Wednesday, July 07, 2010

443.சந்தோஷ் சுப்பிரமணியம் : ஆன்மாவை தொலைத்த தமிழக இளைஞன்

கொஞ்ச நாளா பழைய தமிழ் படங்களாக தேடி, தேடி பார்த்துக்கொண்டிருந்தேன். அதன்பிறகு நண்பர்கள் ரெகமெண்ட் செய்த புதுபடங்கள் சிலவற்றை பார்த்தேன். அதில் ஒன்று சந்தோஷ் சுப்பிரமணியம்.

சினிமாவை வைத்து ஒரு சமூகத்தை எடைபோடுவது தவறுதான் என்றாலும் முந்தையகால தாலி சென்டிமெண்ட் சினிமாக்களுடன் ஒப்பிடும்போது தற்கால தமிழ் சினிமாவில் வரும் தமிழ் சமூகம் எந்த விதத்திலும் முன்னேறவில்லை என்று தான் சொல்லவேண்டும்.இது எனக்கு ஒரு விதத்தில் ஏமாற்றத்தையே அளித்தது.நல்ல கதையம்சத்துடன் இருப்பதாக சொல்லப்படும் இத்தகைய படங்களை விட பார்முலா மசாலா தமிழ்படங்களே பரவாயில்லை என்ற என் கருத்து இந்த படத்தை பார்த்தவுடன் மேலும் வலுப்பட்டது.

சந்தோஷ் சுப்பிரமணியம் நல்ல படம் என்பதை குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.காட்சியமைப்பும், பாத்திர அமைப்பும், திரைக்கதையும், நகைச்சுவையும் அழகாக பொருந்திய படம் இது.படம் வெற்றிப்படமாக அமைந்திருக்கலாம் என்று தான் நினைக்கிறேன்.

ஜெயம் ரவி, ஜெனீலியா காதல் டேட்டிங்கில் துவங்கி காதலாக மாறியதும் மிக்க சந்தோஷப்பட்டேன். பஸ் முழுக்க இருக்கும் ஜெனீலியாவின் தோழிகள் "ஐ லவ் யூ" சொல்லும் நாடகபாணி காதலை கூட அதனால் மன்னித்தும் விட்டேன்.இந்த டேட்டிங் நட்பு காதலாக மாறுவது மிக இயல்பாகவும், அழகாகவும் சொல்லப்பட்டிருக்கிறது..

ஜெனிலியா நகர்புற கல்லூரிப்பெண்ணின் பாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார். வீட்டில் இருக்கும் வறுமை உடையில்,செய்யும் செலவில் தெரிவதில்லை.ஆனால் அது ஓக்கே..தகப்பனின் செல்ல மகள்..கஷ்டம் தெரியாமல் வளர்த்திருக்கலாம்.."என் கூட நீ காபி சாப்பிட வரலைன்னா இன்னொருத்தனுடன் டேட்டிங் போவேன்" என்று ஜெனிலியா சொல்லும்போது 'ஒருவனுக்கு ஒருத்தி" கலாசாரத்தில் ஏற்பட்ட அந்த கீறலை எண்ணி எனக்கு மனம் முழுக்க நிலைகொள்ளாத ஆனந்தம்.

தமிழ்பெண் திருந்திவிட்டாள் என மகிழும்போது என் ஆசையில் மண்ணை வாரிப்போட்டார் இயக்குனர், இத்தனை முற்போகான, யதார்த்தமான பெண்ணை கூட்டுகுடும்பத்தில் தள்ளி காதலனின் பெற்றோரையும், நாத்தனார் கோஷ்டிகளையும் திருப்திபடுத்தவேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளியபோது எனக்குள் பலத்த வருத்தம் மனதில் பரவியது.ஆனால் இதுதானே நம் சமூகத்தில் நிலவும் யதார்த்தம்? என்ன தான் புரட்சிப்பெண் என்றாலும் ஆண்வழி குடும்பத்தில் தானே வாழ்க்கைப்பட்டு தொலையவேண்டி இருக்கிறது?

"நீ நான் காதலித்த சந்தோஷ் இல்லை" என்று வெளியேறும் ஜெனிலியா அதன்பின் அப்பனிடம் திரும்பிப்போய் 'நீ பார்க்கும் மாப்பிள்ளையை கட்டிக்கொள்கிறேன்" என்பது அந்த பெண்ணின் தோல்வியாகத்தான் பட்டது.அதன்பின் காதலனின் தனதை மனமாறி தன் மகனை ஜெனிலியாவின் வீட்டுக்கு ஒரு வாரம் தங்கி இருக்க அனுப்பி பெண்ணின் தகப்பன் மனதை மாற்ற முயல்வதெல்லாம் அந்த தோல்வியை வெற்றியாக மாற்றியதாக தெரியவில்லை.

மொத்தத்தில் சந்தோஷ் சுப்பிரமணியனின் காதல் தாய்,தந்தை அனுமதிக்கும் பாதையில் தான் பயணிக்கிறது.தான் காதலித்த பெண்ணை தன் தாய் தந்தை,தமக்கை ஏற்க வேண்டுமென விரும்பி மன்றாடுகிறது.காதலியை மருமகளாக மாற்றும் துர்பாக்கிய முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் அடைகிறது.

இது நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை விட கேவலமான நிச்சயிக்கப்பட்ட காதல்.எட்டி உதைத்தெறியவேண்டிய மருமகள் பட்டத்தை போராடி அடைவதுவே ஜெனிலியாவின் காதலின் லட்சியமாக மாறிவிடுகிறது.அந்த குடும்பத்தில் உலாவும் மருமகள்கள் பட்டியலில் மேலும் ஒருத்தி புதிதாக சேர்ந்துவிடுகிறாள்,காய் அறுக்க மேலும் ஒருத்தி கிடைத்தாள் என்பதைத்தவிர இந்த காதலில் வேறு ஒரு புண்னககும் இல்லை.

நடைபிணங்களை உருவாக்கும் நம் சமூக அமைப்பு மேலும் ஒரு சிட்டுகுருவி நடைபிணமாக ஆகும் process சித்தரித்த படமே சந்தோஷ் சுப்பிரமணியம்.

0 comments: