Sunday, March 05, 2006
60. நான்கெழுத்தில் என் மூச்சிருக்கும்
என்னை தமிழினி முத்து 4 விளையாட்டில் இழுத்துவிட்டார்.இழுத்து 1 வாரமாகிறது.தாமதத்துக்கு அவர் மன்னிப்பாராக.சரி இதோ என் நாலு
எனக்கு பிடித்த 4 விஷயங்கள்
1.செஸ் ஆடுவது
2.எழுதுவது
3.படிப்பது
4.சினிமா பார்ப்பது
பிடித்த 4 படங்கள்
1.சிவாஜி காமடி படங்கள்
2.பழைய ரவிச்சந்திரன் படங்கள்
3.விட்டலாச்சார்யா படங்கள்
4.பழைய ரஜினி சண்டை படங்கள்
பிடித்த 4 ஊர்கள்
1.காரைக்குடி
2.ராமநாதபுரம்
3.பொள்ளாச்சி
4.கிணத்துக்கடவு
பிடித்த நடிகர்கள் காம்பினேஷன்
1.கவுண்டமணி,செந்தில்
2.ரவிச்சந்திரன்,நாகேஷ்
3.ரஜினிகாந்த், YG மகேந்ரன்
4.சத்யராஜ்,கவுண்டர்,வடிவேலு
பிடித்த 4 உணவகங்கள்
1.பாலாஜி மெஸ்- கிணத்துக்கடவு: அருமையான வீட்டு சாப்பாடு கிடைக்கும்.தலைவாழை இலை போட்டு சூடாக சமையல் செய்து மிகவும் நல்ல காய்கறிகளை வைத்து சமையல் செய்து பரிமாறுவார்கள்.50 பேருக்கு அளவாக தான் சமைப்பார்கள்.அதற்கு மேல் வந்தால் நோ..நோ தான்.
2.அன்னபூர்ணா கவுரிசங்கர் கோவை:கோவையில் இருந்தவர்களுக்கு அன்னபூர்ணாவில் கிடைத்த திருப்தி பைவ்ஸ்டார் ஓட்டலில் சாப்பிட்டாலும் கிடைக்காது.அங்கு கிடைத்த சாம்பார் இட்லியும்,கள்ளிச்சொட்டு காப்பியும்,மசால் தோசையும் இன்னும் மனதில் நிற்கிறது.
3.பி.எஸ்.ஜி கல்லூரி கேன்டீன்,கோவை:கிட்டத்தட்ட ஒரு ஓட்டல் போலவே சுவையும் தரமும் இருக்கும்.விலை மிக குறைவு.அசத்தலான வெரைட்டியில் தோசைகள்,பிரியாணி என கிடைக்கும்.
4.முருகன் இட்லி கடை,மதுரை:பெயர் தான் இட்லிகடை.ஆனால் எல்லா வகை சைவ உணவுகளும் கிடைக்கும்.மதுரை போனால் இங்கு போகாமல் திரும்புவதில்லை.இந்த கடை இருக்கும் தெருவில் முந்திரிபருப்பு ஜூஸ்,பாதாம் ஜூஸ் என விற்பார்கள்.இதிலெல்லாம் ஜூஸ் போட முடியுமா என அதிசயம் வந்து குடித்து பார்த்து அந்த சுவையும் பிடித்து போய் விட்டது.
மதுரைக்கு போனால் ஜிகர்தண்டா என ஒன்று கிடைக்கும் என்றார்கள்.ஆனால் ஒருமுறை கூட அதை குடித்ததில்லை என்ற வருத்தம் இன்னும் மனதுக்குள் இருக்கிறது.
மிகவும் பிடித்த கோயில்கள்
1.பாலமலை ரங்கநாதர் கோயில்,கோவை
இந்த கோயில் மேல் ஏறுவதே பெரிய சாதனை.மலை மேல் ஏற 4 மணி நேரமாகும்.சுற்றுலா போவது போல் வீட்டில் அனைவரும் போவோம்.அந்த நாட்களை எல்லாம் மறக்கவே முடியாது.
2.திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்: திருமணமாகி மனைவியும் நானும் போன முதல் கோயில்.திருப்பாவை பாடிய அந்த பெண்தெய்வம் நடந்த தெருவில்,அவள் மலர் பறித்த பூங்காவில் நடந்த அனுபவத்தை வாய் விட்டு சொல்ல முடியாது.
