Thursday, May 28, 2009

394. தமிழ்செல்வன் Vs. விஷால்

இனம் என்றால் என்ன என்று யோசித்தால் உடனடியாக சாதி தான் நினைவுக்கு வருகிறது.என்னதான் சாதியை ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று வீராப்பு பேசினாலும் இனத்தை பற்றி பேசினால் ஒரு கட்டத்தில் சாதியை பற்றி பேசித்தான் ஆகவேண்டும்.தற்கால படித்த தமிழ் சமூகத்தில் சாதியின் கட்டுமானமும் வீரியமும் குறைந்துவிட்டது.கலப்பு திருமணங்களும், காதல் மணங்களும்,தமிழ் சினிமாவும், பத்திரிக்கைகளும், நகர்மயமாக்கலும் சாதியின் வீச்சை நகர்புறத்தில் பெருமளவு குறைத்துவிட்டன என்கிறார்கள்.அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம்.

கொங்குநாட்டில் வேளாண்மை செய்துவாழ்ந்த குடிகளின் கலாசாரம் காலபோக்கில் கொங்கு மண்ணின் கலாசாரமாக மாறியது.கொங்கு நாட்டில் வேளாண்மை செய்து வந்த குடிகள் நாள்போக்கில் கொங்கு வெள்ளாளர் என்ற சாதியாக உருவெடுத்தனர்.குறும்பாடுகளை மேய்த்து வந்தவர்கள் குறும்பர் எனும் சாதியாக உருவெடுத்தனர்.குடியானவன் வீட்டுக்கு விருந்தினராக போனால் கவனிப்புக்கு சொல்லவா வேண்டும்?விதவிதமான காய்கறிகள்,அறுசுவை உணவு என்று படைத்து அசத்திவிட மாட்டார்களா?இந்த கவனிப்புதான் நாள்போக்கில் விருந்தோம்பல் என்ற கலாசாரமாக உருவெடுத்தது.இன்றைக்கும் கொங்கு நாட்டு கவுண்டர் வீட்டுக்கு போனால் சாப்பிடாமல் விடவே மாட்டார்கள்.

குடியானவர் கொண்டாடிய பொங்கல் பண்டிகை நாள்போக்கில் அனைவரும் கொண்டாடும் பண்டிகையானது.இருந்தாலும் விவசாயிகள் வீட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் அளவுக்கு சிறப்பாக மற்றவர்களால் கொண்டாடவே முடியாது.

தமிழ் குடி சாதிகளாக நாள்போக்கில் உருவெடுத்தபோது தமிழ் கலாசாரம் சாதிகளால் தான் பாதுகாக்கப்பட்டது.கும்பிடும் சாமி,சாப்பிடும் உணவு,அணியும் உடை,செய்யும் தொழில் என்று அனைத்தையும் சாதி கட்டுமானம் கட்டுகுலையாமல் காத்து வந்தது.கலாசாரம் என்பது மேலே சொன்ன அனைத்தின் கூட்டுகலவை தான். சாதி கட்டுமானம் குலைந்தபோது முதலில் மாறியது கலாசாரம் தான்.சாதி அழிய அழிய உணவு,உடை,தொழில்,கலாசாரம் என்று அனைத்தும் மாறிவிட்டது.

குனிந்த தலை நிமிராமல்,தகப்பனும் தாயும் கைகாட்டிய அத்தைமகனை மட்டுமே மனந்து பழகிய தமிழ்பெண் என்று டம்பபையை தோளில் மாட்டிக்கொண்டு வேலைக்கு போய் தெருவில் எதிர்ப்படும் அன்னிய ஆணை கண்டு காதல் கொண்டாளோ அன்றே தமிழ்நாட்டில் சாதிகளின் சமத்துவத்துக்கு அல்லது சாதி அழிப்புக்கு சாவுமணி அடிக்கப்பட்டுவிட்டது.தமிழ் கலாசாரமும் அன்றுமுதல் அடியோடு மாறிவிட்டது.உண்மையில் நாம் இதற்காக வருந்துவதை விட மகிழ்ச்சி அடையவேண்டிய காரணங்கள் தான் அதிகம்.

சாதி என்பது கெட்ட வார்த்தை என்கிறவர்கள் கூட ஒரு கட்டத்தில் ஜாதியில் சரணடையத்தான் வேண்டியிருக்கிறது.சரி..சாதியை ஒதுக்கி விட்டு தமிழினத்துக்கு வருவோம்..தமிழினம் என்பது என்ன?பல சாதிகளின் கட்டுமானம் தான் தமிழினம்.இனம் என்பது பிறப்பால் வருவது தான். கவுண்டர், தேவர், வன்னியர், முதலியார், தேவேந்திரர் குலத்தவர், நாடார் போன்ற சாதிகளில் பிறந்தால் ஒருத்தர் பச்சை தமிழராகிறார். ஒக்கலிகர்,நாயக்கர்,ரெட்டி,அருந்ததியர்,மேனன்,நாயர் ஆகிய சாதிகளில் பிறந்தால் வளர்ப்பு தமிழராகிறார் (நன்றி:பாரதிராஜா).வீராமாமுனிவர், ஜார்ஜ் ஹார்ட், எம்ஜிஆர் மாதிரி கவுரவ தமிழர்களும் (கவுரவ டாக்டர் மாதிரி) உண்டு. கலப்பு திருமணம் செய்யும் பிள்ளைகள் தந்தையின் சாதியை அடைகின்றன.

தமிழ் கலாசாரம் என்பது இந்த சாதிகளின் கலாசாரம் தான். சாதிகலாசாரத்தை ஒதுக்கிவிட்டு தமிழ் கலாசாரத்தை ஏற்பது என்பது எத்தனை தூரம் சாத்தியம் என்பது கேள்விக்குறிதான்.இருந்தாலும் அப்படிப்பட்ட பலரை நான் சந்தித்திருக்கிறேன். இவர்கள் தமிழ் செல்வன், நெடுஞ்செழியன் என்கிற மாதிரி பொதுவான பெயர்களை வைத்துக்கொள்வார்கள். தமிழினம், தனித்தமிழ் போன்ற கோட்பாடுகளில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்.இவர்களது சாதிமறுப்பு சின்சியரானது.இருந்தாலும் இவர்களது கலாசாரம் தான் உண்மையான தமிழ் கலாசாரம் என்பதை என்னால் ஏற்கமுடியவில்லை.இவர்கள் தமிழ்நாட்டின் மையநீரோட்டத்தை விட்டு விலகியவர்களாக்வே எனக்கு தென்படுகிறார்கள்.நமது வசதிக்காக இவர்களை தமிழ் செல்வன் க்ரூப் என்று வைத்துக்கொள்வோம்.

கலாசார அடையாளத்தை முற்றிலும் துறந்த ஒரு கும்பல் தமிழ்நாட்டில் உலா வருகிறது.இவர்கள் பெயரை வைத்து இவர்கள் என்ன தேசம் என்று வேண்டுமானால் கண்டுபிடிக்கலாமே ஒழிய என்ன இனம், மொழி, சாதி என்பதை கண்டுபிடிக்கவே முடியாது.விஷால்,ராஜ்,ப்ரீதி,ப்ரியங்கா,அநிருத் என்கிற மாதிரி இவர்கள் பெயர் இருக்கும்.சர்வதேச மொழியை தான் பேசுவார்கள்.சர்வதேச தொலைகாட்சி சேனல்களை தான் பார்ப்பார்கள்.இப்போது தொலைகாட்சி பார்ப்பது கூட ஒழிந்து இவர்களிடையே இணையம் பிரபலமாகி வருகிறது.நமது வசதிக்காக இவர்களை விஷால் க்ரூப் என்று வைத்துக்கொள்வோம்.

தமிழ் செல்வன் க்ரூப்புக்கும், விஷால் க்ரூப்புக்கும் இடையே இருக்கும் பொதுவான ஒற்றுமை இவர்கள் மையநீரோட்டத்தை விட்டு விலகியிருப்பதே ஆகும்.இவர்கள் இருவரும் மைய நீரோட்டத்தை பல காரணங்களால் வெறுப்பவர்கள்.தமிழ் செல்வன் க்ரூப் மைய நீரோட்டதை தனக்த்தே கொண்டுவர முயற்சித்து தோல்வி அடைந்துவிட்டது.அதனால் அவர்களுக்கு மைய நீரோட்டத்தின் மேல் கோபம் அதிகம். விஷால் க்ரூப்புக்கு மைய நீரோட்டத்தில் இருப்பவர்கள் பட்டிக்காட்டான்கள் என்ற நினைப்பு.அதனால் அவர்கள் மையநீரோட்டத்தை விட்டு விலகி இருத்தல் மட்டுமின்றி பல சமயங்களில் அதை எதிர்த்தே செல்வார்கள்.உதாரணத்துக்கு பொதுசனம் ரசிக்கும் நாவல்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை இவர்களுக்கு பிடிக்காது.மாற்று மொழி படம் தான் பார்ப்பேன்,தமிழ் படம் பார்த்ததே கிடையாது என சத்தியம் செய்வார்கள்.பொது இடங்களீல் தமக்குள் தமிழில் பேசிக்கொள்ளவே மாட்டார்கள்.ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள்.பொதுமக்களின் மனோபவாத்தை பொதுபுத்தி என்பார்கள்.தமக்கு அந்த மனோபாவமே வரகூடாது என்று சொல்லி தள்ளி நிற்பார்கள்.

தனித்தமிழ்,இன அடையாளம், ஆங்கில வழிக்கல்வி போன்ற பல விஷயங்களில் தமிழ் செல்வன் கும்பலுக்கும் விஷால் கும்பலுக்கும் இடையே அடிக்கடி மோதல் வருகிறது.ஒரு விதத்தில் இது காலம் காலமாக நடக்கும் மோதல் தான்.1940,30களில் தமிழ் சமூகம் குடுமி வைத்திருந்தது.பிரிட்டிஷ்காரனை பார்த்து அப்போதைய விஷால் க்ரூப் கிராப்பு வைக்க ஆரம்பித்தது.அப்போது கிரபபு வைத்தவனை எல்லோரும் கிண்டல் செய்வார்கள்.கொஞ்ச நாள் கழித்து கிராப்பு வைத்தவன் எண்ணீக்கை அதிகமாகி அவர்கள் எல்லோரும் சேர்ந்து குடுமி வைத்தவர்களை கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள்.கடைசியில் கிராப்பு வென்று குடுமி ஒழிந்தது.

இந்த சண்டை அடுத்து வேட்டி வெர்சஸ் பேண்ட் என்பதாக மாறி அதில் விஷால் க்ரூப் கடைசியில் ஜெயித்து விட்டது.இன்று தமிழ் செல்வன் க்ரூப்பும்,விஷால் க்ரூப்பும் இருவருமே வேட்டி அணீவதில்லை.மைய நீரோட்டத்தில் இருப்பவன் தான் வேட்டி அணிகிறான்.

இப்படி பல தளங்களில் இந்த இரு க்ரூப்புகளும் மோதியே வந்துள்ளன.எந்த சமூகத்திலும் மைய சமூகம் எந்த க்ரூப்பை ஆதரிக்குமோ அதுதான் இறுதியில் வெல்லும்.வரலாறு வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுவதுதான்.தமிழகத்தில் தற்போது மையநீரோட்டத்தில் இருக்கும் சமூகம் விஷால் க்ரூப்பின் பக்கம் திரும்பியிருப்பதாக தான் படுகிறது.விஷால் க்ரூப்பில் சேரத்தான் மையநீரோட்டத்தில் இருக்கும் சமூகம் ஆசைப்படுகிறது.கணிணீதொழில் புரட்சியும், கான்வென்டு கல்வியும் இந்த ஆசையை நிறைவேற்றுவதில் பெரும்பங்கு வகித்தன. "மொழி அழிகிறது, கலாசாரம் அழிகிறது" என்று தமிழ் செல்வன் க்ரூப் புலம்புவதெல்லாம் இந்த போரின் பின்விளைவுதான்.

Thursday, May 14, 2009

392.ஒபாமாவும் தமிழ்நாட்டு டாக்டர்களும்

ஐநூறு மைல் நீளமுள்ள துண்டுநிலத்துக்கு முதல்வராகிவிட்டு உடனே பல்கலைகழகத்துக்கு போய் டாக்டர் பட்டம் வாங்கிக்கொள்ளும் நம் ஊர் மானம் கெட்ட கொள்ளைகார மிருகங்களுக்கு..(மிருகங்கள் மன்னிக்கவும்)..அரசியல்வாந்திகளுக்கு ஒபாமா தன் உதாரணம் மூலம் செருப்படி கொடுத்திருக்கிறார்.

அரிசோனா பல்கலைகழகம் ஒபாமாவின் பெயரை கவுரவ டாக்டர் விருதுக்கு பரிசீலித்து டாக்டர் பட்டம் வாங்கும் அளவுக்கு அவர் எந்த சாதனையும் செய்யவில்லை என முடிவு செய்தது.அதன்பின் அதை ஒபாமாவுக்கும் தெரிவித்து மாணவர்களுக்கு விருது வழங்க அவரை அழைத்தது.ஒபாமா கோபிக்காமல் அந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் "நான் இன்னமும் எந்த சாதனையும் செய்யவில்லை.அமெரிக்க ஜனாதிபதியாவது என்பது ஒருவர் தன் வாழ்க்கையை சிறப்பாக நடத்தினார் என்பதற்கான அறிகுறி அல்ல" என பேசியிருக்கிறார்.

அரசியல்வாதிகளின் காலை நக்கி பிழைக்காத அரிசோனா பல்கலைகழகத்தை பாராட்டுவதா இல்லை தனக்கு டாக்டர் பட்டம் வாங்க தகுதி இல்லை என்று கூறிய பல்கலைகழகத்தின் பரிந்துரை சரியானது என்று கூறிய ஒபாமாவை பாராட்டுவதா என புரியவில்லை.

மசாலாபடத்தில் நடித்த நடிகருக்கெல்லாம் டாக்டர் பட்டம் வழங்கி நக்கிபிழைக்கும் நம் ஊர் பல்கலைகழகங்களும், மணிக்கணக்கில் இந்திரன்,சந்திரன் என புகழ்மாலைகளை கேட்டு ரசிக்கும் நம் அரசியல்வாந்திகளும் இனியாவது திருந்தினால் சரி.

Monday, May 11, 2009

சிறைப்பறவை

'ஸ்ஸூ..அழாம சொல்லணும்.அப்புறம் வேறென்ன புகார் உம்புருசன் மேல?" எஸ்.ஐ வேதவல்லி கோபத்துடன் அதட்டினார்.

"ஸ்டேசனுக்கு வந்து பொண்ணுக புகார் தர்ரதே பெருசு.இதுல நீங்க இப்படி அதட்டினா அவ பயந்துக்க மாட்டாளா?" புகார் தர வந்த கூட்டத்தில் இருந்த பெருசு ஒன்று முணுமுணுத்தது.

"யோவ்.உனக்கு இது அதிசய கேசு.எனக்கு இது ஆயிரத்துல ஒண்ணு..ஆஃபடர் ஆல் கள்ள தொடர்பு மேட்டரு.அதுக்கு புகார் தர ஒரு கூட்டம்..இவனுங்க பேச்சை கேட்டு நீ வரதட்சிணை கொடுமைன்னு புகார் தந்தா அவனை நான் புடிச்சு உள்ளே தான் போட வேண்டி இருக்கும்.அப்புறம் உனக்கு கடைசிவரைக்கும் வாழாவெட்டி பட்டம் தான் மிச்சம்.நல்லா யோசிச்சு பாரு" எஸ்.ஐ பரிவுடன் கூறினார்.

"இல்லைங்க மேடம்."அவர் முன்னாள் கிளாஸ்மேட் பொண்ணு கூட நெருங்கி பழக ஆரம்பிச்சுட்டார்.என்னை கண்டுக்கறதில்லை.மதிக்கறதில்லை.கண்டுக்காம இருந்தா இரு,போறதுன்னா போங்கறார்.நான் வேற என்னதான் செய்யறது?நீங்க எப்படியாச்சும் அவர் கிட்ட பேசி அவளை கழட்டி விட்டீங்கன்னா உங்க காலில் விழுந்து..."

"காலில் விழுந்து கட்டவுட் வெப்பியாக்கும்?இதா பாரம்மா....ஸ்டெசன்ல முந்தி கட்டபஞ்சாயத்து பண்ணி தம்பதிகளை சேத்து வெச்சுட்டிருந்தோம்.டிஎஸ்பிக்கு புகார் போய் இப்ப அதை எல்லாம் நிறுத்திட்டோம்.இதை நீயும் உன் சொந்தகாரங்களும் சேந்து தான் பேசி முடிவு பண்னனும்.என் கிட்ட புகார் கொடுத்தா நான் அப்புறம் உம்புருஷனை அரெஸ்ட் பண்ணிதான் தீருவேன்.உம்புருசனுக்கு நல்ல கம்பனில உத்தியோகம் இருக்கு.அது வீணா பறி போயிடும்.அப்புறம் ஐயோன்னா வராது..அம்மான்னா வராது..புரியுதா?" வேதவல்லி அதட்டினார்.

வாசவி மெதுவாக தலையாட்டினாள்.

