Tuesday, April 11, 2006

76.கண்ணாயிரமும் அகலியையும்

அகலியயை கவுதம முனிவரின் மனைவி.மிகவும் அழகாக இருப்பார்.இந்திரன் தேவர் தலைவனாக இருந்த போதிலும் ஆசையை வீட்டவனில்லை.அகலியையை பார்த்ததும் ஆசையில் வீழ்கிறான்.கவுதம முனிவர் குளிக்க போன சமயம் பார்த்து அவர் வேடம் தரித்து அகலியாவை ஏமாற்றி விடுகிறான்.கவுதம முனிவர் வழக்கத்துக்கு மாறாக சீக்கிரம் வீடு திரும்புகிறார்.கையும் களவுமாக இந்திரன் பிடிபடுகிறான். கோபத்தில் கொதித்த கவுதம முனிவர் இந்திரனுக்கு மிகவும் மோசமான சாபம் ஒன்றை தருகிறார்.அகலியாவை கல்லாகும்படி சபிக்கிறார்.அகல்யாவுக்கு சாப விமோசனம் ராமனால் கிடைத்தது..ஆனால் அதன் பின் இந்திரனுக்கு நேர்ந்தது என்ன? சாபம் பெற்ற இந்திரன் யார் முகத்திலும் விழிக்க வெட்கப்பட்டு தாமரை பூவினுள் சென்று ஒளிந்து கொள்கிறான்.அரசனில்லாமல் தேவலோகம் திகைக்கிறது.எங்கு தேடியும் இந்திரன் கிட்டவில்லை.முனிவர்கள் ஒன்று கூடி நகுஷன் என்ற மன்னனை புதிய இந்திரனாக வரும்படி அழைப்பு விடுக்கின்றனர். நகுஷன் மிகுந்த நல்லவன்.கல்வி கேள்விகளில் சிறந்தவன்.ஆனால் தேவேந்திரனானதும் அவனுக்கு மண்டை கர்வம் ஏறிவிடுகிறது.போதாக்குறைக்கு பழைய இந்திரன் போல் பெண்பித்தம் வேறு வந்துவிடுகிறது. நகுஷன் பாவம் மேல் பாவம் செய்கிறான்.தேவலோகமே நடுங்குகிறது.இறுதியில் அவன் இந்திராணியயே அடைய திட்டமிடுகிறான்."நான் தான் இப்போது இந்திரன்,அதனால் இந்திராணி என் மனைவி ஆக வேண்டும்" என கட்டளை இடுகிறான். இந்திராணி தப்பி ஓடுகிறாள்.அன்னை சக்தி மீது சுமங்கலி விரதம் இருக்கிறாள்.சக்தி அவள் முன் தோன்றி இந்திரன் சாப விமோசனம் அடைய வழியை சொல்கிறாள்.இந்திரன் இருக்கும் இடத்தையும் சொல்கிறாள். இந்திராணி கவுதம முனிவரிடம் செல்கிறாள்.மன்றாடியதும் இந்திரன் ஆயிரம் கண்ணுடையவனாக சாப விமோசனத்தை கவுதம முனிவர் தருகிறார்.கணவனும் மனைவியும் ஒன்று சேர்கின்றனர்.ஆனால் ராஜ்ஜியம் போச்சே..அதை அடைய இந்திரன் திட்டம் தீட்டுகிறான். இந்திராணியிடம் ஒரு திட்டத்தை சொல்லி நகுசனிடம் அனுப்புகிறான்.இந்திராணி நகுஷனிடம் "யாரும் இதுவரை வராத ஒரு பல்லக்கில் ஏறி வந்தால் அவனை திருமணம் செய்து கொள்வதாக சொல்கிறாள்".. நகுஷன் அப்படி என்ன பல்லக்கு இருக்க முடியும் என யோசித்து இறுதியில் கற்பனைக்கெட்டாத ஐடியா ஒன்றை கண்டுபிடிக்கிறான்.சப்தரிஷிகளும் சேர்ந்து அவனை பல்லக்கில் இந்திராணியிடம் கொண்டு செல்ல வேண்டும்.இது போன்ற பயணம் மும்மூர்த்திகளுக்கும் இதுவரை கிட்டியதில்லை அல்லவா? சப்தரிஷிகளும் சேர்ந்து அவனை பல்லக்கில் சுமந்து கொண்டு செல்கின்றனர்.காமம் நகுஷனை துரத்துகிறது..பல்லக்கோ மெதுவாக ஊர்ந்து செல்வது போல் அவனுக்கு தெரிகிறது.குனிந்து எட்டிப்பார்த்தால் அகத்திய ரிஷி நத்தை வேகத்தில் பல்லக்கை சுமந்து செல்வது போல் தெரிகிறது.. கோபம் வந்த நகுஷன் "சர்ப்ப சர்ப்ப" என்று சொல்லி அகத்தியரை காலால் உதைக்கிறான்.(சர்ப்ப என்றால் வேகமாக என்று பொருள்)..கோபம் கொண்ட அகத்தியர் நகுஷனின் புண்ணியம் முழுவதும் அந்த விநாடியே கரைந்து போனதை உணர்கிறார். "சர்ப்ப என்று என்னை உதைத்த நீ சர்ப்பமாக கடவாய்" என்று சாபமிடுகிறார்.சொர்க்கத்திலிருந்து வீழ்ந்த நகுஷன் சர்ப்பமாக வனத்தில் வீழ்கிறான்.மனம் திருந்திய இந்திரன் மீண்டும் பதவிக்கு வருகிறான்.அன்றிலிருந்து குலமங்கையர் பவானிதேவிக்கு பூஜை செய்வது வழக்கத்துக்கு வந்ததாக புராணம் சொல்கிறது. இந்திரனே ஆனாலும் புலனடக்கம் இல்லாமல் போனால் அழிவுதான் என்று வள்ளுவர் சொன்னது இதனால் தான்.

57 comments:

Anonymous said...

இந்திரனே ஆனாலும் புலனடக்கம் இல்லாமல் போனால் அழிவுதான் என்று வள்ளுவர் சொன்னது இதனால் தான்.

..................
அன்பின் ஐயா இதை வள்ளுவர் எங்கே சொல்லியிருக்கின்றாரெனச் சுட்டுகின்றீர்களா? எம்மைப் போன்றோருக்குப் பயன் தரும். நன்றி

Unknown said...

