Friday, July 31, 2009

403.கொலைகள் நடப்பது உனக்காக

குருவும் சீடனும் கானகத்தில் மவுனமாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.கானகத்தின் அழகை ரசித்துக்கொண்டே வந்தான் சீடன்.அந்த அழகை குலைப்பதுபோல் ஒரு பறவையின் அழுகுரல் கேட்டது.காட்டுப்பூனை ஒன்று அழகிய கிளி ஒன்றை பிடித்து குதறிக் கொண்டிருந்தது.

எதுவும் பேசாமல் நடந்து கொண்டிருந்தார் குரு.கிளியை திரும்பி திரும்ப பார்த்தபடி நடந்தான் சீடன்.பிறகு ஏதோ யோசித்தான்.கல் ஒன்றை எடுத்து பூனையின் மீது எறிந்தான்.பூனை கிளியை விட்டது.கிளி தப்பி பறந்தது.

"உலக வரலாற்றை மாற்றி விட்டாய்"என்றார் குரு.மரத்தடியில் மவுனமாக அமர்ந்தார்.

"புரியவில்லை குருவே" என்றான் சீடன்.

"இன்னும் ஒரு மணிநேரம் இந்த இடத்தை விட்டு எழுவதில்லை என உறுதி அளிக்கிறாயா?" என்று கேட்டார் குரு.

"செய்கிறேன்" என வாக்குறுதி கொடுத்தான் சீடன்.

இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர்.

45 நிமிடங்கள் கடந்தன.காற்றின் சலசலப்பை தவிர வேறு எந்த சத்தமும் இல்லாமல் கானகம் அமைதியாக இருந்தது.

"காப்பாற்றுங்கள்" என ஒரு பெண்ணின் ஓலம் கேட்க துவங்கியது.விரைவில் அந்த மரத்தடியை நோக்கி ஒரு பெண் ஓடிவந்தாள்.துரத்திக்கொண்டு இருவர் ஓடி வந்தனர்.அவளை பிடித்து பலாத்காரம் செய்ய முயன்றனர்.

சீடனின் உடல் நடுங்கியது.குருவை பரிதாபத்துடன் பார்த்தான்.

அவர் முகம் சலனமற்று இருந்தது.

"ஒரு அபலையின் வாழ்வை விட என் சத்தியமும், இந்த படிப்பும், துறவறமும் பெரிதல்ல" என்றான் சீடன்.எழுந்தான்.

"உலகை மாற்ற போகிறாய்" என்றார் குரு.

"ஆம்" என்றான் சீடன்.

"உன் மாற்றம் விளைவிக்க இருக்கும் விளைவை பார்" என்றார் குரு.

சீடன் கண் முன் எதிர்கால காட்சிகள் விரிந்தன.அவன் அந்த பெண்ணை காப்பாற்றுகிறான்.அவள் நன்றி கூறி தன் கணவனுடன் செல்கிறாள்.அவளுக்கு பிறக்கும் இரு மகன்கள் வளர்ந்து கொள்ளையராகின்றனர்.சீடனுக்கு பிறக்கவிருக்கும் மகளை கொடூரமாக பலாத்காரம் செய்து அவள் கணவனையும் குழந்தையையும் கொல்கின்றனர்....

பயத்தில் விறுவிறுத்த சீடன் கண்களை திறந்தான்.

"உலகை மாற்றுவதானால் மாற்று" என்றார் குரு.

"காப்பாற்றுங்கள்" என அலறினாள் அந்த பெண்.

தயக்கத்துடன் அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான் சீடன்.

"அப்பா.நில்லுங்கள்.என்னை காப்பாற்றுங்கள்" என சீடனின் மகள் அலறும் காட்சி கேட்டது.

"குருவே, இதை என்னால் சகிக்க முடியவில்லை" என அலறினான் சீடன்.

"அப்படியானால் காப்பாற்று" என்றார் குரு.

சீடன் மவுனமாக நின்றான்.ரவுடிகள் அவளை பலாத்காரம் செய்து கொலை செய்வதை காண சகிக்காமல் கண்களை மூடிக்கொண்டான் சீடன்..அவன் கண்ணில் நீர் வழிந்தது.

அவன் கண்முன் வரும்காலம் விரிந்தது.அந்த பெண்ணின் கணவன் மனைவி இறந்த அதிர்ச்சியில் பைத்தியமாகிறான்.அவன் மகன்கள் இருவரும் அனாதையாகி உணவின்றி இறக்கின்றனர்.சீடனின் மகள் கணவனுடனும் இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறாள்.

"குருவே ஏன் இந்த துன்பம், ஏன் இந்த துயரம், ஏன் இந்த கொடூரம், ஒருவர் அழிவில்தான் மற்றவர் வாழவேண்டுமா?" என அழுதான் சிஷ்யன்.

"அனைத்தும் உனக்காகத்தான் சீடனே" என்றார் குரு."உலகில் இதுவரை நடந்த அனைத்து கொலை,கொள்ளை,கற்பழிப்பால்தான் நீ இன்று மகிழ்ச்சியாக இருக்கிறாய்...ஆம்,இரண்டாம் உலக யுத்தம் நடக்கவில்லை என்றால் உன் தகப்பன் பர்மாவிலிருந்து சென்னை வந்திருக்கமாட்டார்.அவர் பர்மாவில் பார்த்த பெண்னை மணந்திருந்தால்,அவருக்கு பிறந்த மகன்,அதாவது நீ குருடனாக பிறந்திருப்பாய்"

"என் கண்பார்வைக்கு விலை ஐந்துகோடி உயிர்களா?எனக்கு கண்பார்வை வேண்டாம்" என்றான் சீடன்.

"அப்படியானால் வரலாற்றை மாற்று" என்றார் குரு.

நொடிநேரத்தில் சீடன் 1890 ஆம் ஆண்டின் ஆஸ்த்ரியாவில் ஹிட்லர் சிறுவனாக விளையாடிகொண்டிருந்த காட்டுக்குக்கு போனான்.அதோ இளம் வயது அடால்ப் ஹிட்லர் பாம்பு புற்றில் கைவிட போகிறான்.அருகே சீடன் நிற்கிறான்...

"அவனை நீ தடுக்காவிட்டால் அவன் இறந்துவிடுவான்" என்றார் அசரீரியாக குரு."அப்புறம் உலக போர் நடக்காது. ஆனால் உனக்கு கண்பார்வை போய்விடும்"

சீடனின் உடல் நடுங்கியது.

ஹிட்லர் பாம்புபுற்றில் கை விட்டான்.

"நில், நில்" என அலறினான் சீடன்.

கண் விழித்தான்.கண்பார்வை நன்றாக இருந்தது.

"நீ கத்தியதால் ஐந்து கோடி உயிர்கள் போய்விட்டன.அதில் பலர் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்டனர்" என்றார் குரு.

"கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது.ஆனால் எனக்கு கண்பார்வை போயிருந்தால் இன்னமும் வருத்தமாக இருந்திருக்கும்" என்றான் சீடன்.

சீடனும் குருவும் மீண்டும் கானகத்தின் ஊடே நடக்க துவங்கினர்.

Sunday, July 26, 2009

402. கேவலத்திலும் கேவலம்

டெல்லி: பெரும் நஷ்டத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஏர் இந்தியா - இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நிதிச் சிக்கலிலிருந்து மீண்டு வர ரூ. 20, 000 கோடி உதவி நிதியை மத்திய அரசிடம் கோரியுள்ளது.

இதில் ரூ. 10,000 கோடி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அது கோரியுள்ளது. மீதமுள்ள நிதியை அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 2500 முதல் ரூ. 3000 கோடி வரை தருமாறும் அது மத்திய அரசைக் கேட்டுள்ளது.

மேலும் பழைய விமானங்களைத் தூரப் போட்டு விட்டு புது விமானங்களை வாங்கவும் அது அனுமதி கோரியுள்ளது.