3.நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில்: கம்பீரமாக ஆஞ்சநேயர் நிற்கும் அந்த அழகை காண கண் கோடி போதாது.என் அம்மாவும் நானும் இருமுறை போயிருக்கிறோம்.
4.பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோயில் புதிதாக கட்டிய கோயில்.மிகவும் நல்ல முறையில் வைத்திருப்பதுடன்,ஆஞ்சநேயர் பற்றி குட்டிகதைகள் எல்லாம் சொல்லுவார்கள்.
எந்த 4 வலைபதிவர்களை இழுக்கலாம் என யோசித்து பார்த்ததில் கிட்டத்தட்ட எல்லாரும் இழுக்கப்பட்டு விட்டது போல் தெரிகிறது. ஆக என் நண்பர்களில் இழுக்கப்படாமல் மீதமிருக்கும் நால்வரில் நான் இழுக்க விரும்பும் 4 வலைபதிவர்கள்
1.அன்பை அள்ளித்தரும் எனது இனிய சாம்
2.நெஞ்சம் நிறைந்த நட்பில் கிடைத்த என் அன்பு முபாரக்
3.எனது முத்தமிழ் குடும்பம்.
4. என் இனிய சொந்தம் சிவசங்கர்
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
முதுகுல டின் கட்டறதுன்னு பிளானா?நடக்கதாக்கும்
//அடுத்தவன் உன் எண்ணங்களை,உனக்கான சிந்தனைகளை, உன் வாழ்க்கையை உருவாக்குவது நீ ஒரு மனிதனாக தோற்று விட்டாய் என்பதன் பொருள//
இதை இப்பத்தான் பார்த்தேன்....யாரோட தத்துவம்?..அருமையானது....
நான்கு பதிவு---இதுக்குத்தான் இதுல இழுத்து விடறது..நீங்க பி.எஸ்.ஜீ பிராடக்டா..நானும் தான். எம்.எஸ்.ஸி(96-98)..நீங்க..
இதை இப்பத்தான் பார்த்தேன்....யாரோட தத்துவம்?..அருமையானது....//
Nietzsche
நான்கு பதிவு---இதுக்குத்தான் இதுல இழுத்து விடறது..நீங்க பி.எஸ்.ஜீ பிராடக்டா..நானும் தான். எம்.எஸ்.ஸி(96-98)..நீங்க.. //
தலைவா
நான் பி.எஸ் ஜி கிடையாது.அங்க அடிக்கடி போவேன்.அவ்வளவுதான்.ஏன் எதுக்குன்னெல்லாம் கேக்க கூடாது.:-))
செல்வன். எனக்கும் அன்னபூர்ணா கௌரிசங்கர் ரொம்ப பிடிக்கும். மதுரை முருகன் இட்லி கடையும் தான். ஒவ்வொரு முறை மதுரை செல்லும் போதும் குறைந்த ஒரு முறையாவது சென்று விடுவேன். அங்கு ரெண்டு ஸ்பெஷல் சட்னிகள் கிடைக்கும். அவற்றின் சுவையை நான் இதுவரை வேறு எங்கும் சாப்பிட்டதில்லை. சின்ன வயதில் அங்கு போய் அடிக்கடி சாப்பிட முடியவில்லை - விலை மற்ற கடைகளைவிட கொஞ்சம் அதிகமாய் இருந்ததால். ஆனால் சம்பாதிக்கத் தொடங்கியபின் அந்த தடை இல்லை. ஆனால் நான் தான் மதுரையில் இல்லை. :-)
அன்பு குமரன்,
எனக்கும் இதுபோல் பல சோகங்கள் உண்டு.கோவை ரெஸிடன்சி ஓட்டலில் சாப்பிட ஆசை.அங்கிருந்தபோது விலை அதிகம்,இங்கு வந்தபின் விலை பிரச்சனையில்லை,ஆனால் ரெசிடென்சி இங்கில்லை.:-(((
நான் கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில் படித்ததால ச்ரிவில்லிபுத்தூர் கோயிலுக்கு அடிக்கடி போயிருக்கேன். இந்த 'நான்கு' பதிவால நான் அறிந்து கொண்டது - நீங்கள் திருமணமானவர் என்று. ஏதோ சின்னப் பையன் என்று தான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். :-)
நான் எம்.ஈ. படித்தது சி.ஐ.டி.யில். நீங்கள் பி.எஸ்.ஜி.யில் படிக்கவில்லை என்றால் எங்கு படித்தீர்கள்?
ஆகா எஞ்சினியரா நீங்கள்?தெய்வமே...நான் ஆர்ட்ஸ் டிகிரி.நான் படித்த்து எஸ்.என் ஆர் கல்லூரியில்.
நான் சின்ன பையன் தான் குமரன். 31 வயது சின்ன பையன்.
31 வயசா? என்னை விட 2 வயது இளைய என் தம்பி வயது. :-)
ஆகா..தம்பியா??
நேற்று பொருளாளர்
இன்று தம்பி
நாளை..??
எனக்கு வைகோ ஞாபகம் வேறு அடிக்கடி வந்து போகிறது..:-)))
யப்பா...உங்களை யாரு தம்பின்னு சொன்னது? என் தம்பிக்கும் உங்க வயசுன்னு சொன்னேன். நான் சொன்னதை திரும்பவும் படிங்க. இப்ப நான் சொல்ற அர்த்தம் வருதா?! அதுக்குள்ள தம்பின்னு கூப்புட்டேன்னு நீங்களே நினைச்சுக்கிட்டு வை.கோ.வை எல்லாம் இழுத்தா அதுக்கு நான் பொறுப்பா என்ன? :-)
அதெல்லாம் ஒத்துக்க முடியாது
என்னை தம்பின்னு பகிரங்கமா தொண்டர்கள் மத்தியில் அறிவித்துவிட்டு இப்போது இல்லை என்று சொல்வதை ஏற்க முடியாது.
பொதுக்குழுவை கூட்டித்தான் முடிவெடுக்க முடியும் அண்ணா...:-))
என்னை தம்பி,போர்வாள் என நீங்கள் அறிவிக்கிறீர்களா இல்லை நானே அறிவித்துக்கொள்ளட்டுமா?:-)))))
செல்வன். உங்கள் நல்ல வேளை. எனக்கு மகன்கள் இல்லை. இனிமேல் வரலாம். அதனால் கொஞ்சம் நாள் போகட்டும் உங்களைப் போர்வாள் என்று அறிவிப்பதற்கு. :-)
பார்த்தீர்களா,,
ஸ்டாலின் மேல் வைத்த பாசத்தால் தான் தம்பியை கழட்டி விட்டார் கலைஞர்.வைகோவுக்காவது ஆதரவு தர அம்மா இருந்தார்கள்.தமிழ்மணத்தில் எனக்கு ஆதரவு தர அப்படி எந்த அம்மா இருக்கிறார்கள்??
ஓ தமிழகமே...
அம்மா இல்லாவிட்டால் என்ன? நிறைய ஆன்மிக ஐயாக்கள் இருக்கிறார்களே. கவலையை விடுங்கள்.
அட ஆமாம். அம்மாக்கள் யாருமே ஆன்மிகம் பேச மாட்டேன் என்கிறார்களே வலைப்பதிவுகளில். ஒரு அம்மணி இருக்கிறார் ஆன்மிகம் பேச. ஆனால் அவரும் வலைப்பூ தொடங்காமல் பின்னூட்டம் மட்டும் போட்டுக் கொண்டிருக்கிறார். :-(
எந்த அம்மாவை சொல்கிறீர்கள்?ஒரே புதிராக அல்லவா இருக்கிறது?
அம்மா என்றாலே புதிர்தான் போலும்..
அன்புள்ள செல்வன்
உங்கள் அழைப்பு மகிழ்ச்சியை தருகிறது. கொஞ்சம் மெதுவாய் வருகிறேன். பரவயில்லையா?
ராமனுஜர் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தது, ராமனாதபுரம் மாவட்டத்தில், திருப்பத்தூருக்கு அருகே உள்ள திருக்கோட்டியூர். கோவிலில் மூன்று தளங்கள் இருந்ததாக ஞாபகம். வேறு எந்த திருக்கோவிலுமிப்படி இருந்ததாக நினைவில்லை.
அன்புடன்
சாம்
Jayashree என்றொரு அம்மணி இருக்கிறார். என் பதிவிலோ, இராகவன், இராமநாதன் பதிவிலோ பின்னூட்டங்களில் இவரைக் காணலாம். அவரைத் தான் சொன்னேன் செல்வன்.
லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருகிறேன் என சூப்பர்ஸ்டார் ஸ்டைலில் வாருங்கள் சாம்.நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்
சாம் அண்ணா. நீங்கள் சொல்லும் மூன்று அடுக்குகளைக் கொண்ட கோயில் விமானம் மதுரை கூடல் அழகர் கோவிலிலும் உண்டு. கீழே பெருமாள் அமர்ந்த திருக்கோலத்திலும், நடுவில் நின்ற திருக்கோலத்திலும், மேலே சாய்ந்த திருக்கோலத்திலும் காட்சி தருவார்.
திருக்கோஷ்டியூரில் இராமானுஜர் எல்லாருக்கும் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தது மிக நெகிழ்வான நிகழ்ச்சி. சீக்கிரம் இந்த நிகழ்ச்சியைப் பற்றி எழுத வேண்டும்.
அவர் பின்னூட்டங்கள் சிலவற்றை படித்த ஞாபகம் குமரன்.நன்றி
அன்புடன்
செல்வன்
ஆகா சர்க்கரை பந்தலில் தேன்மழை பொழியப்போகிறதா?ராமானுஜர் பற்றி குமரன் சாம் இருவரும் எழுதுங்கள்.படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
அன்பு குமரன்,
உங்கள் ராமானுஜரைப் பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பீபீ நாச்சியாரைப்
பற்றியும் உங்கள் பதிவில் படிக்க ஆசை. எழுதும் போது கண்டிப்பாக என் பதிவுக்கு மயில்
அனுப்புங்கள்.
அன்புடன்
சாம்
Surprise...Are you from Kinathukadavu? Me from there only..Exact location is No.10.Muthur, 6KM from K.Kadavu..on the way to sulakkal..
First time visiting ur blog..Nice!
Hi thangs,
I am not from kinathukadavu.But I have been there umpteen times.I have gone from CBE to pollachi via k kadavu in 2 wheeler hundreds of times and have stopped at almost all villages.I remember thamaraikulam inbetween kkadavu and suulakkal.I also remember sulakkal railway crossing.
hereby,i declare that 'neenga namma ooru aaluthaan' :-)
hereby,i declare that 'neenga namma ooru aaluthaan' :-) //
தங்க்ஸ் அண்ணா,
நிச்சயமா கிணத்துக்கடவு மண்ணை சேர்ந்தவனாகத்தான் நான் என்னை உணர்கிறேன்.நான் பிறந்த கிராமமும் கிணத்துக்கடவும் அசல் கொங்கு நாட்டு கலாச்சாரம் நிரம்பிய,அழகிய கிராமங்கள்.அன்பு நிறைந்த,கள்ளம் கபடற்ற மக்கள்,மரியாதை பொங்கி வழியும் பேச்சு,சிறு குழந்தையை கூட அம்மா என அழைக்கும் பாங்கு- இதெல்லாம் கொங்கு மண்ணின் கலாச்சாரமல்லவா?
கொங்கு மண்ணை சேர்ந்தவன் என்று சொல்வதில் மிகவும் பெருமையடைகிறேன்.
ஓ. நீங்க கொங்கனா? :-)
ஆமாம் செல்வன். நீங்கள் சொல்வது மெத்தச் சரி. மரியாதை தெரிந்தவர்கள் என்றால் உங்கள் ஊர்க்காரர்கள் தான்.
பார்ட்னர், குமரன் - உங்கள் இருவருக்காகவே நான் இன்னும் ஓரிரு நாளில் முருகன் இட்லி கடையில் போய் சாப்பிட்டுவிடுகிறென். உங்களுக்காகவே. சரியா?
அதோடு, பார்ட்னர் உங்களுக்காக இன்னும் இரண்டு நாட்களுக்குள் ஜிகர்தண்டா சாப்பிட்டு, உங்களை நினைத்துக் கொண்டு ஒரு ஏப்பம் விட்டு...
காத்தில காத்தில தூது விட்டு...
ஜிகர்தண்டா கடை படம் எடுத்து வச்சிருக்கேன். தல புராணத்தில எழுத நினச்சி, விட்டுட்டேன்.
