Wednesday, February 18, 2009

God Bless America

மதங்களை தாண்டிய பரந்த மனப்பான்மையை "கேதலிக் மனப்பான்மை" என்று சொல்வதுண்டு என்றாலும் பொதுவாக கிறிஸ்தவர்கள் இறைவனை கிறிஸ்தவ மதத்தின் மூலம் மட்டுமே அடைய முடியும் என நம்புவார்கள்.ஆனால் அமெரிக்க கிறிஸ்தவர்களிடையே எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு இந்த முன்முடிவை தகர்த்தெறிந்திருக்கிறது.அதாவது அமெரிக்க கிரிஸ்தவர்களில் சுமார் 70% "பல மதங்களும் இறைவனை அடைய உதவும்" என கருத்து தெரிவித்துள்ளனர்...இந்த ஆய்வு முடிவு பலத்த அதிர்ச்சிகளையும் விவாதங்களையும் கிளப்பி விட்டுள்ளது.

 பொதுவாக அமெரிக்கர்கள் மதசார்பின்மை தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.அமெரிக்கா மத சுதந்திரத்தையும், வழிபாட்டு உரிமையையும் கட்டிகாக்கும் தேசம் என்றாலும் இங்கிருக்கும் கிறிஸ்தவர்கள், லிபரல்களால் ஸ்டிரியோடைப் செய்யப்பட்டே வந்திருக்கின்றனர்.அந்த ஸ்டிரியோடைப்பை இந்த ஆய்வு தகர்த்தெறிந்துள்ளது.

 கிறிஸ்தவத்தை பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள எவான்க்ஜலிக்கல் கிறிஸ்தவர்கள் எனப்படும் பிரிவில் கூட சுமார் 57% பேர் "பல மதங்களை பின்பற்றியும் இறைவனை அடையலாம்" என கூறியுள்ளனர்.இந்த நம்பிக்கை அமெரிக்க கிரிஸ்தவ பிரிவுகள் அனைத்திலும் காணப்படுகிறது."இறைவனை அடைய எங்கள் மார்க்கம் மட்டுமெ வழி" என்று கூறுபவர்கள் அமெரிக்க கிறிஸ்தவரிடையே உள்ள இரு பிரிவினர் தான்..மோர்மான்கள் மற்றும் ஜெஹோவாவின் சாட்சிகள்....மற்ற மெயின்ஸ்ட்ரீம் புராட்டஸ்டண்டு,கேதலிக்,எவாஞலிக்கல் பிரிவுகளில் பெரும்பான்மையானோர் மாற்று மதங்களின் உண்மையை ஒப்புக்கொள்ளும் பரந்த மனப்பான்மையினராகவே உள்ளனர்.

 "இந்த மதங்களை தாண்டிய பரந்த மனப்பான்மை அமெரிக்க தேசத்தின் மகத்துவம் மிகுந்த கோட்பாடு" என பெருமையுடன் கூறுகிறார் பாஸ்டன் பல்கலைகழக புரபசர் பெர்ஜர்.தீவிர கிரிஸ்தவ நம்பிக்கையாளரிடையே இது அதிர்ச்சியை ஊட்டி ஒரு விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.அனைத்து மதங்களும் ஒன்றே என்றால் ஏசுவின் உயிர்ப்பலியும், மரணமும் வீணானதா என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

"இந்த பரந்த மனப்பான்மைக்கு காரணம் அதிகரிக்கும் ஆசியர்களின் குடியேற்றமே" என்றும் கூறப்படுகிறது."உங்கள் குழந்தையின் நல்ல நண்பன் இந்துவாகவோ பவுத்தனாகவோ இருந்தால் அது மக்களின் மனதில் அந்த மதங்களைப்பற்றிய நல்ல அபிப்பிராயத்தையே உருவாக்குகிறது" என்கிறார் லிண்ட்சே என்ற ஆசிரியர்.

