Sunday, March 29, 2009

387. ஆயுத பூஜை

இஸ்ரேலிய ஆயுத கம்பனி ரஃபேல் இந்திய ராணுவத்துக்கு ஏவுகணைகளை விற்றுவருகிறது. விற்பனை என்று வந்தால் விளம்பரம் இல்லாமல் முடியுமா? ரஃபேல் தனது ஏவுகணைகளை விற்க ஒரு பாலிவுட் பாணி விளம்பரத்தையும் தயாரித்துள்ளது.

இந்திய பெண்கள் இஸ்ரேலிய ரஃபேல் ஏவுகணைகள் முன் "என்னை காப்பாயா?" என ஆடி பாடுகிறார்கள்."கட்டாயம் காப்பாற்றுவேன்.நம் நட்பு என்னாளும் தொடரும்" என இஸ்ரேலிய இளைஞன் ஒருவன் ஆடிபாடுகிறான்.பிண்னணியில் அனுமன், காளிமாதாவின் போர்க்கோல படங்கள்.

சோப்பு,சீப்பு விற்பது போல் ஏவுகணைகளை பாட்டுபாடி விற்கும் இஸ்ரேலின் ரஃபேல் கம்பனியின் டிங்கடிங்கா விடியோ பாடல் பயங்கர ஹிட்டாகிவிட்டது.யுடியூபில் 2.5 லட்சம் ஹிட்டுகளை அனாசயமாக வாங்கிவிட்டது.

எப்படியோ இனிமேல் பீரங்கி, டாங்கி விற்பவர்கள் எல்லாம் சன்டிவி, என்டிடிவியில் பாட்டுபாடி ஆடப்போகும் காட்சிகளை கண்குளிர காணலாம். இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கட் மாட்சுகளை இவர்கள் ஸ்பான்சர் செய்தால் பொருத்தமாக இருக்குமோ என்னவோ?:-)

டிங்கடிங்கா விடியோவை கண்டுமகிழ

Friday, March 27, 2009

பார்த்தேன்.ரசித்தேன்: House of Saddam

House of Saddam

ஆறுமணிநேரம் உட்கார்ந்து இந்த படத்தை பார்த்தேன்.ஆனால் துளி கூட போர் அடிக்கவில்லை.நீங்கள் வரலாற்று ஆர்வலராக இல்லாதிருக்கும் பட்சத்தில் படத்தின் மேல் பெரும் வெறுப்பே வந்துவிடும்.

படத்தின் கதை என்பது சதாமின் வாழ்க்கை வரலாறுதான்.படத்து கதாபாத்திரங்கள் இயல்பான நடிப்பால் நம்மை கவர்கின்றனர்.குறிப்பாக சதாமாக நடித்த யிகால் நவோர்....துரோகம் செய்து ஓடிப்போன மருமகனை "நீ என் மகளின் கணவன்.என் பேரபிள்ளைகளின் தகப்பன்.உன்னை நான் கொல்வேனா?பயப்படாமல் மீண்டும் பாக்தாதுக்கு வா" என தேனொழுக பேசி அழைத்துவிட்டு போனை வைத்துவிட்டு கோட்டை சரிசெய்துகொண்டு வில்லத்தனமான லுக் விட்டுக்கொண்டு நடக்கும் அந்த காட்சி அசத்தலோ...அசத்தல்.அவரது முகபாவத்தை பார்த்தவுடனேயே மருமகன் இராக் திரும்பினால் என்ன நடக்கும் என புரிந்துவிடுகிறது.

சதாமின் இரண்டாம் மனைவி சமீராவை தன் வயப்படுத்தும் காட்சியும் அபாரம்.சமீராவின் கணவன் முன்னே அவளை அனைத்து முத்தமிடுகிறார் சதாம்."அவள் என் மனைவி" என பதறுகிறார் கணவர்.."நான் நீயாக இருந்தால் இதை கண்டுகொள்ள மாட்டேன்" என முணுமுணுக்கிறார் சதாமின் மருமகன்..சதாம் திரும்பி கனவனை பார்க்கிறார். அவன் முகத்தில் தோல்விக்களை. வெற்றிப்புன்னகையுடன் முத்தத்தை தொடர்கிறார் சதாம்.

