பல வருடங்களுக்கு முன்பு பெமினா இதழில் படித்த ஒரு சிறுகதையில் இந்திய கணவன் ஒருவன் அமெரிக்க பெண்ணுடன் கள்ள உறவு வைத்துக் கொள்கிறான்.அவன் இந்திய மனைவி அவனுக்காக கண்ணீருடன் காத்திருக்கிறாள்.கடைசியில் ஒருநாள் அவள் கணவன் திரும்பி வருகிறான்.திரும்பி வந்து ஏன் திரும்பி வந்தேன் என்பதற்கான தன்னிலை விளக்கத்தை அளிக்கிறான்.அந்த விளக்கம் முழுவதும் இந்திய கலாசாரத்தை உயர்த்திபிடிப்பதாகவே இருக்கிறது.அதன்பின் முத்தாய்ப்பாக ஒரு விளக்கத்தை கொடுக்கிறான்.."டாய்லட் பேப்பர் பயன்படுத்துபவளுடன் என்னால் வாழ்நாள் முழுவதும் வாழமுடியாது.."
அதற்கு என்ன அர்த்தம் என்று இன்றுவரை எனக்கு புரியவில்லை.டாய்லட் பேபர் சுகாதர கேடானதா இல்லை தண்ணீர் விட்டு கழுவுவது சுத்தமானதா என்ன சொல்ல வருகிறார் என்றே அன்றும் புரியவில்லை, இன்றும் புரியவில்லை.
அமெரிக்க டாய்லட்டுகள் அவர்கள் வாழ்க்கையில் முக்கிய இடத்தை வகிப்பவை.நம் ஊரில் ஆய் போவதை "காலை கடனை கழிப்பது" என்று ஏதோ கடன் கட்டும் இடமாக கருதி குறிப்பார்கள்.பாத்ரூமுக்கு போனோமா,வேலையை முடித்தோமா வந்தோமா என்று நம் ஊரில் இருப்பார்கள்.அமெரிக்காவில் அப்படி இல்லை.
நம் ஊர் டாய்லட் பவுலில் குத்த வைத்துதான் உட்கார முடியும்.அதனால் எத்தனை சீக்கிரம் வேலையை முடித்துவிட்டு எழுகிறோமோ அத்தனை சீக்கிரம் எழுந்திருப்பார்கள்.வெஸ்டர்ன் ஸ்டைல் டாய்லட் பவுலில் சேரில் உட்கார்வது போல் அக்கடாவென உட்கார்ந்து ஆய்போகலாம்.பலர் அதனாலேயே வெஸ்டர்ன் ஸ்டைல் டாய்லட்டுகளுக்கு போகும்போது தினசரியையும் எடுத்துப்போய் ஆற அமர படித்து முடிப்பார்கள்.நம் ஊரில் ஆய்போகும்போது சாப்பிடுவதை அசிங்கமாக நினைப்பார்கள்.ஆனால் அமெரிக்காவில் ஆய்போகும்போது ஒரு கோப்பை ஒயினை எடுத்துப்போய் சிப்புகிறவர்கள் இருக்கிறார்கள்.பல அமெரிக்க ஓட்டல்களில் காப்பி மெஷினை டாய்லட்டுகளில் தான் வைத்திருப்பார்கள்.
அமெரிக்க டாய்லட்டுகள் ஒவ்வொன்றிலும் பாத்டப்புகள் தவறாமல் இருக்கும்.அதில் நீரை நிரப்பி மிதப்பது அமெரிக்கர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.ஆக பாத்ரூமில் இத்தனை நேரத்தை செலவழிப்பதால் அதை சுத்தமாக வைத்திருப்பதில் முனைப்பு காட்டுவார்கள்.பாத்ரூம் தரையில் துளி தன்ணீர் படாமல் கார்பெட் போட்டிருப்பார்கள்.குளிக்கும்போது பாத்டப்பில் நின்றுகொண்டு ஷவரில் குளிக்கலாம்.தன்ணீர் வெளியே விழாமல் இருக்க திரை போட்டு மூடியிருப்பார்கள்.
ஆய்போய்விட்டு தன்ணீர் விட்டு கழுவுவது நம் ஊருல் சுகாதாரமாக கருதப்படுகிறது.ஆனால் இது நம் ஊருக்கு நாக்ரிக மாற்றத்தில் வந்த புது வழக்கம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊரில் அட்டாச்ட் பாத்ரூம்கள் எல்லாம் கிடையாது.ஊர் மக்கள் எல்லோரும் இட்டேரி என்று சொல்லப்படும் இடத்துக்கு சென்றுதான் ஆய்போக வேண்டும்.இட்டேரிகள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும்.அங்கே சற்று புதர் மறைவாக இருக்கும் இடத்தில் உடகர்ந்து ஆய்போவார்கள்.ஆண்கள்,பெண்கள் என்று எந்த வித்திய்சாமும் இல்லாமல் ஊர்கூடி ஆய்போகும் இடம் தான் இட்டேரி.
இட்டேரிகளுக்கு செம்பை எடுத்து போகிறவர்கள் இருப்பார்கள்.இருந்தாலும் ஒரு சின்ன செம்பு தன்ணீரில் சுத்தமாக கழுவ முடியாது என்பதால் சின்ன சைஸ் கருங்கல்லாக பார்த்து நாலைந்தை எடுத்துகொண்டு இட்டேரிக்கு போய் ஆய்போனபின் முதலில் கரும்கல்லில் ஆயை துடைத்து வீசுவார்கள்,அதன்பின் சின்ன சொம்பில் இருக்கும் நீரைகொண்டு கழுவிக்கொண்டு வீடுவந்து சேர்வார்கள்.
எங்கள் ஊருக்கு அடாச்ச்ட் பாத்ரூமும்,தன்ணீர் குழாயும் வந்தபிறகு இட்டேரிக்கு போவது சுத்தமாக நின்றுவிட்டது.அதன்பின் துடைக்கும் வழக்கம் சுத்தமாக நின்றுபோய் கழுவும் வழக்கம் தான் இந்திய கலாசாரம் என்றும் துடைப்பது அமெரிக்க கலாசாரம் என்றும் நம் மக்கள் நம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.ஆனால் இது முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல்.உண்மையில் துடைப்பது தான் இந்தியாவின் ஆதி கலாசாரம்.