"பரந்தாமன் ட்ரான்ஸ்போர்ட்ஸ் ரிலேஷன்ஷிப்பை கான்சல் செய்துடலாம்" இளநீர் குடித்தபடி அமைதியாக சொன்னார் அப்பா.
"என்னாப்பா சொல்கிறீர்கள்?" அதிர்ச்சியோடு நிமிர்ந்தேன். அது ஒருவருட இருவருட உறவல்ல.முப்பது வருட உறவு.
"தேங்காய உடைச்சு தரட்டுமா சார்/" இளநி விற்கும் கிழவனார் பரிவோடு கேட்டார்.
"வேண்டாம்.மிச்சம் சில்லரைய குடு" என ஐம்பது ரூபாய் தாளை நீட்டினார் அப்பா.
"சில்லறை இல்லையே சார்" எனறபடி கிழவனார் மடியை தடவியபடி சில்லறை மாற்ற பக்கத்து கடைக்கு போனார்.
"பிசினஸ்ல செண்டிமெண்ட் கூடாதுடா செந்தில்" அப்பா என் முதுகை தட்டினார்."பரந்தாமன் என் கூட பிறந்த தம்பிமாதிரி.தலை போகும் நேரத்தில் எல்லாம் காசை காசுன்னு நினைக்காம உதவியிருக்கான்.ஆனால் புதுசா வந்திருக்கற சிவிஆர் கம்பனி நமக்கு பரந்தாமனை விட சுமார் 20% குறைவான மார்ஜினில் சரக்குகளை எடுத்து போவதா கொடேஷன் தந்திருக்காங்க.யோசிச்சு பாரு..வருஷத்துக்கு 20 கோடி மிஞ்சும்.."
"நம்ம வருட லாபம் 100 கோடி.20 கோடி ஒண்ணும் பெரிய விஷயமில்லை.இந்த நாற்பது வருஷமா பரந்தாமன் அங்கிள் நம்ம போட்டியாளர்கள் எத்தனையோ பேர் கூப்பிட்டப்ப அவர்கள் சரக்கை எடுக்க மறுத்திருக்கிறார்.இப்ப நாம கான்சல் செய்தா அவர் பிசினஸ் அடுத்த நிமிடம் காலி.."
"20 கோடின்னா உனக்கு அத்தனை இளப்பமா?காசோட அருமை உனக்கு தெரியுமாடா?" அப்பா கோபத்துடன் கத்தினார்.
"இல்லப்பா...அவருக்கும் நமக்கும் மத்தியில் "உனக்கு நான், எனக்கு நீன்னு" எழுதப்பட்டாத ஒப்பந்தம் இருக்கு.நீங்க கம்பனி ஆரம்பிச்ச புதுசுல ரெண்டுபேரும் பேசி வெச்சுகிட்டு ஒப்பந்தம் மாறாம இன்னைவரைக்கும் நடந்துவந்திருக்கீங்க.இப்ப திடீர்னு வார்த்தை மாறினா நியாயமாப்பா?"
"வார்த்தை என்னடா பெரிய வார்த்தை?பிசினஸ்ல இன்னைக்கு சொன்னது அடுத்த நிமிடம் உண்மையில்லை.இங்கே காசுதாண்டா கடவுள்.வார்த்தை இல்லை.." அப்பா இளநீரை கீழே விட்டெறிந்தார்.காரில் ஏறினார்.
தலைகுனிந்தபடி காரில் ஏறினேன்.
"ஒவ்வொரு பைசாவும் முக்கியம்டா முக்கியம்.20 கோடி ஒண்ணுமில்லை, எப்பவோ கொடுத்த வாக்குறுதி தான் முக்கியம்னு அசால்டா சொல்றியே? உன்னை நம்பி இத்தனை பெரிய கம்பனிய எப்படிடா ஒப்படைப்பேன்?"
எனக்கு பேச பதிலே கிடைக்கவில்லை.
கார் ரயில்வே சிக்னல் ஒன்றில் நின்றது.
கார் கண்னாடியை யாரோ தட்டினார்கள்.திறந்தேன்.
"மீதம் சில்லறை வாங்காம வந்துட்டியே கண்ணு.நான் பதறி அடிச்சுட்டு சைக்கிள எடுத்துட்டு ஓடியாந்தேன்" இளநிகடை கிழவர் மீதம் முப்பது ரூபாயை நீட்டினார்.
"முப்பது ரூபாயை திருப்பி தரவா கடையை விட்டுட்டு இத்தனை தூரம் வந்தாய்?" அப்பா ஆச்சரியமானார்."முப்பது ரூபாய் எனக்கு பிச்சைகாசு பெரியவரே..அதை திருப்பிதர கடைய விட்டுட்டு ஓடிவந்த நேரத்தில் எவனாவது இளநியை திருட்டிட்டு ஓடியிருந்தா என்ன செய்வீர்கள்?"
"சில்லரை தருவதா சொல்லிட்டு போனேன்.யாவாரம்னா சொன்ன வார்த்தையை காப்பாத்தணும் இல்லீங்களா?" என்றார் பெரியவர்.
நிமிர்ந்தார் அப்பா.
"இளநி திருட்டு போயிருந்தா போயிட்டு போவுதுங்க.நாணயத்தை தவறவிட்டா நாளைக்கு யாருங்க எங்கடைக்கு வந்து யாவாரம் செய்வாங்க?"
அப்பா கண் இமைக்காமல் அவரையே பார்த்தார்
"வர்ரேனுங்க..." பெரியவர் விடை பெற்றார்.
அப்பா திரும்பி என்னை பார்த்தார். "ஏழை ஏன் ஏழையாகவே இருக்கிறான், பணகாரன் ஏன் பணகாரனாக இருக்கிறான் என்பது புரிகிறதா?" என்று கேட்டார்.
நான் தலையை ஆட்டினேன்.
"செண்டிமெண்ட், வெறும் செண்டிமெண்ட்டை வைத்து வியாபாரம் செய்யமுடியாது.." அப்பா தலையை வேகமாக ஆட்டினார்."
ரயில்வே கேட் திறந்து கார் வேகமாக குதித்தோட துவங்கியது