Monday, March 28, 2011

காளி

காளி

"அம்மா...எனக்கு நீ கதை சொல்லி ரொம்ப நாள் ஆச்சு.." காளி அம்மாவை பிடித்து கொண்டாள்.அவளுக்கு வயது 12 ஆகிவிட்டது.இருந்தாலும் இன்னும் அம்மாவிடம் கதை கேட்பதில் பிரியம் அதிகம்

"சரி...சொல்றேன்.கதை ஹீரோ பேரும் காளி தான்" என சொல்லி அம்மா கதை சொல்ல துவங்கினார்

------------
காளி மெதுவாக எழுந்து தட்டு தடுமாறிகொண்டே ப்ரிட்ஜை நோக்கி நடந்தான்.தூக்க கலக்கம் கண்ணை அசத்தியது.சமையலறையில் ஏதோ சத்தம் கேட்க தூக்க கலக்கம் உடனே பறந்தது..ஊரில் திருட்டுபயலுவ தொல்லை அதிகமாயிடுச்சு..வீட்டுகுள்ள புகுந்துட்டானுகளா?

சுவற்றில் மாட்டியிருந்த வேட்டை துப்பாகியை எடுத்துகொண்டு சமையலறைக்கு சென்று விளக்கை போட்டான்.

"காளிச்சாமி..." அவன் அப்பா துள்ளிகுதித்து எழுந்தார்.அவிழ்ந்து கிடந்த வேட்டியை எடுத்து கொண்டு அறையை விட்டு ஓடினார்.

கூட இருந்த பெண் யார் என காளிக்கு சரியாக தெரியவில்லை...வேலைகாரியின் மகளாக இருக்கலாம், அல்லது புது வேலைகாரியாக கூட இருக்கலாம்..

"மன்னிசிடுங்க..." என்றாள் அவள்.."அப்பாவுக்கு பக்கவாதம்...மருந்து வாங்க கூட காசில்லை..ரொம்பநாள் பட்டினி"

காளிச்சாமி ஒன்றும் பேசாமல் போய் படுத்துகொண்டான்.

அடுத்தநாள் அப்பா எதுவும் நடவாதது போல சாவதானமாக வீட்டுக்குள் வளைய வந்தார்.காளி எதுவும் பேசாமல் பெட்டியில் துணியை அடுக்கி எடுத்து கொண்டான்.

"போயிட்டு வர்ரேன்" என அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.ஜீப்பை எடுத்தான்.

தெருமுக்கில் அவள் வீடு இருந்தது...வீட்டுக்கு வெளியே ஏகபட்ட கூட்டம்.வண்டியை நிறுத்தினான்

"பொன்னுசாமியண்ணன் செத்துட்டாரு" என காளியிடம் சொன்னார்கள்.

உள்ளே அவள் அழ எல்லாம் இல்லை.அமைதியாக தான் உட்கார்ந்திருந்தாள்.

காளி சாயந்திரம் மறுபடி அந்த பக்கம் வந்தான்.வீட்டில் அவள் மட்டும் தான் இருந்தாள்.கூட்டம் கலைந்து விட்டிருந்தது.

"இனி என்ன பண்ணபோறே?" என கேட்டான் காளி

"எதாவது வேலைக்கு போகணும்" என்றாள் அவள்.

"கோயமுத்தூர்ல நான் மேனேஜரா இருக்கர பாங்கில் நிறைய பனியன் கம்பனி முதலாளிக அக்கவுண்ட் வெச்சிருக்காங்க..அவங்க கிட்ட சொல்லி வேலை வாங்கி தர்ரேன்"

"சரி.."

"அப்ப கிளம்பு.."

"இப்பவேவா?"

"ஆமாம்..நான் இன்னிக்கு நைட்டு கோயமுத்தூர் டிரெய்னை பிடிக்கணும்"

--------

இருவரும் கோவையில் காளியின் அபார்ட்மெண்டுக்கு வந்தார்கள்.

"எதுவரைக்கும் படிச்சே?" என்றான் காளி

"+2"

"மேல படிக்கலையா?"

"காசு இல்லை"

"+2ல என்ன மார்க்?"

"960"

காளி சிந்தனையில் ஆழ்ந்தான்..அவன் +2வில் 850 மதிப்பெண் தான் வாங்கினான் என்பது நினைவுக்கு வந்தது.

"நீ வேலைக்கு எல்லாம் போகவேணாம்,மேல படி......நான் காசு கட்டறேன்.."

"ஐயா.."

"நாளைக்கு உன்னை எதாவது லேடிஸ் ஆஸ்டல்ல சேத்துடறேன்..காலேஜ் ஆரம்பிச்சதும் அதுல சேத்துடறேன்.நீ படிச்சு நல்லபடிக்கு முன்னுக்கு வரணும்.."

கதவு தடட வென தட்டபட்டது...

கதவை திறந்தான்

விஜிலன்ஸ்..

"மேம்பால ஊழல் வழக்கில் சம்ன்பந்தப்பட்ட மினிஸ்டரின் செவன்ஸ்டார் லிமிட்டடுக்கு எந்த ரூல்சையும் பாலோ பண்ணாம 75 கோடி லோன் சாங்ஷன் செஞ்சிருக்கீங்க...உங்க வீட்டை சோதனை போட வாரண்டோட வந்திருக்கோம்" என்றார்கள்.

"சார்..மினிஸ்டர் சொல்லிதான் லோன் சான்க்ஷன் செஞ்சேன்..என் மேல எந்த தப்பும் இல்லை.நான் பைசா லஞ்சம் வாங்கலை"

"அதை வாக்குமூலமா எழுதி தற்றீங்களா?"

"சார்..அது எப்படி முடியும்? எனக்கும் பாலிடிக்சுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை"

"அதை ஸ்டேசனில் வந்து சொல்லுடா.." என்றார் கூட பாதுகபபுக்கு வந்த இன்ஸ்பெக்டர்

"சார் மரியாதையா பேசுங்க"

"உனக்கென்னடா மரியாதை" அவர் காளி முகத்தில் குத்தினார்

காளிக்கு கோபம் வந்துவிட்டது.அவன் கிராமத்தான்.அவனை யாரும் இதுவரை அடித்ததில்லை...திருப்பி இன்ஸ்பெக்டரை ஒரு அறை அறைந்தான்.உடனே போலிஸ் படை அவனை சூழந்து கண் மண் தெரியாமல் அடித்தது.அடித்த அடியில் அவன் திமிறினான்..மாடி படிகளில் உருண்டு விழுந்தான்.30 படிகளில் உருண்டு தரையை தொட்டபோது கழுத்து எலும்பு மளுக் என முறியும் சத்தம் கேட்டது

------------------

காளி மெதுவாக கண்விழித்தான்.மருத்துவமனையில் இருந்தான்.அவள் மட்டும் எதிரே அமர்ந்து அபபிளை நறுக்கி கொண்டிருந்தாள்.

"எனக்கு என்ன ஆச்சு?எழுந்திருக்க முடியலை" என்றான் காளி..சிரமபட்டு கையை மட்டும் சற்று தூக்க முடிந்தது

"முதுகெலும்புக்கு கீழே அடிபட்டிடுச்சுன்னாங்க...எத்தனையோ ஆபரேஷன் செஞ்சாங்க..இனி நீங்க என்னைக்கும் படுத்த படுக்கையா தான் இருக்கணுமாம்" என்றாள் அவள்..அழுதாள்..

"விஜிலன்ஸ் வந்தாங்க..என்ன ஆச்சு?"

"மந்திரி கட்சி மாறி மத்திய ஆளும்கட்சில சேந்துட்டாரு.கேஸ் அப்படியே அமுங்கிடுச்சு. யாரையும் அரஸ்ட் செய்யலை.ஆனால் உங்களை உங்க பேங்க்ல சஸ்பெண்டு செஞ்சிருக்காங்க"

"அப்பா..?"

"அவருக்கு போன் செஞ்சேன்..உங்களை ஏனோ அவரு வந்து பார்க்கலை..என்னையும் உங்களையும் பத்தி தப்பா பேசினாரு.."

"அப்ப ஆஸ்பத்திரில என்னை சேர்த்தது யாரு?"

"நான் தான்...உங்களை கவர்மெண்டு ஆஸ்பத்திரில போட்டிருந்தாங்க...அங்க ஒண்ணும் சரியில்லைன்னு சொல்லி நான் தான் இங்கே கொண்டு வந்து சேர்த்தேன்"

"உனக்கேது காசு?"

அவள் பதிலே சொல்லவில்லை.

காளியின் உடல் நடுங்கியது....

"எனக்காக நீ மறுபடி தொழிலில் இறங்க கூடாது..நீ படிக்கணும்..போதும்...இனி சாகறவரைக்கும் நான் நடைபிணமா வாழ்ந்து என்னை காப்பத்த நீ தொழில் செய்யறது போதும்."

காளி ஆவேசமாக தலையை உதறினான்.பெட்டிலிருந்து துள்ளி விழுந்தான்.

தலை மீண்டும் தரையில் மோதியது...

"ஐயோ" என அலறினாள் அவள்.காளிசாமியின் உயிர் மெதுவே துடித்து அடங்கியது.

----------

"போதும்மா..ஒரே சோக கதையா இருக்கு" சிணுங்கினாள் காளி

"சரி..போதும்" என்றார் அம்மா.

"அந்த பொண்ணூ அப்புறம் என்ன ஆச்சும்மா?"

"அது வேலைக்கு போயி படிச்சு நல்லா முன்னுக்கு வந்துடுச்சு..கூட ஆபிஸ்ல வேலைபாக்கறவருஒருத்தரை கல்யாணம் பண்ணிகிடுச்சு.அவங்களுக்கு உன்னை மாதிரி அழகா ஒரு பொண்ணு..They lived happily ever after"

"போம்மா..கதை ரொம்ப சோகமா இருக்கு.நாளைக்கு எதாவது டிடக்டிவ் கதை சொல்லும்மா" என சொல்லிவிட்டு காளி தூங்கிவிட்டாள்.

No comments: