Sunday, February 19, 2006

49.தாயைக் காத்த வைணவர்கள்

விஷ்ணுவின் மற்ற எந்த அவதாரங்களையும் விட ராமாவதாரம் அதிக சர்ச்சைக்கு உட்பட்ட அவதாரமாகும்.அதிக அளவில் பட்டிமண்டபங்களில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்ட விஷ்ணு அவதாரம் ராமாவதாரமாகத் தான் இருக்கும்.சீதையை ஏன் தீக்குளிக்க சொன்னான் ராமன் என்பது பட்டிமணடப வக்கில்கள் மட்டும் எழுப்பும் சர்ச்சையல்ல,பொதுமக்கள் துவங்கி பரமபாகவத வைணவர்கள் வரை நடக்கும் சர்ச்சையாகும். சீதை வைணவர்களுக்கு தாய் போன்றவள்.சீதையை வைஷ்ணவர்கள் அழைப்பதே தாயார் என்றுதான்.தாயை கதாநாயகியாக்கி கதை எழுதும்போது ஒரு மகனுக்கு என்னென்ன பிரச்சனை வருமோ அதெல்லாம் ராமாயணத்தை எழுதிய வைஷ்ணவர்களுக்கும் வந்தது. மற்ற எல்லா பிரச்சனைகளையும் விட வைஷ்ணவர்களுக்கு இருந்த மிகப்பெரும் பிரச்சனை சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போனது.அவள் கற்பின் மீது சந்தேகப்பட்டு ராமன் பேசியது,அவள் தீக்குளித்தது ஆகும்.தாயின் கற்பின் மீது சர்ச்சை நடப்பதை,அதுவும் வைணவர்களின் கண்கண்ட கடவுளான ராமனே அம்மாதிரி செய்ததை வைஷ்ணவர்களால் தாங்கவே முடியவில்லை. மேலும் சீதையை ராவணன் எப்படி தொடவிடலாம்?தாயை ஒருவன் தவறான எண்ணத்தில் தொட்டான் என்பதை ராமாயணம் எழுதிய வைஷ்ணவர்களால் தாங்கவே முடியவில்லை. வால்மிகியின் மூல ராமாயணத்தில் இதை எப்படி சொல்லியிருக்கிறார் என பாருங்கள். வாமேன சீடாம் பட்மாக்ஸீம் மூர்தஜெஸு கரெண சக ஊர்வொடு தஷீணென ஏவ பரிஜக்ராக பாணினா டட தாம் பருஸை வாக்யை அப்கிடர்ஜ்ய மகாச்வனஅன்கென ஆதாய வைதேகீம் ரதம் ஆரோபயட் டடா இடக்கரத்தால் தாமரைக் கண்ணினாளின் முடியையும் வலக்கரத்தால் அவள் காலையும் பற்றி அவளை இழுத்தான்.கொடுமொழிகள் பேசி அவளை மிரட்டியபடி தேரிலேற்றி கடத்திச்சென்றான்.(எனக்கே மனம் பொறாமல் வால்மிகியின் சிலவரிகளை சென்சார் செய்துவிட்டேன்) இப்படி வால்மிகி எழுதிவைத்துவிட்டார்.பிற்காலத்தில் வந்த வைஷ்ணவர்களால் அதை தாங்க முடியவில்லை.ராமாயணம் பாடும்போது இந்த இடம் வரும்போது இதை எழுதவே அவர்களுக்கு மனம் வரவில்லை.பரமபாகவதனான கம்பன் இந்த இடத்தை எப்படி கையாள்கிறான் என்று பாருங்கள். ஆண்டு, ஆயிடை, தீயவன் ஆயிழையைத்தீண்டான், அயன் மேல் உரை சிந்தைசெயா;தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால்,கீண்டான் நிலம்; யோசனை கிழொடு மேல். "ஆயிழையைத் தீண்டான்" என எழுதுகிறார் கம்பர்.சீதையை ராவணன் தொடுவதை அவர் விரும்பவே இல்லை.பர்ணசாலையை ஒரு யோசனை நிலத்தோடு சேர்த்துப் பெயர்த்து சீதையை தூக்கிக்கொண்டு போனான்,சீதையை தொடவில்லை என அழுத்தம் திருத்தமாக எழுதுகிறார். இவராவது பரவாயில்லை.இவருக்கு பின்வந்த வைஷ்ணவர்களால் சீதை ராவணன் வீட்டில் இருந்தாள் என்பதையே தாங்க முடியவில்லை.சீதையை ராமன் சந்தேகப்பட்டான் என எழுதவும் மனம் இடம்தரவில்லை. 15ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆத்யாத்ம ராமாயணத்தில் ராமன் ஒரு மாயா சீதையை உருவாக்குகிறார்.ராவணன் வருவது அவருக்கு தெரிந்ததும் உண்மை சீதையை அக்னியிடம் பாதுகாப்புக்காக ஒப்படைக்கிறார்.நிழல் சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போகிறான். பிறகு அவதார நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதற்காக ராமன் அழுவதுபோல் மாய விளையாட்டு காட்டுகிறார்.ராவணனை கொல்கிறார்.அக்னியை அழைத்து தன் மனைவியை திரும்பப்பெற்றுக்கொண்டு நிழல் சீதையை அக்னியிடம் சேர்க்கிறார். 16ம் நூற்றாண்டில் துளசிதாசர் இந்த முறையையே கையாள்கிறார்.ஆத்யாத்ம ராமாயணம் சொல்வது போலவே இவரும் நிழல் சீதையை தான் ராவணன் கொண்டுபோனான் என எழுதுகிறார். வேதவதி என இன்னொரு பெண்ணைத்தான் ராவணன் கொண்டுபோனான் என சொல்லும் ராமாயணங்களும் உண்டு.சீதையை ராவணனின் மகளாக சொன்ன ராமாயணங்களும் உண்டு.தந்தை வீட்டில் மகள் இருப்பது தவறில்லை அல்லவா? தாய் மீது வைஷ்ணவர்கள் கொண்ட பாசம் வால்மீகியை எடுத்து விழுங்கிவிட்டது.வால்மீகி எழுதியதை ஒப்புக்கொள்ள இவர்கள் யாரும் தயாராக இல்லை. தாய்ப்பாசத்தின் சக்தி அப்படி