 நற்பண்புகளையும், கோட்பாடுகளையும் உலகெங்கிலும் இருந்து சுவீகரிக்கும் இந்த மாபெரும் ஜனநாயக தொட்டிலில் மக்களிடையே காணப்படும் இப்பரந்த மனப்பான்மை ஆச்சரியத்தை ஏற்படுத்த கூடியதா என்ன?மதத்தை எல்லாம் தாண்டிய சக்தியை கொண்டது மனித நேயமே என்பதை உலகுக்கு உணர்த்தும் அமெரிக்க மக்களுக்கு என் வாழ்த்துக்கள். இந்த மாபெரும் தேசத்தை ஏசுநாதன் என்றென்றும் வாழ்த்தி அருள் பாலிக்கட்டும்..

 

 God Bless America 

Friday, February 13, 2009

383.காதலர் தின வாழ்த்துக்கள்

காதலித்த ஒரே காரணத்துக்காக தண்டனை அனுபவிக்கும் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்

தமிழ்நாட்டின் முதல் கலப்பு திருமணத்தை நடத்தி வைத்த ஆனைமுகனுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்

Wednesday, February 04, 2009

மாப்பிள்ளைக்கு மாமன் மனசு

"மாமா..உங்க ஆளு வந்துடுச்சு மாமா.ஸ்பெசல் டீயை ரெடி பண்ணிடட்டுமா?" "சத்தம் போடாதடா..எவனாச்சும் கேட்டுட்டு உங்க அத்தை கிட்ட வத்தி வெக்க போறான்"..பதறியபடி சின்னி தலையை உயர்த்தி ஜன்னலுக்கு வெளியே பார்த்தார்.வெளியே அறுதபழசான ஒரு செவி கார் நின்றிருந்தது.

"இந்த ஊர்ல எவனுக்கு மாமா தமிழ் தெரியும்?அத்தையும் இந்தியாவுக்கு போயிடுச்சு..அதான் நீங்க இந்த ஆட்டம் போடறீங்க"

"கத்தாதடா...சரி நான் சொன்ன மேட்டர் என்னாச்சு?அவ கிட்ட பேச்சு குடுத்தியா?என்ன சொன்னா?" என ஆவலுடன் கேட்டார் சின்னி.

"மருமகன் கிட்ட குடுக்கற வேலையையா குடுத்திருக்கிங்க?எல்லாம் என் நேரம்.ஊர்ல எல்லோரும் நான் அமெரிக்கால பெரிய வேலைல இருக்கறதா நினைச்சுகிட்டிருக்காங்க.இங்க என்னடான்னா நான் உங்க ஃபாஸ்ட் புட் கடைல வட்டில் கழுவிக்கிட்டிருக்கேன்.சரி மாமா கடைதானே, மாமன் பொண்ணை நமக்கு கட்டி வெச்சு கடையையும் எழுதி வெப்பார்ன்னு பாத்தா, உங்க பொண்ணு உங்களை விட அலைச்சல் கேசா இருக்கு..இந்த சின்ன ஊர்ல எவனை கேட்டாலும் உங்க பொண்ணோட முன்னாள் பாய்பிரண்டுங்கறான்.அவளை கட்டிக்கபோறவன்னு சொன்னதும் நமட்டு சிரிப்பு சிரிக்கறான்.." புலம்பினான் காளி.

"டேய்..எல்லா பயலுக்கும் என்பொண்ணு மேல பொறாமைடா,பொறாமை.கைரோ இல்லினாய் ஊர்ல எத்தனை பேருடா என்னை மாதிரி சம்பாதிச்சிருக்கான்?மச்சு வீடு கட்டிருக்கான்?ஒரு கருப்பன் இந்த ஊர்ல பொழைக்க வந்து இப்படி கோடிஸ்வரானயிட்டானேன்னு பொறாமைடா பொறாமை.அதான் இப்படி பொய் சொல்றானுவ.." என சமாளித்தார் சின்னி.