சதாம் ஒரு பள்ளியில் நுழைகிறார்.அங்கே இருக்கும் உன் குழந்தையிடம் தேனொழுக கேட்கிறார்.."கண்ணே..உன் அப்பா சதாம் ஆட்சியை பற்றி வீட்டில் என்ன பேசுவார்?"..அந்த குழந்தை என்ன பதில் சொல்லும் என்ற அதிர்ச்சி நம் மனதில் ஏற்படுகிறது..குழந்தை ஒரு வினாடி யோசிக்கிறது...பிறகு "சதாம் நீடூழி வாழவேண்டும் என அப்பா சொல்வார்" என்கிறது."நல்லது" என புன்னகைத்தபடி பள்ளியை விட்டு வெளியேறுகிறார் சதாம்.

இறுதிக்காட்சிகளில் அமெரிக்க ராணுவத்துக்கு பயந்து ஒளிந்திருக்கும் நிலையில் சதாமின் இயல்பான நடிப்பு வெளிப்படுகிறது.மகன்களின் மரணசெய்தியை சதாம் கம்பீரமாக ஏற்கிறார்..ஏரிக்கரையில் சோகமாக மீன் பிடிக்கிறார்.ஆனால் கடைசியில் கோழையை போல் துப்பாகீ குண்டு சத்தம் கேட்டதும் ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு சரணடைகிரார்.அவர் மார்பில் அமெரிக்க வீரனின் கால் பூட்ஸ் அழுத்துகிறது..

"நான் சதாம்.இராக்கிய ஜனாதிபதி.அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு இனி தயார்" என்கிறார் சதாம்.

இராக்கிய மொழி அறியாத அமெரிக்க படைதளபதி 'இவர் என்ன சொல்கிறார்?" என வீரனிடம் கேட்கிரார்.

"இவர் இராக்கிய ஜனாதிபதியாம்.பெயர் சதாம் உசேனாம்.அமெரிக்க அரசுடன் பேசூவார்த்தைக்கு தயாராம்" என்கிறார் மொழிபெயர்ப்பு பணியை செய்யும் அமெரிக்கர்.

"ஓ..." என்கிறார் அமெரிக்க கமாண்டர்..அந்த "ஓ"வில் தான் எத்தனை இளக்காரம்....

சதாமின் மகன் உதய் உசேனாக நடிக்கும் பிலிப் அர்தித்தி இயல்பான நடிப்பில் கலக்குகிறார்.பார்ட்டியில் அழகான பணிபெண்னை சந்திக்கிறார்..கைவிரலில் ஒரே சொடக்கு "ஏய்..வா இங்கே..."அந்த பணிப்பெண்ணுக்கு பின்னால் நிற்கும் ஆண் வேலையாட்கள் முகத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாக ஒட்டியிருக்கிறது.

உதய் உசேன் சைக்கோபாத்.அந்த சைக்கோ பாத்திரத்தை பிலிப் ஆர்தித்தி அழகாக செய்கிறார்.மச்சானை அடிக்கடி வெறுப்பேற்றுவது ரசமான காட்சி...சதாமிடம் உதயை பற்றி அடிக்கடி போட்டு கொடுப்பார் மச்சான்.அதிலிருந்து தப்பி வரும் உதய் ஒரு காட்சியில் மச்சானிடம் கூறுகிறார்.."இதோ பார்.என் அப்பாவுக்கு உன்னை மாதிரி நிறைய உறவினர்கள் இருக்கலாம்.ஆனால் அவருக்கு இருப்பது ஒரே முதல் மகன்..அது நான் தான்.."

Monday, March 23, 2009

ZULU (1964)

ZULU (1964)

உலகின் தலைசிறந்த யுத்தப்படங்களை வரிசைப்படுத்தும்போது ஸூலு திரைப்படத்தை அந்த பட்டியலில் சேர்க்காமல் இருக்க முடியாது.

ஸூலு கத்திமேல் நடப்பது போல் எடுக்கப்பட்ட படம்.தென்னாப்பிரிக்காவை காலனி ஆதிக்கத்துகுட்படுத்திய பிரிட்டிஷார் அந்த மண்ணின் பழங்குடிகளான ஸூலுக்களுடன் நடத்திய வீரம் செறிந்த யுத்தமே ஸூலு படத்தின் கதை.இந்த யுத்தத்தில் செயற்கரிய சாதனை புரிந்த பிரிட்டிஷ் சிப்பாய்கள் 11 விக்டோரியா க்ராஸ் விருதுகளை வாங்கினர்..இருந்தாலும் அதை திரைப்படமாக்கையில் கத்திமேல் நடப்பது போன்று கவனமாக இருத்தல் அவசியம்...மைசூர் கோட்டையை தகர்த்து திப்புவை கொன்ற வரலாற்றை "கன்னடன்" என்ற பெயரில் பிரிட்டிஷார் படமாக எடுத்தால் அது எத்தனை அரசியல் சிக்கல்களை உருவாக்கும்?

இதேபோன்ற சிக்கல் 300 என்ற பெயரில் பாரசிகம்- கிரெக்கர் மோதலை திரைப்படமாக எடுத்தபோது உருவானது.ஆனால் ஸூலுவில் அந்த சிக்கல் வராமல் எடுத்துள்ளனர்.ஸூலுக்களை காட்டுமிராண்டிகளாக காட்டாமல் வீரர்களாக தான் காட்டியுள்ளனர்.படத்தின் இறுதிகாட்சியில் ஸூலுக்கள் தம்மை வீரத்துடன் எதிர்த்து நின்ற பிரிட்டிஷ் சிப்பாய்களின் வீரத்தை புகழ்ந்து ஒரு பாடல் பாடிவிட்டு போகின்றனர்..அந்த அளவுக்கு மனிதாபிமானம் கொண்டவர்களாக ஸூலுக்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

கதை????நடால் மாகாணத்தில் 1879ல் ஸூலுக்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் வருகிறது.ஒரு பிரிட்டிஷ் படை டிவிஷனை (சுமார் 100 சிப்பாய்கள்) சுமார் 4000 ஸூலுக்கள் சுற்றி வளைக்கின்றனர்.40க்கு 1 என்ற விகிதத்தில் என்ணிக்கை குறைந்த பிரிட்டிஷ் சிப்பாய்கள் தப்பி ஓட முடியாத சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.காரணம் அந்த இடத்தில் சிகிச்சைபெற்று வரும் ஏராளமான நோயாளி சிப்பாய்கள்..

வேறுவழியின்றி போரிட முடிவெடுக்கும் பிரிட்டிஷ் சிப்பாய்கள் பிஸ்கட் பெட்டிகள், குதிரைவண்டிகள் என கைக்கு கிடைத்ததை வைத்து மதில் சுவர் எழுப்பி ஆஸ்பத்திரியை மறைக்கின்றனர்.அதன்பின் போருக்கு தயாராகின்றனர்.

அலை அலையாய் ஸூலுக்கள் அணிவகுத்து வருகின்றனர்.அந்த தாக்குதலை பிரிட்டிஷ் சிப்பாய்கள் எப்படி வீரத்துடன் முறியடிக்கின்றனர் என்பது தான் படத்தின் கதை.ஸூலு தளபதிகள் சிறந்த போர்தந்திரத்துடன் படைகளை நகர்த்துகின்றனர்.ஸூலுக்களும் துப்பாகிகளை வைத்திருக்கின்றனர்.ஆனால் பிரிட்டிஷாரின் ராணுவ தந்திரங்கள் அவர்களுக்கு வெற்றியை தேடித்தருகிறது. ஆயிரக்கணகான வீரர்களை இழந்த ஸூலுக்கள் இறுதியில் பின்வாங்குகின்றனர்.அந்த ஆஸ்பத்திரியை காத்தவர்களின் எஞ்சியவர்களில் 11 பேர் விக்டோரியா கிராஸ் விருதை வாங்குகின்ரனர்.

போர்த்தந்திர யுத்திகளை சிறப்பாக காட்டிய படம் ஸூலு.வரலாற்று ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம்.