இப்படி மொத்தமாக ரூ. 20 ஆயிரம் கோடியைக் கேட்டு நிற்கிறது ஏர் இந்தியா. இது டெல்லி மாநிலத்திற்கான வருடாந்திர பட்ஜெட் தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:தட்ஸ்தமிழ்

இப்படி மக்கள் வரிப்பணத்தை விழுங்கவென்றே வந்த இந்த அசிங்கத்தை தொலைத்து தலைமுழுகினால் தான் என்ன?அரசாங்கம் என்ன hairக்கு பாசஞ்சர் விமானகம்பனி நடத்தவேண்டும்?

Saturday, July 18, 2009

401.மனிதனும் மதமும்- 4

சொர்க்கம், நரகமின்றி நல்லவனாக இருத்தல்...

சொர்க்கம் எனும் குச்சி மிட்டாயும், நரகம் எனும் தடியும் இல்லாமல் ஒருத்தன் நல்லவனாக இருக்க முடியுமா?


முடியும் என்கிறது ஆன்மிகம்.


முடியாது என்கிறது மதம்.

மக்களுக்கும், மாக்களுக்கும் இருக்கும் வித்தியாசம் இங்குதான் துவங்குகிறது.

கழுதைக்ளை இரண்டு வழிகளில் சுமை தூக்கும் வேலைக்கு பழக்கப்படுத்துவார்கள்.ஒன்று கழுதைக்கு முன் கேரட்டை காட்டியபடி நடப்பது.கேரட்டுக்கு ஆசைப்பட்டு கழிதை சுமையை தூக்கிக்கொண்டு நடக்கும்.இன்னொரு வழி தடியால் அடித்து நடக்க வைப்பது.

கழுதையை வழிக்கு கொண்டுவர கேரட்டும்,தடியும்.மனிதனை வழிக்கு கொண்டுவர சொர்க்கமும் நரகமும்.

சொர்க்கத்துக்கு ஆசைப்பட்டு ஒரு செயலை செய்பவன் நல்லவனல்ல.நரகத்துக்கு பயந்து ஒரு செயலை செய்யாது விடுபவன் உத்தமனல்ல.மனிதர்களை அம்மாதிரி கட்டுப்படுத்துவதே அவர்கள் மேல் நம்பிக்கையில்லா தன்மையை தான் காட்டுகிறது.மதக்கட்டுப்பாடுகளால் நான் நல்லவனாக இருக்கிறேன், கடவுளுக்கு பயந்து நான் ஒழுக்கமாக இருக்கிறேன் என்பதெல்லாம் கடவுளுக்கும்,மதத்துக்கும் அவமானமேயன்றி பெருமையல்ல..சுயமாக சிந்திக்க தெரியாத முட்டாள் கூட்டத்தை வளர்த்து வைப்பதில் பெருமை என்ன வேண்டிக்கிடக்கிறது?

உண்மையான ஆன்மிகவாதிக்கு நல்லவனாக இருக்க இறைவன் எனும் பூச்சாண்டி தேவைப்படுவதில்லை..ஆன்மிகவாதியின் இறைவன் பழிவாங்கும் பேயல்ல.நரகத்தில் போட்டு வதக்கும் சாடிஸ்டல்ல.ஒரு ஆன்மிகவாதி நல்லவனாக இருக்க காரணம் சுயசிந்தனையில் தோன்றிய சிந்தனையே ஆகும்.உள்ளூர வரும் உணர்வால் நல்லவனாக இருப்பவன் தான் ஆன்மிகவாதி.போலிஸ் ஸ்டேஷன் இருப்பதால் யோக்கியமாக இருப்பதை ஒத்த மதவாதிகள் கும்பலில் அவன் ஒருத்தனாக இருக்க மாட்டான்.

மனிதனும், மிருகமும்:

விலங்குகளின் இயல்பே மனிதனின் இயல்பு. அப்படி இருக்கக் கூடாது என்று நினைக்கும் போதுதான் குற்ற உணர்வுகளும், மன அவஸ்தைகளும் ஏற்படுகின்றன.(எது புனிதம் என்ற கட்டுரையில் ஏ.என் சிவராமன்)

காதல்,வீரம்,அன்பு,பாசம் என்று நாம் கொண்டாடுபவை எல்லாம் அடிப்படையில் மிருக உணர்ச்சிகள் தான்.இந்த மிருக உனர்ச்சிகளால் கட்டப்பட்டவை தான் சமூகங்கள்..ஒவ்வொரு மிருக கூட்டமும் இந்த உணர்ச்சிகளை ஒவ்வொரு விதத்தில் வெளிப்படுத்தும்..அதுபோல் இவற்றை நாம் வெளிப்படுத்தும் முறை வேறுபடுகிறதே ஒழிய இவ்வுணர்ச்சிகளில் புனிதமும் ஏதுமில்லை, புடலங்காயும் ஏதுமில்லை.

பழங்கால எகிப்து மன்னர்கள் அளவுக்கு நாகரிகம் அடைந்த சமூகம் அந்த காலத்தில் இருந்ததா என்பதே சந்தேகம்தான்.இன்றும் அறிவியலாளரை வியக்க வைக்கும் பிரமிடுகளை அவர்கள் கட்டினார்கள்.ஆனால் அன்றைய எகிப்திய மன்னர்கள் சர்வசாதாரணமாக தம் தங்கைகளையும், தாய்களையும் திருமணம் செய்துகொண்டார்கள்.சகோதரர்களுடன் ஹோமோசெக்ஸில் சர்வசாதாரணமாக ஈடுபட்டார்கள்.

மேலே பல குற்றங்கள் நடைபெற்றிருப்பது போல தெரியலாம்.ஆனால் இதுதான் அன்றைய எகிப்திய இனத்தில் வழக்கம்.மேலே சொன்ன எதுவும் அவர்கள் இனத்தில் குற்றமல்ல.எகிப்திய கடவுள் இதில் எதையும் சட்டம் போட்டு தடுக்கவில்லை. எகிப்திய அரசு இன்னமும் நீடித்திருந்தால் மேலே சொன்னது தான் உலக நடைமுறையாகவும் சட்டமாகவும் ஆயிருக்கும்.

கொலை குற்றம் என்கிறோம்.ஜனத்தொகை இதே ரீதியில் பெருகினால் அப்புறம் ஒரு காலகட்டத்தில் வயதானவர்களை அரசாங்கமே சுட்டுக்கொன்றால் கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை.அந்த காலகட்டத்தில் கொலை என்பது சமூகத்தை நெறிப்படுத்த அரசாங்கமே ஏற்படுத்தும் ஒரு முறையாக இருக்கும்.

ஒரு செயல் குற்றமா இல்லையா என்பதை அந்தந்த காலகட்டமும்,அதில் பதவியில் இருக்கும் ஆட்சியாளர்களும்,சமூகத்தில் வலுத்தவர்களும் தான் தீர்மானிக்கிறார்களேயன்றி இறைவனல்ல.

இன்னமும் சொல்லப்போனால் அந்தந்த காலகட்டங்களில் தவறாக கருதப்படுபவை அந்தந்த காலகட்டங்களில் உருவாகும் மதங்களால் தடுக்கப்படுகிறது.அந்தந்த காலத்தில் சரியாக கருதப்படுபவை அந்தந்த காலத்தில் உருவாகும் மதங்களால் ஆமோதிக்கப்படுகிறது.

காலம் மாறும்போது எதுசரி,எது தவறு என்ற சமூக கண்ணோட்டம் மாறுகிறது.மாற்ரத்தை ஏற்கவிரும்பாத பழமைவாதிகள் இறைவன் விதிமுறைகளை காரணம் காட்டி பழங்காலத்துக்கு சமூகத்தை கொண்டுசெல்ல முயல்கின்றனர்.புதுமைவாதிகள் அவர்களை எதிர்க்கின்றனர்.

பழமைக்கும்,புதுமைக்குமான இந்த போரில் பழமைவாதிகள் ஜெயித்தால் சமூகம் பின்னோக்கி செல்கிறது.புதுமைவாதிகள் ஜெயித்தால் சமூகம் முன்னோக்கி செல்கிறது.

போர் என்பது குரங்கினத்தின் இன்னொரு தனி இயல்பாகும்..மனித இனம் போரிடவே பிறந்தது.போரால் தான் வளர்ந்தது.

மரணத்துக்கு பின் என்ன?

பிறப்புக்கு முன் என்ன நிலையோ அதுதான் மரணத்துக்கு பிறகும்.

பிறப்புக்கு முன் என்னவாக இருந்தோமோ அதே நிலைக்கு தான் இறப்புக்கு பிறகும் திரும்புகிறோம்.அதனால் தான் வள்ளுவர் இறப்பை தூக்கத்துக்கும் பிறப்பை விழிப்புக்கும் ஒப்பிட்டார்.

"நான்" என்பதெல்லாம் இந்த உலகம் சார்ந்த நமது நினைவுகள் தான்.நமது தாய்,தந்தை,உற்றம்,சுற்றம்,நண்பர்கள்,நினைவுகள்..இது தான் நாம்.நமது பிறப்புக்கு முன் இந்த "நான்" இல்லை.இறப்புக்கு பிறகும் இந்த எதுவும் தொடர போவதில்லை.அதனால் இறப்புக்கு பிறகு "நான்" இல்லை.

பிறப்புக்கு முன் விந்துவாகவும்,உணவாகவும்,பயிராகவும்,மண்னாகவும் இருந்தோம்.இறப்புக்கு பிறகு சாம்பலாகவும் மண்ணாகவும் இருக்கிறோம்.உலகில் பிறந்த உயிரினங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து தோன்றி மீண்டும் மண்ணுக்குள் செல்கின்றன...இந்த லாஜிக்படி பார்த்தால் நமக்கு பிறப்பும் இல்லை,இறப்பும் இல்லை.எதோ வடிவில் தொடர்ந்து நீடித்துக்கொண்டுதான் இருந்திருக்கிறோம்.நடுவே வந்து சேரும் இந்த "நான்" நடுவிலேயே போய்விடுகிறது.

இந்த "நானை" வைத்து கூறப்பட்ட சுவர்க்கம்,நரகம் போன்றவை இனிய கற்பனைகளே.இவை உண்மையாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.....

*****

பக்தியின் சக்தி:

பக்தி என்பது ஒருவிதத்தில் தாழ்ந்த நிலை..காரணம் பக்தி என்பது ஒரு வகையான பற்றே ஆகும்."உன் மேல் பக்தி செலுத்துகிறேன்.பதிலுக்கு நீ என்னை காப்பாற்று" என்று இறைவனுடன் செய்துகொள்ளப்படும் ஒரு டீலே ஆகும்.

நம்மை காப்பாற்ற இறைவனுக்கு நாம் செலுத்தும் பக்தி அவசியமில்லை.அது உண்மையான இறைசக்தி என்றால் கும்பிட்டவனை மட்டும் காப்பாற்றாமல் எல்லா உயிரையும் தான் காப்பாற்றும்.

இறைவனை அறியாதவர்கள் மட்டும் தான் அவன் மேல் பக்தியை செலுத்துகிறார்கள்..பயந்து போகிறார்கள்.இறைவனை அறிந்தால் அதன்பின் பக்தியும் வேண்டியதில்லை,பயமும் வேண்டியதில்லை.

பரிட்சையில் தேறியபின் பள்ளிக்கு போகவேண்டிய அவசியம் இல்லையல்லவா?

இதனால் எல்லாம் பக்திக்கு அவசியமே இல்லை என்று நினைக்க கூடாது..அதற்கு தேவையற்ற முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என்பதை குறிக்கவே இதை எழுதலானேன்.நமக்கு தேவைகள் அற்றுப்போகுமானால் பக்தி செலுத்த வேண்டிய அவசியமும் அற்றுப்போகும்.தேவைகள் இருக்கும்வரை பக்தியும் நீடித்திருக்கும்.