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார் கோமான் இந்திரனே சாலுங் கரி.

Anonymous said...

அப்படியாகத்தான் பதில் வருமெனத் தோன்றியது. இந்த இந்திரனும் அந்த பொட்டிமகன் அகலிகை இந்திரனும் ஒருவர்தானா? சுத்தானந்தபாரதியின் விளக்கம் இதுவாகத்தான் இருக்கிரது. அதற்குமுன்னானவர்களின் திருக்குறள் உரைகள் என்ன சொல்லியிருக்கின்றன என்று சொல்வீர்களா?

Unknown said...

குறளுக்கு அத்தனை உரைகளை நான் படித்ததில்லை நண்பரே,

கலைஞர் உரை இதோ

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

Unknown said...

Selvan,
You do have some stuff//


I always has stuff.I am really intelligent:-))

Anonymous said...

ஐயா கருணாநிதி சரியாகத்தான் சொன்னாரா என்பது ஐயத்துக்கு இடமளிக்கிறது. இந்திரன் என்பவன் அகலிகையோடு இணைத்துப் புனையப்படும் இதிகாச இந்திரனோ ரிக் வேத இந்திரனோ என்பது உறுதியானதா?

பண்டைத்தமிழர்கள் இந்திரவிழா என்று கொண்டாடுவார்களென்பது பழந்தமிழ்ப்பாடல்களிலே இருக்கின்றதே. சிலப்பதிகாரத்திலே புகார் காண்டத்திலே இந்திர விழவு ஊர் எடுத்த காதை பற்றிக் காணலாமே. இப்படியாகப் பழந்தமிழ்ப்பாடல்களிலே பேசப்படும் இந்திரனும் கம்பன் மெய்வீரனாம் இராவணன் புதன்வனைச் சுட்டும்போது சொல்லும் "'இச் சிரத்தையைத் தொலைப்பென்' என்று, இந்திரன் பகைஞன்," இந்திரனும் புகழேந்தி நளவெண்பாவிலே தமயந்தி சுயம்வரத்திலே காட்டும் இந்திரனும் ஒருவனேதானா?

எதற்காக ஐயா நீவிரெல்லாம் வள்ளுவன் குறித்த தமிழர்வாழ்க்கைமுறையினுள்ளே இதிகாச இந்திரனைப் புகுத்துகின்றீர்கள்? வள்ளுவனே சமணமதத்தவனோ என ஐயம் கொள்ள நிறையவே இடமிருக்கின்றது.

எதையும் முழுமையாக நிறுவ முடியாத நிலையிலே அகலிகைகதையிலே வரும் இந்திரனையும் வள்ளுவன் குறளிலே சொல்லப்படும் இந்திரனையும் முடிச்சுப்போடுதல் முறையல்ல அல்லவோ?

வள்ளுவன் அகலிகை கதையைக் கேட்க நியாயமுண்டோ? இராமாயணம் தமிழர்பூமியுள்ளே நுழைந்த காலமெது? வள்ளுவன் வாழ்ந்த காலமெது? எதுமுற்பட்டது என்பதையேனும் யாம் யோசித்திருக்கலாமே?

VSK said...

இன்னும் சில உரைகளிலும் அப்படித்தான் -- இந்திரனை சான்றாகத்தான் -- போட்டிருக்கிறது!

ஆனால், எனக்கென்னவோ, இதை எதிர்மறைப் பொருளில்தான் வள்ளுவர் வைத்திருப்பதாகப் படுகிறது.

ஐம்புலன்களை அடக்கியவரைக் காட்ட வரும் வள்ளுவர், அத்துணைப் பேரில் இந்திரனைத் தேர்ந்தெடுப்பானேன்?

ஐம்புலன் ஆசைகளை அடக்காதவர் ஒவ்வொரு கால கட்டத்திலும் இருப்பினும், காலத்தால் அழியாத ஒரே உதாரணம் இந்திரன் தான்.

மற்ற எந்தக் கடவுளும் மாற்றமில்லாதவர்கள்; மாற்ற முடியாதவர்கள்.

ஆனால், இந்திர பதவி ஒன்றுதான், ஒழுக்கம் குறைந்தால், தூக்கி எறியப்படக் கூடிய ஒன்று.

ஐம்புலன்களை அடக்கியவர் மட்டுமே அங்கு அமர முடியும்.

//இந்திரனே ஆனாலும் புலனடக்கம் இல்லாமல் போனால் அழிவுதான் என்று // பொதுவில், இந்திர பதவியைக் குறித்து, வள்ளுவர் இதைச் சொல்லியிருக்கலாம் என எண்ணுகிறேன்.

Unknown said...

//எதற்காக ஐயா நீவிரெல்லாம் வள்ளுவன் குறித்த தமிழர்வாழ்க்கைமுறையினுள்ளே இதிகாச இந்திரனைப் புகுத்துகின்றீர்கள்? வள்ளுவனே சமணமதத்தவனோ என ஐயம் கொள்ள நிறையவே இடமிருக்கின்றது. //

சகோதரரே,

குறளில் இதிகாச இந்திரனை புகுத்தியது நானல்ல.வள்ளுவர் எழுதிய உரைக்கு என் சிற்றரிவுக்கு எட்டிய வரையிலும் அறிஞர் பெருமக்கள் சொன்ன உரையின் அடிப்படையிலும் என் விளக்கத்தை சொன்னேன்.கலைஞரை விட குறளை அதிகம் அறிந்த அறிஞர் தற்போது யாரும் இல்லை என்பது என் கருத்து.குறளாசான் என்று நாங்கள் அழைக்கும் தமிழறிஞர் முனைவர் இரவா கபிலன் ஐயாவும் புரான இந்திரன் தான் வள்ளுவர் சுட்டும் இந்திரன் என சொல்லுகிறார்.

முத்தமிழ் குழுவில் இரவா ஐயாவின் விளக்கம் இதோ

(http://groups.google.com/group/muththamiz/browse_thread/thread/d3fc2ac1822be390/1cac66843fd98521?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%87&rnum=1#1cac66843fd98521)

ஐந்தவித்தான் ஆற்றல்
அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி..

