ஒரு இந்திய கமாண்டோ வீரன் 72 வாரங்களுக்கு மிகக்கடுமையான பயிற்சி எடுக்கிறான்.அமெரிக்க வீரர்களுடன் இணைந்து வி.பி.பி.எஸ் போன்ற மிகக்கடுமையான பயிற்சியை எடுக்கிறான்.இந்திய கமாண்டக்களுக்கு பயிற்சி அளித்த அமெரிக்க லெப்டினன்ட் டேனியல் ப்ரீஸ்ட் என்பவர் "இந்திய கமாண்டோக்களிடமிருந்து நாங்கள் நிறைய கற்றோம்" என அசந்து போய் பாராட்டும் அளவு திறமையானவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.அம்மாதிரி வீரர்களுடன் மோதுவது என்றால் சும்மாவா?
சலீமின் சிந்தனையில் காணப்பட்ட தயக்கம் அவனது ஓட்டத்தில் காணப்படவில்லை. கடைசி ஒரு மைலை கிட்டத்தட்ட 7.5 நிமிடங்களில் ஓடிக்கடந்தான். இந்திய எல்லையை தாண்டினோமா இல்லையா என்பதே தெரியாமல் ஓடினாலும், அவன் எல்லை தாண்டி வந்த தீவிரவாதி என்பதை உணர்ந்த தேசபக்தி மிகுந்த இந்திய முட்செடிகள் அவன் உடலை குத்தி கிழிக்க துடித்தன. 'திரும்பிப்போ' என்று அவன் முகத்தில் ஆவேசமாக இமாலய மண்ணிலிருந்து வந்த காற்று முட்டி மோதியது. அதை லட்சியம் செய்யாமல் சலீம் தொடர்ந்து ஓடினான்.
கால் ஷூவின் கட்டியிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தான். இரண்டு வாய் தண்ணீர் மட்டும் குடித்தான்.மீண்டும் உற்சாகத்துடன் ஓடத்துவங்கினான்.
'இந்திய கமாண்டோவுக்கு அளிக்கப்படும் பயிற்சியை உனக்கு எங்களால் அளிக்க முடியாது.அதை விட கடுமையாகத்தான் அளிக்க முடியும்.பயிற்சி கடுமையாக இருந்தால் போர் செய்வது சுலபமாக இருக்கும்' என்ற அவனது பயிற்சியாளரின் வார்த்தைகள் அவனது காதில் ஒலித்தது.சலீம் முதல் மாணவனாக அந்த பயிற்சியில் தேறினான். கடைசி கட்ட பரிசோதனை மட்டுமே பாக்கி.
நிராயுதபாணியாக இந்தியாவுக்குள் ஓடவேண்டும். 24 மணிநேரத்துக்குள் முகாமுக்கு மீண்டும் திரும்பவேண்டும், ஏதோ ஒரு பரிசுப்பொருளுடன்.அது ஒரு இந்திய வீரனின் தலை, அல்லது ஒரு ராணுவ ஜீப்பின் ஹெட்லைட் என எதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இந்திய எலைட் கமாண்டொக்கள் இதேபோல் தான் பயிற்சி பெறுகிறார்கள் என்பதை சலீம் அறிந்திருந்தான்.இப்போது மட்டும் தனக்கு எதிரே அப்படி பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயலும் எலைட் கமாண்டோ ஒருவன் வந்தால் எப்படி இருக்கும்?அவனுடன் தான் நேருக்கு நேர் மோதினால் எப்படி இருக்கும்?அவனை மட்டும் உயிருடன் பிடித்து கொண்டு செல்ல முடிந்தால்....