7 comments:

குமரன் (Kumaran) said...

செல்வன், வால்மீகி ராமாயணத்திலும் பரமபாகவதனான கம்பனின் இராமகாதையிலும் இராமேஸ்வரத்தைப் பற்றியும் இராமன் சிவபூஜை செய்தது பற்றியும் வரவில்லை. ஆனால் அது எப்படி இராமேஸ்வர தல புராணத்தில் வந்தது என்பதைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்களேன். அப்படி செய்தால் நீங்கள் வைணவ துவேசம் இல்லாதவர் என்று ஒத்துக் கொள்ளலாம்.

நீங்கள் இந்தப் பதிவில் எழுதியதுள்ளது அத்தனையும் உண்மையாக இருந்தாலும் அவற்றைச் சொல்லியுள்ள விதம் ஏதோ உங்களுக்கு தேவையில்லாமல் பரமபாகவதர்கள் மேல் வெறுப்பு இருப்பதைப் போல் தான் காட்டுகிறது.

Thangamani said...

உங்கள் விளக்கம் உங்கள் நம்பிக்கையைத்தான் காட்டுகிறது செல்வன்.

வால்மீகிக்கு இராமயணம் ஒரு பக்தியைச் சொல்லுகிற அவதாரத்தின் கதையல்ல. அது ஒரு மகத்தான இலக்கியம். ஒரு இலக்கியம், கதாநாயகனுக்காக கட்டப்படுகிற ரஜினி படம் இல்லை; தீமையின் மீதான நன்மையின் வெற்றி (தீமைக்கான பெயர் காலங்காலமாக இந்த அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் வரை மாறி மாறி அழைக்கப்பட்டு, யாரையாவது ஒழித்துக்கட்டுகிற அரசியல் விளையாட்டு மாதிரி இல்லாமல்) ஒழுக்கத்தின் உயர்வு, தாய்ப்பாசத்தின் உன்னதம் etc. இவற்றிற்கான உபதேச நோக்கம் கொண்டதல்ல. பேரிலக்கியங்கள் வாழ்க்கையின் சுயமுரண்களை, நன்மை, தீமை இவற்றின் வரையறைகள், வெற்றி-தோல்வி, நியாயம்-அநியாயம் போன்ற மனதின் கற்பிதங்களைக் கடந்து ஓடும் வாழ்வின் எல்லையற்ற விஸ்தீரணத்தை தரிசிக்கத் துணிகிற நேர்மையான பார்வையின் விளைவால் பிறக்கின்றவை; செய்யப்படாதவை; எனவேதான் மனதின் குறுக்குத்தெருக்களில் பயணிக்கமுடியாத அற்புத படைப்பாக இருக்கின்றன. நம்பிக்கையாளனின் கண்பட்டிகளுக்குட்பட்டு அது ஓடுவதில்லை. அதனால் தான் வால்மீகி சீதையின் உடல் சார்ந்த பிரச்சனைகளைப்பற்றியோ, சம்பூக வதத்தினைப்பற்றியோ, இராமனின் சந்தேகம் பற்றியோ, கடைசியில் அவனது தற்கொலை பற்றியோ வெட்கமோ, தயக்கமோ கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள்; அவர்கள் ஒவ்வொருவரும் ஒருவருக்கு (கதா) நாயகியாகவும், தங்கையாகவும், தாயாகவும் இருப்பவர்கள்தான். பெரும் இலக்கியங்களைச் செய்தவர்கள் தங்களின் கதாநாயகியின் கடைசி ஆடை அவிழும் முன் கதாநாயகன் வந்து காப்பாற்றி ஆகவேண்டிய கதாநாயக-காப்பு கதையாசிரியர்கள் அல்ல. ஏனெனில் வாழ்க்கை விசில் அடிக்கிற இரசிகனுக்கான ஓடுக்கொண்டிருக்கிற திரைப்படமல்ல என்பதை அறிவார்கள்; யாரையாவதூ கிச்சுகிச்சு மூட்டி 100 நாள் படத்துக்கு; இன்னொரு முதலமைச்சரை உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் ஆளானவர்கள் அல்ல. அதனால் தான் இராம காதை பட்டாபிஷேகத்தில் முடியவில்லை. அதனால் பின்னாள்(ல்) வந்த நம்பிக்கையாளர்கள் இலக்கியங்கள் படைக்கவில்லை; பக்தி செய்யும் படைப்புகள், புத்தகங்கள், கதாநாயகனை மையப்படுத்திய அரசியல் நோக்கம் கொண்ட கதைகள் எழுதியவர்கள்.

இப்படித்தான் வால்மீகிக்கும், மீதமுள்ளவர்களுக்குமான பிரிவினையை நான் புரிந்துகொள்கிறேன். நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையைக் குலைக்க, அவர்கள் மனம் நோக இதை எழுதவில்லை.

நன்றி!

Unknown said...

அன்பு குமரன்,

ராமேஸ்வரம் ஸ்தலபுராணம் கதை எப்படி உருவானது என எனக்கு தெரியாது.ஸ்தல புராணங்களில் உள்ளதெல்லாம் வேதம்,புராணங்களில் இடம்பெற வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருபுல்லாணியின் ஸ்தலபுராணம் என்னவென்றால் தசரதன் அங்கு வந்து விஷ்ணுவை தொழுது பிள்ளை வரம் பெற்றான்,அதற்கு நன்றிக்கடனாக அக்கோயிலில் தொட்டில் கட்டினான் என்பதாகும்.இந்த ஸ்தலபுராணம் எந்த ராமாயணத்திலும் சொல்லபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல் பல திருக்கோயில் ஸ்தலபுராணங்கள் எந்த வேதத்திலும்,இதிகாசத்திலும்,புராணத்திலும் இல்லாதவையாகும்.அதனால் அவை ஏற்றுகொள்ளப்பட முடியாதவை என நான் நினைக்கவில்லை.

எனக்கு வீர வைஷ்ணவர்கள் மீது எந்த துவேஷமும் இல்லை.என் பதிவில் இதுவரை திருமால் தவிர வேறெந்த தெய்வமும் பற்றி நான் எழுதியதே இல்லை.

Unknown said...

அன்பின் தங்கமணி,

வால்மிகி இருந்த காலகட்டத்தில் கற்புநெறி வேறு மாதிரி பார்க்கப்பட்டது.அதற்கு பின்வந்த ஒவ்வொரு காலத்திலும் கற்பின் விளக்கம் மாறிக்கொண்டே வந்தது.அதன் பிரதிபலிப்புகள் அக்கால படைப்புக்களில் எதிரொலிக்கின்றன.

இதிகாசங்கள் அதை எழுதியவர்களின் மனநிலையை,விறுப்பு வெறுப்புக்களை பிரதிபலிக்கின்றன.விறுப்பு வெறுப்பு இன்றி Objective stance என்ற மனோநிலையில் இலக்கியம் படைக்க யாராலும் முடியாது.தமது கதாபாத்திரங்களை விரும்பாத கலைஞன் உலகில் யாரும் கிடையாது.அது தவறு என்றும் நான் கருதவில்லை.

