சாராங்கதாரா என ஒரு படம். சிவாஜி, பானுமதி நடிப்பில் 1958ல் வெளியானது. நாடக்கலையின் தந்தையான சங்கரதாஸ் சாமி எழுதிய நாடகம். ஆந்திராவில் வெங்கியை ஆண்ட ராஜராஜ சோழனின் கொள்ளுபேரன் ராஜராஜ நரேந்திரனின் கதையாம்.
சாரங்கதாரா கதை துயரம் மிகுந்தது. மன்னன் ராஜராஜ நரேந்திரன் (ராஜேந்திர சோழன் மகள் குந்தவையின் மகன்) வெங்கியை ஆன்டுவருகிறான். அவனது மகன் சாரங்கதாரன்.
சாரங்கதாரனுக்கு பெண் தர விருப்பபட்டு சித்ராங்கி எனும் இளவரசியின் ஓவியத்தை அவளது பெற்றோர் அனுப்பி வைக்கிறார்கள். ஓவியத்தை கண்ட வயதான மன்னன் நரேந்திரன் காதலில் விழுகிறான். அதன்பின் மந்திரியின் சதிதிட்டத்தின் பேரில் தன் உடைவாளை அனுப்பி அதற்கு மாலையிட சொல்கிறான். சாரங்கதாரனுக்கு கல்யானம் செய்து வைப்பதாக நினைத்து சித்ராங்கியின் பெற்றோர் அவளை அந்த உடைவாளுக்கு மாலையிட சொல்ல, அவள் அதற்கு மாலையிட்டு விடுகிறாள். அக்காலத்தில் ஒருவனுடைய உடைவாளுக்கு மாலையிடுவது அவனையே திருமணம் செய்வது போல என்பதால் சித்ராங்கி ராஜராஜ நரேந்திரனின் மனைவி ஆகிவிடுகிறாள்.
அரண்மனைக்கு வந்த சித்ராங்கியால் அழுது புலம்ப மட்டுமே முடிகிறது. அதன்பின் சாரங்கதாரனை கண்டு தான் ஏமாற்றபட்டதை சொல்லி அவன் மேல் உள்ள காதலை சொல்கிறாள். அவன் அவளை தாயாக நினைப்பதாக சொல்லி அவளை தவிர்க்கிறான்
கோபமடைந்த சித்ராங்கி சாரங்கதாரனை வழிக்கு கொண்டுவர அவன் தன்னை காதலிப்பதாக கதை கட்ட, அது மன்னன் காதுகளுக்கு போகிறது. கோபமடைந்த மன்னன் நரேந்திரன் மகனை மாறுகை, மாறுகால் வாங்க உத்தரவிடுகிறான். கொலைகளத்தில் சாரங்கதாரனுக்கு மாறுகை, மாறுகால் வாங்கப்பட, சித்ராங்கி தீப்பாய்ந்து உயிரை விடுகிறாள்
இதுதான் ஒரிஜினல் கதை
நாடகமாக பெருவெற்றி அடைந்த இக்கதையை இந்தி, தமிழ் இரண்டிலும் 1938ல் தயாரித்தார்கள். தமிழில் சாரங்கதாரனாக நடித்தவர் அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.டி பாகவதர். தமிழை முந்திக்கொண்டு இந்திப்படம் வெளியாகி படுதோல்வியை தழுவியது. என்ன காரணம் என பார்த்தால் சோகமான முடிவு மக்களுக்கு பிடிக்கவில்லை என தெரிந்தது. அதன்பின் எடுத்த படத்தின் கிளைமேக்ஸை மாற்றி ஷூட் செய்து தமிழில் "நவீன சாரங்கதாரா" என பெயர் மாற்றம் செய்து மாறுகை, மாறுகால் வாங்கபட்ட சாரங்கதாரனை ஒரு பவுத்த துறவி மீண்டும் நலம்பெற செய்வதுபோலவும், மன்னன் மனம் திருந்தி சாரங்கதாரனுக்கும், சித்ராங்கிக்கும் கல்யானம் செய்து வைப்பது போலவும் படம் எடுக்க படம் சூப்பர் ஹிட்
இதை 1958ல் சிவாஜி, பானுமதியை வைத்து ரிமேக் செய்தார்கள். சிவாஜி தான் சாரங்கதாரன். பானுமதி சித்ராங்கி. 1958ல் கதையில் அக்கால மரபுகளுக்கு ஏற்ப ஒரு மாற்றம். சிவாஜி இறுதியில் உயிர்பிழைக்கிறார். தந்தை நரேந்திரன் (நம்பியார்) கொல்லாப்டுகிறார். பானுமதி சிவாஜி மடியில் படுத்தபடி உயிர்விடுகிறார். அவரது கடைசி ஆசை "சாரங்கதாரன் கையால் தனக்கு ஈமக்கடன் நடக்கவேண்டும்" என்பது. சளைக்காத சிவாஜியும் "தாய்க்கு மகன் செய்யவேண்டிய இறுதிகடனை நிறைவேற்றுவேன்" என சொல்ல "ச்சை," என சலித்தபடி பானுமதி உயிர்விடுகிறார்
முட்டாள்தனமான மரபுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிரான பெண்ணியத்தின் குரலாகவே அந்த சலிப்பு என் மனதை தாக்கியது. இது சித்ராங்கியின் கதைதானே? ஏன் இதற்கு சாரங்கதாரன் என தொடர்பின்றி அவன் பெயர்? விருப்பமில்லா திருமணத்தில் மாட்டிக்கொண்ட அவள் தானறிந்தவரை அதற்கு எதிராக புரட்சி செய்து இறுதியில் தன் உயிரையே பலிகொடுத்தாள். சாரங்கதாரன் செய்ததெல்லாம் தவறான மரபுகளின் காவலனாக நின்றதும், தந்தையின் தவறுகளுக்கு எதிராக குரலேதும் கொடுக்காமல் இருந்ததுமே.
பழைய வரலாறுகள் காட்டும் தவறுகளின் படிப்பினையில் இருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் நிறைய.