Tuesday, January 02, 2007

220.நாட்டுக்காக ஒருமணிநேரம்

ஹூப்ளியில் உள்ள மகந்தேஷ் தபாஷெட்டி எனும் டாக்டர் வரண்டு கிடக்கும் ஹூப்ளியை பசுமைப்படுத்த தனிமனிதனாக ஒரு முயற்சியை துவக்கினார். பிசியான டாக்டர் தொழிலையும் கவனித்துக்கொண்டு நாட்டுக்கான தனது முயற்சியையும் அவர் செய்தார். தினமும் ஒரு மணிநேரம் நாட்டுக்காக ஒதுக்கினார். தனது காரில் மரக்கன்றுகளை ஏற்றிக்கொண்டு நகரெங்கும் வலம் வந்து மரக்கன்றுகளை நடுவார். ஏற்கனவே தான் நட்ட கன்றுகளுக்கு நீர் ஊற்றுவார்.

வருடா, வருடம் ஆயிரம் மரங்களை நடுவது இவரது திட்டம். கடந்த 12 வருடங்களாக இச்சேவையை தனிமனிதராக செய்துவரும் இவர் இதுவரை 12,000 மரங்களை ஹூப்ளியெங்கும் நட்டு, நகரையே பசுமைப்படுத்திவிட்டார்.

ஹூப்ளி நகர பேருந்து நிலையத்தை முன்பு வெயில் சுட்டெரித்ததாம்.இவர் அங்கே மட்டும் 1500 மரக்கன்றுகளை நட்டாராம். இப்போது அவை மிக அருமையாக வளர்ந்து நிற்கின்றனவாம். ஜோஷி இங்கிலிச்ஷ் மீடியம் ஸ்கூல் பாறைகள் நிறைந்த பிரதேசத்தில் இருந்தது.அங்கேயும் மிகவும் கஷ்டப்பட்டு 25 மரக்கன்றுகளை நட்டாராம் மகந்தேஷ். இப்போது அவை நன்கு வளர்ந்து மாணவர்களுக்கு நிழல் தருகின்றனவாம். சென்ட்ரல் கல்லூரி அருகெ பல ஆண்டுகளுக்கு முன்பு இவர் நட்ட மரக்கன்றுகள் பல மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், காதலர்களுக்கும் நிழல் தருகின்றனவாம்.

மரம் நடுவது மட்டுமல்லாது மரம் வெட்டுதலையும் முடிந்தவரை தடுக்கிறார் டாக்டர் மகந்தேஷ். கிம்ஸ் மெடிக்கல் கல்லூரியில் 30 வருடங்களாக மரங்களை ட்ரிம் செய்துவந்தனராம். மகந்தேஷ் அங்கு சென்று பேசி அதை தடுத்து நிறுத்தி இப்போது அந்த மரங்கள் வானுயர வளர்ந்து நிற்கின்றனவாம்.

சந்தோஷ் நகர் ஏரி நீர் இதேபோல் மாசுபட்டு நின்றதாம். அதை சுற்றி பலர் குடிசை போட்டு ஏரியை ஆக்கிரமித்திருந்தனராம். மாநகராட்சி உதவியுடன் ஆகிரமிப்பாளர்களை அகற்றிவிட்டு ஏரிஅசுற்றிலும் மரங்களை நட்டாராம் மகந்தேஷ். இப்போது தண்ணீர் மிகவும் சுத்தமாகி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கிறதாம்.

சந்தோஷ் நகர் ஏரியில் மரங்களை வளர்ப்பது மிகவும் சவாலான பணியாக இருந்ததாம்.14 மாதங்களுக்கு தொடர்ந்து மழையே பெய்யவில்லையாம். சொந்த காசை போட்டு டேங்கர் லாரியில் நீரை வரவழைத்து மரங்களுக்கு ஊற்றினாரம் டாக்டர் மகந்தேஷ். சில சமயங்களில் கோடாக்கள் எனும் பானையில் அவரே தண்ணீரை சுமந்து சென்று மரங்களுக்கு ஊற்றினாராம். இப்போது அந்த பகுதியில் பசுமை தாண்டவமாடுகிறதாம். இவரது முயற்சிகளுக்கு வனத்துறை அருமையாக உதவி செய்கிறதாம்.விரைவில் வளர்கக்கூடிய மரக்கன்றுகளை தந்து உதவுகிறதாம் வனத்துறை.

