Sunday, June 05, 2011

புள்ளியியல் கதைகள் # 1

"இந்த ப்ரிஜ்ஜை வாங்கி கடைல வைண்ணா..சோடா விற்பனை சும்மா பிச்சுகிட்டு போகும்" சேல்ஸ் ரெப் அண்ணாச்சியை வலியுறுத்தினார்.

"ப்ரிஜ்ஜு இல்லாமெயே தினமும் 100 சோடா ஓடுது. ப்ரிஜ்ஜு புதுசா எதுக்குன்னேன்" என்றார் அண்ணாச்சி.

"சும்மா ஒரு வாரம் வெச்சு பாருங்க.சேல்ஸ் ஜாஸ்தி ஆகலைன்னா நானே திரும்ப எடுத்துகிட்டு போயிடறேன்" என்றார் ரெப்.

"சரி இறக்கு.ஒரு வாரத்துல சேல்ஸ் சாஸ்தியாகலைன்னா ப்ரிஜ்ஜை தூக்கிட்டு போயிடணும்"

"சரி..இந்தாங்க காண்டிராக்டு.கையெழுத்து போடுங்க"

"கொண்டா.."

"இருப்பா.." என சொல்லி தடுத்தாள் அண்னாச்சியின் மகள் மலர்.

"சும்மா யோசிக்காம இறக்கு, ஏத்துன்னு சாமனை வாங்க கூடாது. இந்த ப்ரிஜ்ஜை வாங்கினால் பலன் இருக்கான்னு பார்க்கணும்"

"பார்த்தாச்சு. அதெல்லாம் கணக்கு போடாமயா இந்த தொழிலில் இருப்பேன்" என்றார் அண்னாச்சி.

"என்ன கணக்குனு பார்க்கலாம்.ப்ரிஜ்ஜு விலை என்ன?"

"பத்தாயிரம்"

"ப்ரிஜ்ஜுக்கு கரண்டுக்கு எத்தனை செலவாகும்?"

"மாசம் நூறுன்னு வெச்சிக்கலாம்"

"ப்ரிஜ்ஜு வாங்க லோன் தானே போடணும்?வட்டி எத்தனை?"

"மூணு வட்டி"

"ஆக ஒரு வருசம் இந்த ப்ரிஜ்ஜை வெச்சிருந்தா 1200 கரண்டு பில்லு+ 3600 ரூபாய் வட்டி ஆக 4800 செலவு அதிகம் ஆவுது"

"அட ஆமாம்.."

"இந்த 4800 மட்டுவாது எடுக்க தினம் எத்தனை சோடா விக்கணும்?"

" ஒரு சோடா வித்தா ஒரு ரூபா நிக்குது. 4800/ 365 = 13.15. இப்ப தினம் நூறு சோடா விக்குது.அது 114 ஆனால் ப்ரிஜ்ஜுக்கு பண்ன செலவு நேராயிடும்.லாபமும் வேணும் என்பதால் தினம் 20 சோடா கூடுதலா விக்கணும் என வெச்சுக்கலாம்"

"ப்ரிஜ்ஜு வாங்கி வெச்சா தினம் 20 சோடா அதிகமா விக்குமா?"

"தெரியலையே. ஒரு வாரம் வாங்கி வெச்சா தானே தெரியும்.அதான் எறக்க சொன்னேன்" என்றார் அண்ணாச்சி.

"ஒரு வாரம் எறக்கி வெச்சா எப்படி தெரியும்?" என்றால் மலர்.

"சும்மா கூட்டி கழிக்கறதுதான்.இப்ப தினம் 100 சோடா விக்குது.வாரம் 700 சோடா.ப்ரிஜ்ஜை இறக்கி ஒரு வாரத்துல சேல்ஸ் 840க்கு மேல போனால் ப்ரிஜ்ஜை தரியமா வாங்கிடுவேன். 840க்கு கீழே போனால் ப்ரிஜ்ஜை வாங்க மாட்டேன்" என்றார் அண்ணாச்சி.

"இங்க தான் தப்பு பண்றீங்க. 840 ‍‍ 700 = 140. இந்த 140 சோடாவும் ப்ரிஜ்ஜால் தான் விக்குது என எப்படி தெரியும்?இந்த ஒரு வாரத்தில் சேல்ஸ் தற்செயலா 140 சோடவா அதிகரிச்சால் என்ன செய்வீங்க?உதாரணமா அடுத்த வாரம் திடீரென வெயில் கொளுத்துது.சேல்ஸ் சும்மா குப்புன்னு ஏறும்.நீங்க வெயிலால் ஏறிய விற்பனையை ப்ரிஜ்ஜால் ஏறிடுச்சுன்னு நினைச்சுக்குவீங்க. கடைசியில் வருசம் 4800 ரூ. நஷ்டமாகும்"

"கடையில் அதிகரிக்கும் அல்லது குறையும் சேல்ஸ் ப்ரிஜ்ஜால் ஆகுதா இல்லை வேறு எதாவது காரணத்தால் ஆகுதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?" என கேட்டார் அண்னாச்சி.

"ஒப்பிட்டு தான் கண்டுபிடிக்கணும்.பக்கத்து தெருவில நம்ம பெரியப்பா கடை இருக்கு.அவர் கடைலயும் ப்ரிஜ்ஜு இல்லை.அவர் தினம் எத்தனை சோடா விக்கறார்?"

"அது பெரிய கடை.150 சோடா ஓடும்"

"அவர் கடைல ஒரு வாரம் எத்தனை சோடா ஓடுதுன்னு பாருங்க.நம்ம கடையிலயும் பாருங்க.பக்கத்து தெரு என்பதால் வெயில், தற்செயல் மாதிரி உங்களுக்கு இருக்கும் அத்தனை நிகழ்வுகளும் கிட்டத்தட்ட சமமா அவர் கடைக்கும் இருக்கும். அதனால ஒரு வாரம் கழிச்சு ரெண்டு கடை விற்பனையையும் ஒப்பிட்டு பார்ப்போம்" என்றாள் மலர்.

ஒரு வாரம் கழிந்தது.ப்ரிஜ்ஜு கம்பனி ஆள் மீண்டும் வந்தார்

""என்ன அண்னாச்சி..ப்ரிஜ்ஜி வாங்கி சேல்ஸ் பிச்சிகிட்டு போயிருக்கணுமே" என்றார்

"எம் பொண்ணு காலையிலேயே கணக்கு போட்டு குடுத்துட்டா.." என்றார் அண்ணாச்சி.பேப்பரை எடுத்தார்.வாசித்தார்

"அண்னன் கடையில ஒரு வாரம் சேல்ஸ் சராசரியா 150*7 = 1050. என் கடையில சேல்ஸ் 100* 7 = 700.என் கடையில ப்ரிஜ்ஜு இறங்கினதும் என் கடை சேல்ஸ் கிட்டத்தட்ட‌ டபிள் ஆகி 1375 ஆச்சு.அதே சமயம் ப்ரிஜ்ஜு இல்லாத அண்னன் கடையிலும் சேல்ஸ் கிட்டத்தட்ட டபிள் ஆகி 2000 ஆச்சு.ஆக என் மகள் சொன்ன மாதிரி என் கடை விற்பனை அதிகரிச்சது  ப்ரிஜ்ஜால் இல்லை என்பதும், அதுக்கு வெயில், ஊர் திருவிழா போன்ர வேறு எதாவது காரணம் இருந்திருக்கலாம் என்பது தெரியுது.அதனால எனக்கு இந்த ப்ரிஜ்ஜை இப்ப வாங்கி வைப்பதில் எந்த லாபமும் இல்லை.ப்ரிஜ்ஜை எடுத்துகிட்டு போங்க" என்றார் அண்ணாச்சி

ப்ரிஜ்ஜை எடுத்த ரெப் கல்லாவில் உட்கார்ந்த மலரை பார்த்து முறைத்தார்.

"முறைக்காதீங்க சார்.எங்களுக்கு 4800 ரூபாய் பெரிய காசு" என்றாள் மலர்.

No comments: