற குணங்களையெல்லாம் பொருந்திய ஒருவன் நான் ஒருவனாகவே இருக்கமுடியும். என்னைத்தவிர வேறு எவரும் இதற்க்குப் பொருத்தமாகவே முடியாது. ஆகையினாலேயே, என்னுடைய இந்த குற்றங்களிலிருந்தும், தடைகளிலிருந்தும் என்னை நீக்க உம்முடைய கருண ஒன்றே பொருத்தமானது என்று முடிவுற்றேன். அக்கருணையால் என்னை காக்க வேண்டுகிறேன்.

சந்யாசிகளின் அரசனே! மூன்று விதமான தாப த்ரயங்களினால் உண்டாகும் துன்பங்களினால் என் உடம்பு துன்பமும், வேதனையும், நோய்களையும் அடைகிறது. என்னால் அத்துன்பங்களைத் தாங்கமுடியவில்லை. இருப்பினும், இவ்வுடலை விட்டு நீங்க எனக்கு எனக்கு எந்த விருப்பமும் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் நான் இந்த உடலை நன்கு பேணிப் பாதுகாக்கிறேனே! நான் குவித்து வைத்திருக்கும் என்னற்ற பாபங்களே என்னுடைய இந்த மனநிலைக்குக் காரணம். எந்தோ பரிதாபம்! என்னுடைய பரமாசாரியனே! தாப த்ரயங்களினால் உண்டாகும் துன்பங்களிலிருந்து நான் விடுபட என் பாபங்களையெல்லாம் அகற்ற இறைஞ்சுகிறேன்.

யதிராஜா! தங்கள் முன் நிற்க்கவும் நான் தகுதியற்றவன். எங்கனம் பிறவிக் குருடனைப் தன் முன்னே உள்ளவற்றை அறியும் திறன் இல்லாதிருக்கிறனோ, அங்கனம் நானும் அந்தர்யாமியாய் எல்லாவற்றின் உள்ளும் புறமும் நிறைந்து இருக்கும் எம்பெருமானை அறியத் திறன் அற்றவனாயிருக்கிறேன். எப்பொழுதும் மோகத்திற்க்குக் கட்டுப் பட்டவனாய் உள்ளேன். என்னே பரிதாபம். தங்கள் முன் இங்கனம் நிற்க யாதொரு தகுதியுமற்று இருக்கிறேனே!மணவாளமாமுனி போன்ற மிகபெரும் மகானே தன்னை பாவியாக கருதினார் என்றால் மற்ற சாமியார்கள்,மடாதிபதிகளை பற்றி கூறவேண்டுமா?

நாம் அனைவரும் தவறுகள் இழைக்கும் சராசரி மனிதர்கள்.நம்மை காக்கும் வலிமை இறைவனிடம் உள்ளது.அவன் நம்மை காப்பது நாம் செய்யும் தவத்தால், யோகத்தால் அல்ல.அவனது அளப்பரிய கருணையால் மட்டுமே நம்மை காக்கிறான்.அந்த கருனைக்கு நாம் தகுதியானவர்கள் அல்ல எனினும்...

அதனால் சாமியார்கள் என்பதால் அவர்கள் புடம் போட்ட தங்கமாக இருக்கவேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியாது.அத்தகைய மனிதன் யாரும் உலகில் இல்லை.சுயகண்டனம்--
செல்வன்


No comments: