Wednesday, September 03, 2014

தேசபக்தன் டிராகுலா


டிராகுலா (Dracula) என்றாலே ஆங்கில பேய்ப்பட ரசிகர்கள் அனைவரும் அஞ்சி நடுங்குவார்கள். தமிழில் ரத்த காட்டேரி என்றும் பிற்கால ஐரோப்பாவில் வேம்பயர் (vampire) என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கபட்ட இந்த டிராகுலாவின் வரலாறு என்ன? அந்த வரலாற்றை ஆராய்ந்தால் டிராகுலா நாம் நினைப்பது போல் ரத்தவெறியன் இல்லை என்பதும் அவனது கொடூரங்களுக்கு ஒரு காரணம் இருந்திருப்பதும் தெரியவருகிறது. அதனால் டிராகுலாவின் வரலாற்றையும் சற்று ஆராய்வோம்.

ஹங்கேரி நாட்டில் 1431ம் ஆண்டு வலேசியா (wallachia) எனும் சிறுநாட்டின் மன்னர் வம்சத்தில் பிறந்தவன் விளாட் டிராகுல். இவனே பிற்காலத்தில் விளாட் தெ இம்பேலர் (கழுவேற்றும் விளாட்- Vlad the Impaler), கவுண்ட் டிராகுலா (Count Dracula) என்ற பெயரில் புகழ்பெற்றவன்.
அன்று கிழக்கு ஐரோப்பா எதிர்கொண்ட மிக முக்கிய சக்தி ஆட்டோமான் (Ottomon Turks) துருக்கிய சாம்ராஜ்யம். டிராகுலாவின் தந்தை துருக்கிய சுல்தானுக்கு கப்பம் கட்டி வந்தார். ஒருதரம் கப்ப பணம் கட்ட தாமதமாக தன் இரு பிள்ளைகளான வ்ளாட் மற்றும் ராடு (Radu the Handsome) இருவரையும் பணயகைதிகளாக ஆட்டொமான் சுல்தான் அரண்மனைக்கு அனுப்பி வைத்தார். கப்பதொகை கட்டி முடிக்கும்வரை இரு பிள்ளைகளும் சுல்தானிடம் கைதியாக இருந்தார்கள். இந்த சூழலில் ராட் சின்ன நாடான வலேசியாவின் மன்னனாவதை விட அன்றைய வல்லரசான துருக்கியில் இருந்தால் தான் தன் எதிர்காலத்துக்கு நல்லது என நினைத்து முஸ்லிம் மதத்துக்கு மாறி சுல்தானின் படையணியில் சேர்ந்துவிட்டான். மனம் மாறாத வ்ளாட் தன் தந்தையுடன் வலேசியா திரும்பினான். அதன்பின் சுல்தானுக்கு நாணயமாக கப்பம் கட்டி வந்தார் வ்ளாடின் தந்தை. அவரது அரியணைக்கு ஆபத்து வந்தபோது சுல்தானும் அவரது உதவிக்கு வந்தார். இந்த சூழலில் வ்ளாட் தன் தந்தை மறைவுக்கு பின் ஆட்சிக்கு வந்தார்.

வ்ளாடுக்கு 18 வயது ஆகையில் 1459ம் ஆண்டு அன்றைய போப் இரண்டாம் பயஸ் (Pious II) சிலுவை போரை அறிவித்தார். கிறிஸ்தவர்கள் அனைவரும் அப்போரில் இணைந்து ஆட்டோமான் சுல்தானுடன் போரிடுவது கடமை ஆனது. சுல்தானுக்கு கப்பம் கட்டி வாழும் நிலையை அறவே வெறுத்த வ்ளாட் சிலுவை போரில் இணைந்து கொண்டான். கப்பம் கட்டுவதையும் நிறுத்தினான். அதனால் கோபம் அடைந்த சுல்தான் மெகமூத் (Sultan Mehmed) கப்பதொகையை வாங்கி வர இரு அதிகாரிகளை அனுப்பினார்.அதிகாரிகள் அரசவையில் நுழைந்து வ்ளாடுக்காக காத்திருந்தார்கள். விளாட் வந்ததும் ஒட்டுமொத்த அரசவையே எழுந்து நின்று வணங்கியது. இரு அதிகாரிகளும் எழுந்து நிற்கவில்லை. மரியாதைக்காக தொப்பையை கழட்டி வணக்கம் செலுத்தவும் இல்லை. சுல்தானின் தூதர்கள் தம்மை விட அந்தஸ்தில் குறைந்த கப்பம் கட்டும் குறுநில மன்னன் முன் தொப்பியை கழட்டுவது வழக்கமில்லை என அதற்கு காரணமும் கூறினார்கள்.