புலன்களில் செல்கின்ற
பொறிகள் ஐந்தும் தன் வழிச்
செல்லாது அடக்கி
நிலைநிறுத்தியவனது
ஆற்றலுக்கு, பரந்து
விரிந்த விசும்பில்
உறைகின்ற இந்திரனே
சான்றாகும்.


கௌதம முனிவர்தம்
மனைவியாகிய அகலிகையைப்
புணர்ந்த இந்திரன் பெற்ற
சாபத்திற்குக் காரணம்,
அம்முனிவர் தன் ஆற்ற்லே
ஆகும். அதனையே
இக்குறளுக்குச் சான்றாகக்
காட்டினார் என்க.வள்ளுவர்
காலத்தில், இராமாயணக் கதை
மிகவும் விதந்து
ஓதப்பட்டுள்ளது எனலாம்.


இக்குறள், முனிவர் தம்
பெரும் வலிமை எத்துணையது
என்பதை உரைப்பது.
முன்னது, ஐந்து பொறிகள்
புலன்கள் வழிச் செல்லாது
அடக்கிக் காப்பின்
பெறத்தகும் நிலையினை
உரைத்தது.


இரவா


--------------


கலைஞர் ஐயா மற்றும் வாழும் வள்ளுவனாம் இரவா ஐயா போன்ற சான்றோர் உரைத்த உரைநடையையே யான் உரைத்தேன்.மற்றபடி ஆரிய திராவிட விவாதம் நடத்தும் அளவுக்கு நான் ஞானம் பெற்றவனல்ல.

அன்புடன்
செல்வன்

Anonymous said...

செல்வன் ஐயா. கருணாநிதி ஐயா, கபிலன் ஐயா ஆகியோர் குறட்பாக்களையும் எம் மொழியினையும் மேம்படுத்தச்சொன்னார்கள் என்றே கொண்டாலும் நீவீர் சற்றே காலப்பிறழ்வினைக் கண்டிருந்திருக்கலாமே? எச்சுகே ஐயா போன்றவர்கள் நிச்சயமாக இதிகாச இந்திர என்பவனையே பரந்திருக்கும் எம் முன்னோர் யாத்த தமிழிலக்கியச்செல்வத்திலே நுழைந்து பொருத்திக் காண்பார்கள் என்பதினை யாம் உணர்வோம். அதன் மூலம் இந்திரன் என்பவனைச் சான்றோன் என்றதனையும் கடந்து காண்பதிலே வியப்பேதுமில்லை.

ஆயினும் நீவீர் இவ்வாறு எழுதுதல் தகுமா? கண்ணகி வழிபாடு இளங்கோ முறையென யாக்குமுன்னரே செவிவழிக்கதையாக இன்றைய கேரளமாம் முன்னைய தமிழ்மலைநாட்டிலே புழங்கிவந்ததல்லவா? அகலிகை கதை அவ்வாறு புழங்கியது குறித்து ஏதேனும் எச்சம் எம் பழந்தமிழிலக்கியத்திலே குறிக்கப்பட்டிருக்கின்றதா? குத்துமதிப்பாகப் பார்த்தாலுங்கூட கம்பநாடானின் பின்னர்தானே பெரிதாகப் பேசுகிறோம். கம்பனின் காலம் எது? வள்ளுவன் காலமெது?

வள்ளுவனை புராண இதிகாசமயப்படுத்தும் செயற்பாட்டுக்கு நீவீர் பொருத்தமான எச்சமின்றித் துணை போகாதீர். ஒற்றைத்தன்மையை எம் பண்பாட்டுக்கு வலிந்து பொருத்தாதீர் என அன்போடு கேட்கிறோம். எமக்கும் ஆரிய திராவிட வாதம் நிகழ்த்துவதிலே விருப்பில்லை. கைப்பொழுதினைப் புழுதிபடுத்தும் செயலென்றே நம்புகிறோம். ஆனால் இங்கே குறள் தந்த வள்ளுவனை அவனின் குரல்வளையைப் பிடித்து இராமகாதையின் துணைக்கதையோடு பிணைக்கும் நும் செயலினை நாம் எமக்குத் தெரிந்த எச்சங்களுடனும் ஏரணத்துடனும் எதிர்த்துப் பதிவு செய்கிறோம்.

அவனியில் அன்பு ஓங்குக
அவ்வண்ணமே பண்பும் பூக்கட்டும்

இலவசக்கொத்தனார் said...

இப்பதிவின் தாக்கத்தில் ஒரு வெண்பா. ஈற்றடி நம் ஜீவா தந்தது.

அருந்தவத்தார் கௌதமர் அன்பினள் அகல்யா
பெருமழகன் இந்திரன் பித்தாகி நின்ற
செருக்கழிந்து மீண்டனளே செல்வன்கால் பட்டே
நெருப்பிலே பூத்த நெகிழ்.

இதை நான் ஜீவாவின் பதிவிலும் பின்னூட்டமாக இட்டுள்ளேன்.

Unknown said...

சகோதரரே,

என்னை விட அறிவிலும் குறள் ஞானத்திலும் பலமடங்கு சிறந்த புலவர் இரவா ஐயா முத்தமிழ் குழுமத்தில் எழுதியதை தான் நான் இங்கு எழுதினேன்.அவர் கருத்துக்கு மாற்று சொல்லும் அளவு குறள் பற்றியும் இதிகாசம் பற்றியும் நான் அறிந்திலேன்.

தாங்கள் இலக்கியம் காப்பியம் போன்றவற்றில் ஆழ்ந்த ஞானம் பெற்றவர் என்பதை தங்கள் மடல் மூலம் உணர்கிறேன்.நீங்கள் இதுபற்றி விரிவாக ஒரு மாற்றுக்கட்டுரை எழுதித்தந்தால் அதை என் பிளாக்கில் தனிபதிவாகவே வெளியிடுகிறேன்.அறிஞர் பெருமக்கள் விவாதித்து ஒரு முடிவுக்கு வரட்டும்.அல்லது இரவா ஐயா சொல்லுவதில் தங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் முத்தமிழ் குழுவில் அதை இடலாமே?குறள் பற்றி இரவா ஐயா அங்கு அழகாக எழுதி வருகிறார்.