"ஆயிழையை தொடான்" என கம்பர் அழுத்தம் திருத்தமாக சொல்வது அவர் சீதை மீது கொண்ட தாய்ப்பாசத்தை தான் காட்டுகிறது.

பக்தியாளர்கள் இலக்கியம் படைக்க முடியாது என்பதை நான் ஏற்கவில்லை.கம்பன் பரமபாகவதன்.அவன் பாடிய ராமாயணம் வானும்,மண்ணும் உள்ளவரை நிலைத்து நிற்கும்.கம்பராமாயணம் முழுக்க அவனது ராமபக்தி நிரம்பிக்கிடக்கும்.கம்பனையும் வால்மிகியையும் தவிர மற்ற ராமாயணங்களை நான் படித்ததில்லை.ஆனால் வால்மிகியை தூக்கி விழுங்ககூடிய காவிய அழகை கொண்டது கம்பராமாயணம்.

உலகிலுள்ள ராமாயணங்கள் அனைத்திலும் இனிமையானது,அழகானது கம்பனின் கலைஓவியம் தான் என்பது என் கருத்து.ஆனால் இதை உறுதியாக சொல்ல துளசிதாசரின் ராமாயணத்தை படித்திருக்க வேண்டும்.அதை நான் செய்யவில்லை.

தங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு மிக நன்றி

Anonymous said...

ramayanathuku pala nooru varudangal munbe 'iliad' vandhuvitadhu. adhil kadhanayagi (helen)avalagathan kadhalanudan ponal. avalukkaga pengal kovil katti kumbitargal. pirkalathil, dhan avalai kadathi sendra madhiri kadhayai maatrinargalam. avalukkaga 10 varudangal por purindhargal. idhu heroine kadhai. hero vin kadhai alla.

குமரன் (Kumaran) said...

சதயம் நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியைப் படித்துப் பார்க்கிறேன்.

தங்கமணி சொல்லும் கருத்து எனக்கு உடன்பாடாக இருக்கிறது.

செல்வன்...நீங்கள் இதுவரை திருமால் தவிர மற்ற தெய்வங்களைப் பற்றி எழுதாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்தப்பதிவைப் படித்தால் என்னவோ வைணவர்கள் வேண்டுமென்றே திரித்து எழுதியிருக்கிறார்கள் என்ற தொனி வந்தது. அதனைத் தான் துவேசம் என்று குறிப்பிட்டேன். இந்தக் கருத்துகள் எல்லாமே எனக்கும் உடன்பாடானது தான் ஆனால் துவேசத் தொனி தோன்றாமல் எழுதியிருக்கலாம். உங்களுக்கு துவேசம் இல்லை என்று பல முறை கூறிவிட்டீர்கள். ஆனால் உங்கள் எழுத்துக்களில் அவ்வப்போது துவேசம் தலைகாட்டுவதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. தவறு என் பார்வையில் இருக்கலாம். அப்படித் தான் என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள். இல்லை நீங்கள் எழுதியதில் துவேசத் தொனி வந்துள்ளது என்று உங்களுக்கும் தோன்றினால் அடுத்த முறை கொஞ்சம் கவனமாக இருங்கள்.

இந்தக் கருத்தையே இன்னொரு விதமாக, அதாவது தமிழர்களின் கற்பின் நெறியின் காரணமாக, கம்பர் இப்படி எழுதியிருக்கிறார் என்ற கருத்தையும் படித்திருக்கிறேன். கம்பரை முழுக்க முழுக்க வைணவராக ஏற்றுக் கொள்ளாதவர்களும் உண்டு.

Unknown said...

அன்பு குமரன்,

ஒவ்வொரு விஷயத்தையும் பலர் பல கோணத்தில் பார்ப்போம்.நாம் இருவரும் ஒரே விஷயத்தை இரு கோணங்களில் பார்க்கிறோம்.வைஷ்ணவர்கள் பொய் சொன்னார்கள் என நான் சொல்லவே இல்லை.வால்மிகியை ஒப்புக்கொள்ள மறுத்தார்கள் எனத் தான் சொன்னேன்.மேலும் கம்ப ராமாயனத்தை நரசிம்ம மூர்த்தி தலை ஆட்டி ஏற்றுக்கொண்ட பிறகு அதை பொய் என நான் ஏன் சொல்லப்போகிறேன்?

எந்த நோக்கோடும் நான் இதை எழுதவில்லை.திடீரென்று தோன்றியது,எழுதினேன்.உள்நோக்கம் ஏதுமில்லை.

அன்புடன்
செல்வன்