லிண்டா உள்ளே வந்தாள்..ஆர்டர் செய்ய வரிசையில் நின்றாள்.

"ஏன்டா..இவ கிட்ட நீ மாசகணக்குல பேசிக்கிட்டு இருக்கேன்னு சொல்றியே தவிர ஒண்ணும் நடக்க மாட்டேங்குதேடா" என அங்கலாய்த்தார் சின்னி.

"மாமா..உங்களூக்கென்ன சொல்லிகிட்டு போயிடுவீங்க..கொஞ்சம் வில்லங்கம்னாலும் அடி வாங்கறது யார்? நான் தானே?"

"கோவிசுக்காதேடா..எனக்கு இங்க்லிலீஸ் சரியா தெரியாது.தெரிஞ்சிருந்தா நானே பேசிடுவேன்."

"இங்கிலீஸ் தெரியாம எப்படி மாமா இங்க வந்து இத்தனை காசு சேத்தீங்க?"

"இந்த ஊர்ல ஊமை,செவிடன் எல்லாம் காசு சேக்கறான்.நான் சம்பாதிக்கறதுக்கு என்னடா?பட்லர் இங்கிலீஷை வெச்சுகிட்டே கடையை ஓட்டிபுட்டேன்..வந்துட்டா..வந்துட்டா..ஆர்டர் எடுடா"

லிண்டா காளியை பார்த்து சிரித்தாள்.."நம்பர் ஃபைவ் அன்ட் ஹாட் டீ" என்றாள்.பணம் கொடுத்தபோது காளி வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

ஃப்ரிட்ஜிலிருந்து டீ ஜக்கை எடுத்தான் காளி.லிண்டாவுக்கு அவன் ஊரில் கிடைக்கும் ஸ்பெசல் மசாலா டீயை தனியாக போட்டு வைத்திருந்தான்.அதை மைக்ரவேவில் வைத்து சூடு செய்தான்.

"ஏன்டா..ப்ரிட்ஜிலிருந்து எடுக்கறே.புதுசா போட்டு குடுக்க மாட்டியா?" கோபித்தார் சின்னி.

"போட மறந்துட்டேன் மாமா..அதனால ஒண்ணும் பிரச்சனை இல்லை..அவளுக்கு வித்தியாசம் தெரியாது" காளி பர்கரையும் டியையும் டிரேயில் வைத்து கொண்டுபோனான்.

"இந்த வார கடைசில ஓக்கேவான்னு கேளுடா...ஆயிரம் டாலர்..மேல ஆனாலும் பரவாயில்லை" என சத்தமாக சொன்னார் சின்னி.

"என்ன மாமா?" என்று திரும்பிய காளி தடுமாறி டிரேவை லிண்டா மேல் கவிழ்த்தான்.சூடான டீ அவள் மேல் விழுந்தது."ஆ"வென அலறினாள் லிண்டா.கீழே விழுந்து புரண்டாள்.

"ஐயோ" என பதறியபடி ஓடி வந்தார் சின்னி..இதற்கு முன் சூடான காப்பியை கஸ்டமர் மேல் கொட்டிய உணவக் உரிமையாளர் மில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு கட்டிய கதை எல்லாம் துரித உணவக வட்டாரத்தில் பிரசித்தம்.

"போலிசை கூப்பிடு மேன்" என்றாள் லிண்டா.

"மாமா..போலிசுக்கு போக விடாதீங்க..டீயை மைக்ரவேவ்ல அதிகநேரம் கொதிக்க வெச்சுட்டேன் போல..டீயை பிரிட்ஜுல இருந்து எடுத்து சூடு பண்ணினதெல்லாம் கடைல இருக்கும் செக்யூரிட்டி காமிராவில் பதிவாயிருக்கும்" என பதறினான் காளி.

"அதையும் நீ தான்டா சொல்லணும்..இரு..நான் சொல்றேன்..அதை அப்படியே மொழிபெயரு..அம்மா தாயே லிண்டா..உன்னை எங்க ஊரு காளியாத்தாளா நெனச்சு கேக்கறேன்.."