குழு முகவரி இதோ

http://groups.google.com/group/muththamiz/

மற்றபடி தமிழ் கலாச்சாரம்,நாகரிகம்,தமிழர் சிறப்பு ஆகியவை பற்றி எனக்கு அளவுகடந்த பெருமையும் மகிழ்ச்சியும் உண்டு.உலகுக்கு கற்றுக்கொடுக்கும் இனம் தமிழ் இனம்.அதன் மீது நான் ஏன் இன்னொரு கலாச்சாரத்தை திணிக்கிறேன்?

Unknown said...

செருக்கழிந்து மீண்டனளே செல்வன்கால் பட்டே//

இந்த செல்வன் நான் தானே?...:-))))

நன்றி கொத்தனாரே.அருமையான கவிதை

இலவசக்கொத்தனார் said...

ஆமாங்க. செல்வன் நீங்கதான். குமரன்னு சொன்னாலே அவருதான். அதான் மொத்தக் குத்தகை எடுத்துட்டீங்களே. :)

அப்படியே நம்மாளுங்களுக்கு நல்ல புத்தியும் குடுத்து காப்பாத்துங்களேன். :)

இலவசக்கொத்தனார் said...

செல்வன்,

ஒரு கேள்வி. நீங்கள் தந்திருக்கும் படத்தில் இராமபிரான் அருகே ஒரு பாம்பு இருக்கிறதே. ஏதேனும் சம்பவங்கள் இருக்கின்றனவா? அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

Unknown said...

அப்படியே நம்மாளுங்களுக்கு நல்ல புத்தியும் குடுத்து காப்பாத்துங்களேன். :) //

எத்தனை அவதாரம் எடுத்து வந்தும் ஆண்டவனாலயே முடியாத காரியம் இது.நம்மால முடியுமா?கல்கி அவதாரம் வந்து தான் இதை செய்யணும்:-)))

Unknown said...

நல்ல தகவல்கள் தந்தீர்கள்.நன்றி எஸ்.கே.
எதிர்மறையாக வள்ளுவர் சொன்னார் என்றுதான் நான் எழுதியிருந்தேன்.புலனடக்கம் தவறியவர்களுக்கு ஏற்படும் கதிக்கு இந்திரனே சாலுங்கரி என வள்ளுவர் சொல்லியிருக்கிறார்

அன்புடன்
செல்வன்

Unknown said...

அன்பின் கொத்தனார்
அகல்யாவின் கதை பல மொழிகளில் பல விதங்களில் சொல்லப்படுகிறது.கன்னடத்தில் ஏ.கே.ராமானுஜர் "the serpent lover" என்ற புத்தகத்தில் அகல்யை கதையை வித்யாசமாக எழுதுகிறார்.இதில் அகல்யை இந்திரனுடன் தெரிந்தே தவறு செய்கிறாள் என்றும் இந்திரன் பாம்பு உருவில் அவளுடன் சேர்ந்ததாகவும் எழுதுகிறார்.இந்த கதையில் அகல்யை இந்திரன் குழந்தையையே பெற்றெடுக்கிறாள்.

முழு கதையும் நினைவில்லை.அகலியை கதை பல விதங்களில் பல மொழிகளில் வழங்கப்படுகிறது.அதை பற்றி கோடை விடுமுறையில் ஒரு பதிவு போடுகிறேன்.

Anonymous said...

செல்வன் ஐயா தங்கள் பதில் ஊட்டத்துக்கு நன்றி. நீவீர் சொன்னது போலவே எழுத முயற்சி செய்கிறேன். ஆனால் இலக்கியம் என்பது குற்றாலம் டி கே சிதம்பரம் அவர்கள் செய்ததுபோல வெறும் செவ்விலயக்கிய நயப்பாகவும் விவாதமாகவும் மட்டும் முடிந்துவிடக்கூடாது. அதற்குமேலும் வாழும் குமுகாயத்துக்குப் பலனும் பலமும் தரவேண்டும்.

தங்கள் பதில் ஊட்டத்திலே கண்ட சிறிய சொற்பிழையினைச் சுட்டவேண்டும். கலாசாரம் என்பது பண்பாடு என்பதற்கீடான வடமொழிச்சொல். அதனைத் தமிழிலே பயன்படுத்தும்போது கலாசாரம் என்றே பயன்படுத்தவேண்டும். கலாச்சாரம் அல்ல.

அகல்யை குறித்து புதுமைப்பித்தன் முதல் பல புதுக்கதையாளர்களும் கவிஞர்களும் படைப்புகள் தங்கள் கோணங்களிலே தந்திருக்கின்றார்கள். ஆனால் அகல்யை கண்டு கொள்ளப்பட்ட அளவுக்கு எம் தாய்மார்கள் மண்டோதரியோ திரிசடையோ அல்லது அந்தப்புரத்திலேயே உறங்காவிலியாகிய தன் துணைவனின் தூக்கத்தினையும் சேர்த்துக் கழித்த ஊர்மிளை என்ற பெண்ணினையோ தாடகை என்ற அரக்ககுலப்போராளியினையோ எம் மாந்தர் பேசுவதில்லை. சீதை என்றவளுக்கு எவ்விதத்திலும் எம் தாய் மண்டோதரி இளைத்தவள் அல்ல. சீதை போல மாயமானைத் தேடி அலைந்தவள்கூட இல்லை எம் தாய். அவள் பேரும் புகழும் ஞாலம் போற்றுதி

VSK said...

//எச்சுகே ஐயா போன்றவர்கள் நிச்சயமாக இதிகாச இந்திர என்பவனையே பரந்திருக்கும் எம் முன்னோர் யாத்த தமிழிலக்கியச்செல்வத்திலே நுழைந்து பொருத்திக் காண்பார்கள் என்பதினை யாம் உணர்வோம். அதன் மூலம் இந்திரன் என்பவனைச் சான்றோன் என்றதனையும் கடந்து காண்பதிலே//

"ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது அறிவுக்கு வேலை கொடு"

நான் எங்கே இந்திரனை உயர்த்தி எழுதினேன்?

கொடுமையடா சாமி!

Unknown said...

