Thursday, July 29, 2010

445.ஆயிஷாவின் மூக்கு

ஆயிஷா ஆப்கனில் வசித்து வந்த 18 வயது இளம்பெண்.ஆப்கன் வழக்கபடி சிறுவயதிலேயே திருமணமாகிவிட்டது.கணவன் வீட்டார் கொடுமைபடுத்தியதால் ஆயிஷா கணவன் வீட்டை விட்டு தப்பி ஓடினார்.ஆனால் பிடிபட்டுவிட்டார்.ஒரு பெண் வீட்டை விட்டு ஓடுவதா என்ற கோபமும், குடும்ப மானம் பறிபோனதே என்ற இன்னொரு கோபமும் சேர தலிபான் பிடியில் இருக்கும் கிராமம் என்பதால் ஆயிஷா தலிபான்கள் முன் விசாரணைக்கு நிறுத்தபட்டார்.

தலிபான் தீர்ப்பும் வந்தது...ஆயிஷாவின் மூக்கையும், காதையும் அறுக்கவேண்டுமென்று.ஆயிஷா கதற,கதற கேட்காமல் கணவன் வீட்டார் அவரை பிடித்துகொள்ள ஆயிஷாவின் கணவன் கத்தியை எடுத்தான்.....மூக்கை அறுத்தான்,காதையும் அறுத்தான்....

ஓடுகாலி தண்டிக்கபட்டாள்..கலாசாரம் காப்பாற்றபட்டது.

ஆயிஷாவை கிராஸ்மன் பர்ன் பவுண்டேஷன் எனும் நிறுவனம் சிகிச்சையளித்து பாதுகாத்துகொண்டிருக்கிறது.டைம் பத்திரிக்கையில் ஆயிஷாவின் புகைப்படம் வெளிவந்தவுடன் பலரும் அதிர்ந்து கண்டனகுரல் எழுப்பிகொண்டிருக்கிறார்கள்.

ஆயிஷாக்களை தொடர்ந்து உருவாக்கும் ஆணாதிக்கத்தை வேரடி மண்ணோடு அழித்து ஒழிப்பதே அவருக்கு நாம் அளிக்ககூடிய சிறந்த ஆறுதலாக இருக்கமுடியும்.

Saturday, July 17, 2010

The naked Prey (1966)

1966ல் வெளிவந்த பீரியட் படம். அடிமை முறை நிலவிய 1866 காலகட்டத்தில் நடந்ததாக கூறப்படும் கதை. ஆப்பிரிக்க கண்டத்துக்கு காலனி ஆதிக்கத்தின் பொருட்டு செல்லும் வெள்ளையர் ஒருவரின் கதை.இப்போது இந்த படம் எடுக்கப்பட்டிருந்தால் பலத்த சர்ச்சையில் சிக்கியிருக்குமோ என்னவோ?

ஆபிரிக்க யானைகளை கொன்று தந்தத்தை எடுக்க வெள்ளையர் குழு ஒன்று தென்னாப்பிரிக்காவுக்கு செல்கிறது.போன இடத்தில் ஒரு ஆதிவாசிகள் குழுவை விவரம் தெரியாத வெள்ளையர் ஒருவர் அவமதிக்கிறார்.கோபமடைந்த ஆதிவாசிகள் படை எடுத்து குழு உறுப்பினர்கள் அனைவரையும் வித விதமாக சித்திரவதை செய்து கொல்கின்றனர்.கடைசியாக கதைநாயகன் கார்னல் வைல்ட் (இயக்குனரும், ஹீரோவும் இவர்தான்) மட்டுமே எஞிசியிருக்கிறார்.ஒரு மாற்றத்துக்கு இவரை வேட்டையாடி கொல்வதென்று முடிவெடுத்து இவரை நிர்வாணமாக்கி ஓடவிட்டு துரத்துகின்றனர்.

வைல்டை கொல்லவரும் ஒருவனை வைல்ட் எதேச்சையாக கொன்றுவிடுகிறார்.ஆவேசமடைந்த ஆதிவாசி இளைஞர்கள் வெறியுடன் இவரை துரத்துகின்றனர்.ஓட்டம் ஆரம்பிக்கிறது.

அடுத்த ஒரு மணிநேரம் முழுக்க ஓட்டம்தான்.வேட்டையாடிடியே பழக்கப்பட்ட ஆதிவாசிகள் வைஒல்ட் விட்டுபோன தடையங்களை வைத்து அவரை பின் தொடர்கின்றனர்.அவ்வப்போது வைல்டை பிடிக்க முனைகையில் அவர் இவர்களை கொல்கிறார்.தான் கொன்றவர்களிடமிருந்து ஆயுதங்களையும், உடையையும், செருப்பையும் எடுத்து அணிகிறார்.பல நாட்கள் ஓடி இறுதியில் தனது கோட்டையை அடைகிறார்.துரத்திவந்த ஆதிவாசி இளைஞர்கள் குழு தலைவன் அவருக்கு கையசைத்து விடை கொடுக்கிறான்.."உன் திறமையை நான் அங்கீகரிக்கிறேன்" என்பது போல..வைல்டும் கையசைக்கிறார்.

படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்ப்ட்ட படம்.மிக சிறப்பான காட்சியமைப்புக்களை கொண்டது.படத்தில் வரும் ஆங்கில வசனங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.சொல்லப்போனால் படத்தில் ஆங்கிலத்தை விட ஸ்வாஹிலி மொழி தான் அதிகம் பேசப்படுகிறது (துரத்தி வரும் இளைஞர்கள் பேசுவது)..அதை மொழிபெயர்க்காமல் அப்படியே விட்டது படத்தின் இயல்புத்தன்மையை மேம்படுத்துகிறது.துரத்தி வருபவர்கள் வைல்டை பிடிக்க கையாளும் உத்திகள் நன்றாக இருக்கின்றன.வைல்டும் அதிலிருந்து தப்ப பல உத்திகளை கையாள்கிறார்.

நல்லதொரு பீரியட் ஆக்ஷன் படம் பார்க்கவேண்டும் என நினைப்பவர்கள் இந்த படத்தை கட்டாயம் ரசிப்பார்கள்.

Wednesday, July 07, 2010

443.சந்தோஷ் சுப்பிரமணியம் : ஆன்மாவை தொலைத்த தமிழக இளைஞன்

கொஞ்ச நாளா பழைய தமிழ் படங்களாக தேடி, தேடி பார்த்துக்கொண்டிருந்தேன். அதன்பிறகு நண்பர்கள் ரெகமெண்ட் செய்த புதுபடங்கள் சிலவற்றை பார்த்தேன். அதில் ஒன்று சந்தோஷ் சுப்பிரமணியம்.

சினிமாவை வைத்து ஒரு சமூகத்தை எடைபோடுவது தவறுதான் என்றாலும் முந்தையகால தாலி சென்டிமெண்ட் சினிமாக்களுடன் ஒப்பிடும்போது தற்கால தமிழ் சினிமாவில் வரும் தமிழ் சமூகம் எந்த விதத்திலும் முன்னேறவில்லை என்று தான் சொல்லவேண்டும்.இது எனக்கு ஒரு விதத்தில் ஏமாற்றத்தையே அளித்தது.நல்ல கதையம்சத்துடன் இருப்பதாக சொல்லப்படும் இத்தகைய படங்களை விட பார்முலா மசாலா தமிழ்படங்களே பரவாயில்லை என்ற என் கருத்து இந்த படத்தை பார்த்தவுடன் மேலும் வலுப்பட்டது.

சந்தோஷ் சுப்பிரமணியம் நல்ல படம் என்பதை குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.காட்சியமைப்பும், பாத்திர அமைப்பும், திரைக்கதையும், நகைச்சுவையும் அழகாக பொருந்திய படம் இது.படம் வெற்றிப்படமாக அமைந்திருக்கலாம் என்று தான் நினைக்கிறேன்.

ஜெயம் ரவி, ஜெனீலியா காதல் டேட்டிங்கில் துவங்கி காதலாக மாறியதும் மிக்க சந்தோஷப்பட்டேன். பஸ் முழுக்க இருக்கும் ஜெனீலியாவின் தோழிகள் "ஐ லவ் யூ" சொல்லும் நாடகபாணி காதலை கூட அதனால் மன்னித்தும் விட்டேன்.இந்த டேட்டிங் நட்பு காதலாக மாறுவது மிக இயல்பாகவும், அழகாகவும் சொல்லப்பட்டிருக்கிறது..

ஜெனிலியா நகர்புற கல்லூரிப்பெண்ணின் பாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார். வீட்டில் இருக்கும் வறுமை உடையில்,செய்யும் செலவில் தெரிவதில்லை.ஆனால் அது ஓக்கே..தகப்பனின் செல்ல மகள்..கஷ்டம் தெரியாமல் வளர்த்திருக்கலாம்.."என் கூட நீ காபி சாப்பிட வரலைன்னா இன்னொருத்தனுடன் டேட்டிங் போவேன்" என்று ஜெனிலியா சொல்லும்போது 'ஒருவனுக்கு ஒருத்தி" கலாசாரத்தில் ஏற்பட்ட அந்த கீறலை எண்ணி எனக்கு மனம் முழுக்க நிலைகொள்ளாத ஆனந்தம்.

தமிழ்பெண் திருந்திவிட்டாள் என மகிழும்போது என் ஆசையில் மண்ணை வாரிப்போட்டார் இயக்குனர், இத்தனை முற்போகான, யதார்த்தமான பெண்ணை கூட்டுகுடும்பத்தில் தள்ளி காதலனின் பெற்றோரையும், நாத்தனார் கோஷ்டிகளையும் திருப்திபடுத்தவேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளியபோது எனக்குள் பலத்த வருத்தம் மனதில் பரவியது.ஆனால் இதுதானே நம் சமூகத்தில் நிலவும் யதார்த்தம்? என்ன தான் புரட்சிப்பெண் என்றாலும் ஆண்வழி குடும்பத்தில் தானே வாழ்க்கைப்பட்டு தொலையவேண்டி இருக்கிறது?

"நீ நான் காதலித்த சந்தோஷ் இல்லை" என்று வெளியேறும் ஜெனிலியா அதன்பின் அப்பனிடம் திரும்பிப்போய் 'நீ பார்க்கும் மாப்பிள்ளையை கட்டிக்கொள்கிறேன்" என்பது அந்த பெண்ணின் தோல்வியாகத்தான் பட்டது.அதன்பின் காதலனின் தனதை மனமாறி தன் மகனை ஜெனிலியாவின் வீட்டுக்கு ஒரு வாரம் தங்கி இருக்க அனுப்பி பெண்ணின் தகப்பன் மனதை மாற்ற முயல்வதெல்லாம் அந்த தோல்வியை வெற்றியாக மாற்றியதாக தெரியவில்லை.

மொத்தத்தில் சந்தோஷ் சுப்பிரமணியனின் காதல் தாய்,தந்தை அனுமதிக்கும் பாதையில் தான் பயணிக்கிறது.தான் காதலித்த பெண்ணை தன் தாய் தந்தை,தமக்கை ஏற்க வேண்டுமென விரும்பி மன்றாடுகிறது.காதலியை மருமகளாக மாற்றும் துர்பாக்கிய முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் அடைகிறது.

இது நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை விட கேவலமான நிச்சயிக்கப்பட்ட காதல்.எட்டி உதைத்தெறியவேண்டிய மருமகள் பட்டத்தை போராடி அடைவதுவே ஜெனிலியாவின் காதலின் லட்சியமாக மாறிவிடுகிறது.அந்த குடும்பத்தில் உலாவும் மருமகள்கள் பட்டியலில் மேலும் ஒருத்தி புதிதாக சேர்ந்துவிடுகிறாள்,காய் அறுக்க மேலும் ஒருத்தி கிடைத்தாள் என்பதைத்தவிர இந்த காதலில் வேறு ஒரு புண்னககும் இல்லை.

நடைபிணங்களை உருவாக்கும் நம் சமூக அமைப்பு மேலும் ஒரு சிட்டுகுருவி நடைபிணமாக ஆகும் process சித்தரித்த படமே சந்தோஷ் சுப்பிரமணியம்.