காரில் அடிக்கடி நகரை சுற்றி வந்து எங்கே மரம் நடலாம் என்று பார்த்துக்கொண்டே இருப்பாராம். இவரது காரில் எப்போதும் மரக்கன்றுகள், வாளிகள் ஆகியவை இருக்குமாம்.

இவரது முயற்சிகளுக்கு சில நகர மக்கள் உதவி செய்வதில்லையாம். "எங்கள் வீடுகளுக்கு முன் மரம் நடாதே" என சிலர் சண்டைக்கு வருவதும் உண்டாம்.அப்படிப்பட்ட இடங்களில் இவர் மரம் நடுவதில்லை. "நட்டி வைத்த பின் அதை அவர்கள் வெட்டிவிட்டால் என்ன செய்வது?" என சிரிக்கிறார் டாக்டர் மகந்தேஷ்.

12 வருடங்களில் 12000 மரங்கள் நட்ட இவர் இன்னும் நூறாண்டுகள் வாழ்ந்தால் நூறாயிரம் மரங்கள் நாட்டுக்கு கிடைக்குமே?

இவர் நூறாண்டுகள் வாழ அன்னை வனதுர்க்கையை வேண்டுவோம்.

பிசியான டாக்டர் தொழிலுகு நடுவிலும் இந்த பணியை செய்துவரும் டாக்டர் மகந்தேஷ் முலம் நாம் அறியவருவது என்ன?

நாட்டுக்கு செய்ய நேரமின்மை என்பது ஒரு காரணமல்ல என்பதுதான்.

டாக்டர் மகந்தெஷ் போல் இல்லாவிட்டாலும் நீங்களும் உங்கள் ஊரில் வருடத்துக்கு 10 மரங்கள் நட்டு நீர் ஊற்றினால் உங்கள் ஊர் 20 வருடத்தில் எப்படி செழிக்கும் என்பதை யோசித்து பாருங்கள். சென்னை போன்ற ஊரில் ஒரே ஒரு டாக்டர் மகந்தேஷ் தோன்றினால் இன்னும் பத்தாண்டுகளில் சென்னையில் வரட்சி என்பதே இல்லாமல் போகும் அல்லவா?வரண்டு கிடந்த ஹூப்ளியை ஒரு மகந்தேஷால் மாற்ற முடிந்தபோது வரண்டு கிடக்கும் சென்னையை உங்களால் மாற்முடியாதா?

நாட்டுக்காக ஒரு நாளைக்கு 1 மணிநேரம் ஒதுக்கமுடியாதா? இலவசமாக கிடைக்கும் மரக்கன்றுகளை உங்கள் சுற்றுபுறத்தில் நடமுடியாதா?

வரண்டு கிடக்கும் உங்கள் ஊரை பசுமையாக மாற்ற தேவை ஒரு நாளைக்கு ஒரே மணிநேரம். இரண்டு முட்டாள்தமான சீரியல் பார்க்கும் நேரம். அதுபோக மரம்நடுதல் மிக நல்ல உடற்பயிற்ச்சி கூட.

சிந்தியுங்கள்.

நாடென்ன செய்தது எனக்கு என கேட்காமல் "நான் என்ன செய்தேன் நாட்டுக்கு?" என கேட்டு நீங்களும் ஒரு டாக்டர் மகந்தேஷ் ஆக மாறுங்கள்.

தேவை ஒரு நாளைக்கு ஒரே மணிநேரம்.

Post a Comment