Saturday, January 21, 2006

வாரன் பப்பட்டின் பங்கு வர்த்தக வெற்றி வழிகள் - 4

அடுத்ததாக எம்மாதிரி கம்பனிகளின் பங்குகளை வாங்கலாம் என்பதை பற்றி பப்பட் என்ன சொல்லுகிறார் என பார்க்கலாம். 1.கம்பனிகளை நடத்துவோரின் பின்புலம் மிக நேர்மையுடையதாக இருக்கவேண்டும் 2.சந்தையில் நீண்டகாலமாக இருக்கும் கம்பனிகளின் பங்குகளை மட்டுமே வாங்கவேண்டும். 3.புதுகம்பனிகளின் பங்குகளை எக்காரணம் கொண்டும் வாங்குதல் கூடாது. 4.டெக்னாலஜி,தொழில் நுட்ப துறை பங்குகளை வாங்குதல் கூடாது.சாதாரண மனிதனுக்கு புரியக்கூடிய தொழில் நுட்பம் உள்ள கம்பனிகளின் பங்கையே வாங்க வேண்டும். விதி எண் 1 மிக முக்கியம் என்று பப்பட் கூறுகிறார்."நேர்மை" என்பதை எவ்விதத்திலும் பப்பட் விட்டுக்கொடுக்க மாட்டார்.ஏமாற்று,மோசடி வேலைகளில் ஒரு கம்பனி ஈடுபட்டதாக செய்திகள் வந்தால் பப்பட் அந்த கம்பனியை விட்டு காத தூரம் விலகிவிடுவார்."பங்கு வர்த்தகம் தொழில் போல்,கம்பனியை நடத்துவோர் பார்ட்னர் போல்" என்று பப்பட் அடிக்கடி சொல்லுவார்.பார்ட்னர் நேர்மையான மனிதனாக இருக்கவேண்டும் என நாம் விரும்புவோமா இல்லையா?பங்கு சந்தையில் மட்டும் ஏன் வேறு மாதிரி நினைக்கிறோம்?பத்திரிக்கைகளில் பெரிய,பெரிய கம்பனிகள் செய்த மோசடி வேலைகள் தினமும் வந்து கொண்டுதான் உள்ளன.அம்மாதிரி கம்பனிகளை பப்பட் அடியோடு தவிர்ப்பார்.நாம் செய்ய வேண்டியதும் அதைத்தான். பப்பட்டின் விதி 1 ஏற்கும் பண்டிதர்கள் அவரின் விதி 2,3,4 ஒத்துக்கொள்வதில்லை.பப்பட்டை "தொழில்நுட்ப பயம் கொண்டவர்"(Technophobe) என்றும் அவர்கள் சொல்லுவார்கள்.பப்பட் பில்கேட்ஸின் மிக நெருங்கிய நண்பர்.ஆனால் இதுவரை மைக்ரொசாப்டின் ஒரு பங்கை கூட அவர் வாங்கியதில்லை.ஏனேனில் அவர் தொழில்நுட்ப கம்பனிகளின் எந்த ஒரு பங்கையும் வாங்கமாட்டார். 90களில் கம்ப்யூட்டர் கம்பனி பங்குகள் கொடிகட்டி பறந்தன.பப்பட் அவற்றில் ஒரு பங்கை கூட வாங்கவில்லை.பப்பட்டின் இந்த நடவடிக்கையை பல பண்டிதர்கள் கிண்டலடித்தார்கள்.ஆனால் டெக்னாலஜி கம்பனிகள் 2000 ஆரம்பத்தில் பல பேரை ஒட்டாண்டியாக்கியதும் பப்பட்டை அவர்கள் "மகா ஞானி" என்று சொல்லத் துவங்கினார்கள்.பப்பட்டின் பாலிசி இந்த விஷயத்தில் மிக எளிதானது. "we dont buy anything which we dont understand" என அவர் எளிதாக சொல்லிவிட்டார். ஏன் டெக்னாலஜி பங்குகளை அவர் வாங்குவதில்லை?இப்போது நானோ டெக்னாலஜி,பையொடெக்னாலஜி என ஏதேதோ கம்பனிகள் வருகின்றன.இந்த துறைகளின் எதிர்காலம் என்ன என்று யாருக்குமே தெரியாது.இன்டெர்நெட் கம்பனிகளின் எதிர்காலம் என்ன என யாருக்கும் தெரியாது.பின்னொரு நாளில் கோடிகள் வரலாம்,ஆனால் இப்போது கையில் கிடைப்பது என்ன என்பதை தான் பப்பட் சிந்தித்தார்.இந்த பங்குகளை ஒதுக்கிவிட்டார். 90களில் அனைவரும் இன்டர்நெட்,பையொடெக் என பங்குகளை வாங்கிக்கொண்டிருக்க பப்பட் செங்கல் கம்பனி,மேஜை நாற்காலி செய்யும் கம்பனி என பங்குகளை வாங்கினார்.பப்பட்டை கிண்டலடித்த அனைவரும் இன்டெர்நெட் விழுந்த வேகத்தில் ரத்தகாயம் பட்டனர்.பப்படின் செங்கல் கம்பனி லாபத்தை அள்ளிக்குவித்தது.21 நூற்றாண்டிலும் செங்கல் தேவை என்பதை பப்பட் சரியாக புரிந்து வைத்திருந்தார். பப்பட் எதிர்பார்ப்பது அவர் வாங்கும் கம்பனி தொடர்ந்து லாபம் தரவேண்டும்.உலகில் அப்படி லாபம் தரும் துறைகள்,கம்பனிகள் பல உண்டு.அப்படி இருக்க எதிர்காலம் என்ன என்று தெரியாத, லாபம் எப்படி வரும்,எப்போது வரும் என யாருக்கும் புரியாத டெக்னாலஜி கம்பனிகளை ஏன் வாங்க வேண்டும் என்பது தான் பப்பட்டின் கேள்வி. "இப்படி போனால் தொழில்நுட்ப துறை எப்படி வளரும்" என பப்பட்டிடம் கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பப்பட் அழகாக விடைதந்தார்."தொழில்நுட்பத்துறைக்கு எனது வாழ்த்துக்கள்.அத்துறையை தூக்கி நிறுத்துவது எனது வேலையல்ல.எனது கவலை போட்ட காசு எதில் லாபம் சம்பாதிக்கும் என்பதுதான்.கோக்,ஜில்லெட் என இந்த பிரச்சனை இல்லாத கம்பனிகள்,வருடா வருடம் ஒழுங்காக லாபம் தரும் கம்பனிகள் பல உண்டு.நான் ஏன் மற்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்" என்று சொல்லிவிட்டார். ஆக பப்பட்டின் முறையில் டெக்னாலஜி கம்பனிகள் எதுவும் கிடையாது."இப்படி பங்கு வாங்கினால் சுவாரசியமே கிடையாதே" என பப்பட்டிடன் கேட்டார் ஒருவர்."சுவாரசியம் வேண்டுமானால் டிஸ்னிலாண்டிற்கு போங்கள்.பங்கு வர்த்தகத்துக்கு லாபம் சம்பாதிக்க மட்டுமே வாருங்கள்" என பப்பட் சொல்லிவிட்டார். எம்மாதிரி துறைகளில்,கம்பனிகளில் பப்பட் முதலீடு செய்ய சொல்கிறார்? (நாளை)