சகோதரரே

திரிசடையும் மண்டோதரியும் ஊர்மிளையும் சீதைக்கு இம்மியளவும் மாற்றுக் குறைந்தவர்கலல்ல.கணவன் உயிர் துறந்த அந்த விநாடியே உடன் உயிர் நீத்தவர் மண்டோதரி.சீதையாவது ராமனுடன் காட்டில் இருந்தாள்.ஊர்மிளை கணவனை பிரிந்து 14 வருடம் தவ வாழ்வன்றோ வாழ்ந்தாள்?

இப்பெண்களின் பெருமையை பேசினால் பேசிக்கொண்டே செல்லலாமே?

"கலாச்சாரம்"- இதில் உள்ள பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.எனக்கு இது புதிய தகவல்.நன்றி

அன்புடன்
செல்வன்

Anonymous said...

எச்சுகே ஐயா நீவீர் இந்திரனை உயர்த்தி எழுதியிருப்பதாக யாம் சொல்லவில்லையே. அப்படியாக யாம் இட்டது மாறுபொருள் தந்திருப்பின் மன்னிக்கவேண்டும். யாம் கூறியதெல்லாம் நீவீர் இதிகாச இந்திரனையே வள்ளுவரின் மறை சுட்டும் இந்திரனாகப் பொருள் உரைக்கின்றீர் என்பதே. அதனையே சான்றோன் என்ற பதத்தினையும் கடந்த வேறொரு பதமாகச் சுட்ட நாடியிருக்கின்றீர் என்பதான பொருளே எமதாகும்.

VSK said...

//நீவீர் சற்றே காலப்பிறழ்வினைக் கண்டிருந்திருக்கலாமே?//

ராமாயண காவியம், மகாபாரதத்துக்கும் முற்பட்டது என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை என நம்புகிறேன்.

அதேபோல, ராமன் பிறப்புக்கு முற்பட்டது, அகலிகையின் கதையும், சாபமும்.

திருவள்ளுவர் ஆண்டு, மகாபாரத காலத்துக்கு பிறகுதான் என்பது அதன் கணக்கைக் கொண்டு காணலாம்.

அப்படியிருக்க, இந்திரனின் 'கதைகள்' வள்ளுவப் பெருமானுக்குத் தெரிந்திருக்க முடியும்.

இதிகாச இந்திரனையே புலனிழிவுக்கு ஒப்புமையாகச் சொல்லியிருக்கக் கூடும் என நினைக்கிறேன்.

எனவே, இதில் செல்வனார் ஒன்றும் காலப் பிறழ்வினைக் கொன்டதாக நான் எண்ணவில்லை.

தவிரவும், இந்திர விழா என சிலம்பில் வருவதும் , இந்த இதிகாச இந்திரனைக் குறித்ததுதான்.

சீவக சிந்தாமணி யிலும் [சமணம்], மணிமேகலையிலும்[புத்தம்], இதிகாசக் கடவுள்களைப் பற்றிய மேற்கோள்கள் உன்டென்பதை நீவிர் அறிவீர் என நம்புகிறேன்.

பழந்தமிழர் வாழ்வு முறையில் இதிகாசக் கடவுளர் வாரார், வந்திருக்க முடியாது என வாதிடுவது சரியிலையோவென ஐயுறுகிறேன்.

Anonymous said...

எச்சுகே ஐயா தங்கள் பதிலுக்கு நன்றி. வள்ளுவர் ஆண்டுக்காலக்கணக்கு இதிகாசத்தினை நம்பித் தாங்கள் கொள்ளும் இராமாயணகாலத்துக்குப் பிந்தியது என்பதாகவே கொள்வோம். இக்கதை எழுதப்படமுன்னரே செவிவழிக்கதையாக விந்தியமலைக்குத் தெற்காகவும் பரவியதாகவே கொள்வோம். இச்சந்தர்ப்பத்திலே இராமாயணத்திலே சொல்லப்படும் லங்கா என்பது இலங்கைத்தீவுதானா என்பதாக நிரூபிக்கப்படவில்லை என்பதையும் தங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆயின், திருவள்ளுவரின் காலத்தினை ஒட்டிய காலப்பகுதியிலே வந்த வேறெந்தப் புலவரேனுங்கூட இராமாயணம் குறித்துப் பேசியுள்ளதாகத் தெரியவில்லையே. பண்டைத்தமிழ்நிலப்பகுபாட்டிலே வருகின்ற குறிஞ்சியின் சேயோன், முல்லையின் மால், பாலையின் துர்க்கை, மருதத்தின் இந்திரன், நெய்தலின் வருணன் ஆகிய தெய்வங்களின் பெயர்களிலே மால், சேய் என்பன எவ்விதம் பிற்காலத்திலே வடபுலத்துத்தெய்வப்பெயர்களோடு சேர்ந்துகொண்டு ஒரே தெய்வத்தினை உணர்த்தின என்பதையும் காணுங்கள்.

இந்திரவிழா என்பது இந்திரனுக்காக விண்ணவர்கோனான எடுக்கப்பட்டவிழா என்பது எக்காலகட்டத்திலே மாறுதலடைந்தது என்பதைக் காணுங்கள்.

இந்திரன் என்ற பதம் தன்னளவிலே தமிழ்ப்பதமாக இருக்காமல் திசைவழி மருவி வந்த பதமாகவுமிருக்கலாம். வேதகால இந்திரனும் இதிகாச இந்திரனும் ஒருவனல்லன் என்பதைக் கவனியுங்கள். ஆயின் வள்ளுவப்பெருந்தகை கூறிய இந்திரன் அகலிகைகதையிலே வரும் இந்திரன் என்பவனாக எவ்விதமாகக் கொள்ளமுடியும்?

Unknown said...

test.Changed my photo.Checking how it appears in feedback

இலவசக்கொத்தனார் said...

ரொம்ப நாளா நான் சொல்லலாமா வேண்டாமான்னு யோசிச்சுக்கிட்டிருந்த விஷயம்.

நீங்களே போட்டோவை மாத்தினதுக்கு நன்றி.

VSK said...

நண்பரே!~,
இந்த விவாதம் தொடர எனக்கு விருப்பமில்லையெனினும், நம் இருவரின் நிலைபாட்டிலும் எந்த ஒரு மாற்றத்தையும் இது நிகழ்த்தி விடாது என்ற உண்மையெனினும், சில விவரங்களைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
இதன் அடிநிலைபாடாக, நாம் கொள்ள வேண்டிய ஒன்று, இந்துக் கடவுளரின் பெயர்கள் அன்றும், இன்றும், என்றும் ஒன்றே தான் என்பது.
விநாயகன், முருகன், சிவன், விஷ்ணு, [திருமால்], பிரம்மன், இந்திரன், வருணன், வாயு, அக்னி, பார்வதி, இலக்குமி, சரசுவதி என எல்லாக் கடவுளரின் பெயரிலும் மாற்றம் ஏதுமில்லை.

எனவே, இதிகாச இந்திரன், வேதகால இந்திரன் எனப் பாகுபாடு கொள்ளல், விவாதத்தினைத் தொடரச் செய்யாமல், திசை திருப்புவதாகவே அமையும்.

திருமால், இலக்குமி இவர்களை வள்ளுவரே குறளில்[610, 617, 167, இன்னும் பல] காட்டியுள்ளார் என்பதை தாங்களும் அறிந்திருப்பீர் என நம்புகிறேன்.

தமிழர் கருத்தும், வேத கால கருத்தும் ஒத்துப் போவதே, தமிழின் பண்டைத்தன்மைக்கு உரிய சிறப்பு எனத்தான் நான் பெருமிதம் கொள்கிறேன்.

தவிரவும், 'மருத' இந்திரன், ஐம்புலன்களை அடக்கி ஆண்டு, பெருமை பெற்றதாக ஏதும் குறிப்புகளை நான் படித்ததில்லை. எடுத்துக் காட்டினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

Unknown said...

Am in office.will post replies in evening.

anbudan
selvan

Unknown said...

நன்றி கொத்தனாரே

ஒரே போட்டோவையும் ஒரே கருத்தையும் தினமும் சொல்லிடிருந்தா போரடிச்சுடும்.அதனால் தான் மாற்றினேன்

அன்புடன்
செல்வன்

Unknown said...

அன்பின் எஸ்.கே

அந்த குறள்களை இட முடியுமா?இலட்சுமியை வள்ளுவர் குறிப்பிட்டிருக்கிறார் என்பது எனக்கு புதிய செய்தி

அன்புடன்
செல்வன்

குமரன் (Kumaran) said...

செல்வன்,

எஸ். கே. சார் சொன்ன பட்டியலைப் பார்த்துவிட்டு கலைஞர் அவர்களின் திருக்குறள் உரையினைப் பார்த்தேன்.

167வது குறள்:

அவ்வித்தழுக்காறுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டிவிடும்.

அதற்கு கலைஞரின் உரை:

செல்வத்தை இலக்குமி என்றும் வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக்குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்றுவிடுவாள்.

http://www.thedmk.org/thirukural/17.htm

குமரன் (Kumaran) said...

610வது குறள்:

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயதெல்லாம் ஒருங்கு.

இதற்கு மற்றவர்கள் சொன்ன உரையில் 'சோம்பல் இல்லாத மன்னவன், தன் மூன்று அடிகளால் திருமால் எவற்றை தாவி அளந்து கொண்டாரோ அவை எல்லாவற்றையும் அடைவான்' என்று சொல்வார்கள்.

கலைஞர் உரை:

சோம்பல் இல்லாதவர் அடைந்த பலன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.

http://www.thedmk.org/thirukural/61.htm

குமரன் (Kumaran) said...

617வது குறள்:

மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையினாள்

கலைஞரின் உரை:

திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையோரையும் முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.

http://www.thedmk.org/thirukural/62.htm

Anonymous said...

அய்யகோ வசதிக்காக அண்மைய உரைஞர்களைக் கொண்டு வள்ளுவனை உணர்வதா?
என்னே தவறு அய்யா!! வள்ளுவன் வாழ்ந்த பொழுதினை யாம் ஈண்டு கண்டுகொள்ளவேண்டாமா?

Unknown said...

அனானிமஸ் நண்பரே

தங்கள் பெயர் என்ன?விளிக்க உதவுமே என்று தான் கேட்கிறேன்.அனானிமஸ் நண்பரே என்று அழைக்க சங்கடமாக இருக்கிறது.

வள்ளுவப் பெருந்தகை எச்சமயத்தையும் சார்ந்தவரல்ல என்பதும் அவரின் குறள் உலகுக்கே வழிகாட்டி ஒரு குறிப்பிட்ட மதத்துக்கோ,மொழிக்கோ(அது தமிழாக இருப்பினும் சரி) சொந்தமல்ல என்பதுவே என் கருத்து.மொழிகளை,மதங்களை தாண்டி அது ஒளி வீச வேண்டும்.

எஸ்.கேவும் குமரனும் அததகைய கருத்துக்களையே கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.அவர்கள் சுட்டிய குறள்களில் வள்ளுவர் ஒரு உதாரணமாக தான் கடவுளரை பயன்படுத்தியிருக்கிறாரே தவிர யாரையும் வழிபட சொல்லவில்லை.அன்பே சிவம் என்று அனைத்து மதத்தாரும் சொல்லுவார்கள்.அதனால் அவர்களை சைவர்கள் என்று சொல்ல முடியுமா?அது போல் தான் வள்ளுவர் சொல்லிய உதாரணங்களை வைத்து அவருக்கு எம்மத சாயமும் பூச முடியாது என நினைக்கிறேன்

Unknown said...

நன்றி குமரன்

இக்குறள்களை நான் இதுநாள் வரை படித்ததில்லை.1330 குறளையும் படித்திருக்க முடியாதல்லவா?இவற்றை சுட்டிக்காட்டிய எஸ்.கேவுக்கும் நன்றி.அழகிய தமிழ் வாதமாக இதை எடுத்துசென்ற அனானிமஸ் நண்பருக்கும் நன்றி.

VSK said...

ஒப்புக்கொள்கிறேன்.

நான் பின்பற்றும் வழி இதுதான்!

ஒரு நாளைக்கு ஒரு அதிகாரம்[10 குறள்கள்] மூலமும், உரையும் படித்தல்.

அதில் ஒரே ஒரு குறளை, அன்று எனக்குப் பிடித்த ஒரு குறளை, மாடும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொள்வது.

