மற்ற நடிகர்களை விட இவர்களுக்கு ரஜினி மேல் கோபம் இருக்க காரணமே ரஜினி மற்றவர்களை விட அதிகம் வெற்றி அடைவதுதான்.ரஜினி படங்கள் இவர்களை பொறுத்தவரை குப்பை.அதில் என்ன இருக்கு என இந்த நாசமாய் போன சனம் விழுந்து, விழுந்து பார்த்து தொலைக்கிறது, ஐநூறு நாட்களுக்கு படம் ஓடுகிறது என்பது மக்களிடமிருந்து அன்னியப்பட்ட இவர்களுக்கு புரிவதே இல்லை....
இந்த மேதாவி வர்க்கத்துக்கு தமிழக மக்கள் நியாண்டர்தால்கள், திருத்தி மாற்றபடவேண்டிய ஜென்மங்கள், காட்டுமிராண்டிகள் என்ற எண்ணம் உண்டு.ரஜினி என்ற காட்டுமிராண்டியின் படம் இந்த காட்டுமிராண்டி மக்கள் கூட்டத்தின் மத்தியில் அடையும் வெற்றியும், அதன் விளைவாக வரும் கோடிகணகான பணமும் ரஜினி, ஏ.வி.எம் போன்ற சில பூர்ஷ்வாக்களின் கல்லாவை மட்டுமே நிரப்ப பயன்படுகிறது என்ற கோபம் இவர்களுக்கு உண்டு.
ரஜினியின் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை "கெடுக்கிறது" என இன்னொரு கோபமும் இவர்களுக்கு உண்டு.எம்.ஜி.ஆர், சிவாஜி ஆதிக்கம் ஒழிந்து உதிரிபூக்கள் மாதிரி நல்ல படங்கள் வந்த சூழலில் முரட்டுகாளை வந்து தமிழ் சினிமாவின் டிரெண்டையே புரட்டிபோட்டது என வருத்தப்படுவார்கள்..மக்கள் விரும்பும் என்டெர்டெயின்மென்ட்டை கொடுப்பது மதுவை ஊற்றிகொடுப்பதுக்கு சமம்தானே?இந்த நியாண்டர்தால்களுக்கு பிடித்த மாதிரி சினிமாவை தயாரிப்பாளர்கள் எப்படி எடுக்கலாம்?மேதாவிகளுக்கு பிடித்த மெஸேஜ் சினிமாக்களை தானே எடுக்கவேண்டும்? கேரள திரைபடதுறையை பாருங்கள்..அங்கிருந்து எத்தனை "நல்ல படங்கள்" வருகின்றன?அந்த மாதிரி தமிழில் வராமல் இருக்க காரணம் ரஜினிதானே?இரானிய படங்களை பாருங்கள்..இந்த மாதிரி நல்லபடம் தமிழில் வராமல் இருக்க காரணம் ரஜினிதானே? இப்படி மக்களை மடையர்களாக்கி, அவர்களின் ரசனையை குட்டிசுவராக்கி திரைப்படத்தை மக்கள் நலனுக்கு (அதாவது பிரச்சார பீரங்கியாக) பயன்படுத்தாமல் வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமே பயன்படுத்தும் ரஜினி மேல் தமிழக மக்களை நல்வழிப்படுத்தி ரட்சிக்க வந்த அறிவுஜீவி வர்க்கத்துக்கு கோபம் இருப்பது இயற்கைதானே? அதுபோக ரஜினி ஒரு இன்டெலெக்சுவலும் கிடையாது....அவரது வாழ்க்கையில், பேச்சில், செயலில் எந்த முற்போக்கும் இல்லை.தமிழக நியாண்டர்தால்களை போல அவர் தானுண்டு தன் பிழைப்பு உண்டு என இருக்கிறாரே ஒழிய கியூபா, வியட்னாம்,இராக், தண்டகாரண்யம் மாதிரி பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் எதுவும் கொடுக்க காணோம், கடைசிக்கு "முற்போக்கு"வாதம் கூட அவர் படங்களில் பேசப்படுவதில்லை. கமலை போல் ஆஸ்கார் வாங்கவேண்டும் என்ற எண்ணம் ரஜினிக்கு இல்லை, சுருக்கமாக சொன்னால் ரஜினி ஒரு சுயநலவாதி,பிழைப்புவாதி...நுகர்வு கலாசாரத்தை ஊக்குவிக்கும் பிற்போக்குவாதி
இப்படி நியாண்டர்தால்கள் மத்தியில் நியாண்டர்தாலாக வழும் ரஜினியை மேதாவிகளுக்கு பிடிக்காமல் போனதில் ஆச்சரியமே இல்லை.பிடித்தால் தான் ஆச்சரியம்.
0 comments:
Post a Comment