விண்ணில் இருக்கும் இறைக்கு சலீமின் பிரார்த்தனை எட்டியதோ என்னவோ? அடுத்த நிமிடத்தில் சலீம் தான் ஓடிய ஒற்றை அடிபாதையில் எதிரே வந்த இன்னொருவனை சந்தித்தான். அவன் காலில் அணிந்திருந்த ட்ரெக்கிங் ஷூ அவன் சாதாரண மலைவாசி இல்லை என்பதை காட்டியது. அவனது கைப்பட்டையிலிருந்த மூவர்னக்கொடி பறித்த ப்ரேஸ்லட் அவனது இந்திய தேசபக்தியை பறைசாற்றியது. அவன் கரத்திலிருந்த 16" பைஸெப்ஸும், அவனது 110 கிலோ எடையும் அவனுடன் மோதுவது சாதாரண விஷயமல்ல என்பதை சலீமுக்கு உணர்த்தியது.
இருவரும் அதே இடத்தில் நின்றார்கள்.அடுத்தவனை எடை போட்டார்கள். மோதலை துவக்க சலீம் விரும்பவில்லை.ஆனால் அவனது எதிரி அப்படி நினைக்கவில்லை. புலிப்பாய்ச்சலாக சலீம் மேல் பாய்ந்தான்.
சலீமின் தாடையில் இடி இடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.அவனது நாக்கு அவனது ரத்தத்தின் சுவையை உணர்ந்தது. அடுத்த அடி சலீமின் வயிற்றில் இறங்கியது.விண்ணில் இருந்த நட்சத்திரங்களை கண்முன் கண்டான் சலீம்.
திண்டாடி பின் வாங்கினான்.அவனது எதிரி சளைக்கவில்லை.மீண்டும் மேலே பாய்ந்தான்.
சலீமின் கால் உயர்ந்தது.பாய்ந்து வந்தவனின் அடி வயிற்றை நோக்கி உதைத்தது. உதை குறிதவறி கொஞ்சம் கீழே இறங்கியது. கீழே விழுந்த அந்த கமாண்டோவின் அலறல் வனமெங்கும் எதிரொலித்தது.
கீழே கிடப்பவனை தாக்குதல் யுத்த தருமம் இல்லை.ஆனால் யுத்தத்தில் ஏது தருமம்?ஜெயிப்பவன் எழுதுவது தானே வரலாறும், தருமமும்?
சலீம் தனது காலை உயர்த்தினான்.அவனது கழுத்தை குறிவைத்து இறக்கினான்.மூன்றே மிதியில் அந்த கமாண்டோ உயிர் விட்டான்.
பாகிஸ்தானுக்குள் நுழைய வேண்டும் என்ற அவனது ஆசையை சலீம் நிறைவேற்றினான்.ஆம்..பாறை ஒன்றை எடுத்து அவனது கழுத்தை சிதைத்து தலையை வெட்டி எடுத்துக் கொண்டு தனது முகாமுக்கு திரும்பினான்.
"என்ன கொண்டுவந்தாய்" என ஆவலுடன் கேட்டார் பயிற்சியாளர் அப்துல்.
"இதோ ஒரு இந்திய வீரனின் பிரேஸ்லட்" என மேஜை மீது எறிந்தான் சலீம். தலையை கடைசியில் காட்டி சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்பது அவன் திட்டம்.
"இது என்ன ப்ரேஸ்லட்? ஒரு பெயரையும் இதில் காணோமே? இது ஒரு இந்திய வீரனின் ப்ரேஸ்லட் என எப்படி நம்புவது?" என கேட்டார் அப்துல்.
"சந்தேகமிருந்தால் இவனை கேட்டு பாருங்கள்" என்றான் சலீம். பெருமையுடன் அந்த தலையை மேஜை மீது வைத்தான்.
அதிர்ச்சியில் அப்துலுக்கு நீண்டநேரம் பேச்சே வரவில்லை. "ஷுபானுல்லாஹ்" என்றார். அவரது கண்ணில் ஆனந்தக்கண்ணீர் துளிர்த்தது. சலிமை இறுக கட்டி அனைத்தார். பெருமிதத்தில் சலீமின் மார்பு விம்மியது.
"உன்னைப்போல் ஒரு வீரனை நான் கண்டதே இல்லை. உன்னால் லஷ்கர் இ ஜாங்க்வி இயக்கமே பெருமை அடைகிறது" என்றார்."நீ இறுதி பயிற்சியில் தேறிவிட்டாய். விரைவில் உன்னை சகல முஸ்தீபுகளுடன் புனித போருக்கு அனுப்புகிறேன்" என்றார்.
பெருமிதத்துடன் சலிம் அங்கிருந்து அகன்றான்.
சலிம் அகன்றதும் 'முட்டாள்...மூர்க்கன்..கிறுக்கன்" என ஆவேசத்துடன் தன் தலை தலையாக அடித்துக்கொண்டார் அப்துல்.அவரை பார்த்து சிரித்தது மேஜையில் வைக்கப்பட்டிருந்த அவரது மாணவனான முஸ்தபாவின் தலை.
"எங்கிருந்து இந்த ப்ரேஸ்லெட்டை நீ பிடித்தாய் முஸ்தபா?இந்த முட்டாளை எங்கே சந்தித்தாய்? உன்னை எப்படி அவன் கொன்றான்? நீ எனது பெருமை மிகுந்த மாணவன், ஒரு புனிதப்போராளி என்பதை அவனிடம் சொல்ல உனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லையா?" என முணுமுணுத்தார் அப்துல்.
எதுவும் பேசாமல் இருந்தது முஸ்தபாவின் தலை.
"நீ யார் என்பதை அவனிடம் சொல்லியிருந்தால் சலிமையும் நான் இழந்திருப்பேன்" என்றார் அப்துல்.சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தார்.
"நான் செய்தது சரிதானே முஸ்தபா" என கேட்டார் அப்துல்.
பதிலே சொல்லாமல் முறைத்தது முஸ்தபாவின் தலை.
9 comments:
நன்றாக உள்ளது
ஆக, "புனிதப்போர்" முடிவதில்லை!
நல்ல கற்பனை!
தன் தலை மாணவன் [முஸ்தாபா] எங்கு சென்றிருக்கிறான் எனக்கூடத் தெரியாத ஒரு தல!
சுத்தம்!
ம்ம்ம்!
:)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..
இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.
இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்
முடிவில் நல்ல ட்விஸ்ட். நல்ல நடை - நல்ல கதை செல்வன்.
என்னார் ஐயா
மிக்க நன்றி.
எஸ்.கே
பயிற்சி விதிகளின்படி மாணவன் இந்திய எல்லைக்குள் சென்று ஏதாவது ஒரு பரிசை கொண்டுவரவேண்டும். எங்கே போவது என்பது மாணவனின் விருப்பம் தான்.அதனால் தான் குருவுக்கு சீடனின் இருப்பிடம் தெரியாமல் போனது
மிக்க நன்றி கார்த்திகேயன்,
இந்த புதுவருடத்தில் முதல் வாழ்த்து உங்களுடையது தான்.இதுபோல் பல இனிய நட்புகளை அள்ளித்தந்த இணையத்துக்கும் தமிழுக்கும் என் நன்றி.தாங்களும், தங்கள் குடும்பமும் அனைத்து நலங்களையும் இந்த புதிய ஆண்டில் பெறவேண்டும் என ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி (பெனாத்தல்) சுரேஷ்
நன்றாக இருக்கிறது செல்வன். முடிவு மிக அருமை.
ஒரு கேள்வி - முஸ்தபா ஏன் பாகிஸ்தானிலிருந்து வரும் ஒருவனை ஏதும் விசாரிக்காமல் அப்படி தாக்குகிறான்?
இதே தலைப்பில் என் வலிப்பூவில் கவிதையொன்று எழுதியிருக்கிறேன்.
ஓகை அவர்களே,
முஸ்தபா சலீம் பாகிஸ்தானிலிருந்து வரும் இந்திய உளவாளி என த்வ்றாக எண்ணி தாக்கி விட்டான்.அது அவன் மரணத்தில் போய் முடிந்தது.
உங்கள் கவிதையை கூகிளில் தேடிக்கொண்டிருக்கிறேன்.படித்து கண்டிப்பாக என் கருத்தை எழுதுகிறேன்.
நன்றி
செல்வன்
Post a Comment