அது ஏதாகிலும் ஒரு தனிக் கருத்தைக்[ இந்த 'தெய்வக் குறள்கள்' போல!] காட்டுமாயின், அதனைத் தனியாகக் குறித்துக் கொளல்.

133 நாட்களுக்குப் பின், மீண்டும் இந்தச் சுழற்சியை திரும்ப ஆரம்பித்தல்.

மனனம் செய்யவில்லை எனினும், ஒரு மாதிரி, குறல்களை அடையாளம் கொள்ள இது உதவும்.

புத்தாண்டில் முடிந்தவர் ஆரம்பிக்கலாமே!

Unknown said...

எஸ்.கே சார்,

நம்ம ஆளுங்க தினமும் குறள் படிச்சா எங்கியோ அல்ல போயிடுவாங்க?நடக்குங்கறீங்களா?எனக்கு நம்பிக்கை இல்லை.

VSK said...

'மட்டும்'
'குறள்களை'

தட்டெழுத்துப் பிழைக்கு வருந்துகிறேன்.

Anonymous said...

குறட்களை

G.Ragavan said...

கருணாநிதியின் குறளோவியமோ, சுஜாதாவின் உரையோ திருக்குறளை அறிவதற்குச் சிறந்த வழிகளாகாது. பரிமேலழகர் உரையும்தான். முவ-வின் உரை மற்றவைகளை விடச் சிறப்பாக இருக்கிறது.

இந்திரன் என்று வள்ளுவன் சொல்வது தேவேந்திரனை அல்ல. இந்திரன் என்ற சொல் குறிப்பது தலைவன் என்ற பொருளை மட்டுமே. தேவர்களுக்குத் தலைவனாக இருந்தால் தேவேந்திரன். மனிதர்களுக்குத் தலைவர்களாக இருந்தால் நரேந்திரன் என்றுதான் வடமொழியும் கூடச் சொல்கிறது. வெறும் இந்திரனே தேவேந்திரன் என்றும் சொல்வது பிற்கால வழக்காக இருக்கலாம். ஆனால் முற்கால வழக்கன்று. இந்தப் பதத்தை..அதாவது இந்திரன் என்ற சொல்லுக்குப் பொருள் தலைவன் என்ற வகையில் கச்சியப்பரும் கந்தபுராணத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.

போகிற போக்கைப் பார்த்தால் திருக்குறளுக்கும் நான் உரை எழுத வேண்டும் போல இருக்கிறது. 1330 குறள்கள். அடேங்கப்பா!

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி..



***
அன்பின் ராகவன்

"பரந்து விரிந்த வானில் உறைவோர்க்கு கோமானான இந்திரன் " யார்?

ஜெயஸ்ரீ said...

பரிமேலழகர் உரையிலிருந்து ....


ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி

ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு

அகல்விசும்பு உளார்கோமான் இந்திரனே சாலும் கரி -- அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று

தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆதலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்

ஜெயஸ்ரீ said...
This comment has been removed by a blog administrator.
ஜெயஸ்ரீ said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

நன்றி ஜெயஸ்ரி,

அன்பின் ராகவன்

வள்ளுவர் இந்திரன் "என்பதை" அரசன் எனும் பொருள்பட உரைக்கவில்லை என்பது தெளிவு."அகல் விசும்புளர் கோமான்" என்று சொல்லுகிறார்.இங்கு கோமான் என்பதே அரசன் என்றுதான் பொருள்.நீங்கள் சொல்லும் பொருளில் பார்த்தால்

"வானில் உறைவோர்க்கு மன்னனான மன்னன்" என ஒரே சொல்லை இருமுறை வள்ளுவர் சொல்லுவதாக அல்லவா ஆகிவிடும்?

"வானில் உறைவோர்க்கு மன்னனான இந்திரன்" என பொருள் கொள்வது தான் சரி என படுகிறது

மற்ற உரைகளில் என்ன சொல்லியிருக்கிரார்கள் என தெரியுமா?

குமரன் (Kumaran) said...

செல்வன்,

இந்தப் பதிவுக்கு பின்னூட்டமிட எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. (தமிழில் விஷயம் என்பதற்கு எந்த சொல் பயன்படுத்தலாம், என் புழக்கத்தில் விஷயம் என்பது அதிகமாகிவிட்டது). ஆனால் நீங்கள் கடைசியில் சொன்ன ஒரு வரியில் தான் எல்லா பின்னூட்டங்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. மற்ற விஷயங்களைப் பற்றியும் பேசவேண்டும். :-)

குமரன் (Kumaran) said...

//போகிற போக்கைப் பார்த்தால் திருக்குறளுக்கும் நான் உரை எழுத வேண்டும் போல இருக்கிறது. 1330 குறள்கள். //

எழுதுங்கள் இராகவன். நான் ஏற்கனவே இன்பத்துப்பாலுக்கு எழுதத் தொடங்கிவிட்டேன். அங்கு உங்களுக்கு ஏற்பில்லாத பொருள் சொன்னால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள். மற்ற இரு பாலுக்கும் நீங்கள் பொருள் சொல்லுங்கள். கலைஞர், சுஜாதா, பரிமேலழகர், மு.வ., இராகவன்....வரிசைத் தொடர் நன்றாக இருக்கிறது :-)

குமரன் (Kumaran) said...

செல்வன்,

புழக்கத்தில் இருக்கும் கதையில் தேவேந்திரன் (தெளிவாகவே சொல்லிவிடுகிறேன் தேவேந்திரன் என்று :-) ) அகலிகையை ஏமாற்றிவிட்டதாக இருந்தாலும், வால்மீகியும் கம்பரும் சொன்னதில் எல்லோருக்கும் தெரிந்த கதையைவிட சிறு மாறுபாடு இருக்கிறது. இருவரும் மறைபொருளாகச் சொல்வது - தொடக்கத்தில் வந்திருப்பது தேவேந்திரன் என்று தெரியாவிட்டாலும் கலவியின் போது அகலிகைக்கு வந்திருப்பவன் இந்திரன் என்பது தெரிந்துவிடுகிறது; ஆனாலும் அந்த நேரத்தில் அவள் தொடர்ந்து தேவர் தலைவனை அணைந்தாள் என்று இருக்கிறது.

கௌதம முனிவர் தேவர் தலைவனுக்குத் தந்த சாபத்தைப் பற்றி வெளிப்படையாக நீங்கள் சொல்லாமல் விட்டது நல்லது தான். வெளிப்படையாகச் சொல்லியிருந்தால் அசிங்கமாக இருந்திருக்கும். ஆனால் அந்த சாபம் மாற்றியமைக்கப்பட்டு அவன் ஆயிரம் கண்கள் கொண்டவுடன் அதுவே அவனுக்கு பெருமையானப் பெயராக வடமொழியில் ஸகஸ்ரசக்ஷு என்றும் தமிழில் கண்ணாயிரம் என்றும் சொல்லப்படுவதைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. :-)

புராணம் சொல்கிறது என்று சொல்லியிருக்கிறீர்களே. எந்தப் புராணம் என்று சொல்லவில்லையே?

Unknown said...

குமரன்

அகலியை கதை கிரீசில் கூட உள்ளது.இக்கதை பற்றிய பல வெர்ஷன்கள் உள்ளன.இக்கதையின் பல வெர்ஷன்கள் பற்றி கோடை விடுமுறையில் எழுதலாம் என்றிருக்கிறேன்.

அகலியை தெரிந்தே தவறு செய்தாள் எனும் வெர்ஷன்கள் உண்டு.தேவேந்திரனே தேடி வந்தான் என்று பெருமிதம் கொண்டாள் என்று சொல்லப்படுவதும் உண்டு.

இந்திராணி கதையை விஷ்ணு புராணத்தில் தான் படித்தேன் குமரன்.

அன்புடன்
செல்வன்

Unknown said...

ஆனால் நீங்கள் கடைசியில் சொன்ன ஒரு வரியில் தான் எல்லா பின்னூட்டங்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. மற்ற விஷயங்களைப் பற்றியும் பேசவேண்டும். :-) //

உண்மைதான் குமரன்

புலனடக்கம் பற்றி எழுதிவிட்டு அதை யாரும் கண்டுகொள்ளவில்லையே?

//கௌதம முனிவர் தேவர் தலைவனுக்குத் தந்த சாபத்தைப் பற்றி வெளிப்படையாக நீங்கள் சொல்லாமல் விட்டது நல்லது தான்.//

அதை என்னன்னு சொல்றது?:-)))

என்ன தான் தப்பு பண்ணாலும் இப்படி எல்லாமா சாபம் கொடுப்பாங்க?:-)))

ஜயராமன் said...

செல்வன் ஐயா,

தங்கள் பதிவும், கருத்துச் செறிவான தங்கள் பின்னூட்டங்களும் மன நிறைவையும், வியப்பையும் தருகின்றன.

இணையத்தில் பதிவுகள் மிகவும் தரம் சிறந்து விளங்க தங்களின் இந்த பதிவு ஒரு நல்ல உதாரணம்.

பல நல்ல விஷயங்களை மிகவும் அழகாக விளக்கியுள்ளீர்கள். படித்து சந்தோஷப்பட்டேன். வள்ளுவனின் இந்த குரலை என் அகலிகை பதிவில் எழுத முதலில் யோசித்திருந்தேன். ஆனால், நீளம் கருதியும் பின்ன பிற பொருத்தமான காரணத்திற்காகவும் அதை பதியவில்லை.

SK அவர்களின் கருத்தோடு நான் முற்றிலும் ஒப்புகிறேன்.

குரலுக்கு கலைஞரின் உரையை படிப்பது, பசுவின் பெருமையை கேரளா அடிமாட்டு காண்ட்ராக்ட்ரிடம் கேட்பது போலத்தான் என்று என் எண்ணமாக இருந்தாலும், தங்களுக்கு பிற உரைகளை நான் படிக்க பரிந்துரை செய்ய துணிவு வரவில்லை.... ஏனென்றால், நீங்களே அதை படித்திருப்பீர்கள் என்று தெரியும்...

நன்றி

Unknown said...

/குரலுக்கு கலைஞரின் உரையை படிப்பது, பசுவின் பெருமையை கேரளா அடிமாட்டு காண்ட்ராக்ட்ரிடம் கேட்பது போலத்தான் என்று என் எண்ணமாக இருந்தாலும்../

இதை படித்துவிட்டு விழுந்து விழுந்து வெகுநேரம் சிரித்தேன் ஜயராமன் சார்.அருமையாக உதாரணம் தருகிறீர்கள்.ஆனால் ஒரு உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் முதல் முதலில் எழுதிய லவ் லெட்டரில் என்ன எழுதுவதென்று தெரியாமல் கலைஞர் எழுதிய திருக்குறள் இன்பத்துப்பால் உரையின் சில குறள்களை தான் மேற்கோள் காட்டி எழுதியிருந்தேன்.அந்த அளவுக்கு அவர் உரை எனை கவர்ந்தது.

மற்ற உரைகளோடு கலைஞர் உரையை ஒப்பிடும் அளவுக்கு என் தமிழ்ஞானம் போதாது.நான் படித்ததில் எனக்கு பிடித்த உரைகளில் அதுவும் ஒன்று.அவ்வளவே.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜயராமன் ஐயா.

நாமக்கல் சிபி said...

இந்த செல்வனை கொஞ்ச நாளாக காணவில்லை :-))

பரிட்சைக்கு பிறகாவது இந்த மாதிரி விஷயங்களை எழுதுவீங்களா?

Unknown said...

Defenitely Balaji.

That selvan is the same selvan who writes now:)))

After exams will defenitely write about ramayana and mahabharatha and vedas and kural.

Thanks..

நாமக்கல் சிபி said...

//That selvan is the same selvan who writes now//

இல்ல கொஞ்ச நாளா ரொம்ப கோபமான பதிவுகளே வருது :-)
அதனாலத்தான் கேட்டு வெச்சிக்கிட்டேன்.

சரி நல்லபடியா பரிட்சையை முடிச்சிட்டு வாங்க

Unknown said...

ஆமாம் பாலாஜி.

ரவுத்ரம் பழகுன்னு பாரதி சொன்னான்.அதை கடைபிடித்தேன்:)))

படிச்சு முடிச்சுட்டு வந்தா சாந்தமா எழுதுவேன்.தொடர்கதைய முதலில் நல்லா முடிக்கணும்.