"சரி, இனி நீங்கள் ஆயுளுக்கும் தொப்பியை கழட்டவே வேண்டாம்" என கூறிய வ்ளாட் தொப்பியை அவர்கள் தலையுடன் சேர்த்து ஆணி அடிக்க உத்தரவிட்டான். அலறி துடித்த ஆட்டோமான் தூதர்கள் என்ன கெஞ்சியும், மன்னிப்பு கேட்டும் விடாமல் அவர்களை பிடித்த வீரர்கள் அவர்கள் தலையில் தொப்பியுடன் சேர்த்து ஆணி அடித்து கொன்றார்கள்.

தூதர்கள் கொல்லபட்டவுடன் கடுமையான சீற்றம் அடைந்த சுல்தான் முகமது சிலுவைபோருக்கு மத்தியிலும் விளாடை கொல்ல ஒரு படையை ஹம்ஸா பே (Hamza Bey) என்பவர் தலைமையில் அனுப்பினார். அவர்கள் ஒரு குறுகலான மலைபாதையை கடக்கையில் எதிர்பாராவிதமாக தாக்குதல் நடத்தி அவர்களை முறியடித்த வ்ளாட் பிடிபட்ட அத்தனை துருக்கிய வீரர்களையும் கழுவேற்றினான். படைதளபதி ஹம்ஸா பே தன் அந்தஸ்தை குறிக்கும் விதத்தில் உயர்ந்த கழுமரத்தில் கழுவேற்றபட்டார்.

அதன்பின் ஆட்டோமான் சாம்ராஜ்யத்தின் பகுதியான பல்கேரியாவில் இருந்து ஒரு பெரும் படையணி விளாடை தாக்கலாம் என எதிர்பார்த்த விளாட் துருக்கிய சிப்பாய்களை போல் வேடமிட்டு தன் படையை பல்கேரியாவுக்கு நடத்தி சென்றான். துருக்கிய படைகள் இரவில் உறங்குகையில் எதிர்பாராதவகையில் தாக்குதல் நடத்தி ஒட்டுமொத்த பல்கேரிய படையணிகளையும் தோற்கடித்து கழுவேற்றினான் விளாட். பல்கேரியாவெங்கும் பிடிபட்ட துருக்கிய வீரர்கள் ஆயிரகணக்கில் கழுவேற்றபட்டார்கள். சுமார் 24,000 துருக்கிய வீரர்களை கழுவேற்றியதாக விளாட் போப் பயஸுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டான்.


(இரவுத் தாக்குதலில் துருக்கிய படையணிகளை முறியடிக்கும் விளாட் டிராகுலா)

விளாட் இத்தனை பேரை கழுவேற்றியதால் அவனுடன் போரிடவே அன்றைய துருக்கிய படைகள் அஞ்சி நடுங்கின. பிடிபட்டால் கழுவேற்றம் என்பதால் போரிடாமலேயே பல தளபதிகள் ஓட்டம் பிடித்தார்கள். கடும் கோபமடைந்த சுல்தான் மெகமூத்தே ஒரு படையை திரட்டிகொண்டு விளாடை எதிர்த்து போரிட வந்தார். வந்தபோது பள்ளதாக்கு ஒன்றில் விளாடால் கழுவேற்றபட்ட 24,000 துருக்கிய வீரர்களை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து போரிடாமலேயே திரும்பி சென்றார்.

இந்த சூழலில் விளாட் ஒட்டுமொத்த டிரான்ஸில்வேனியா பகுதியையும் சுதந்திரநாடாக அறிவித்து ஆட்சி செய்தான். ஆனால் சிலுவை போர் முடிந்ததும் சுல்தான் விளாடை மறக்காமல் 90,000 பேர் அடங்கிய ஒரு மாபெரும் படையை தயார் செய்து விளாடின் சகோதரன் ராடின் தலைமையில் அனுப்பி வைத்தார். அண்ணன், தம்பிக்கு இடையே சகோதர யுத்தம் நடைபெற்றது.

அன்றைய வலேசியா ஜனதொகையை விட அதிக எண்ணிக்கையில் இருந்த ஆட்டொமான் படைகளை எதிர்த்து நேரடி யுத்தம் நடத்தினால் தோல்வி உறுதி என்ற நிலையில் கொரில்லா தாக்குதல்களில் இறங்கினான் விளாட். இரவு நேரத்தில் துருக்கிய படைகள் உறங்கையில் பெரும்தாக்குதல் ஒன்றை நடத்தி 15,000 பேரை கொன்றான். இந்த கொரில்லா தாக்குதல்கள் அன்றைய கிறிஸ்துவ ஐரோப்பாவில் விளாடுக்கு மிகப்பெரும் புகழை பெற்றுதந்தது.ஆனால் சளைக்காத சுல்தான் மெக்மூத் மேலும், மேலும் படையணிகளை வலேசியாவுக்கு அனுப்பினார் வெனிஸ், ஜெனோவா முதலிய குட்டிநாடுகள் பலவும் விளாடுக்கு எதிரான சுல்தானின் போரால் காப்பாற்றபட்டன. அங்கே போரிட்டு கொண்டிருந்த படைகள் பலவும் விளாடுக்கு எதிராக போரிட அனுப்பபட்டன.

இப்படி மேலும் மேலும் படைகளும், ஆயுதங்களும் வந்து இறங்க துருக்கிய படையணி மேலும் வலுவடைந்தது. இந்த சூழலில் ராட் வலேசியா கோட்டையை பிடித்து ஆட்சியையும் பிடித்தான். ஆதரவு இன்றி, பணம் இன்றி, படைகளும் இன்றி ஹங்கேரி மன்னனிடம் உதவி கேட்க சென்றான் டிராகுலா. ஆனால் ஹங்கேரி மன்னன் சுல்தானுக்கு அஞ்சி டிராகுலாவை சிறையில் அடைத்தான். ராட் வலேசியாவின் புதிய மன்னனாக சுல்தானால் அறிவிக்கபட்டான்.

சுமார் 12 ஆண்டு சிறையில் இருந்த டிராகுலா இறுதியில் ஹங்கேரி மன்னன் மரணத்துக்கு பின் விடுதலை அடைந்தான். மீண்டும் ஒரு மிக சிறு படையை திரட்டி சென்று வலேசியா மேல் போர் தொடுத்தான். அதில் வெறும் 4000 வீரர்கள் மட்டுமே இருந்தார்கள். ஆனால் டிராகுலாவின் கொடூரம் உலகபுகழ் பெற்று இருந்ததால் அவன் படை வருகிறது என கேள்விபட்டவுடன் பாதி துருக்கிய வீரர்கள் ஓட்டம் பிடித்தார்கள். மீதி பேரை வென்று ஆட்சியை மீண்டும் பிடித்து முடிசூடினான் டிராகுலா.

ஆனால் மீண்டும் படை எடுத்து வந்த துருக்கிய படைகளுடன் போரிடுகையில் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தான் டிராகுலா. அவன் இறந்தபின் சில ஆண்டுகள் கழித்து அன்றைய ஜெர்மனியில் திகில் நாவல்கள் சில எழுதபட்டன. அதில் டிராகுலாவின் கழுவேற்றங்களை வைத்து புனைகதைகளை எழுத துவங்கினார்கள். கொஞ்சம், கொஞ்சமாக டிராகுலாவின் உண்மை வரலாறு மறைந்து அவன் குழந்தைகளை பிடித்து செல்வான், ரத்தத்தை குடிப்பான் என்பது போல் கதைகள் எழுதப்பட்டன. இக்கதைகள் அன்றைய ஜெர்மனியில் மிக பிரபலம் ஆனதால் அவை ரஷ்யா, ஐரோப்பாவெங்கும் பரவின. இதனால் டிராகுலாவின் உண்மை வரலாறூ மறைந்து அவன் ரத்தகாட்டேரியாக உலகெங்கும் அறியபட்டாலும் டிரான்ஸில்வேனியாவில் அவன் மாபெரும் சுதந்திர போராட்ட வீரனாகவும், தேசபக்தனாகவுமே பார்க்கபடுகிறான்.அவனது சிலைகளை இன்றும் ரொமேனியாவெங்கும் காணலாம்No comments: