Sunday, September 19, 2010

449.கூகிள் அரசு நிறுவனமானது

கூகிளை தேசியமயமாக்குவதாக மத்திய அரசு அறிவித்தது.கூகிளின் தலைவராக சசிநாத் திவாரி ஐ.ஏ.எஸ்ஸை அரசு நியமித்தது.மின்னஞ்சல்துறை அமைச்சகம் உருவாக்கபட்டு அதன் மந்திரியாக சரத்பவார் பொறுப்பேற்றார்.

மின்னஞ்சல் முகவரியை பெற விரும்புகிறவர்கள் மாவட்ட கலெக்டருக்கு போதுமான ஆவணங்களுடன் மனு போட்டால் மூன்று வாரங்களுக்குள் மின்னஞ்சல் முகவரி கிடைக்கும் என சரத்பவார் நம்பிக்கை தெரிவித்தார்.மின்னஞ்சல் விண்ணப்ப கட்டணத்தில் ஏழைகளுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் 50% தள்ளுபடி செய்யபடும் எனவும் அமைச்சர் கூறினார்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்துக்கு ஒரு மின்னஞ்சல் முகவரியை இலவசமாக அளிப்போம் என செல்வி ஜெயலலிதா உறுதியளித்தார்.திமுக ஆட்சிக்கு வந்தால் தலைக்கு ஒரு மின்னஞ்சல் இலவசம் என கருணாநிதி உறுதியளித்தார்.

ஒவ்வொரு எம்பிக்கும் வருடத்துக்கு ஆயிரம் மின்னஞ்சல் முகவரிகளை கோட்ட முறையில் ஒதுக்க அரசு முடிவெடுத்தது.எம்.பியின் சிபாரிசு கடிதம் இருந்தால் உடனே மின்னஞ்சல் முகவரி ஒதுக்கபடும் எனவும் தெரிவிக்கபட்டது.சிபாரிசு கடிதத்துக்கு எம்.பிக்கள் எட்டாயிரம் வாங்குகிறார்கள் என்ற குற்றசாட்டை நிராகரித்த மத்திய அமைச்சர் "இது போன்ற குற்றசாட்டுக்களை மக்கள் நிராகரித்துவிட்டார்கள்" எனவும் "காங்கிரஸ் அரசின் மேலும்,அன்னை சோனியாகாந்தி மேலும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இதுபோன்ற ஆதாரபூர்வமற்ற குற்றசாட்டுக்களால் குலைக்க முடியாது" எனவும் தெரிவித்தார்.

ஜிமெயில் என்பதன் பெயரை "ராஜிவ்காந்தி உத்யோக் சம்மான்" என மாற்ற முடிவெடித்திருப்பதாக மத்திய அரசு அறிவித்தது.இந்தி பெயரில் ஜிமெயில் இருந்தால் புறக்கணிப்போம் என தமிழ்நாட்டு கட்சிகள் போர்க்குரல் எழுப்ப பாராளுமன்றம் ஸ்தம்பித்தது.அவை நடவடிக்கைகளை வேதனையுடன் பார்த்த சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி "மக்கள் உங்களை பார்த்து சிரிக்கிரார்கள்" என வேதனையுடன் கூறி சபையை ஒத்தி வைத்தார்.தொலைகாட்சிகளில் இந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒளிபரப்பாவதை கண்ட தமிழக இளைஞர்கள் பத்துபேர் "இந்தி ஒழிக, தமிழ் வாழ்க" என முழங்கியபடி தீகுளித்தனர் மீண்டும் சபை கூடியதும் தமிழ்நாட்டில் ஜிமெயில் நிறுவனம் "அண்ணா மின்னஞ்சல் கழகம்" என்ற பெயரில் அழைக்கபடும் என சரத்பவார் அறிவிக்க இயல்புநிலை திரும்பியது.

அண்னா மின்னஞ்சல் கழகம் என்ற பெயரில் தமிழில் மின்னஞ்சல் அனுப்பும் வசதியை பெற்றுதந்ததை கொண்டாட திமுக அரசு உலக மின்னஞ்சல் மாநாட்டை நெல்லையில் கொண்டாடவிருப்பதாக அறிவித்தது.இதற்கு முழுமுதற்காரணமும் அதிமுக எம்பிக்கள் சபையில் நடத்திய போராட்டமே என்பதை குறிப்பிட்ட செல்வி ஜெயலலிதா இலங்கைதமிழர் கொன்று குவிக்கப்பட்டு ஈராண்டுகள் கூட நிறைவடையாத நிலையில் இத்தகைய விழா அவசியமா என அறிக்கை விடுத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள நாலுகோடி மின்னஞ்சல் முகவரிகளில் வெறும் பத்துலட்சம் மின்னஞ்சல் முகவரிகள் மட்டுமே வன்னியருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை வேதனையுடன் சுட்டிகாட்டிய பாமக நிறுவனர் ராமதாஸ் "வன்னியர் மின்னஞ்சல் அன்னியருக்கில்லை" என்ற புரட்சிகர திட்டத்தை அறிவித்தார்.சென்னையிலுருந்து டெல்லி செல்லும் மின்னஞ்சல் அனைத்தும் சேலம் வழியாக செல்லவேண்டும் என முழங்கிய ராமதாஸ் "ஒன்று இந்த கோரிக்கைகளை நிறைவேற்று அல்லது சட்டசபை தேர்தலில் ஐம்பது சீட்டு ஒதுக்கு.இரண்டில் எது என நீயே முடிவு செய்துகொள்.அல்லது மக்கள் முடிவு செய்வார்கள்" என கர்ச்சித்தார்.

அடுத்ததாக பேஸ்புக்கையும், லிஙிட் இன்னையும் தேசியமயமாக்கி இதேபோல் சமூகநீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்டவேண்டும் என கம்யூனிஸ்டு கட்சிகள் கோரிக்கை எழுப்பியபடி டில்லி ராம்லீலா மைதனாத்தில் மாபெரும் பேரணி நடத்தினர்

0 comments: