Friday, January 27, 2006
திருமகள் மீது ஆசைப்படாத ஒரே ஆள்--பெருமாள்
பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடைந்தார்கள்.அதிலிருந்து மகாலஷ்மி வந்ததும் அனைவரும் வேலையை நிறுத்திவிட்டார்கள்.அதுவரை அம்மாதிரி ஒரு அழகை யாரும் பார்த்ததே இல்லை.
அமுதத்தை எடுக்கத்தான் இருவரும் கூடி வேலை செய்தார்கள்.இப்போது அமுதத்தை மறந்துவிட்டு மகாலக்ஷ்மிக்காக சண்டை போடத்துவங்கி விட்டனர்.பிரும்மா சமாதானம் செய்தார்.மகாலஷ்மிக்கு யாரை பிடிக்கிறதோ அவர்களையே அவர் கல்யாணம் செய்துகொள்வது என தீர்மானமானது.
மகாலஷ்மி ஒரே ஒரு நிபந்தனை தான் போட்டார்."என் மேல் யார் ஆசைப்படவில்லையோ அவர்களைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன்" என்று சொன்னார்.மாலையை எடுத்துக்கொண்டு சுயம்வரத்தில் வந்தார்.
அவர் மேல் ஆசைப்படாமல் இருக்க வேண்டும் என்று தேவர்களும் அசுரர்களும் எவ்வளவோ முயன்றனர்.முடியவில்லை.அன்னையின் பேரழகை பார்த்ததும் மெய்மறந்து நின்றனர்.அவர்கள் கண்ணில் தெரிந்த ஆசையை பார்த்து மகாலஷ்மி பயந்தே போய்விட்டார்.
சில புத்திசாலி தேவர்கள் ஆசைப்படாமல் இருப்பது போல் நடிக்கலாம் என நினைத்தனர்.ஆனால் தாயார் அருகில் வந்ததும் அவர்களால் அப்படி நடிக்க கூட முடியவில்லையாம்.
இவர்கள் யாரும் வேண்டாம் என்று பிரம்மலோகம் போனார் தாயார்."அம்மா" என்று பிரம்மர் வணங்கினார்.சிவலோகம் போனார்."தங்கையே" என்று பாசமாக சிவன் அழைத்தார்.
சரி என்று கடைசியாக வைகுந்தம் போனபோது அங்கு நீலவண்ணன் படுத்துக்கிடந்தான்.அவர் அருகில் போய் அவர் கண்ணை மகாலஷ்மி உற்றுப்பார்த்தார்.
ஏன் அவர் கண்ணைப் பார்த்தார்?அதில் ஆசை தெரிகிறதா என்று பார்த்தார்.அதில் ஆசை தெரியவில்லை.அளவில்லாத காருண்யமும் வாத்சல்யமும் தான் தெரிந்தன.
"என் மேல் உங்களுக்கு ஆசை வரவில்லையா?" என்று கேட்டார்.
"யாரம்மா நீ?உன் மேல் எனக்கு ஏன் ஆசை வரவேண்டும்?என் மேல் ஆசைப்படாதவர்கள் மீது நான் ஆசைப்படுவதில்லை" என்றான் மாயன்.
அடுத்த நிமிடம் மாலையை அவன் கழுத்தில் போட்டுவிட்டு அவனிடம் சரணடைந்தார் தாயார்.சரணடைந்தவர்களை கைவிட்டு பழக்கமில்லாத நாராயணன் அவரை தன் இதயத்தில் தூக்கி வைத்துக்கொண்டான்.
இப்படி தாயார் செய்தது பின்னால் அவருக்கே பெரும் பிரச்சனையாக மாறியது.ஏன் தான் இப்படி ஒரு நிபந்தனையை போட்டோமோ என அவர் சொல்லும்படிக்கு நிலைமை ஆகிவிட்டது.
அந்தக் கதையை பிறகு எழுதுகிறேன்.இப்போது இந்தக் கதை மூலம் நமக்கு கிடைக்கும் பாடங்கள்
1.தன்மேல் ஆசைப்படாதவரிடம் தான் மகாலஷ்மி சேர்வார்
2.தன் மேல் ஆசைப்படுபவரிடம் தான் பெருமாள் சேர்வார்
3.பெருமாள் நம்மிடம் வந்தால் அவர் இதயத்தில் இருக்கும் மகாலஷ்மியும் அவர் கூடவே வந்துவிடுவார்
4.ஆக நாம் ஆசைப்படவேண்டியது பெருமாள் மேல்தான்.வேறெந்த பொருள் மேலும் அல்ல.
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
கதை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் கடைசியில் நீங்கள் பட்டியல் இட்டுள்ள நீதிகள் ரொம்பப் பிடிக்கிறது. என்னை விட்டால் அந்த நீதிகளை விளக்கி ஒரு தனிப்பதிவே போட்டுவிடுவேன். :-)
ஏன் கதை பிடிக்கவில்லை? திருமகள் சகல லோகத்துக்கும் தாய். அவள் எவ்வளவு தான் அழகானவளாய் இருந்தாலும் தேவர்களும் மற்றவர்களும் ஆசைவெறியுடன் அவளைப் பார்த்தனர் என்பது ஒத்துக் கொள்ள முடியவில்லை. திருமாலோ 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன்'. பெயரே திரு+மால். சிறிது நேரமும் பிரிய மாட்டேன் என்று வாமன அவதாரத்தில் பிரம்மச்சாரியாக வரும்போது கூட மான் தோலால் மார்பில் இருக்கும் மலர்மகளை மறைத்துக் கூட்டிக் கொண்டு வருகிறான் மாமாயன். அப்படிப் பட்டவன் திருமகள் மேல் ஆசையில்லாதவன் என்றால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
நீதிகள் ஏன் பிடிக்கிறது? - இந்த கதையில் திருமகளை அன்னை திருமகளாகப் பார்க்காமல், செல்வம் என்று பார்த்தால் கதை நன்றாய்ப் பொருந்துகிறது. செல்வத்தின் மேல் (செல்வனின் மேல் என்று சொல்லவில்லை :-) ) எல்லோருக்கும் அளவில்லாத ஆசை; பேராசை; அந்த ஆசை வெறியுடன் எல்லோரும் செல்வத்தைப் பார்க்கிறார்கள். அப்படி ஆசைவெறியுடன் பார்ப்பவர்களிடம் அன்னை செல்வம் வரமாட்டாள். இறைவனாகிய பெருமாளோ தன் மேல் யார் பக்தி செலுத்துகிறார்களோ அவரிடம் சேர்வார். அப்படி அவர் அருள் வந்தால் அவருடன் கூடவே அன்னை செல்வமும் வந்துவிடுவாள். ஆனால் இறைவன் மேல் ஆசை இருந்தால் பொருளாசை இருக்காது; அப்படி இருந்தாலும் பொருள் வந்து சேரும்; அதனால் பொருளாசையை விட்டு இறையாசையை வைக்கவேண்டும்.
அன்பு குமரன்
இது நானாக எழுதிய கதையில்லை.அகோபில மட ஜீயர் சொன்ன புராணக்கதை.ஆசையை துறந்த ஸ்திதப்பிரஞ்ஞனான நாராயணன் திருமகள் மீது ஆசைப்பட்டான் என்பதும் சரியல்ல.
அவனுக்கு இருந்தது வாத்சல்யமும் காருண்யமும் தான் என்று ஜீயர் சொல்கிறார்.தன் அடியார் மீதும் அடியாளான தாயார் மீதும் அவன் கொள்வது ஆசையல்ல.காருண்யம்தான்.ஆசை அழிவைத்தான் தரும்.ஆசையை அழிக்க சொல்லி அவன் நமக்கு அறிவுரை கூறியதுதான் கீதை.
தேவர்களும் அசுரர்களும் மகாலஷ்மி மீது ஆசை கொண்டதாக தான் ஜீயர் சொல்கிறார்.ஆனால் நீங்கள் சொன்னதுபோல் வெறி என்ற வார்த்தை தவறாக தெரிவதால் அதை ஆசை என்று மாற்றிவிடுகிறேன்.
கதை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் கடைசியில் நீங்கள் பட்டியல் இட்டுள்ள நீதிகள் ரொம்பப் பிடிக்கிறது. என்னை விட்டால் அந்த நீதிகளை விளக்கி ஒரு தனிப்பதிவே போட்டுவிடுவேன். :-) //
இதை செய்யுங்கள் முதலில்.படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.
இறைவனாகிய பெருமாளோ தன் மேல் யார் பக்தி செலுத்துகிறார்களோ அவரிடம் சேர்வார். அப்படி அவர் அருள் வந்தால் அவருடன் கூடவே அன்னை செல்வமும் வந்துவிடுவாள். ஆனால் இறைவன் மேல் ஆசை இருந்தால் பொருளாசை இருக்காது; அப்படி இருந்தாலும் பொருள் வந்து சேரும்;//
வித்தியாரண்யருக்கு நடந்ததும் இதுதான்.
பொருள் வேண்டி பெருமாளிடன் முறையிட்டார்."இந்த ஜென்மத்தில் உனக்கு செல்வம் கிடையாது" என்றார் பெருமாள்.சன்னியாசம் வாங்கினால் இன்னொரு ஜென்மா எடுத்ததுபோலாகும் என்று நினைத்து சன்னியாசம் வாங்கிவிட்டார்.அளவில்லாத செல்வத்தை கடவுள் கொடுத்தார்.சன்னியாசிக்கு பொருளினால் என்ன பயன்?
தவறை உணர்ந்த வித்தியாரண்யர் அரிகர, புக்க, கம்பணனிடன் அப்பொருளைத்தந்து விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை ஏற்படுத்தினார்
நினைத்தேன் செல்வன். இது ஜீயர் சுவாமிகள் சொன்ன கதையாகத் தான் இருக்கவேண்டும் என்று. நானும் இந்தக் கதையைப் படித்திருக்கிறேன் ஒரு புத்தகத்தில்.
இங்கு பின்னூட்டத்தில் இட்டது உங்கள் கருத்து என்று தான் எண்ணுகிறேன். ஆசையை துறந்தவனா மாமாயன்? ஸ்திதப்ரக்ஞனா நாராயணன்? இந்த சொற்களெல்லாம் ஜீவாத்மாக்களைக் குறிக்கும் சொற்கள். மாதவனுக்குச் சொல்லவே கூடாது. அவன் இனிமேல் அடையவேண்டியது எதுவுமே இல்லாததால் அவன் ஆசை கொள்ள எதுவும் இல்லை. அதனால் அவன் ஆசையுடையவனா இல்லை துறந்தவனா என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் சொல்ல வந்தது அவன் திருமகளை என்றும் பிரியாதவன்; அதனால் அவள் மேல் ஆசையில்லாதவன் என்று சொல்ல முடியாது என்பதே.
யாருடைய மனம் மேலும் கீழும் அலைபாய்கிறதோ அவனுடைய மனம் அப்படி அலைபாயாமல் சீராய் நிற்கும் நிலையே ஸ்திதப்ரக்ஞத்வம். ஸ்திதப்ரக்ஞன் என்றாலே என்றோ ஒரு நாள் அவனுடைய மனம் அலை பாய்ந்திருக்கிறது என்று அர்த்தம் வரும்; அதனால் அதனையும் நாராயணனைக் குறிக்கச் சொல்லக்கூடாது. :-)
இறைவன் அடியார் மேல் கொள்ளும் வாத்ஸல்யமும் காருண்யமும் ஆசையின் மறு வடிவங்களே. ஆசையே அழிவுக்குக் காரணம் என்பது பந்தத்தில் இருக்கும் ஆத்மாக்களான நமக்குத் தான் பொருந்துமே தவிர அவனுக்குப் பொருந்தாது.
