Tuesday, February 14, 2006

பொறுத்தது போதும் மனோகரா, சிக்சர் அடி

பாகிஸ்தானில் இந்திய நட்சத்திர கிரிக்கட் அணி சுற்றுப்பயணம் செய்கிறது.டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விஜய்காந்த் தமது அணி முதலில் பேட் செய்யும் என்கிறார்.இரண்டு கதாநாயகர்கள் நடிப்பது தமிழ்திரையுலகில் கிடையாது என்பதால் ஒவ்வொருவராக பேட் செய்வது என முடிவு செய்கிறார்கள். முதலில் நெப்போலியன் பேட் செய்ய வருகிறார்.அவரை பார்த்த அக்தர் குழம்புகிறார். "என்னங்க அம்பயர்,இவர் வேட்டி கட்டிட்டு வர்ரார்.பேட் எதுவும் எடுத்துட்டு வராம வெறுங்கையை வீசிட்டு வர்ரார்?" என அம்பயரிடம் கேட்டார் அக்தர். "அந்த தம்பி அப்படித்தான்.பவுன்சர் கிவுன்சர் இவருக்கு வீசிப்புடாதே.வில்லங்கமாயிடும்" என அம்பயர் எச்சரிக்கிறார். நெப்போலியன் மீசையில் கைவைத்து முறுக்கியபடி விக்கட் அருகே நிற்கிறார்.அக்தர் வேகமாக ஓடிவந்து பந்தை வீச நெப்போலியனின் கை அவரின் சட்டைக்கு பின்னே சென்று 6அடி நீள திருப்பாச்சி அரிவாளை எடுக்கிறது.ஒரே சீவு.பந்து சுக்குநூறாகிறது. "சீவலப்பேரி பாண்டிலே.." என கர்ஜிக்கிறார் நெப்போலியன்.அனைவரும் நடுநடுங்க கம்பீரமாக வீரநடை போட்டு பெவிலியனுக்கு திரும்புகிறார் நெப்போலியன். அடுத்து ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே கேப்டன் விஜய்காந்த் களமிறங்குகிறார்.அக்தர் இப்போது மிகவும் பயந்து போய் அம்பயரிடம் கேட்கிறார். "ஏனுங்க இவரும் பேட் இல்லாம வர்ராரு.இவர் என்ன பண்ணுவாரு?' "அதெல்லாம் இப்ப எதுக்கு?ஆனா பவுன்சர் எல்லாம் இவருக்கு போட்டா நீ அதோகதிதான்" என எச்சரிக்கிறார் அம்பயர். பயந்து போய் அக்தர் பந்துவீச விஜய்காந்த் அந்தரத்தில் பறந்து பந்தை காலால் உதைக்கிறார்.அம்பயர் எல்.பி.டபிள்யு கொடுக்க விஜய்காந்த் அது தவறு என்று கனல் பறக்க வசனம் பேசுகிறார்.கடைசியில் எஸ்.ஏ.சந்திரசேகரன் வந்து அது சட்டத்தில் இருக்கும் ஓட்டை என விளக்கவே தன்னை கைதுசெய்ய சொல்லி விஜய்காந்த் கையை நீட்டுகிறார்.எஸ்.ஏ.சந்திரசேகரன் கெஞ்சி கூத்தாடி அவரை பெவிலியனுக்கு கூட்டிக் கொண்டு போகிறார். அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ஆரவாரமாக களமிறங்குகிறார்.அக்தர் பயந்துபோய் நிற்க அவரிடம் மெதுவாக சூப்பர்ஸ்டார் முணுமுணுக்கிறார். "அக்தர் கண்ணா,நான் நல்லவனுக்கு நல்லவன்,கெட்டவனுக்கு கெட்டவன்.பவுன்சர் ஏதாவது போட்டா சின்ன வயசுல நீ குடிச்ச தாய்ப்பால் வெளியில வந்துடும்" பயந்து போய் அக்தர் பந்தை உருட்டி விட சூப்பர்ஸ்டார் அதை தட்டி விட்டு ஒரு ரன் எடுக்கிறார்.பெவிலியன் திரும்புகிறார்.ஸ்கோர் போர்டை பார்த்த அக்தர் அலறுகிறார்.நூறு ரன் எடுத்ததாக ஸ்கோர் போர்டு காட்டுகிறது.ரஜினி ஒரு ரன் எடுத்தால் நூறு ரன் எடுத்ததற்கு சமம் என்கிறார் அம்பயர். அடுத்து கலைத் தாயின் தலைமகன் சிவாஜி கணேசன் களமிறங்குகிறார். அக்தர் வேகமாக பவுன்சர் வீசுகிறார்.சிவாஜியின் நெஞ்சில் அந்த பவுன்சர் பட்டு அவர் கீழே விழுகிறார்.மெதுவாக கண்ணீர் வடித்தபடி எழுகிறார். "ஏம்பா கண்ணா அக்தரு..உன்னே சின்ன வயசுல மார்மேலயும் தோள் மேலயும் தூக்கிபோட்டு வளர்த்தேன்.அப்போ நீ என் நெஞ்சுல எட்டி உதைப்பே.அப்போ அது விளையாட்டா இருந்தது.இப்போ நிஜமாவே நெஞ்சுல பவுன்சர் வீசிட்டீயே.." அம்பயர் முதல் டிவி வர்ணணையாளர்கள் வரை அனைவரும் அழுகின்றனர்.அக்தரும் அழுகிறார்.கண்ணீர் வடித்தபடி சிவாஜி நிற்க தலைவிரி கோலமாக கண்ணாம்பா நுழைகிறார். "மனோகரா..என் செல்வனே..எதிரியை வீழ்த்தி புதுக் காவியம் படைக்க நீ புறப்பட்ட போது ஏடுகளை திருடியும் எழுத்தாணியை ஒளித்து வைத்தும் அதை தடுத்தவள் நான் தான். மறக்குலத்தில் பிறந்த வீரப்பெண்மனி நான் என்பது உண்மையானால்,பெண்கள் விடும் கண்ணீருக்கு சக்தி உண்டு என்பது உண்மையானால்,சோழநாட்டு மன்னரின் பத்தினி நான் என்பது உண்மையானால் அக்கிரமக்காரர்களின் சிரிப்பு அடங்கட்டும்.நியாயம் வெல்லட்டும். பொறுத்தது போதும் மனோகரா பொங்கி எழு" "அம்மா.." என அலறுகிறார் சிவாஜி. "தாயின் ஆணை கிடைத்து விட்டது.புறப்படு.." கத்தியை எடுத்துக்கொண்டு சிவாஜி புறப்படும் முன் அக்தர்,இன்ஸமாம் அனைவரும் தலைதெறிக்க ஓடி மறைகின்றனர்.
Post a Comment