பார்ட்னர்,
குடுத்து வெச்சவரு பார்ட்னர் நீங்க.இங்க இந்திய ரெஸ்டாரன்ட்னாலே வட இந்திய உணவு தான் கிடைக்குது.தமிழ்நாட்டு சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு.ஜிகர்தண்டா வேற குடிக்க போறீங்களா?கடைசிக்கு அந்த படமாவது பதிவுல போடுங்க
குமரன்,
கொங்கன் என்பது கொங்கு நாட்டு மக்கள் அனைவரையும் குறிக்கும் சொற்றொடராகும்.பாண்டியன்,சோழன் போல.தமிழ்நாட்டு கிராமங்கள் அனைத்தும் மரியாதயானவை தான்.ஆனால் சென்னை மரியாதையே தனி என சொல்வார்கள்:-))
இன்னாபா மட்ராஸப் பத்தி தப்பா பேசிகினு கீற... கம்னு கெட....
செல்வன்,
கல்யாணம் ஆனவர் தானே நீங்க. வீட்டுல சொல்லி தமிழ்நாட்டுச் சாப்பாடு சாப்புடறது?
தருமி சார்,
முருகன் இட்லி கடைக்கு நல்லா போய் சாப்புடுங்க. அந்த ரெண்டு வகைச் சட்னி தவிர வேற எல்லாமே இங்க எங்க வீட்டிலயும் கிடைக்குது. இன்னைக்கு டின்னர் இட்லி செய்யச் சொல்லணும். :-)
தலைவா
அந்த கொடுமைய ஏன் கேக்கறிங்க?மனைவி இருப்பது இந்தியாவில்,நான் இருப்பது இங்கு.படிப்பு முடிந்து வேலை கிடைத்த பிறகு தான் சந்திப்பு
அடடடடடா. நெனைச்சேன். மினசோட்டா பக்கம் வந்தீங்கன்னா வீட்டுக்கு வாங்க. மதுரை சாப்பாடு சாப்பிடலாம். உங்க பார்ட்னரைக் கேட்டா சொல்லுவார், சௌராஷ்ட்ரா வீட்டுச் சாப்பாட்டைப் பத்தி.
உங்க ஊருல உடுப்பி கிடுப்பி கிடையாதா? இங்க ஒன்னு இருந்தது. ஏதோ பிரச்சனையில இப்ப மூடிட்டாங்க.
உடுப்பி எல்லாம் எங்க போக?ஒண்ணும் கண்ணுல காட்டுறதில்லை இங்க.முழுக்க முழுக்க வட இந்திய உணவகம் தான்.
மின்னசோட்டா கண்டிப்பாக ஒரு நாள் வருகிறேன்.மதுரையிலும் இறைவன் அருள் இருந்தால் சந்திப்போம்.தருமி சாரோட முருகன் இட்லி கடைக்கு போய் ஒரு வெட்டு வெட்டுவோம்
I am veggie swetha..how to go to angannan kadai?:-))
have been to karamadai many times
அன்பு செல்வன்
எதோ சிக்கலால் தமிழ்மணத்தில் நேரடியாகப் பதிப்பிக்கத் தெரியவில்லை. உங்கள் நாலு பதிவிலேயே பின்னூட்டமாக இதை பதிவு செய்து விடுங்களேன்
அன்புடன்
சாம்
இது முதல் வளையம்
தாத்தா ஒரு கதை சொல்லேன். நான் உடனே ‘அந்த காலத்தில தமிழ்மணத்திலேன்னு’ ஆரம்பிப்பேன். உடனே அவங்க தமிழ்மணம்னா என்னான்னு கேப்பாங்க. தாத்தா சின்ன வயசில
நண்பன் வீட்டில ஒரு புத்தகத்த பார்த்தேன். அதுல எல்லாமே கையில எழுதியிருந்துச்சு. அந்த நண்பன் சொன்னாரு, அது முதல காலி புத்தகமா இருந்துச்சாம், ஒருத்தர், தனக்கு
பிடிச்சதை, அதுல எழுதிட்டு இன்னொரு நண்பர் கிட்ட கொடுத்தாராம். அவரும் அத மாறியே செஞ்சாராம். அப்படியே அந்த புத்தகம் முழுதும் தமிழால நிறைஞ்சு போச்சாம். அதுக்குப் பேரு கையெழுத்துப் புத்தகம்னு சொன்னாரு. கணினி வந்த பிறகு, இதே மாதிரியே தமிழ்மணம்ங்கிற இணயதளத்தில, உலகத்தில எல்லா மூலையிலுருந்தும், தமிழ்ல எழுதணும்னு, நிறையப் பேர்
வந்து ஆர்வமா கலந்துக்குவாங்க. அதுல வந்து சேருங்கன்னு செல்வன்ன்னு ஒருத்தர் வந்து கூப்பிட்டாரு. சங்கிலிப் பதிவுன்னு ஒன்னுல சேர்த்து விட்டேன்னு சொன்னாரு. நானும் ஆர்வமாப் போனேன்னு, தொடருவேன். அப்பெல்லாம், வாரம் ஒரு நட்சத்திரம்ன்னு, அறிமுகப்படுத்திட்டிருந்தாங்க.