"இந்த காலத்துல எவன் இதை எல்லாம் செய்யலை?" எஸ்.ஐ குரலை மெதுவாக இறக்கினார்..."இந்தா பாரு.அந்த லாக்கப்புல வசந்தின்னு ஒருத்தி உக்காந்துகிட்டிருக்கல்ல?அவ புருசன் கல்யானமாகி கொஞ்ச நாள் கழிச்சு வேறொருத்தியை செட்டப் பண்ணிகிட்டான்.இவளை முதல் தாரமா வெச்சு கவுரவமா நடத்தறதா சொன்னான்.கேக்காம ஆங்காரப்பட்டு வீட்டை விட்டு வந்து எவன் கையிலோ சிக்கி சீரழிஞ்சு இப்ப விபசாரியா இருக்கா"

வாசவி வசந்தியை உற்றுப்பார்த்தாள்.வசந்தியின் முகத்தில் அப்படி ஒன்றும் சோகம் தென்படவில்லை.என்ன வேணா நடக்கட்டும் என்று அலட்சியமாக உட்கார்ந்திருந்தது போல் பட்டது.

"போலிசெல்லாம் வாண்டாம்னு அப்பவே சொன்னேன்.இந்த மனுசன் தான் ரோசப்பட்டுகிட்டு இழுத்துகிட்டு வந்துட்டார்.இந்தாளு சின்ன வயசுல ஆடாத ஆட்டமா?எல்லாம் ஒரு குழந்தை பொறந்தா சரியாயிடும்.சொன்னா கேக்கறாளா இவ?இவளுக்கு படிப்பும் இல்லை,வேலையும் இல்லை.இவங்கப்பனுக்கு இப்பவே ஊரெல்லாம் கடன்.நாங்க ரெண்டுபேரும் போய் சேந்தா இவ ரோட்டுல தான் நிக்கணும்" வாசவியின் அம்மா புலம்பினார்.

"எம்பொண்ணு ரோட்டுல எதுக்கு நிக்கணும்?அந்த நாயை புடிச்சு உள்ள போட்டுட்டு நானே இன்னொரு கலியாணம் பண்ணி வெப்பேன்" வாசவியின் அப்பா சொல்லிவிட்டு லொக்கு,லொக்கு என்று இருமினார்.

"இந்த விவாகரத்து,புரட்சி எல்லாம் பேசறதுக்கு நல்லா தான் இருக்கும்.செயல்முறைக்கு ஒத்துவராது.இந்த மாதிரி ஆயிரம் கேசை பாத்தவ நான்.புரியுதா?" வேதவல்லி நல்லவிதமாக சொல்லி பார்த்தார்.

வாசவி முடிவெடுக்க முடியாமல் குழப்பத்துடன் நின்று கொண்டிருந்தாள்.பிறகு கொடுத்த புகார் கடிதத்தை திரும்ப வாங்கிக்கொண்டாள்."எம் புருசன் வீட்டுக்கு போறேன்" என மெதுவாக சொன்னாள்.

"நல்ல முடிவு.நீ உங்க சொந்தக்காரங்க யார் பேச்சையும் இனிமேல் கேக்காதே.புரியுதா?" வேதவல்லி அட்வைஸ் செய்தார்.

தலையாட்டிவிட்டு வாசவி வெளியே நடந்தாள்.ஸ்டேசன் வாசலை தாண்டும்போது யதேச்சையாக நின்றாள்.வசந்தியை திரும்பி பார்த்தாள்.வசந்தியும் அவளை பார்த்தாள்.தலைகுனிந்துகொண்டு ஸ்டேசன் வாசலை தாண்டினாள் வாசவி.

"உன் புருசன் கூட பொழைக்கறதுக்கு பதில் என்னை மாதிரி தொழில் செஞ்சே பிழைக்கலாம்.." வசந்தியின் குரல் ஆக்ரோஷமாக ஸ்டேஷனெங்கும் ஒலித்தது.

வாசவி நின்றாள்.

'நிஜமாதான்...ஜெயிலில் இருந்தாலும் நான் ரொம்ப சுதந்திரமா இருக்கேன்.நீ மறுபடி ஒரு ஜெயிலில் அடைபட போயிட்டிருக்கே.நானாவது ஒரு வாரத்தில் விடுதலையாயிடுவேன்.உனக்கு ஏது விடுதலை?"

"அவ கெடக்கறா அவுசாரி..நீ நட..." வாசவியின் அம்மா முணுமுணுத்தார்.அவர் குரலும் ஏனோ தளர்ந்திருந்தது.

கையை உதறிவிட்டு ஸ்டேசனுக்குள் மீண்டும் நுழைந்தாள் வாசவி.

வசந்தியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.பூவாய் சிரித்தாள் வசந்தி.