"காளியாத்தான்னா இவளுக்கு புரியாது மாமா.."

"அப்ப மேரிமாதான்னு வெச்சுக்கடா..போலிசுக்கு போகாதேன்னு சொல்லுடா..எத்தனை பணம் வேணும்னாலும் தர்ரேன்.."

கடைக்கு வெளியே போலிஸ் சைரன் கேட்டது..போலிஸ் உள்ளே நுழைந்தது.தலையில் கைவைத்தபடி உட்கார்ந்தார் சின்னி.

***

மூணுமாதம் கழித்து சின்னி சிகாகோ ஏர்போர்ட்டில் நின்றிருந்தார்.குளிர் காற்றில் அவரது மேல் துண்டு படபடத்தது.

விமானத்தில் இருந்து இறங்கியதும் அவர் மனைவியும் மகளும் பொரிந்து தள்ள ஆரம்பித்துவிட்டனர்.

"இத்தனை வருசம் சம்பாதிச்ச காசில் பாதி போச்சு...இன்னும் உங்களுக்கு மேல் துண்டு வேற..ஆமா,,மருமகன்னு சொல்லிகிட்டு ஒரு ஆள்காட்டியை கூட வெச்சிருந்தீங்களே,எங்க அது?"

"ஜெயில்ல இருந்தான்..அப்புறம் எங்கே போனான்னு தெரியலை" என முணுமுணுத்தார் சின்னி.

"அங்க பாரு காளி மாமா.." என உற்சாகத்துடன் கத்தினாள் செந்து..

காளி பெர்முடா டிஷர்ட்டில் விசிலடித்தபடி வந்தான்..அவன் கூட இருப்பது...லிண்டா..

"ஹேய் மாம்ஸ், அத்ஸ்,செந்து.." என்றான் காளி.."இது தான் என் புதிய கேர்ள் பிரண்ட்..கடையில் ஆன மோதலில் எங்கள் காதல் பிறந்தது..மாமா புண்ணியத்தில் ஒரு நாலஞ்சு மில்லியன் டாலர் கிடைச்சது..இப்ப நாங்க ரெண்டு பேரும் ஹனிமூனுக்கு ஃப்ளாரிடா போறோம்"

சின்னி பற்களை நறநறத்தார்..

"மோதலில் காதல் வந்துச்சா..இல்லை காதல் வந்து அப்புறம் திட்டமிட்ட மோதல் வந்துச்சாடா?" என முணுமுணுத்தார்.

"நீங்க என்னை மருமகன்னு கூட்டி கிட்டு வந்து வேலைகாரனாக்கினீங்களா, இல்லை வேலைக்காரனாக்கணும்னு முடிவு பண்ணிகிட்டு வந்து மருமகன்னு பொய் சொல்லி கூட்டிட்டு போணிங்களா??என்னவோ மாமா சில கேள்விகளுக்கு பதில் கிடைக்கறது ரொம்ப கஷ்டம்..20 வருசம் சம்பளம் இல்லாம வேலை பாத்திருக்கேன்..கூட்டி கழிச்சு பாருங்க..கணக்கு சரியா வரும்..ஃப்ளாரிடாவில் சின்னி உணவகம்னு உங்க பேர்ல தான் கடை ஆரம்பிக்க போறேன்..வரட்டுமா..பை பை"

டாட்டா காட்டியபடி விரைந்தான் காளி.

ஒன்றும் பேசாமல் மூவரும் காரில் ஏறி ஊர் திரும்பினர். "என் தங்கச்சி பையன்..அதான் இவனுக்கு எங்கப்பாரு மூளை அப்படியே இருக்கு" என மெதுவாக ஆரம்பித்தார் சின்னி. "வாயை திறந்தா கொலை விழும்" என மிரட்டினாள் அவரது மனைவி. 'கப் சிப்' என அடங்கிவிட்டார் சின்னி.