மரணத்தை பற்றிய அச்சத்தை விட்டொழித்தவனுக்கும்,தேவைகளை துறந்து கோரிக்கைகளற்று இருப்பவனுக்கும் பக்தி வேண்டியதே இல்லை.அத்தனை பக்குவத்தை அடைந்தவனும் கோடியில் ஒருத்தன் தேறுவதே துர்லபம்.

தேவைகளை துறந்து மரணத்தை பற்றிய பயமின்றி இருப்பதே நிஜமான இறைதரிசனம்.அப்படி ஒரு வினாடி நேரம் கூட நம்மால் இருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.அத்தகைய தருணத்தில் தான் மனிதன் இறைவனாகிறான்.


உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை,அச்சமில்லை,அச்சமென்பதில்லையே

என கவிதைகள் படைக்கிறான்.

கடவுளைக்கண்டு அஞ்சாமல் நின்றவன் கவிஞன் மட்டும் தான்.

"உன் தத்துவம் தவறென்று சபைதனில் சொல்லவும் தமிழுக்கு உரிமை உண்டு" என்றவள் ஒரு கவிதாயினிதான்.

"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்றவனும் கவிஞன் தான்.

"புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே" என்றவனும் கவிஞனே.

"பாடல்களை பாடுவதால் பிரம்மனாகிறோம்" என்றவனும் கவிஞனே..

மரணத்தை வெல்ல கவிகளால் தான் முடிகிறது.அதனால் தான் அவர்கள் கடவுளாகிறார்கள்.

(தொடரும்..)

Friday, July 03, 2009

400. சுதந்திர தேவிக்கு பிறந்தநாள்


பெண்கள் பூவாய் சிரிக்கும்

தேசத்தில் பொன்னாய் கொட்டும்


பாடசாலைகள் பெண்பிள்ளைகளால்

நிரம்பிவழியும் தேசத்தில்

ஆயகலைகள் அனைத்தும் செழித்தோங்கும்

மங்கலங்கள் பொங்கி வழியும்


இன்பங்கள் அனைத்தையும்

ஆணுக்கும் பெண்ணுக்கும்

சமமாக்கும் தேசத்தில்

இவ்விரு இனங்களுக்கிடையான

சகோதரத்துவமும் பூத்து குலுங்கும்.


பெண்ணியத்தையும், சுதந்திரத்தையும்

ஜனநாயகத்தையும், விஞ்ஞானத்தையும்

சமூகவியலையும், அதற்கும் மேலான

நம்பிக்கை ஒளியையும்

உலக மக்கள் அனைவருக்கும் தந்த

சுதந்திரதேவியே...


சூலைத்திங்கள் நாலாம் நாள்

இன்று உன் பிறந்தநாள்.

உன் விடுதலையொளி உலகெங்கும் பரவட்டும்

விடுதலையடைந்த மானிட இனத்தின்

திறனுக்கு உன் தேசம் ஒரு சான்றாய் இருக்கட்டும்.


அன்னியன் என்னை அள்ளி அணைத்த

என் அமெரிக்க அன்னையே

வானம் உள்ளவரை

வையகம் உள்ளவரை

உன் தேசம் வாழட்டும்!!!

399.ஆண்டவன் கட்டளை

"இறைவா எனக்கு நல்வழி காட்டு" பிரார்த்தித்துக் கொண்டிருந்தான் கீமே.அமேசானிய காட்டுபகுதியில் யாருமற்ற காட்டுபகுதியில் அந்த ஆதிவாசி பக்தனின் குரல் மரங்கள், மலைகளில் பட்டு எதிரொலித்தது.இறைவனை அந்த குரல் சென்று சேர்ந்தது.

கீமே முன் இறைவன் தோன்றினார்.இறைவனை விழுந்து வணங்கினான் கீமே.

"கீமே..உன் பக்தியின் சிறப்பு எனக்கு பரவசமூட்டுகிறது" என்றார் இறைவன்."உனக்கு சொர்க்கம் வேண்டுமென்றால் நான் சொல்கிறபடி நீ செய்யவேண்டும்.அதை செய்ய தவறினால் நரகமே"

"சொல்லுங்கள் இறைவா காத்திருக்கிறேன்" என்றான் கீமே.

"இந்த காட்டுபகுதியில் சற்று நேரத்தில் குதிரை வண்டியில் தந்தை, தாய், 1 வயது குழந்தை என மூவர் அடங்கிய ஒரு ஐரோப்பிய குடும்பம் வரும்.அந்த வண்டியை நீ வழிமறித்து அந்த குடும்ப தலைவனை மரத்தில் கட்டி வைக்க வேண்டும்.அதன்பின் அவன் குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டி அதன் தாயாரை நீ பலாத்காரப்படுத்த வேண்டும்.அதன் பின் அந்த மூவரையும் கொன்றுவிடவேண்டும்.எத்தனைகெத்தனை வலி எடுக்கும்படி கொல்கிறாயோ அத்தனைகத்தனை உனக்கு என் அருள் கிடைக்கும்.சுவர்க்கமும், முக்தியும் கிடைக்கும்"

"இறைவா" என அலறினான் கீமே."இத்தகைய கோர செயலை நான் எப்படி.."

"உன்னுடன் விவாதம் புரிய நான் வரவில்லை" என்றார் இறைவன்." என் வார்த்தையில் நம்பிக்கை இருந்தால் இதை செய்.."

*****

அந்த குதிரை வண்டி மேல் எங்கிருந்தோ வந்த அம்புகள் பாய்ந்தன.குடும்ப தலைவன் கீழிறங்கினான்.அவன் மேல் ஒரு வலை விழுந்தது.

கீமே அதன்பின் அவனை பிடித்து மரத்தில் கட்டினான்.குழந்தையை தாயிடம் இருந்து பிடுங்கினான்.

"என் குழந்தையை விடு" என போர்த்துகீச மொழியில் அவள் அலறினாள்.

கீமே அவளை கீழே தள்ளினான்.

"கடவுளே என்னை காப்பாற்று" அவள் கடைசியாக அலறினாள்.

காடெங்கும் அழுகுரல் நிரம்பியது ஒலித்தது.

******

"டேய் இறைவா.விளையாட போகாமல் என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" இறைவனின் அம்மா அவனை அதட்டினார்.

"சும்மா இரும்மா.அப்பா வாங்கித்தந்த "பூமியின் கடவுள்" எனும் விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கிறேன்" என்றான் கடவுள்.

"என்ன விளையாட்டோ?எப்போது பார்த்தாலும் கற்பழிப்பு,கொலை,கொள்ளை போரடிக்கும் விளையாட்டுக்களை அடிக்கடி நிகழ்த்திக்கொண்டிருக்கிறாய்.நாம் மனிதர்களை விட மேம்பட்ட உயிர்கள் என்பது உண்மைதான்.நம் இனத்தில் இம்மாதிரி எதுவும் கிடையாது.ஆனால் மனிதர்கள் வலியில் அலறும்போது நீ வால்யூமை அதிகமாக வைத்துக்கொள்கிறாய்.அது எனக்கு நாராசமாக இருக்கிறது.நீ தயவு செய்து இந்த பிரபஞ்சத்தை அப்படியே தூக்கிக்கொண்டு போய் கராஜில் வைத்துக்கொள்"

"சரி அம்மா" என்றான் இறைவன்

"அடுத்து எகிப்தில் ஒரு பூகம்பம் வரவைக்க வேண்டும்.சுனாமி இப்போதுதான் வந்தது.அதை இன்னும் ஐம்பது வருடம் பூமி வருடம் கழித்து வரும்படி செட் செய்துகொள்ளலாம்.விர்ச்சுவல் ரியால்லிட்டி மூலம் அடுத்து என் உருவத்தை நஜீரியாவுக்கு அனுப்பி அங்கே ஒரு இனப்படுகொலையை நிகழ்த்தவேண்டும்.." திட்டமிட்டபடியே பிரபஞ்சத்தை அலாகாக தூக்கிக்கொண்டு சொர்க்கத்தில் இருந்த தன் வீட்டு கராஜுக்கு கொண்டுபோனான் இறைவன்.