Monday, July 10, 2006

122.அஞ்சேல் எனாத ஆண்மை-8 அரவிந்த்சாமி

வடகொரிய தலைநகர் யோங்யாங், தேடாங் நதிக்கரையில் அமைந்த நகரம்.வடகொரியா சபிக்கப்பட்ட தேசம்,ஏழ்மையில் உழலும் தேசம் என இளங்கோவும்,சந்துருவும் கேள்விப்பட்டிருந்தனர்.ஆனால் யாங்க்யாங்கில் இறங்கியதும் அது தெரியவில்லை.முதலில் அவர்களை தாக்கியது கடும்குளிர்.பிப்ரவரியில் பூஜ்யம் டிகிரி செல்சியசுசுக்கு கீழே போகும் குளிர்.என்னதான் அதற்கேற்ற உடைகளை அணிந்திருந்தாலும் வாழ்வில் முதன்முறையாக அப்படி ஒரு குளிர் தாக்கும்போது நடுக்கம் வரத்தான் செய்யும். யாங்யாங் நகர தெருக்களில் வாகனம் போனபோது ஏதோ ஏழ்மை கண்ணுக்கு தெரியவே இல்லை.சாங்வாங் தெரு உலகின் எந்த நகரத்துடனும் போட்டியிடும் வகையில் பெரிய கட்டிடங்களுடன் தான் இருந்தது.ஆனால் தெருக்களில் கார்கள் சுத்தமாக காணப்படவில்லை.சைக்கிள் தான் மக்களின் வாகனமாக காணப்பட்டது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இளங்கோவிடம் பிட்சு மெதுவாக "நீ இதற்கு முன் என்ன வேலை செய்து கொண்டிருந்தாய்?" என கேட்டார் "டாக்டர்,பாலியல் நிபுணர்" என்றார் இளங்கோ. "பழனி வைத்தியர் போல" என முணுமுணுத்துக்கொண்டார் பிட்சு."நீ.." என சந்துருவை பார்த்து கேட்டார். "பைப் கம்பனி சேல்ஸ்மேன்." என்றான் சந்துரு."படிப்பு பி.காம்" என்றான்.பாதியில் படிப்பை விட்டதை சொல்லவில்லை. "இந்த புத்தகங்களை வைத்துகொள்ளுங்கள்.உதவும்" என்றார் பிட்சு.30 நாட்களில் கொரிய மொழி எனும் புத்தகம். இவர்கள் போன வேன் யாங்யாங்கின் குயோக் எனும் இடத்தில் சென்று நின்றது.அனைவரும் இறங்கி அங்கிருந்த கோயிலுக்குள் நுழைந்தார்கள்.அடுத்த நாள் காலையில் தலைமை பிட்சு அவர்களை சந்திப்பார் என்று சொல்லப்பட்டது. அன்றிரவு பிட்சு ரகசிய மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்தார்.அனைவரும் பிட்சுவின் அறையில் கூடினர். "சில விஷயங்களை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்" என்றார் பிட்சு."நீங்கள் இருவரும் சிவிலியன்கள்.போர்,சண்டை,உளவு,ரத்தம் என எந்த அனுபவமும் இல்லாதவர்கள்.அதனால் சில விஷயங்களை மறைத்தேன்.ஆனால் ஒரே இரவில் 16 கொலைகளை செய்ததை கண்டு அசந்து போய்தான் கூட்டிவந்தேன்" என்றார். "நீங்கள் எல்லாரும் யார்" என்று கேட்டான் சந்துரு. "நாங்கள் இந்த மத ஸ்தாபனத்தில் நடப்பதை உளவறிய வந்தவர்கள்.எந்த நிறுவனத்தை சார்ந்தவர்கள் என்பது இப்போதைக்கு ரகசியமாக இருக்கட்டும்" என்றார் பிட்சு. "உங்கள் பெயரையாவது சொல்லுங்கள்" என்றார் இளங்கோ. "பெயரா முக்கியம்" என்றார் பிட்சு."அரவிந்த்சாமி என வைத்துகொள்ளுங்களேன்" என்றார். "உங்கள் முகம் ஆந்தை மாதிரி இருக்கு.வேணும்னா ஆந்தை சாமி என கூப்பிடுகிறேன்" என்றார் இளங்கோ. "எப்படியோ கூப்பிட்டுக்கொள்ளுங்கள்" என்றார் அரவிந்சாமி. "நீங்கள் சி.பி.ஐ.யா?" என கேட்டான் சந்துரு. பதிலே சொல்லாமல் அடுத்த விஷயத்துக்கு தாவினார் அரவிந்த்சாமி. "இந்த ஸ்தாபனத்தில் நம் உளவாளிகள் கொரியாவுக்குள் கால் வைத்ததே இல்லை.முதல் முதலாக நாம் தான் வந்திருக்கிறோம்.பல இடங்களுக்கும் நாம் பிரித்து அனுப்பப்படுவோம்.இந்த சபிக்கப்பட்ட தேசத்தில் தொலைபேசி கூட கிடையாது.ஒரு தரம் பிரிந்தால் நாம் மறுபடி தொடர்பு கொள்ள எந்த வழிமுறையும் கிடையாது.நீங்கள் செய்ய வேண்டியது ஒழுங்காக அவர்கள் சொல்லும் வேலையை செய்ய வேண்டியது.என்ன நடக்கிறது என்பதை கவனித்துக்கொண்டே வாருங்கள்.என்ன கோல்மால் செய்தாவது இந்த அமைப்பின் மேல் மட்டத்துக்குள் நம்மில் ஒருவராவது போய்விடவேண்டும்." என்றார். "கொரியாவில் முக்கியமாக சொல்ல வேண்டியது உன் வேலையை பார் என்பதே.இங்கு பல அடாவடிகள் நடக்கும்.கண்முன் கொலை செய்வார்கள்.கண்டுகொள்ள கூடாது.ஏழ்மை கண்னை குத்தும்.மனம் இரங்கி எதையும் செய்துவிடக்கூடாது.உணவு இங்கே கிடைப்பது மிக அரிது.ஆனால் மத நிறுவனத்தில் இருக்கும் நமக்கு சிக்கலில்லை.ஆனால் எக்காரணம் கொண்டும் பொதுமக்களோடு நெருங்கி பழகாதீர்கள்" என்றார் அரவிந்த்சாமி. "என் மனைவியை பார்க்கவேண்டும்" என்றான் சந்துரு. "அவர் எங்கிருக்கிறார் என்பதை மேல்மட்டத்தில் நம்மில் யாரவது நுழைந்தால் தான் கண்டுபிடிக்க முடியும்" என்றார் அரவிந்த்சாமி. "கல்யாணமானது என்றீர்களே.அது பொய்தானே" என்றான் சந்துரு. கண்ணை நேருக்கு நேர் பார்த்து பொய் சொல்வது சாத்தியமில்லை என்பார்கள்.ஆனால் அரவிந்த்சாமி அதில் கை தேர்ந்தவராக இருந்தார். "பொய் தான் சொன்னேன்.மன்னித்துவிடு" என்றார். சந்துருவின் முகம் மலர்ந்தது. அரவிந்த்சாமியின் முகம் வழக்கம் போலவே ஒரு விஷமச்சிரிப்புடன் இருந்தது. அடுத்த நாள் காலையில் தலைமை பிட்சு அவர்கள் அனைவரையும் சந்தித்தார்.நல்ல ஆங்கிலத்தில் பேசினார். "உங்கள் அனைவருக்கும் ஒரு வருத்தமான செய்தி" என்றார்."நீங்கள் வந்த ஒரிசா ஆலயம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டு அங்கிருந்த 20 பிட்சுகளும் இறந்துவிட்டனர்" என்றார். "அடடா,,அந்தகோ" என போலியாக அனுதாபப்பட்டார் அரவிந்சாமி.சந்துரு சிரிப்பை அடக்க மிகவும் கஷ்டப்பட்டான். "உங்கள் அனைவரை பற்றிய விவரங்களும் அந்த ஆலயத்தில் ரெகார்டில் இருந்தன.அழிந்துவிட்டன.புதிதாக உங்கள் பயோடேட்டாவை மீட்டிங் முடிந்ததும் எழுதி கொடுங்கள்" என்றார் தலைமை பிட்சு. அடுத்த விஷயத்துக்கு போனார். "மனிதனுக்கு சேவை செய்வது இறைவனுக்கு சேவை செய்வது போன்றது என நம் வேதம் சொல்கிறது.இறைபூமியாம் கொரியாவில் கூடியுள்ள நீங்கள் முக்தி பெற வேண்டுமானால் முதலில் மக்கள் பணியில் ஈடுபடவேண்டும்.உதாரணத்துக்கு பள்ளிகுழந்தைகளுக்கு பாடம் சொல்லிதருதல்,சேரிகளை சுத்தம் செய்தல்,சுகாதார கல்வியை பரப்புதல் ஆகியவை.யார் யார் இதற்கு தயாராக இருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அனைவரும் கை உயர்த்தினர். ----------------------------- "அம்மா.." என அலறினான் அந்த கொரிய பெண்.வலிதாங்க முடியவில்லை.குடித்திருந்த மதுவையும் மீறி வலி விண்,விண் என உடல் எங்கும் ஊடுறுவியது. "பொறுத்துக்கொள்" என வேதனையுடன் சொன்னார் இளங்கோ.தன் வாழ்வில் அவர் செய்யும் முதல் சிசேரியன் ஆபரேஷன் அது.அந்த ஆஸ்பத்திரியில் எந்த மருந்தும் இல்லை.உயிர் போகும் நிலையிலிருந்த அந்த கர்பிணிப்பெண்ணுக்கு மயக்க மருந்து இல்லாததால் ஏராளமான மதுவை ஊற்றிக்கொடுத்து ஆபரேஷன் செய்தார். அவள் மீண்டும்,மீண்டும் அலறினாள். சந்துரு மதுபாட்டிலை எடுத்து அவள் வாயில் ஊற்றினான்.ஆனால் அவளால் வலியை கட்டுப்படுத்த முடியவில்லை.குழந்தை பிறந்து அதன் அழுகை கூட காதில் விழவில்லை.அதிர்ஷட்வசமாக வலியிலேயே மயக்கம் போட்டு விட்டாள். ஆபரேஷன் முடிந்து கண்ணீரோடு வெளியே வந்தான் சந்துரு.இந்த 3 மாதத்தில் இதுபோல் பல சம்பவங்களை பார்த்துவிட்டான்.மருந்து இல்லாமல்,எந்த உபகரணமும் இல்லாமல் அந்த மருத்துவமனையை அவனும் இளங்கோவும் அரவிந்சாமியும் நடத்திக் கொண்டிருந்தார்கள்.தினமும் கணக்கு வழக்கில்லாமல் நோயாளிகள் எலும்புக்கூடாய் வந்து நின்றார்கள். அவர்கள் பயோடேட்டாவில் மருத்துவமனை அட்டெண்டென்ட் என எழுதி கொடுக்கும்படி இளங்கோ ஆலோசனை சொல்லியிருந்தார்.அப்போதுதான் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்க முடியும் என்பது அவர் திட்டம்.அதே போல் தான் நடந்தது. "எனக்கு ஒன்றும் புரியவில்லை" என சொன்னார் இளங்கோ."இதற்கு மேல் மனநிறைவு தரும் மருத்துவ பணியை நான் என் வாழ்வில் எங்கும் செய்ததில்லை.மனிதனாய் பிறந்த முழு பயனையும் இந்த 3 மாதத்தில் அனுபவித்து விட்டேன்.இந்த ஊரில் தான் எத்தனை வறுமை,என்ன கொடுமை" என சொன்னார். "உணமைதான்.எனக்கும் இந்த மதத்தை பற்றி இப்போது மோசமாக நினைக்க தோன்றவில்லை.என் மனைவி மட்டும் திரும்ப கிடைத்தால் சாகும் வரை இதே மருத்துவமனையில் தங்கியிருந்து மக்கள் பணி செய்வேன்" என்றான் சந்துரு. "அட பாவிகளா.என் நிலைமை என்ன?" என கோபத்துடன் சொன்னார் அரவிந்சாமி."நான் தான் ஏதோ தப்பு கணக்கு போட்டு ஏமாந்துவிட்டேன் போலிருக்கிறது.என் மற்ற நண்பர்களிடமிருந்து வரும் தகவலின்படி அனைவரும் இதே போல் மக்கள் பணி தான் செய்கிறார்களாம்.நான் ஏதோ என்னை தலைமை பிட்சுவாக்குவார்கள் என கணக்கு போட்டால் இப்படி ஆயம்மா வேலை பார்க்க வைத்துவிட்டார்களே" என்றார். "இன்னும் எத்தனை மாதம் இப்படி வேலை செய்வது?நாம் வந்த வேலை என்ன ஆவது?" என்றான் சந்துரு. "என்ன செய்ய சொல்கிறாய்" என கேட்டார் அரவிந்சாமி. "என் மனைவியை தேட வேண்டும்.எப்படியாவது இந்த மதத்தின் பெரும்புள்ளி ஒருவரை கடத்தி வந்து நாலு மிதி வைத்தால் என் மனைவி இருக்குமிடத்தை சொல்லிவிடுவார்" என்றான் சந்துரு. "முழு கதையும் கெட்டுவிடும்.இது இந்தியா என நினைத்தாயா?இங்கு கார்,வேன் எதுவும் கிடையாது.சைக்கிளில் தான் கடத்த முடியும்.மேலும் தினமும் சாயந்திரம் நாம் இங்குள்ள மடத்துக்கு போக வேண்டும் என்பதை கவனித்தாயா?ஒரு நாள் போகவில்லை என்றாலும் செய்தி மேலிடத்துக்கு போய்விடலாம்." என்றார் அரவிந்சாமி. "நம் இருவருக்கும் காய்ச்சல் வந்து உடம்பு சரியில்லை என்றால் மடத்துக்கு போக வேண்டியதில்லை அல்லவா" என்றான் சந்துரு. "நீ அப்படி வருகிறாயா?சரி.ஆனால் கடத்த வாகனம் வேண்டுமே" என்றார் பிட்சு. "நீங்கள் தான் சொல்லி விட்டீர்களே.சைக்கிளில் கடத்தலாம் என்று.அதே போல் செய்வோம்" என்றான் சந்துரு. -- அன்று இரவில் யாங்யாங் நோக்கி இரு சைக்கிள்கள் விரைந்தன.100 மைல் தூரம் தான்.பதுங்கி பதுங்கி இரவில் தான் போக முடியும்.அடுத்த அத்யாயம் துவங்குவதற்குள் போய் சேர்ந்து விடுவார்கள் என நம்பலாம் (அவர்கள் யாங்யாங் போய் சேர்ந்தபின்.......தொடரும்)
Post a Comment