3 comments:

Unknown said...

Buffets approach will work in any place where people want to make money in stocks.when in works in techsavvy USA why not India?

நேர் வழி. said...

செல்வன்..
அப்படிப் பார்த்தால் இன்று இந்தியாவில் அதிக லாபப் தரும் பங்குகள் Infosys, TCS, RIL, wipro போன்ற தொழில் நுட்ப துறை பங்குகள் தானே...

கதிரவன்

Unknown said...

சத்யம்,
பப்பட் அன்று மட்டுமல்ல,இன்றும் தான் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்.ஆப்ஷன், டேட் ட்ரேடிங் ஆகியவற்றை அவர் முறையில் பயன்படுத்த இயலாது.அம்மாதிரி முறைகளில் பங்குசந்தையில் பெரும்பாலானோர் ஈடுபடுவது உண்டு.அவர்களை பப்பட் மிகவும் விமர்சனம் செய்வார்.அவர்களும் அவரை விமர்சனம் செய்வார்கள்.ஆனால் அவர்களால் பப்பட் போல் வெல்ல முடிந்ததில்லை.

இதுபற்றி பப்பட் என்ன சொல்கிறார் என்பதை இத்தொடர் முடிந்ததும் விரிவாக எழுதுகிறேன்.

கதிரவன்

இந்தியாவில் இன்போசிஸ்,விப்ரோ லாபம் தருபவை தான்.அமெரிக்காவிலும் மைக்ரோசாப்ட்,இன்டெல் ஆகியவை லாபம் தரும் பங்குகள்.ஆனால் பப்பட் அவற்றின் பக்கம் போக மாட்டார்.

இன்னும் 10,15 வருடங்கள் கழித்து இத்துறை எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.என்ன புது டெக்னாலஜி வந்து இவற்றை பாதிக்கும் என்பது யாருக்கும் தெரியாது.தற்போது இவை ஓடும் குதிரைகள்.அவ்வளவுதான்.ஆனால் பப்பட் நீண்டகால வெற்றிக்கு தான் குறிவைப்பார்.

இப்பங்குகளை வாங்க வேண்டாம் என்று சொல்லவில்லை.பப்பட் இவற்றை வாங்க மாட்டார் என்று தான் சொல்கிறேன்.