இப்பப் பார்த்தீங்கன்னா தமிழ்மணமே ஒரு நட்சத்திர மண்டலமா இருக்குன்னு தொடருவேன். ம் ம் ம்..... இதெல்லாம் எதிர்காலத்திலே. இதுக்கு இன்னும் இருபத்தைந்து வருடமாவது காத்திருக்கணும்.
சரி நிகழ்காலத்துக்கு வாரேன். என்னோட சங்கிலியில நாலு வளையம் இருக்கு. இது முதல் வளையம்.
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வந்து மத்த வளையங்களயும் உங்க பார்வைக்கு வைக்கிறேன்.
நானும் தமிழ்மணத்தில எழுதுறேன்னு எனக்குப் பெருமையா இருக்கு.
நான் பிறந்து முத மூணு வயசு வரைக்கும் சென்னயில இருந்தேனாம். அதுக்கப்புறம், நான் பதிமூணு வயசு வரைக்கும் இன்னொரு ஊர்ல இருந்தேன். இந்த ஊரைப் பத்தி நிறைய எழுத ஆசை. அப்பா ஊர்ன்னா அது அம்பாசமுத்திரம். மேல ரத வீதியில அவ்ங்க வீடு இருந்துச்சு. ஆனா தாத்தா பிழைப்புக்காக 1927ழிலேயே பட்டணம் போயிட்டாங்க. என்ன யாரவது உன்னோட சொந்த ஊர் எதுன்னா கொஞ்சம் குழம்பிப் போயிடுவேன்.
என்ன நேர்ல பார்த்தீங்கன்னா என்னடா இவன் பேசவே மாட்டேங்கிறான்னு நினைப்பீங்க. நான் கொஞ்சம் அதிகம் பேசாத வகை ஆளு. எழுத்த என் மனசுல நிறைஞ்ச்சு நிக்கிற எண்ணங்களுக்கு ஒரு வடிகாலா நினைக்கிறேன். நான், என்னோட பேர், ஊர் சொல்லாத வரைக்கும், கொஞ்சம் வேகமா மனம் திறந்து எழுத முடியும்னு நினைக்கிறேன். பெரிய மனசு பண்ணி மன்னிச்சுக்கங்க.
நான் சின்னப் பிள்ளையா இருந்தப்போ தொலைக் காட்சி, கணினி எல்லாம் கிடையாது. பொழுது போக்கிறதுன்னா, புத்தகம் படிக்கிறது, விளையாடறது, வானொலி கேக்கிறது, சினிமா பாக்கிறது. ஹோட்டலுக்குப் போறது, பார்ட்டிக்குப் போற பழக்கமெல்லாம் அப்ப கிடையாது. ஒரு மாசத்துக்கு ஒரு தடவையாவது சினிமாவுக்குப் போயிடுவோம். சின்ன வயசில எங்க போறோம்ன்னு கேட்டதுக்கு, கசி, கனி, கமான்னு என்ன சீண்டினதெல்லாம் நினைவுக்கு வருது. அப்பாவுக்கு, எம்ஜியார் படம்னா, அம்மாவுக்கு சிவாஜி படம். மத்த படங்களுக்கும் பொழுது போகும்னு நினைச்சாங்கன்னா கூட்டிக்கிட்டுப் போவாங்க. தெலுங்கு ட்ப்பிங் படங்கள், கர்ணன் படங்கள், ரிவால்வர் ரீட்டா மாதிரி படங்களுக்கெல்லாம் கண்டிப்பா கூட்டிட்டுப் போக மாட்டாங்க. எஸ்,எஸ்.எல்.சி படிப்பு முடியிற வரைக்கும், நண்பர்களோட சினிமாவுக்கு போனதில்ல. கேட்டாலும்
விட்டிருக்கமாட்டாங்க. நான் பார்த்த நாலு படங்களைப் பத்தி கொஞ்சம் புதிர் போடட்டுமா? நாலுல மூணு எனக்கு பிடிச்ச படங்கள்.எத்தனை பேர் என் வயசுக்காரங்கன்னு தெரிங்சுக்கத்தான். என் வயசு இல்லாட்டியும் இந்த படங்கள் இரண்டாவது முறை வந்தப்போ நீங்க பார்த்திருக்கலாம்.
