எட்கார் தர்ஸ்டன் எழுதிய "ஓமன்ஸ் அன்ட் சூப்பர்ஸ்டிஷன்ஸ் ஆஃப் சவுத் இந்தியா" (தென்னிந்தியாவின் சகுனங்களும் மூடநம்பிக்கைகளும்) என்ற நூலை படித்து கொண்டிருக்கிறேன். அதில் கீழ்காணும் சுவாரசியமான தகவல் இடம்பெற்றுள்ளது.
சென்னையில் தாமஸ் மன்றோ சிலை அமைந்தது பற்றிய ஒரு கதை மக்களிடையே உலா வந்துகொண்டிருக்கிறது. அதாவது ராமாயணத்தில் ராமனின் கரங்கள் அவனது கால் முட்டியை தொடும் அளவு நீண்டிருக்குமாம். இதை தான் அன்றைய தமிழில் ஆஜானுபாகு என அழைப்பார்களாம். இப்படி ராமனுக்கு இருந்தது போன்ற நீளமான கைகள் அன்றைய சென்னை ராஜதானி கவர்னரான சர் தாமஸ் மன்றோவுக்கும் இருந்ததுவாம். அன்றைய சென்னை ராஜதானிக்கு உட்பட்ட பெல்லாரி பகுதியில் இவரை போல பையன்கள் முன்னுக்கு வந்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற காரணத்தால் "மன்றோலப்பன்" என பெயர் வைப்பது வழக்கமாம்.
இத்தகைய புகழுள்ல கவர்னர் பிரபு ஒரு கெட்ட காரியமும் செய்தார்.அஃது என்னவெனில் சென்னையில் இருந்த அனைத்து அரிசி மண்டிகளையும் மன்றோ பிரபு தன் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து மக்களுக்கு அரிசி கிடைக்க விடாமல் செய்தார். அதனால் பஞ்சம் வந்ததும் தன்னிடம் இருந்த அரிசியை முட்டை ஓட்டுக்குள் அடைத்து ஒரு முட்டை ஓடு அளவு உள்ள அரிசி ஒரு ரூபாய் என விற்றார்.
இதற்கு அவரை தண்டிக்க வேண்டிதான் சென்னையில் அவருக்கு சிலை வைத்தபோது அரசு அவரது சிலையை திறந்தவெளியில் மேலே கூரை எதுவும் இன்றி அமைத்துவிட்டது. இதனால் பறவைகள் அவரது சிலையை திறந்தவெளி கக்கூசாக பயன்படுத்தியது தான் அவருக்கு கொடுக்கபட்ட தண்டனை.
அரளியும் நம்பிக்கைகளும்
அரளி செடி தமிழர்கள் வாழ்க்கையில் முக்கிய இடம் வகித்ததாக எட்கார் தர்ஸ்டன் தெரிவிக்கிறார் (நூல் எழுதப்பட்ட வருடம் 1912)
அந்த கால பிராமணர்கள் மத்தியில் மூன்றாவது திருமணம் செய்வது மிக மோசமான சகுனமாக கருதபட்டது. மூன்றாவது மனைவியை கட்டினால் கணவன் இறந்துவிடுவான் என்பதால் மூன்றாவதாக திருமணம் செய்ய வேண்டுமனால் அதற்கு முன் மணமகன் அரளிசெடியை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என விதி இருந்ததால். அரளி செடி இருக்கும் இடத்தில் பந்தல் போட்டு ஐயரை வைத்து மந்திரம் சொல்லி தாலி கட்டி, ஓமம் வளர்த்தி திருமணம் ஆனதும் செடி வெட்டபட்டு விடுமாம். அப்புறம் மூன்றாவது மனைவியாக வரவிருக்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்ளலாம். அப்போது அது நாலாவது திருமணமாக ஆவதால் பிரச்சனை இல்லையாம்.
பறையர் சமூகத்தில் கல்யாணம் ஆகாமல் எந்த வாலிபனாவது இறந்தால் அவனது பிணத்தை சுடுகாட்டில் வைத்து அரளி செடிகளால் அலங்கரிக்கபட்ட மணபந்தலை அங்கே எழுப்பி பிணத்தின் கழுத்தில் அரளிமலர் மாலைகளை போடுவது வழக்கமாம்.
உப்பிலியர் சமூக பெண்கள் இன்னொருத்தி புருஷனுடன் உறவுகொண்டால் அவர்கள் கழுத்தில் அரளி மாலையை போட்டு கூடை நிறைய மண்ணை சுமந்துகொண்டு ஊரை வலம் வர செய்வார்களாம். ஆண்கள் நடத்தை கெட்டால் அவர்கள் கழுத்தில் அரளி மாலையை போட்டு கழுதை மேல் ஏற்றி கழுதை வாலை பார்த்தபடிக்கு கட்டிபோட்டு ஊரை வலம் வர செய்வார்களாம்.
கொங்கு வெள்ளாள சமூக ஆண் எதாவது விதவையுடன் கள்ள உறவு கொண்டால் அவரை ஊர் மத்தியில் நிறுத்தி வைத்து ஜாதி பிரஷ்டம் செய்வித்து அப்புறம் அவரை அரளி செடியின் தண்டால் அடித்து மீண்டும் ஜாதியில் சேர்த்து கொள்வார்களாம். அவர் அதன் பின் கறுப்பு ஆடு ஒன்றை அறுத்து ஊராருக்கு விருந்து வைக்க வேண்டுமாம்.
குருவிக்கார சமூக ஆண் யாராவது தவறு செய்ததாக சந்தேகபட்டால் அவர் கையில் ஏழு அரளி இலைகளை வைத்து அதன்மேல் பழுக்க காய்ச்சின இரும்பு கம்பியை வைப்பார்களாம். கையில் சூடு இறங்குவதற்குள் அவர் ஏழு அடி எடுத்து வைத்துவிட்டால் அவர் குற்ரவாளி இல்லை என முடிவு செய்வார்களாம்.
அரளி விதையை அரைத்து குடித்து சாவது அப்போதும் கிராமங்களில் பரவலாக இருந்ததாக எட்கார் கூறுகிறார்
2 comments:
உங்களின் தளம் வலைச்சரத்தில் இன்று திரு. சொக்கன் அவர்களால் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_2.html) சென்று பார்க்கவும். நன்றி !
நேரம் கிடைத்தால் என் தளம் வாங்க... நன்றி.
Thanks for the information Dhanabalan Sir. I will definitely visit your blog
Post a Comment