Monday, February 14, 2011

செம்பருத்தி

செம்பருத்தி

hibiscus_index.jpg(காதலர் தின சிறப்பு சிறுகதை)

"பாட்டி எனக்கு வேலை கிடைச்சுடுச்சு..கோயமுத்தூர் டைடல் பார்க்கில் வேலை" மலர்விழி ஆசையுடன் ஓடி வந்தாள்.

"என் பேத்தின்னா சும்மாவா?" பாட்டியின் முகமெங்கும் ஆனந்தகளை தாண்டவமாடியது.

"சரி...இதுக்கு பதிலா உனக்கு ஒரு ட்ரீட் தரணும்.என்ன வேணும்னு சொல்லு"

"எனக்கு ட்ரீட்டா?" பாட்டி யோசித்தார்.."கோயமுத்தூர் நிர்மலா காலேஜ்ல நான் படிச்சப்ப அங்கே பக்கத்துல கற்பக வினாயகர் கோயில் ஒண்ணு இருக்கும்.அங்கே நான் படிச்சப்ப செம்பருத்தி செடி ஒண்ணை நட்டு வெச்சேன்.தினமும் அந்த கோயிலுக்கு போயி மூணு பூவை எடுத்து செண்டுமாதிரி கட்டி பிள்ளையார் காலடியில் வைப்பேன். நீ கோயமுத்தூர் போனா அந்த கோயிலுக்கு போயி ஒருதரம் கும்பிட்டுட்டு வந்தால் போதும்.."

"இதென்ன ட்ரீட்?" மலர்விழிக்கு சிரிப்பு வந்துவிட்டது.

----------

கோயமுத்தூர் போய் மூணுமாதம் மலர்விழி அந்த பிள்ளையார் கோயிலுக்கு போகவே இல்லை.பாட்டி படுத்த படுக்கையாய் இருப்பதாக சொல்லி அப்பா போன் செய்தார்.ஊருக்கு கிளம்புமுன் கோயிலுக்கு போய் பிரசாதம் வாங்கிகொண்டு போய் பாட்டியை சந்திக்கலாம் என சொல்லி நிர்மலா கல்லூரிக்கு சென்று கோயிலை தேடினாள்.கோயில் எங்கும் காணோம்.வழியில் சைக்கிளில் வந்தவரை நிறுத்தினாள்.

"இங்கே கற்பக வினாயகர் கோயில் ஒண்ணு இருக்குமே? எங்கே?" என்றாள்.

"அப்படி எந்த கோயிலும் இல்லைங்க.."

"இருக்கும்னு சொன்னாங்க..எங்க பாட்டி படிச்சப்ப தினமும் அந்த கோயிலுக்கு வந்து பூஜை பண்ணூவாங்களாம்.."

"உங்க பாட்டி காலத்து கோயிலா?கோயமுத்தூர் நிறைய மாறிடுச்சு..ஆங்...இந்த சந்துக்குள்ள ரொம்ப வருசமா பாழடைஞ்ச கோயில் ஒண்ணு இருக்கு.அதுல என்ன சாமி இருக்குன்னு கூட தெரியாது.போய் பாருங்க"

மலர்விழி அந்த சந்துக்குள் நுழைந்தாள்..இடிந்த கோயில் ஒன்று அவள் கண்முன் தென்பட்டது.கோயிலில் நுழைந்தாள்.

முகம் பாதி சிதைந்த நிலையில் கற்பக வினாயகர் கோயிலில் அமைதியாக வீற்றிருந்தார்.

காலடியில் செண்டாக கட்டப்பட்ட செம்பருத்தி பூக்கள் இருந்தன.வாடியிருந்தன.

மலர்விழி அந்த பூக்களை எடுத்தாள்.

கோயிலில் யாரும் இல்லை.

வெளியே வந்தாள்.

"இந்த கோயில் என்ன ஆச்சு" என எதிரே இருந்த வீட்டில் விசாரித்தாள்.

"கோயிலில் பூஜை நின்னு பல வருசம் ஆகுதம்மா..ஆனால் ஒரு கிழவர் மட்டும் தினமும் வருவார்.இதா நீ வெச்சிருக்கல்லா..இந்த மாதிரி செம்பருத்தி பூவை வெச்சு தினம் கும்பிடுவார்.கும்பிட்டுட்டு போயிடுவார்...நான் இங்கே குடி வந்து 20 வருசம் ஆகுது.அன்னயிலிருந்து இன்னிவரைக்கும் கோயில் இப்படியே தான் இருக்கு.ஆனால் 20 வருசத்துல ஒரு நாளும் இவர் வராமல் இருந்ததில்லை..இன்னிக்கு காலைல தான் வரலை.இறந்துட்டதா செய்தி வந்துச்சு.."

மலர்விழி சிலையாக நின்றாள்..

"ஏனோ அவர் கல்யாணம் கூட பண்ணிக்கலை போல.தனியாவே இருந்துட்டார்..நிர்மலா காலேஜ்ல வாட்ச்மேனா இருந்து ரிடையர் ஆனவர்ன்னு சொன்னார்.."

----------

பாட்டி மெதுவாக முனகிகொண்டிருந்தார்.சுற்றிலும் பெரிய கூட்டம் கூடியிருந்தது.

"மலர்விழி வந்துட்டா பாட்டி.." யாரோ குரல் கொடுத்தார்கள்.

மலர்விழி பாட்டியின் கைகளை பிடித்தாள்.செம்பருத்தி பூச்செண்டை வைத்தாள்.

பாட்டி கண்களை திறந்தார்.

ஏதோ சொன்னார்..என்ன சொன்னார் என்பது யாருக்கும் புரியவில்லை.பூச்செண்டை இறுக பிடித்தார்.

"பால் ஊத்துங்க.." யாரோ கத்தினார்கள்.பால் கிண்ணத்தை மலர்விழியின் கையில் கொடுத்தார்கள்.

பால் ஊற்ற ஊற்ற பாட்டியின் வாய் மூடியது.

"தாத்தா கிட்ட போயிட்டியா பாட்டி.." யாரோ வீறிட்டு அழுதார்கள்...

பாட்டியை எரிக்கும்வரை அவர் கையில் இருந்த செம்பருத்தி செண்டை அகற்ற மட்டும் மலர்விழி யாரையும் அனுமதிக்கவில்லை...

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

"தாத்தா கிட்ட போயிட்டியா பாட்டி