"இந்த வயசுல என்னன்னு அண்ணி பொண்ணு பாக்கறது" டில்லி சலித்துகொண்டே வந்தார்.
"உங்களை பார்த்தா 42 வயசுன்னு யாராவது சொல்ல முடியுமா தம்பி?வயசை எல்லாம் பத்தி கவலைபடாதீங்க.நான் எல்லா விவரமும் சொல்லிட்டேன்.போனமா, பொண்ணு பாத்தமா, தேதியை முடிச்சமான்னு இருக்கணும்" என்றார் தரகர்.
கார் அந்த சந்தில் நுழைந்து அந்த வீட்டருகே நின்றது.அஸ்பெஸ்டாஸ் போட்ட வீடு,டில்லி வீட்டு கார்ஷெட் அளவு தான் பரப்பளவு.
ஜன்னலில் அழகான பெண் முகம் ஒன்று வெளியே தெரிந்தது.டில்லியை சற்றுநேரம் உற்றுபார்த்தது.அதன்பின் மறைந்துவிட்டது.
சம்பிரதாயமான உபசரிப்புகளுக்கு பின்பு உள்ளே போனார்கள்.
"மாப்பிள்ளைக்கு இத்தனை வருஷமா ஏன் கல்யாணம் ஆகலை?" பெண் வீட்டில் யாரோ மெதுவாக கேட்டார்கள்.
"லவ் பெய்லியர்"
"அதுக்குன்னு இத்தனை வருஷமா கல்யாணம் செய்யாம இருக்கறதா?"
"தெய்வீக காதல்"
"அப்ப சரி.."
"சரி..நாம மேல்படி விஷயங்களை பேசலாம்.மாப்பிள்ளையை கொஞ்சம் உள்ளே ரூமுக்கு போய் பொண்ணு கிட்ட பேச சொல்லுங்க" என்றார் பெண்ணின் மாமன்.
டில்லி எழுந்து ரூமுக்குள் போனார்.
"நீங்களா மாப்பிள்ளை?" அவள் நம்ப முடியாமல் கேட்டாள்.இருந்தால் அவளுக்கு 17 அல்லது 18 வயது இருக்கும்.
டில்லி குற்ற உணர்வுடன் அவளை பார்த்தார்.அவருக்கு அவள் வயது எல்லாம் தெரியாது.பெண் பார்க்க போகலாம் என சொன்னார்கள்.புறப்பட்டு வந்துவிட்டார்.
"உங்க வயசு என்ன?" அவள் மீண்டும் கேட்டாள்.
"42" என்றார் டில்லி.
அவள் முகம் வியப்பில் விரிந்தது."மாப்பிள்ளைக்கு கொஞ்சம் வயசு ஜாஸ்தின்னு சொன்னாங்க.நான் 60,50 இருக்கும் என பயந்துகொண்டிருந்தேன்.42 வயசுன்னா பரவாயில்லை"
"வயசான மாப்பிள்ளையை ஏன் கட்டிக்கணும்? புடிக்கலைன்னா முடியாதுன்னு சொல்லிடறதுதானே?" என்றார் டில்லி.
அவள் பதிலே சொல்லவில்லை.
"நீ இத்தனை சின்ன பெண்ணா இருப்பாயென நான் எதிர்பார்க்கலை.வயசும் ரொம்ப வித்தியாசம்.நான் கல்யாணத்தை வேண்டாம்னு.."
"சொல்லிடாதீங்க.." என்றாள் அவசரமாக.குரலை மெதுவாக தாழ்த்திகொண்டாள்.."எனக்கு போன மாசம் அபார்ஷன் ஆச்சு.அதை மறைச்சு வெக்க தான் இந்த கல்யாணத்தை நடத்தறாங்க.எனக்கு இதை மறைக்க விருப்பம் இல்லை.உங்களுக்கு இதை தெரிஞ்சுகிட்டு என்னை கட்டிக்க விருப்பம் இல்லைன்னா வேண்டாம்.ஆனால் இதை வெளியே யார் கிட்டயும் சொல்லிடாதீங்க"
"உனக்கும் காதல் தோல்வியா?" என்றார் டில்லி."நான் 20 வருசம் முன்னாடி காதலிச்சேன்.அப்பல்லாம் காதல்னா தொட்டுக்க கூட மாட்டோம்.ரெண்டடி தள்ளியே உக்காந்திருப்போம்."
"இப்பல்லாம் உலகம் ரொம்ப மாறிடுச்சு" என்றாள் அவள்.
"உண்மைதான்" என ஒத்துகொண்டார் டில்லி.
"அது என்ன டில்லின்னு பேரு" என்றாள் அவள்.
"டில்லி என்ற புனைபெயரில் நிறைய கவிதை எழுதுவேன்.அந்த பேரே நின்னுடுச்சு" என்றார் டில்லி.
"சரி..அப்ப என்னை கல்யாணம் செஞ்சுக்கறீங்களா?" என்றாள் அவள்.
"உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.ஆனால் எனக்கு வயசு ஜாஸ்தி.இளவயசு பொண்ணை கெட்டுபோனவள் என்ற ஒரே காரணத்துக்கு ஒரு வயசான ஆளுக்கு கட்டிவைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.நீ இதை உன்னை பார்க்க வரும் மாப்பிள்ளையிடமும் சொல்லணும் என்ற அவசியம் இல்லை.இதை சொல்லாம மறைச்சு வெச்சு கல்யாணம் செய்துகொள்வதில் எந்த தப்பும் இருப்பதா தெரியலை." என்றார் டில்லி.
"என்னை பத்தி யோசிக்கிட்டிருந்தா உங்களுக்கு கல்யாணம் ஆகவேண்டாமா?" என்றாள் அவள்.
"கல்யாணம் தானே?என வயசுக்கேத்த மாதிரி முதிர்கன்னி, டிவர்சின்னு, விதவைன்னு யாரையாச்சும் செஞ்சுக்கறேன்.அப்படியும் இல்லைன்னா சும்மா இருந்துட்டு போறேன்.கல்யாணம் கட்டாயமா செஞ்சுதான் ஆகணும்னு ஒண்ணும் இல்லை" என்றார் டில்லி.
"சொல்றேன்னு கோவிச்சுக்க கூடாது.நீங்க சரியான லூசு" என்றாள் அவள்."யாராச்சும் சின்ன வயசு பொண்னை வேண்டாம்னுட்டு போயி முதிர்கன்னி, டிவர்சி,விதவையை கட்டுவேன் என்பார்களா?உங்க காதல் முறிந்ததில் ஆச்சரியமே இல்லை"
'நான் லூசுதான்" என ஒத்துகொண்டார் டில்லி."20 வருசமா முறிந்த காதலை நினைத்து கல்யாணம் செய்யாம இருந்தப்பவே பலர் என்னை லூசு என்றார்கள்.நான் லூசா இருக்கலாம்.ஆனால் உன் வாழ்க்கையை கெடுத்த பாவம் எனக்கு வேண்டாம்"
"எனக்கு உங்களை கொஞ்சம்,கொஞ்சமா பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு" என்றாள் அவள்.
பாறையாய் இறுகிடந்த டில்லியின் மனதில் பசுஞ்செடி ஒன்று மீண்டும் துளிர்த்தது.
"தம்பி..பேசி முடிச்சாச்சா?" என வெளியே இருந்து டில்லியின் அண்ணன் குரல் கேட்டது.
"இப்பதான் பேசவே ஆரம்பிச்சிருக்கோம்" என்றார் டில்லி.
"இவனுக்கு வெச்சா குடுமி,அடிச்சா மொட்டை.இத்தனை வருசமா எந்த பொண்ணையும் ஏறெடுத்தும் பாக்காம இருந்தான்.இப்ப ரூமை விட்டு வெளியே வரமாட்டேங்கறான்"
"எல்லாம் வயசு கோளாறுதான்" என சொல்லியபடி கரும்பு வில்லுடனும்,அம்புடனும் பூட்டியிருந்த அறையை விட்டு வெளியே வந்த மன்மதன் முணுமுணுத்துகொண்டே போனான்.
6 comments:
எல்லாம் ஆதங்கத்தின் வெளிப்பாடோ . நல்ல இருக்கு !
thanks shankar
யதார்தத்தை அப்படியே சொல்லுவதில் கில்லாடி ஐயா நீர்
Thank you Calgary siva
எதார்த்தமா இருக்கு தல :-))
Thanks karthi
Post a Comment