செய்தி
டெல்லி: பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் கடன் சுமை ரூ.67 ஆயிரம் கோடியாக எகிறிவிட்டது. நடப்பு நிதி ஆண்டில் மட்டும் ரூ.20,415 கோடி கடன் தொகை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
எனவே, மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளது இந்த நிறுவனம். அரசு இந்த நிறுவனத்தை மீட்டெடுக்குமா அல்லது மூழ்கவிட்டு தனியாருக்கு தாரைவார்க்குமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு அதிக அளவில் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. ஊழியர் ஒத்துழைப்பின்மை, வீண் செலவுகள், தேவைக்கும் அதிகமான பணியாளர் சுமை, எரிபொருள் வாங்கிய வகையில் கடன் என பல வகையிலும் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
எரிபொருள் கட்டணம் என்ற பெயரில் எக்கச்சக்க பாக்கி வைத்திருப்பதால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதம் எரிபொருள் வழங்குவதை நிறுத்தின. இதனால், பல்வேறு வழித் தடங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில், பல்வேறு வகைகளிலும் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு மொத்தம் ரூ.67 ஆயிரம் கோடி கடன் இருப்பது தெரியவந்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் ரூ.20 ஆயிரத்து 415 கோடி அளவிலான கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் ஏர் இந்தியா உள்ளது. அந்தத் தொகையை கட்டத் தவறினால், வங்கிகளின் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும்.
சமீபத்திய மதிப்பீட்டின்படி, 2007-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2011-ம் ஆண்டு மார்ச் வரை ரூ.20 ஆயிரத்து 320 கோடி அளவுக்கு ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டம் அடைந்துள்ளது. இது தவிர, ரூ.46 ஆயிரத்து 950 கோடி கடன் சுமை உள்ளது. விமானங்கள் வாங்க பெற்ற கடன், முதலீட்டு கடன், கடன் பாக்கிக்கான தவணை கடந்த வட்டி ஆகிய இனங்களின் கீழ் இந்த கடன் சுமை ஏற்பட்டிருக்கிறது.
நஷ்டமும், கடன் சுமையும் கழுத்தை இறுக்குவதால் மத்திய அரசின் உதவியை ஏர் இந்தியா நிறுவனம் நாடி உள்ளது. பங்குகள் மூலமாக ரூ.6 ஆயிரத்து 600 கோடி, ரொக்கப் பற்றாக்குறை நிதியாக ரூ.5 ஆயிரத்து 736 கோடி ஆகியவற்றை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
-------------------------------
விமர்சனம்
அரசு நிறுவனம் நஷ்டத்தில் ஓடாமல், கடன் சுமையில் தத்தளிக்காமல் இருந்தால் தான் அதிசயம்.
67 ஆயிரம் கோடியில் எத்தனை பயனுள்ளதாக செலவு செய்திருக்கலாம் என்பதை உங்கள் யூகத்துக்கே விடுகிறேன்
விமான கம்பனி நடத்துவதுதான் அரசின் வேலையா?இந்த வெள்ளை யானையை கட்டி மேய்க்கும் அளவுக்கு இன்னும் நம்மிடம் வசதி இருக்கா?
பிரச்சனைக்கு ஒரே வார்த்தையில் தீர்வு....தனியார்மயமாக்கு.
இன்று தனியார்மயமாக்கினால் 67 ஆயிரம் கோடி நஷ்டத்துடன் நிற்கும்.இன்னும் 10 வருடம் கழித்து ஆக்கினால் பத்துலட்சம் கோடியில் வந்து நிற்கும்.ஆக்காமலே விட்டால் நாடு திவாலாகும்
No comments:
Post a Comment