என்ன? ஓவரா பிட்டு போடறேனா? என்னமோ இன்னைக்கு மூடு நல்லா இருக்கு. நடுநிசிக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் தூங்கவில்லை. சரி. நான் தூங்கிவிட்டு காலையில் வந்து பார்க்கிறேன். :-)
எனக்கு ஒரு தனிமடல் அனுப்ப முடியுமா. மின்னஞ்சல் முகவரி: kumaran dot malli at gmail dot com
அன்பு குமரன்,
திருமகள் மீது ஆசை இல்லாததால் தான் தாயாரை எம்பெருமான் அடைந்தான் என்று புராணத்தை ஜீயர் சொல்கிறார்.தாயாரை அவன் என்றும் பிரியான் என்பது உண்மைதான்.ஆனால் அது பக்தரை அவன் என்றும் பிரியான் என்பதுபோல் தன்மேல் பக்தி கொண்ட தாயாரையும் அவன் என்றும் பிரிவதில்லை.அது ஆசையினால் வருவது அல்ல.ஆசை அழிவைத்தரும் என்று பகவான் நமக்கு சொல்லிவிட்டு அவர் ஆசைப்பட்டார் என்பதும் சரியல்ல.
பக்தர் மேல் அளவுகடந்த வாத்சல்யமும் காருண்யமுமே அவருக்கு இருக்கும்.காருண்யத்தை ஆசை என்று சொல்லமுடியாது என்று எனக்கு தோன்றுகிறது.உதாரணமாக ஒரு வயதானாவர் கஷ்டப்படுவதைக் கண்டு நமக்கு அவர் மேல் காருண்யம் வரும் ஆனால் அதை ஆசை என்று சொல்ல முடியுமா?
தாயார் தன்னை அடைந்த பிறகு அவர் மேல் பகவான் ஆசை கொண்டார் என்று சொல்லலாம்.மனைவி மேல் ஆசைப்படாதவர் யார்?ஆனால் இந்த கதை வரும் context திருமணத்துக்கு முன்.தன்னை தாயார் விரும்பு முன் அவரை பகவான் விரும்பியிருக்க முடியாதல்லவா?
அப்பா! என்ன இது...ரெண்டு பேரும் பெரிய விஷயங்களப் பேசுறீங்க. இப்போதைக்கு நீங்க பேசுறத மட்டும் கேட்டுக்கிட்டு ஒதுங்கிக்கிறேன்.
நல்ல பதிவு செல்வன். இன்னும் எழுதுங்கள்.
நன்றி ராகவன்.உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள்.உங்களுக்கு தெரியாத ஆன்மீகமா?
ஆகா வித்தியாசமான கருத்தைத் தூண்டும் பதிவு செல்வன் அவர்களே
தலைப்பு தான் அவரவர் மனோரதத்தைப் பல திசைகளில் திருப்பி விட்டது.
குமரன், பிராட்டியையும், பெருமானையும் சீதா, ராமனாக கண்டார்...அதனால் ஆசை உண்டு எனக் கொண்டார்.
செல்வன், தாயரையும் பெருமாளையும், ஞானத்தமிழ் தாய் தந்தையாக, யோகீஸ்வரி யோகீஸ்வரனாக, அருந்ததி வஷிஸ்டரைப் போல் கண்டார்...அதனால் ஆசைக்கு அப்பால் எனக் கொண்டார்.
ஆசை என்பதை பற்று எனக் கொண்டால், பற்றை விட்டு அவன் பற்றைப் பற்றுவது இல்லையா?
அது போல் செல்வன் சொன்னதாக கொள்வோம்.
ஓர் ஒளியை பல வர்ண ஜாலமாய்க் காட்டி சுவை கூட்டும் பெருமாளது விளையாட்டு தானோ இது!
தொடரட்டும் உங்கள் தமிழ்ச் சேவை. தொடரட்டும் அவர் தமிழ் விளையாட்டு.
"உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையுடன் ஒழிவு இலன் பரந்தே"
மிகவும் அருமையான கமென்ட் திரு கண்ணபிரான்.
மாயக்கண்ணன் மகாலஷ்மி பற்றி யாரால் விளக்க முடியும்?ஆயிரம் நா படைத்த ஆதிசேஷன் தான் மறுபடி பிறந்து வர வேண்டும்
Post a Comment