1. அம்மனோ சாமியோ, அத்தையோ மாமியோ, கம்பனூர் நீலியோ, கல்யாண தேவியோ! பாட்டு முடியிறப்போ மலை ஏறப் போறியா, மலை ஏறப் போறேன்னு முடியும். நல்ல பொழுது போக்குப்
படம். ஏழு எட்டு வயசில பார்த்தேன். படத்தோட உச்சக் கட்ட காட்சியில, நல்லவங்களையல்லாம் வில்லன்
ஒரு ரூம்ல அடைச்சு, கலர் கலரா புகை விட்டு நல்லா கொல்லப் பார்ப்பான். இவங்களும் கொடுத்த காசுக்கு நல்லா இருமுவாங்க. ஞாபகம் வருதா?
2. ஒரு அப்பாவிப் பொண்ண எம்.என். ராஜமும் சி.கே. சரஸ்வதியும் படாத பாடு படுத்துவாங்க. அந்த பொண்ணை காப்பாத்த அந்த அப்பாவிப் பொண்ணா நடித்தவரே, ரெட்டை வேஷம் போட்டு அட்டகாசமா வருவாங்க. அந்த படத்துல சோவும் வருவாரு. நிச வாழ்க்கைல சி.கே. சரஸ்வதி மாதிரி கண்ணை உருட்டி முழிச்சவங்களயெல்லாம் என்க்குத் தெரியும். தமிழ்ல இரட்டை வேடம் போட நடிகையர்ல வாய்ப்பு
இரண்டு பேருக்குத்தான் கிடைச்சுது. அதுல இவங்கதான் டாப்.
ஞாபகம் வருதா?
3. பெரிய பெரிய நடிகரெல்லாம் நடிச்ச படம் இது. இது ராசா காலத்து படமுமில்ல, இந்த காலத்து படமுமில்ல. படத்தோட ஆரம்பத்தில, நம்ம ஹீரோ உலகத்தில நீதி இல்ல, ஞாயம் இல்லைன்னு பாடிட்டே வருவாரு.ஒரு சீன்ல, வில்லன் ஆட்கள் துரத்தும் போது, நம்ம ஹீரோயின் இருக்கிற இட்த்துக்கு வந்திடுவாரு. அவங்க ஒரு ஐடியாப் பண்ணுவாங்க அவரை காப்பாத்த. நம்ம வில்லன் ஆள் வந்து கதவைத் திறக்கிறப்ப அவங்க குளியலறைல, ஒரு தொட்டியில தண்ணி நிரப்பி, சோப்பு குமிழ்களுக்கு நடுவில இருப்பாங்க. குய்யோ முறையோன்னு, சத்தம் போட்டு, பொம்பளை குளிக்கிற இடத்துல உனக்கு என்ன வேலைன்னு விரட்டிடுவாங்க.அவனும் மரியாதை கொடுக்கணும்னு அந்த இடத்த விட்டுப் போயிடுவான். உச்சக் கட்ட காட்சியில, ஹீரோவும் வில்லனும் கத்திச் சண்டை போது, நம்ம ஹீரோயின் ஒரு கயத்த பிடிச்சுட்டு, பாதாளக்
கிணறுல தொங்குவாங்க. கீழ பாம்பெல்லாம் நிறைய இருக்கும். ஹாலிவுட் படம் எதாவது நினைவு வருதா? சத்தியம்மா அந்த டைரக்டர் இந்த படத்த பார்த்திருக்கணும். நல்ல பொழுது போக்குப் படம்.
4. இந்த படம் ரொம்பவே அறுவை. படம் அறுவைன்னா எங்க குடும்பம் மட்டுமில்லை, யாருமே தியேட்டரிலிருந்து எந்திருச்சு போக மாட்டாங்க. கொடுத்த காசுக்கு கடைசி வரைக்கும் இருந்து
பார்ப்பாங்க. நான் கடைசி வரைக்கும் சீட்ல நெளிஞ்சுகிட்டே இருப்பேன். அஞ்சு பெண் பெத்தா அரசனும் ஆண்டியாவான். இதுதான் கதை சுருக்கம். கே. ஆர் . விஜயாவுக்காக இந்தப் படத்தப் பார்க்க அம்மா முடிவு பண்ணியிருக்கணும். ராசாத்தி பெற்றெடுப்பாள் ராசகுமாரன்ன்னு பாட்டெல்லாம்
பாடியிருபாங்க. எல்லாமே பொண்ணாப் பிறந்திடும். இந்த மாதிரி படத்த பார்த்திட்டு வீட்டுக்கு வந்தா, அம்மாகிட்ட கண்டிப்பா ஒரு அரை நோவால்ஜீன் வாங்கிக்குவேன். இந்த படம் பேர் என்க்கு
நினைவுக்கு வர மாட்டேன்குது.
இதல்லாம் நினைவிலெயிருந்து சொல்றேன். எல்லாமே தப்புன்னா வயசாயிடுச்சுன்னு வச்சுக்கோங்க.
எல்லாமே ரைட்டுன்னா, கண்ட கண்ட உருப்பிடாத விஷயமெல்லாம் மறக்காத என் மூளையை சலவைக்குப் போடணும்
நான் இந்த சங்கிலியைத் தொடர இவங்க நாலு பேர அழைக்கிறேன்
1.மழலை - மழலை நீங்க கண்டிப்பா வாங்க. முன்ன பின்ன தெரியாதவங்க கூப்பிட்டா பேசக்கூடாது, போகக்கூடாதுன்னு உங்க அப்பா அம்மா சொல்லியிருப்பாங்க. எங்க வீட்டிலேயும் அப்ப்டித்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறோம். மழலை உங்க
அப்பா அம்மா கிட்டேயே நேரடியா அனுமதி
கேட்கிறேன். கண்டிப்பா வாங்க. வந்து உங்களுக்குப் பிடிச்சதெல்லாம் நாலு நாலா சொல்லுங்க.
2. ஜெர்மன் முத்து - இவரை உங்க எல்லாருக்கும் தெரியும். உங்கள மாதிரியே நானும் இவரோட ரசிகன். இவரும் கண்டிப்பா வந்திடுவாரு.
3. கானா பிரபா - சினிமாவையும் வாழ்க்கையும் பத்தியும் அழகாக எழுதுறாரு. இவருக்கு மயில் அனுப்பி என் தொடர்ல சேர்ந்துக்கச் சொன்னேன். வருகிறேன்னு உடனே பதில் அனுப்பினாரு.
4. கார்த்திக் - புதுசா வந்திருக்கிறாரு. எல்லா விசயத்தையும் நல்லா கவனிக்கிறாரு. இவரும் கண்டிப்பா வந்திடுவாரு.
இவங்க நாலு பேரையும் ம்கிழ்ச்சியா வாழ்த்தி வரவேற்கிறேன்
இரண்டாயிரம் வ்ருசத்துக்கு மேல செழிப்பா வளர்ந்த நம்ம தமிழ், வருங்காலத்திலேயும் செழிப்பா வளரணும்னு, உங்க எல்லாரோட ஆசையும் மாதிரிதான் என் ஆசையும். நாளைக்கு எங்க வீட்டுப் பிள்ளைங்களும், தமிழ்மணத்தில எழுத வரும் போது, 2006யில எங்க அப்பாவும் இன்னொரு உறவினரும் தமிழ்மணத்தில எழுத வந்தாங்கன்னு ஆரம்பிக்கலாம். உங்க வீட்டுப் பிள்ளைங்களும் இந்த மாதிரி மலரும் நினைவுகளை கண்டிப்பா கொண்டு வருவாங்க. அவங்க நட்பெல்லாம் தொடரட்டுமே!!!!!!!!!
என்னை எழுத அழைத்த அன்பர் செல்வனுக்கும் படிக்க வந்த அனைவருக்கும் என் நன்றியை
தெரிவிக்கிறேன்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
அன்புடன்
சாம்
அன்பு சாம்
மிகவும் அருமையான பதிப்பு.இதை தனி பதிவாகவே போட்டு விடுகிறேன்.
சாப்பாட்டுப் பதிவு வெகு அருமை
Post a Comment